உலகின் பல நாடுகள் தமது தரை
மற்றும் கடல் பிரதேசங்களை அந்நியர்கள் ஆக்கிரமிக்காமல் இருக்க மேற்கொள்ளும்
உபாயங்களை “Anti-Access/Area Denial strategy” என அழைக்கப்படுகின்றன. அதை “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” எனச் சொல்லலாம். இதை இலகு படுத்திச் சொல்வதானால் இது நம்ம ஏரியா உள்ளே
வராதே என்னும் நிலைப்பாடாகும். இது சுருக்கமாக A2/AD என அழைக்கப்படுகின்றது. இந்த உபாயத்தை வகுப்பதையும் அந்த
உபாயத்தை உடைப்பதையும் அடிப்படையாகக் கொண்டே பல புதிய படைக்கலன்கள்
உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எல்லா நாடுகளினதும் பாதுகாப்புச் செலவின்
பெரும்பகுதி இதற்காகவே செலவிடப்படுகின்றன. புவிசார் அரசியல் மற்றும்
பாதுகாப்புத்துறை ஆய்வுக் கட்டுரைகள் “நுழைவு எதிர்ப்பும் பிரதேச
மறுப்பும்” என்னும் சொற்தொடர் இல்லாமல் இருப்பதில்லை.
வல்லரசு நாடுகள் உட்படப் பல
நாடுகளின் “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” உபாயத்தை உடைக்கும் வல்லமையை அமெரிக்காவிற்குக்
கொடுப்பது அதன் கடல்சார் படையணிகளாகும். கடற்படை என்பது பல நாடுகளில் இரு வகையானவை.
ஒன்று கடற்படை அது கடலில் மட்டும் செயற்படக் கூடியது. மற்றையது கடல்சார்படை(Marines). கடல்சார் படை கடலை முக்கிய தளமாகக் கொண்டு
செயற்பட்டாலும் அது தரையிலும் வானிலும் போர் புரியக் கூடியவகையில்
படைக்கலன்களையும் பயிற்றப்பட்ட படையினரையும் கொண்டுள்ளது. அமெரிக்காவின் உலக
ஆதிக்கத்தில் அதன் கடல்சார்படை பெரும் பங்கு வகிக்கின்றது.18-ம் நூற்றாண்டில்
பிரித்தானியப் பேரரசுக்கு எதிரான அமெரிக்க சுந்தந்திரப் போரில் இருந்து ஈராக் போர்
வரை அமெரிக்காவின் அமெரிக்காவின் கடல்சார் படையினரே மிகப்பெரும் பங்கு வகித்தனர்.
கடற்படையும் கடல்சார்
படையும்
பனிப்போர் காலத்தில்
சோவியத் ஒன்றியத்திற்கு சவாலாகவும் சீனாவின் விரிவாக்கத்திற்குப் பெரும் தடையாக
இருப்பதும் அமெரிக்காவின் கடல்சார்படையணிகள் தான். உலகக் கப்பல் போக்குவரத்திற்கான
காவற்துறை மாஅதிபராக அமெரிக்கா தன்னைத் தானே நியமித்தமைக்கு அதன் கடல்சார்படையணி
இணையற்ற ஒன்றாக இருப்பதனாலேயே. இதன்
முக்கியத்துவத்தை உணர்ந்துதான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே
அமெரிக்காவிடம் இருக்கும் பத்து விமானம் தாங்கிக் கப்பல்களை மேலும் இரண்டால் அதிகரிக்க ஒத்துக்
கொண்டார். அமெரிக்கா தனது ஐந்தாம் தலைமுறைப் போர்விமானமான F-35ஐ உருவாக்கும் போது கடல்சார்படைக்கு ஏற்பவும்
அது வடிவமைக்கப்பட்டது. அதனால் பெரும் பொருட் செலவையும் பின்னடைவையும் அமெரிக்கப்
பாதுகாப்புத் துறை சந்திக்க வேண்டியிருந்தது.
ஆக்கிரமிக்கப்படுதலை
வரலாறாகக் கொண்ட சீனா
சீனாவின் வரலாற்றில் அது
470 தடவைகள் ஆக்கிரமிக்கப்பட்டது. அதில் 74 தடவைகள் கடல்வழியாக அது
ஆக்கிரமிக்கப்பட்டது. தனக்கு என ஒரு உறுதிமிக்க என் பிராந்தியம் உள்ளே வராதே என்ற
பாதுகாப்பு அரணை அமைப்பதில் சீனா அதிக கவனம் செலுத்துகின்றது. சீனாவின் வரலாற்றை
ஆய்வு செய்த படைத்துறை நிபுணர்கள் அது தொழில்நுட்ப ரீதியில் எதிரியிலும் பார்க்கப்
பிந்தங்கிய நிலையில் இருந்தமையே அது ஆக்கிரமிக்கப் பட்டதற்கான முக்கிய கரணமாக இனம்
கண்டுள்ளனர். பொதுவுடமைப் புரட்சிக்கு முந்திய நூறு ஆண்டுகளை சீனாவின்
மானபங்கப்பட்ட நூற்றாண்டு என்கின்றனர் சீன சரித்திரவியலாளர்கள். சீனாவை மானபங்கப்
படுத்திய பிரித்தானியா. அதை மோசமாக மான பங்கப்படுத்திய நாடு ஜப்பான். தன்னிலும்
பார்க்க தொழில்நுட்பத்தில் அதிக மேம்பட்ட எதிரியும் எப்படி மோதுவது என்பதே சீனா
நூறு ஆண்டுகளுக்கு மேலாக எதிர் கொண்டு வரும் பிரச்சனையாகும்.
கடல்சார் படையை அதிகரிக்கும்
சீனா
சீனா
தனது கடல்சார் படையினரின் எண்ணிக்கையை இருபதினாயிரத்தில் இருந்து ஒரு இலட்சமாக அதிகரிக்கவிருக்கின்றது. சீனா டிஜிபுத்தியிலும் பாக்கிஸ்த்தான் குவாடரிலும் உள்ள துறைமுகங்களிலும் தனது கடல்சார் படையினரை அதிகரிக்கவிருக்கின்றது. சினாவின் தரைப்படையில் உள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் பயிற்ச்சி பெற்றவர்களை கடல்சார் படைக்கு மாற்றி அவர்களுக்கு கடல்சார் நடவடிக்கைகளிலும் மேலதிகப் பயிற்ச்சி வழங்கியுள்ளது.
தொழில்நுடப்த்தைப்
பாவிக்கத் தவறிய சீனா
காகிதம், அச்சு இயந்திரம், திசையறிகருவி, வெடி மருந்து போன்றவற்றைக் கண்டு பிடித்த சீனா அந்த
தொழில்நுட்ப மேம்பாட்டைப் பயன்படுத்தி தனது உலக ஆதிக்கத்தை உயர்தத் தவறியது. ஒன்பதாம் நூற்றாண்டில் சீனா வெடிமருந்தைக் கண்டு பிடித்தது. அதை அம்புகளில்
வைத்து வில்மூலம் எதிரிகளில் ஏவியது. ஆனால் 13-ம் நூற்றாண்டில் சீனா மொங்கோலியர்களினால்
ஆக்கிரமிக்கப்பட்டது. சீனாவை ஆக்கிரமித்த மொங்கோலியர்
அங்கிருந்து இந்தியாவையும் கைப்பற்றினர். இந்தியாவில் இரும்புக் குழாய்க்குள்
வெடிமருந்தை வைத்து மைசூரியன் ரொக்கெட் என்னும் எவுகணை முதலில் உருவாக்கப்பட்டது.
பின்னர் இந்தியாவில் இருந்து மேற்கு ஆசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளுக்கு
வெடிமருந்து வர்த்தக அடிப்படையில் பரவலானது. வர்த்தக ரீதியாக வெடிமருந்து
கடைசியாகப் போன இடம் ஐரோப்பாவாகும்.
களவாடலும் பிரதி பண்ணலும்
சீனா தனக்கும்
அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளியை நிரப்ப பலவழிகளில் முயல்கின்றது.
சீனா ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையினதும் தனியார் துறையினதும்
தொழில்நுட்ப இரகசியங்களை திருடிக் கொண்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு
அமெரிக்காவில் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. இரசியாவிடமிருந்து வாங்கிய
படைக்கலன்களையும் போர்விமானங்களையும் பிரதிபண்ணி உள்நாட்டு உற்பத்தியை
அதிகரிக்கின்றது.
அமெரிக்கக் கழுகுப்பார்வை
அமெரிக்காவின் MQ-4C
Triton unmanned aircraft system என்னும்
ஆளில்லாப் போர்விமானத்தால் உலகின் எல்லாக் கடற்பரப்பையும் கண்காணிக்க முடிவதுடன். எதிரி விமானங்களின் நடமாட்டத்தையும் அறிந்து கொள்ள முடியும். இதன்
மென் பொருள் அமெரிக்க விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதாமல் பார்த்துக்கொள்ளும். 40 அடி உடலையும் 131 அடி இறக்கைகளையும் கொண்ட MQ-4C Triton ஆளில்லா விமானங்கள் உலகின் வேறு வேறு பாகங்களில் உள்ள ஐந்து தளங்களில் இருந்து செயற்படவிருக்கின்றன. இவற்றால் 50,000 அடி
உயரமாகவும் மிகவும்
தாழ்வாகவும் பறக்க முடியும் அத்துடன் மிகவும் பரந்த கடற்பரப்பை கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும். தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு மேல் இவற்றால் பறக்க முடியும். மிகவும் உயர்ந்ததர உணரிகளாலும் ஒளிப்பதிவுக் கருவிகளாலும் திரட்டப்படும் தகவல்களை இவை உலகெங்கும் உள்ள அமெரிகக் கடற்படைத் தளங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கும். இதானால் உலகக் கடற்பரப்பு எல்லாவற்றையும் அமெரிக்கக் கடற்படையால் தொடர்ச்சியாகக் கண்காணிக்கவும் வேவு பார்க்கவும் முடியும்.
இரசியாவும் உக்ரேனும்
மேற்கு
நாடுகள் தமது சதியால் உக்ரேனில் தமக்கு சாதகமான ஆட்சியாளர்களை அமர்த்தி உக்ரேனை நேட்டோவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் இணைக்க முயலுகையில் இரசியா அதிரடியாக கிறிமியாவைத் தன்னுடன் உயிரிழப்பு ஏதுமின்றி இணைத்தமைக்கு கிறிமியாப் பிராந்தியத்தில் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தமையும் அங்கு ஏற்கனவே இருந்த இரசியக் கடற்படைத்தளமும்தான் காரணம். இரசியா அந்தப் பிராந்தியத்தில் ஒரு சிறந்த நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை நிறுவி இருந்தனால் இரசியாவால் இதைச் சாதிக்க முடிந்தது. சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சி ஆட்டம் காணும் தறுவாயில் இருக்கையில் இரசியா தனது விமானப் படைத்தளத்தை சடுதியாக அமைத்தமை ஒரு நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை அங்கு உருவாக்கியது. இரசியாவுடன் நேரடி மோதலை விரும்பாத அமெரிக்கா அங்கு ஏதும் செய்ய முடியாத நிலையை உருவாக்கப்பட்டது. இதனால் அமெரிக்கா தனது ஆதரவுப் படைகளை சிரியாவிலும் ஈராக்கிலும் பாதுகாப்பதிலும் மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளை இரசியா ஆக்கிரமிக்காமல் தடுப்பதிலும் அதிக கவனம் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டது. இது அமெரிக்காவின் கிழக்குச் சீனக் கடல் மீதான கவனத்தைத் திசை திருப்பியது. இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சீனா தான் தென் சீனக் கடலில் நிர்மாணித்த தீவுகளில் தன் விமானப்படையையும் கடற்படையையும் கொண்டு போய் நிறுத்தியது. இச் செயற்கைத் தீவுகள் படைத்துறை நோக்கங்களுக்குப் பயன்படுத்தப் பட மாட்டாது என்ற உறுதி மொழியை சீனா காப்பாற்றாமல் தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டது.
கிழக்கு ஐரோப்பா,
மேற்காசியா, தென்
சீனக்கடல்
இரசியா
உக்ரேனில் செய்த நடவடிக்கைகளால் நேட்டோ நாடுகள் தமது நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை மீளாய்வு செய்ய வைத்தது. இதனால்
பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நேட்டோப்படையினரின் போர்த் தளபாடங்களும் படைக்கலன்களும் தேவை ஏற்படின் துரிதமாகப் பாவிக்கக் கூடிய வகையில் களஞ்சியப்படுத்தப்பட்டன. இரசியாவின் படைநகர்வுகளை முன் கூட்டியே உணர்ந்து கொள்ளக் கூடியவகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன். ஆக்கிரமிப்புப் படைகளை தடுக்கக் கூடிய வகையில் சிறு படையணிகள் நிறுத்தப்பட்டன. ஒரு சில மணித்தியாலங்களுள் பெரும் படையணிகளை இரசியாவால் ஆக்கிரமிக்கப்படும் நேட்டோ நாடுகளில் கொண்டு போய் இறக்கக் கூடிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. பிரித்தானியா ஆங்கிலக் கால்வாயினூடான சுரங்கப் பாதையில் தனது போர்த்தாங்கிகளை நகர்த்தும் பயிற்ச்சியில் ஈடுபட்டது.
இரசியாவின் நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை முறியடிக்கக் கூடிய வகையில் நேட்டோப் படைகளின் தொலைதூரத் துல்ல்லியத் தாக்குதல் ஏவுகணைகளின் எண்ணிக்கைகளை அதிகரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
ஏவுகணை எதிர்ப்பு
முறைமையும் லேசர்
படைக்கலன்களும்
உலகின்
பல முன்னணி நாடுகள் ஏவுகணை எதிர்ப்பு முறைமைக்கு பெரும் செலவு செய்வது ஒரு சிறந்த நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை உருவாக்கவே. சீனா ஒலியிலும் பார்க்க ஐந்து மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ஏவுகணைகளை உருவாக்குவது எதிரியின் நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை உடைக்கவே. அமெரிக்கா
தாட் என்றும் இரசியா எஸ்-300, எஸ்-400 என்றும் ஏவுகணைகளை அவசர அவசரமாக உருவாக்கியதும் நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை உருவாக்கவே. தற்போது அமெரிக்காவும் இரசியாவும் போட்டி போட்டுக் கொண்டு லேசர், மைக்குறோவேவ்
படைக்கலன்களை உருவாக்கிக் கொண்டிருப்பது எதிரியின் நுழைவு எதிர்ப்பு-பிராந்திய மறுப்பு உபாயத்தை நொடிப்பொழுதில் நிர்மூலமாக்கவே.
சீனாவிடம் மைக்குறோவேவ் படைக்கலன்கள்
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய மைக்குறோவேவ்
படைக்கலன் EMP/high powered microwave cruise missiles என அழைக்கப்படுகின்றது. இது எதிரியின் எல்லா இலத்திரனியல்
உபகரணங்களையும் செயலிழக்கச் செய்யும். எதிரியின் தொடர்பாடல்கள், ஏவுகணைகள், ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள்,
ரடார்கள் உட்படப் பல விதமான கருவிகளை மைக்குறோவேவ் செயலிழக்கச்
செய்யும். பல படைக்கலன்களை எரித்துக் கருக்கும். இதனால் எதிரியின் “நுழைவு
எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” முறைமையச் சாம்பலாக்க முடியும். இதேபோன்ற
படைக்கலன்களை சீனாவும் உருவாக்கிப் பரீட்சித்துள்ளது. லேசர் படைக்கலன்களை
உருவாக்குவதிலும் சீனா கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அமெரிக்காவின்
படைத்துறை வளர்ச்சியை சமாளிக்க சீனா எடுக்கும் நடவடிக்கைகள் இந்தியாவை
அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குகின்றது. இந்தியாவிற்கு அருணாச்சலப் பிரதேசத்துக்கு என
ஒரு “நுழைவு எதிர்ப்பும் பிரதேச மறுப்பும்” உபாயம் அவசரமாகவும் அவசியமாகவும்
தேவைப்படுகின்றது.
No comments:
Post a Comment