Monday, 6 February 2017

அமெரிக்காவுடன் போருக்குத் தயார் என்கின்றது சீனா!






அமெரிக்காவுடன் போர் என்பது இப்போது வெறும் குரல் அல்ல நடக்கக் கூடிய ஒன்று (“not just a slogan” and becoming a “practical reality”) என சீனப் படைத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக் ஹொங்கொங்கில் இருந்து வெளிவரும் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அத்துடன் அந்த அதிகாரி தென் சீனக் கடலையும் கிழக்குச் சீனக் கடலையும் நோக்கி சீனப் படைகள் நகர்த்தப்படும் என்றும் தெரிவித்தார். இது சீன மக்கள் விடுதலைப் படையின் இணையத்தளத்திலும் பிரசுரமாகியுள்ளது. தென் சீனக் கடலில் சீனா நிர்மாணித்த தீவுகளை சீனா பாவிக்க அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறைச் செயலர் கூறியதும் அமெரிக்காவின்ஒரே சீனாஎன்ற கொள்கையில் இருந்து டொனால்ட் டிரம்ப் செயற்படுவதும் சீனா ஆட்சியாளர்களை மிகவும் ஆத்திரப்படுத்தியுள்ளது.  2017-ம் ஆண்டு ஜனவரியில் தென் கொரியா சீனாவின் எதிர்ப்பையும் மீறி தனது மண்ணில் அமெரிக்காவின் தாட் எனப்படும் ஏவுகணை எதிர்ப்பு முறைமைகள் நிறுத்தப்படும் என அறிவித்தது

மோதலுக்கு தயார் என்ற அமெரிக்கத் தளபதி
அமெரிக்காவின் பசுபிக் பிராந்தியப் படைத்துறைக் கட்டளைத் தளபதி அட்மிரல் ஹரிஸ் ஹரி 2016 டிசம்பரிலேயே அதுவும் ஒபாமாவின் ஆட்சியின் இறுதி நாட்களில் சீனாவுடன் ஒரு மோதலுக்கு அமெரிக்கப்படை தயார் என்றார். 5 ரில்லியன் டொலர்கள் பெறுமதியான உலக வர்த்தகம் நடக்கும் பன்னாட்டுக் கடற்பாதையில் சீனா ஆக்கிரமிப்புத்தனமாக நடந்தால் அதற்குப் பதில் கொடுக்க அமெரிக்கா தயங்காது என்றார் அவர்.

ரெக்ஸ் ரில்லர்சன்
சீனா தனது நாணயத்தின் பெறுமதியை வேண்டுமென்றே குறைந்த மதிப்பில் வைத்திருந்து அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பாதிப்பு உள்ளாக்குகின்றது என்றும் சீனா உலக வர்த்தகத்தில் கபடத்தனமாக நடக்கின்றது என்றும் டிரம்ப் அடிக்கடி கூறிவந்தார். அமெரிக்காவின் புதிய வெளியுறவுத் துறைச் செயலர் ரெக்ஸ் ரில்லர்சன் சீனா தென் சீனக் கடலில் நிர்மாணித்த தீவுகளை கடல் முற்றுகைக்கு உள்ளாக்க வேண்டும் என அவரது பதவி நியமனம் தொடர்பாக அமெரிக்க மூதவையுடன் நடந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். தன்னை நேர்காணல் செய்பவர்களைத் திருப்திப் படுத்தவே அவர் அப்படிச் சொல்கின்றார் என அப்போது கருதப்பட்டது. ஆனால் பின்னர் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதே கருத்தை அவர் மீள்வலியுறுத்தினார். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சீன அரச பத்திரிகையான குளோபல் ரைம்ஸ் ஓர் அணுவல்லரசை அதன் சொந்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவதனால் ஒரு பெரும் அணுப்போருக்குத் தயாராக வேண்டும் என்றது. ஐந்து முதல் இருபத்தியிரண்டு பில்லியன் பீப்பாய் மசகு எண்ணெயும் எழுபது முதல் இரு நூற்றித் தொண்ணூறு ரில்லியன் கன அடி எரிவாயுவும் கொண்ட கிழக்குச் சீனக் கடலில் உலகின் முன்னணி எரிபொருள் வியாபாரியான ரெக்ச் ரில்லர்சன் அதிக அக்கறை காட்டுவது ஆச்சரியப் படக்கூடிய ஒன்றல்ல. 

சீனா எரிதழல் கக்கும் யாளியா காகிதப் புலியா?
உறுதியான தலைமை, உறுதியான பொருளாதாரம், கட்டுக்கோப்பான படைத்துறை கொண்ட நாடு சீனா எனச் சொல்லப்படுவது எந்த அளவு நம்பகத் தன்மை வாய்ந்தது. அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பொதுவுடமைக் கட்சிக்குள் இருக்கும் எதிர்ப்பு எந்த அளவு என்பது வெளியில் தெரியாது. சீனாவின் பொருளாதாரம் தொடர்பான புள்ளிவிபரங்களின் நம்பகத்தன்மை வாய்ந்ததா? உலக வர்த்தகத்தில் பெரிதும் தங்கியிருக்கும் ஒரு நாடு தொடர்ச்சியான ஒரு போர் நடக்கும் போது எந்த அளவு, எத்தனை காலம் தாக்குப் பிடிக்கக் கூடியது? பொதுவுடமைக் கட்சியைப் பாதுகாப்பதை தலையாய கடமையாகக் கொண்ட படைத்துறை ஒரு முறையான போரில் அரை நூற்றாண்டுகளாக ஈடுபட்டதில்லை. அதன் படைக்கலன்கள் எந்த ஒரு போரிலும் நேரடியாகப் பரீட்சித்துப் பார்க்கப்படவில்லை. அமெரிக்காவைச் சுற்றி சீனாவின் படைத்தளங்கள் ஏதும் இல்லை ஆனால் சீனாவைச் சுற்றிவர அமெரிக்கப் படைத்தளங்கள் பல இருக்கின்றன

சீனா பயந்து ஒதுங்கிய வரலாறு.
1. சோவியத்திற்குப் பயந்த சீனா
எழுபதுகளின் ஆரம்பத்தில் சீனாவை ஆக்கிரமிக்க சோவியத் ஒன்றியம் தயாராகிக் கொண்டிருக்கின்றது என்பது அமெரிக்க உளவுத் துறை சொல்லித்தான் சீனா அறிந்து கொண்டது. சீனா தனது பொதுவுடமைக் கொள்கைகளை ஒரு புறம் தள்ளிவிட்டு காகிதப் புலி என விபரித்த அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடன் சோவியத் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு உடன்படைக்கையைச் செய்து கொண்டது. 1991இல் சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்தவுடன் சீனப் பொதுவுடமைவாதிகள் முதலாளித்துவப் பொருளாதாரத்தை நோக்கி பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற முகமூடியைச் சூடிக் கொண்டு நகர்ந்தனர்.
2. தைவானில் பின்வாங்கல்
1996இல் தைவானை ஆக்கிரமிக்கப் பெரும் எடுப்புடன் சென்ற சீனா பில் கிளிண்டன் இரு விமானம் தாங்கிக் கப்பல்களை தைவான் நீரிணைக்கு அனுப்பியவுடன் பின் வாங்கிக் கொண்டது. சீனாவின் பொருளாதாரமோ படைத்துறையோ அமெரிக்காவிற்கு எதிரான ஒரு போரை எதிர்கொள்ளத் தயாரான நிலையில் அப்போது இருக்கவில்லை. அதனால் சீனா தனது பாதுகாப்புச் செலவை அதிகரித்து படைவலுவைப் பெருக்கிக் கொண்டது. 2004-ம் ஆண்டில் இருந்து தைவானை தன்னுடன் இணைக்கும் போர்ப் பயிற்ச்சிகள் என்றும் ஒத்திகைகள் என்றும் பலவற்றைச் செய்ததுண்டு. ஆனால் உண்மையான முயற்ச்சி ஏதையும் இன்றுவரை சீனா செய்ததில்லை.
3. கிழக்குச் சீனக்கடல் வானாதிக்கம்  2013-ம் ஆண்டு நவம்பரில் சீனாவும் ஜப்பானும் தமது எனச் சொந்தம் கொண்டாடும் கிழக்குச் சீனக் கடலின் மேலாகப் பறக்கும் விமானங்கள் சீனாவின் அனுமதி பெற்றே பறக்க வேண்டும் என்ற ஒரு அதிரடி அறிவிப்பை சீனா விடுத்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்கப் போர் விமானங்கள் அதற்குச் சவால் விடுக்கும் வகையில் அந்தப் பிராந்தியத்தில் சீனாவின் அனுமதியின்றிப் பறந்த போது சீனாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பானும் தென் கொரியாவும் தமது விமானங்களை அந்த வான் பிரதேசங்களுக்கு அனுப்பிய போது சீனாவால் ஏதும் செய்ய முடியவில்லை.
4. சீனாவின் செயற்கைத் தீவில் அமெரிக்க விமானம்
2015 மே மாதம் சீனா கிழக்குச் சீனக் கடலில் உருவாக்கிய பியரி குரோஸ் தீவின் மேல் அமெரிக்க வேவுவிமானம் சி.என்.என் தொலைக்காட்சியின் நிருபர்களுடன் பறந்து சென்றபோது சீனா தொடர்ச்சியாக விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க வேவுவிமானம் பொருட்படுத்தாமல் தான் பன்னாட்டு வான்பரப்பில் பறப்பதாகத் தெரிவித்த போது சீனாவால் எதுவும் செய்ய முடியவில்லை. அதைத் தொடர்ந்து அதே தீவின் கடல் எல்லைக்குள் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சென்றபோதும் சீனாவால் ஏதும் செய்ய முடியவில்லை.
2017 ஜனவரி நடுப்பகுதியில் தைவான் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வது தொடர்பாக முழுமையான போர் ஒத்திகையைச் செய்தது.
அதிபர் ஜி ஜின்பிங்கின் கனவு
1840களில் ஹொங்கொங்கை பிரித்தானியா கைப்பற்றியமை ஜப்பான் சீனாவை ஆக்கிரமித்து வரலாற்றின் மிக மோசமான கொடுமைக்கு உள்ளாக்கியமை போன்ற கசப்பான சரித்திர நிகழ்வுகளில் இருந்து சீன மக்களுக்கு நம்ப்பிக்கை ஊட்ட சீனா தான் உரிமை கொண்டாடும் எந்த ஒரு பிரதேசத்தையும் இழக்கக் கூடாது என்பது சீன அதிபர் ஜீ ஜின்பிங்கின்கருத்து. சீனாவை ஓர் உலகப் பெருவல்லரசாக்க வேண்டும் என்ற ஜீ ஜின்பிங்கின் கனவின் முதற்படி சீனா ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் ஒரு பெருவல்லரசாக வேண்டும் என்பதே. அதனால் தென் சீனக்கடல், கிழக்குச் சீனக்கடல், இந்தியாவின் அருணாசலப் பிரதேசம், கஷ்மீர் பிரதேசம் போன்றவை தன்னுடையது என்று அழுத்திக் கூறிவந்தது. ஆனால் அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்திலும் தானே பெருவல்லரசு எனக் காட்டிக் கொண்டிருக்கின்றது. அதனால் தென் சீனக் கடலில் எல்லைப் பிரச்சினை தீரும் வரை தென் சீனக் கடற் பிராந்தியம் உலகக் கடற்பரப்பு அங்கு உலகக் கப்பற் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெறுவதை தன்னால் மட்டுமே உறுதி செய்ய முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. பன்னாட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கின்றது. கிழக்குச் சீனக் கடலில் ஜப்பானின் இறைமைக்குக் குந்தகம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அமெரிக்கா ஜப்பானுடன் செய்து கொண்ட பாதுகப்பு உடன்படிக்கையால் எழுந்துள்ள அமெரிக்காவின் கடமை என்பதும் அமெரிக்காவின் நிலைப்பாடு. தென் கொரியாவை வட கொரியாவிடமிருந்து பாதுகாப்பது தன் பணி என்பதும் அமெரிக்காவின் நிலைப்பாடு. இந்த மூன்று நிலைப்பாடுகளினால் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கின் பிராந்தியப் பெருவல்லரசுக் கனவுக்கு அமெரிக்கா சவாலாக அமைகின்றது. 

சீனா தொழில்நுட்பங்களைத் திருடுகின்றதா?
சீனா தனது படைத் துறைச் செலவையும் விண்வெளி ஆய்வுச் செலவையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தச் செலவீன அதிகரிப்பு சீன விரிவாக்கற் கொள்கையை உறுதி செய்வதாகக் கருதப்பட்டது. கனிம வளம் மிக்க ஆபிரிக்க நாடுகளையும் எரி பொருள் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகளையும் மற்றும் மத்திய ஆசிய நாடுகளையும் சீனா தனது ஆதிக்க வலயத்தினுள் அடக்க முயற்ச்சிக்கிறது. இந்த விரிவாக்கத்தை தனது உலக ஆதிக்கத்திற்கு சவாலாக அமெரிக்கா பார்க்கின்றது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான தொழில்நுட்ப இடைவெளி பாரியது. சீனா இணைவெளியூடாக ஊடுருவி அமெரிக்க தொழில்நுட்ப இரகசியங்களை அபகரித்து இந்த இடைவெளியை நிரப்பப் பார்க்கின்றது என அமெரிக்காவில் இருந்து குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
கட்சி மாறும் நாடுகள் கேந்திரோபாயச் சமநிலையை மாற்றுமா?
எரிபொருள் வளம், கனிம வளம், மீன் வளம் கப்பற் போக்கு வரத்து முக்கியத்துவம் ஆகியவற்றைக் கொண்ட தென் சீனக் கடல் இப்போது உலகில் கொதி நிலையில் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாகும். தென் சீனக் கடற்பிராந்தியம் முழுவதும் சீனா தன்னுடையது என்று அடம்பிடிக்கிறது. தென் சீனக் கடற்பிராந்தியத்திலும் கிழக்குச் சீனக் கடற்பிராந்தியத்திலும் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தாய்வான், மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம், கம்போடியா, இந்தோனேசியாஆகிய நாடுகள் சீனாவுடன் கடுமையாக முரண்படுகின்றன. இந்த நாடுகள் அமெரிக்காவுடன் இணைவதை தடுக்க சீனா இந்த முரண்பாடுகளை இருதரப்பு ரீதியில் தீர்க்க முயல்கின்றது. அந்த வகையில் முதலாவதாக பிலிப்பைன்ஸை தனது நட்பு வலயத்தினுள் கொண்டு வரும் முயற்ச்சியில் சீனா வெற்றி பெற்றுக் கொண்டிருக்கின்றது. அமெரிக்கப் படைத்தளம் உள்ள பிலிப்பைன்ஸ் சீனாவின் நட்பு நாடாக மாறுவது அமெரிக்காவிற்குப் பெரும் அரசுறவியல் தோல்வியாகும். அடுத்ததாக சீனா மலேசியாவைத் தன்பக்கம் இழுக்கப் பார்க்கின்றது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அமெரிக்கா முதன்மையானது, அமெரிக்காவை மீண்டும் பெரியதாக்குவோம் என்ற கொள்கைகள் ஜி ஜின்பிங்கின் சீனாவை உலக வல்லரசாக்கும் கனவும் எப்படி மோதிக் கொள்ளப் போகின்றன என்பதையே சீனா விடுத்துள்ள அமெரிக்காவுடன் போருக்குத் தயார் நிலைப்பாடு சுட்டிக் காட்டுகின்றது. சீனா உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்றாலும் இன்னும் அது ஒரு வளர்முக நாடாகும். அது தன் பொருளாதாரத்தை மேம்பட்டுத்த இன்னும் இடமுண்டு. தற்போது டொனால்ட் டிரம்ப் பல வர்த்தக உடன்படிக்கைகளை இரத்துச் செய்வது உலக அரங்கில் ஒரு பெரும் வர்த்தக இடைவெளியை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. சீனா மற்ற நாடுகளுடன் எப்படி பொருளாதார ரீதியில் இருதரப்புக்கும் நன்மையளிக்கக் கூடிய வகையில் ஒத்துழைக்க முடியும் என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வெறுமனவே அயோக்கிய ஆட்சியாளர்களைக் கொண்ட நாடுகளுக்கு உள்கட்டுமான அபிவிருத்தி செய்வதால் மட்டும் உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முடியாது. சீனா உலக அரங்கில் நாடுகளின் நட்பைப் பெறும் முயல வேண்டும். போர் என்பது சீனாவிற்கு இப்போது அவசியமற்றது. ஐநா சபையின் சமாதானப் படைகளுக்குப் பங்களிப்பதன் மூலம் சீனா தனது படையினருக்கு நேரடிக் களமுனை அனுபவத்தைப் பெறவேண்டும். அமெரிக்காவுடன் ஒரு போர் தற்போது சீனாவிற்கு தேவையற்றது. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...