Monday, 7 November 2016

அதிகாரமிக்க தலைமை சீனாவை உலகின் முதன்மை நாடாக்குமா?

சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் சீனாவின் மையத்திண்மைத் தலைவராக்கப்(Core Leader) பட்டுள்ளார். கடந்த முப்பது ஆண்டுகளில் எந்த ஒரு தலைவருக்கும் வழங்கப்படாத பதவி ஜின்பிங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மாவோ சே துங் அவர்களுக்கு இருந்த அதிகாரத்திற்கு ஒப்பான அதிகாரம் உள்ளவராக்கப் பட்டுள்ளார். மாவோ சே துங் தனது பதவிக் காலத்தின் இறுதி ஆண்டுகளில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார் என்பதால் அவருக்குப் பின்னர் சீனப் பொதுவுடைமைக் கட்சி ஒரு கூட்டுத் தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டது. அரசியலவையின் நிலையியற் குழு (Politburo Standing Committee) சீனாவின் அதிகார மையமாக்கப்பட்டது. திண்மைத் தலைவரின் விருப்பம் தான் நாட்டின் சட்டம் என்னும் அளவிற்கு அவருக்கு அதிகாரம் உண்டு. ஒருவரிடம் அதிக அதிகாரம் இருப்பது ஊடக சுதந்திரம் இல்லாத சீனா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு ஆபத்தானது என சிலர் வாதிடுகின்றனர். ஆனால் ஜின்பிங்கிடம் அதிக அதிகாரமிருப்பது சீனாவில் ஊழலை ஒழித்துக் கட்டவும் பொருளாதாரத்தைத் திறன்மிக்கதாக்கவும் உதவும் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

மையத் திண்மைத் தலைமை
சீனப் பொதுவுடமைக் கட்சியின் யாப்பில் மையத்திண்மைத் தலைவர் என்ற பதத்திற்கான வரைவிலக்கணம் இல்லை. 1989-ம் ஆண்டு டெங் ஜியொபிங் முதலில் மையத்திண்மைத் தலைமை என்ற பதத்தை அறிமுகம் செய்தார். அப்போது நடந்த தினமன் சதுக்க கிளர்ச்சியின் பின்னர் ஜியான் ஜெமின்னிற்கு மாவோ சே துங்கிடம் இருந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டன.  ஜி ஜின்பிங்கிற்கு மைய்த்திண்மைத் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் சீனப் பொதுவுடமைக் கட்சியில் அவரை விரும்புபவர்களும் விரும்பாதவர்களும் அவருக்கு அடிபணிந்துள்ளார்கள் எனக் கருதப்படுகின்றது. மாவோ மையத்திண்மைத் தலைவராக கருதப்படக்கூடிய அளவிற்கு அவருக்கு கட்சியில் மதிப்பு இருந்தது. சீனாவின் பொருளாதாரம் நெருக்கடி நிலையில் இருந்தபோது அதைச் சீர்திருத்தம் தேவைப்பட்டதால் டெங் ஜியொபிங் மையத்திண்மைத்தலைவரானார்.  ஜியான் ஜெமின் காலத்தில் இருந்த சூழ்நிலையில் ஒரு மையத்திண்மைத் தலைவர் தேவைப் பட்டதால் அது அவர் மேல் திணிக்கப்பட்டது. ஜி ஜின்பிங் தனக்குத் தானே அந்தப் பட்டத்தை சூட்டிக் கொண்டுள்ளார்.

ஆண்டு இறுதி மாநாடு 
சீனப் பொதுவுடமைக் கட்சியின் 18வது நடுவண் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் ஆண்டு இறுதி மாநாடு 2016 ஒக்டோபர் மாதக் கடைசியில் நான்கு நாட்கள் நடை பெற்றது. இதில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் 350 முதல் 400 பேர்வரை இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டிலேயே ஜின்பிங்கிற்கு மையத்திண்மைத் தலைமைப் பதவி வழங்கப்பட்டது. சீனாவை எந்தத் திசையில் இட்டுச் செல்வது என்பதைத் தீர்மானிக்கும் தன்மை இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒட்டியே அமையவிருக்கின்றது. 2002-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டின் ஆரம்பம் வரை சீன அதிபராக இருந்த ஹு ஜின்ரௌவின் ஆட்சியில் சீனாவின் பொதுவுடமைக் கட்சியில் ஊழல் தாண்டவமாடியது. அவர் ஓர் ஆளுமையில்லாத அதிபராகவும் பொது இடங்களில் சிறப்பாகப் பேசம் அளவிற்கு நாவன்மை அற்றவருமாகும். அவரது ஆட்சிக்காலத்தில் கட்சியையும் படைத்துறையையும் சேர்ந்த பலர் ஊழலின் மூலம் பெரும் செல்வந்தர்களாகினர். அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த ஜி ஜின்பிங் தலைமைத்துவம் மிக்கவராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருக்கின்றார். அவர் ஊழலை ஒழித்துக் கட்டுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றார். ஜி ஜின்பிங்கின் ஆட்சியில் ஊழலுக்கு எதிரான அமைப்பின் தலைவராக இருக்கும் வங் கிஷான் நடுவண் குழு உறுப்பினர்கள் உட்பட 150 பேரை தண்டனைக்கு உள்ளாக்கி இருக்கின்றார். சீனப் பொதுவுடைமைக் கட்சியில் ஜின்பிங்கிற்கு பரவலான ஆதரவு இருக்கின்றது. அவரும் சீனப் பொதுவுடமைக் கட்சி, சீனா ஆட்சி, சீனப் படைத்துறை ஆகிய மூன்று அதிகார மையங்களையும் தனது இறுக்கமான பிடிக்குள் கொண்டு வர முயல்கின்றார். அதில் வெற்றி பெற்றும் வருகின்றார். அரசியலவையின் நிலையியற் குழுவிற்கு (Politburo Standing Committee) அநேகமாக எல்லோரும் புதிதாக நியமிக்கும் உறுப்பினர்களாகும். ஜின்பிங்கிற்கு சவால் விடக்கூடியவர் தலைமை அமைச்சர் லி கெக்கியாங் மட்டுமே. அவரை ஜின்பிங்க் விரைவில் வேறு பதவிக்கு மாற்றி ஓரம் கட்டி விடுவதற்கான அல்லது அடக்கப்படுவதற்கான சாத்தியங்கள் தற்போது அதிகரித்துள்ளன. இதனால் ஜின்பிங்கிற்கு கட்சியில் சவால் விடக்கூடியவர்கள் இல்லை எனச் சொல்லலாம்.

வாரிசை அறிவிக்காத ஜி ஜின்பிங்
சீனப் பொதுவுடமைக் கட்சியின் வழமைப்படி 2017-ம் ஆண்டு ஜி ஜின்பிங்கிற்குப் பின்னர் யார் நாட்டின் அதிபர் மற்றும் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு வரவிருக்கின்றார்கள் என்பது பற்றி 2016 ஒக்டோபர் நடந்த மாநாட்டில் ஜி ஜின்பிங் அறிவித்திருக்க வேண்டும். சீன அதிபர் பதவியை ஒருவர் இரண்டு ஐந்தாண்டுக்காலம் வகிக்கலாம். ஆனால் ஜின்பிங் தான் மூன்றாம் தடவையும் பதவி வகிக்க விரும்புகின்றாரா என்ற ஐயம் எழுந்துள்ளது. 2017-ம் ஆண்டின் இறுதியில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் பேரவை மாநாடு நடக்கவிருக்கின்றது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த மாநாட்டில் ஜின்பிங் தனது முத்திரையைக் குத்துவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சீனாவை முதன்மை நாடாக்க ஜி ஜின்பிங்கின் பணிகள்:
1. ஒரு பட்டி, ஒரு பாதை முன்னெடுப்பு (one road, one belt initiative) மூலம் சீனாவின் பொருளாதாரத்திற்கு தேவையான மூலப் பொருட்களின் இறக்குமதியும் சீனாவின் ஏற்றுமதியும் தங்கு தடையின்றி நடப்பதை உறுதி செய்தல்.
2. 2021-ம் ஆண்டு சீனாவைச் செழிப்பான நாடாக மாற்றுதல்.
3. ஏற்றுமதியில் பெரிதும் தங்கியிருக்கும் சீனப் பொருளாதரத்தை மேலும் சீர்திருத்தம் செய்து உள்நாட்டுக் கொள்வனவை அதிகரித்தல்
4. சீனாவை உலகின் முதற்தரப் பொருளாதார நாடாக்குதல்.
5. சீனப் படைத்துறையை உலகில் ஈடு இணையற்றதாக்குதல்
6. ஹொங் கொங் தீவில் சீனாவின் பிடி தளராமல் தடுத்தல்
7. தென் சீனக் கடல் கிழக்குச் சீனக் கடல் ஆகியவற்றை அபகரித்தல்
8. தாய்வனை சீனாவுடன் இணைத்தல்
சீனாவை ஒரு சந்தைப் பொருளாதாரமாக மாற்றும் அதேவேளையில் பொருளாதாரத்தில் அரசுடமை காத்திரமான பங்கு வகிக்க வேண்டும் என சீனப் பொதுவுடமைக் கட்சி அறிவித்திருந்தது. சந்தைப் பொருளாதாரமும் அரசுடமையும் ஒன்றிற்கு ஒன்று முரணானவை என்பதை அப்போது அரசியல் மற்றும் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள். உண்மையில் பொதுவுடமைக் கட்சி என்னும் போர்வையில் நாட்டை தம் பிடிக்குள் வைத்திருப்பவர்கள் தமது பிடியில் இருந்து நாடு விலகுவதை விரும்பாதபடியால்தான் இப்படி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட கொள்கை வகுக்கப்பட்டது. சீனாவின் வளங்கள் திறன் மிக்க வகையில் ஒதுக்கீடு செய்யப் படாமைக்கு சீனாவின் அரசுடமைக் கொள்கையும் ஒரு காரணமாகும்.

சீனாவின் உட்கட்டுமான அரசுறவியல்(infrastructure diplomacy)
 சீனா உலகப்பெரு வல்லரசாக மாறுவதற்கு பல நாடுகளின் ஒத்துழைப்பும் நட்பும் தேவை. அதற்கு சீனாவின் அரசுறவியலும் உளவுத் துறையும் உலகத் தரம் வாய்ததாக இருக்க வேண்டும். கடந்த பல பத்தாண்டுகளாக சீனா தனது உட்கட்டுமானங்களில் பெருமளவு முதலீடு செய்தது. அந்த உட்கட்டுமானத்திற்கான பல இயந்திரங்களும் மனிதவளங்களும் தற்போது பயன்படுத்தாமல் இருக்கின்றன. அவற்றை வெளிநாடுகளில் சீனா பயன்படுத்துகின்றது. ஒரு நாட்டில் பாரிய விமான நிலையத்தை சீனா கட்டி எழுப்பும். அதற்கான கடன் அந்த நாட்டுக்கு சீன வங்கியால் அதிக வட்டிக்கு வழங்கப்படும். அந்த உட்கட்டுமானத்திற்கான பணிகளில் அந்த நாட்டில் இருக்கும் ஆட்சியாளர்கள் ஊழல் செய்து பெரும் பணத்தைப் பெற்றுக் கொள்வார்கள். அதன் மூலம் அந்த நாடும் ஆட்சியாளர்களும் சீனாவிற்கு சார்பாக நடந்து கொள்வார்கள். ஆனால் அந்த விமான நிலையம் பெரும் பொருளாதார இழப்பீட்டை அந்த நாட்டிற்கு ஏற்படுத்தும். உலக அரங்கில் சீனா செய்யும் இந்த நடவடிக்கைகளை உட்கட்டுமான அரசுறவியல் என அழைக்கலாம். சீனாவின் இந்த வகையான அரசுறவியல் மூலமாக சீனாவின் உறவு வளையத்தினும் கொண்டு வரப்படும் நாடுகளில் ஆட்சியில் இருப்பவர்களின் ஊழல்களும் மனித உரிமை மீறல்களும் அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சீனாவிற்கு ஒவ்வாதவர்களை ஆட்சிக்கு கொண்டு வருவது இலகுவானதாக இருக்கின்றது. சீனாவின் நட்புறவு நாடுகளின் ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் செல்வாக்கைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதில் சீனா அக்கறை காட்டாமல் இருப்பதை அது தவிர்த்துக் கொள்ள வேண்டும். பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ பிலிப்பைன்ஸை அமெரிக்காவில் இருந்து பிரித்து சீனாவுடன் நட்பை நெருக்கமாக்குவதாக அறிவித்தார். அவர் அப்படித் தெரிவித்தவுடன் முன்னாள் அதிபரும் அவரை ஆட்சிக்கு கொண்டுவந்தவருமான ஃபிடல் ரமோஸ் டுடெர்டோவின் அணியில் இருந்து விலகினார். சீனாவிற்கான பிலிப்பைன்ஸ் தூதுவர் தான் பதவி விலகுவதாக அறிவித்தார். பிலிப்பைன்ஸில் எடுத்த கருத்துக் கணிப்பின்படி அதிக மக்கள் சீனாவுடன் உறவை வளர்ப்பதிலும் பார்க்க அமெரிக்காவுடன் உறவைப் பேணுவதை விரும்புகின்றார்கள். சீனாவிற்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் திடீரென நெருக்கமாக்கப் பட்ட உறவு இரு நாடுகளுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய தீவுக் கூட்டங்கள் மீதான சீனாவின் பிடியைத் தளர்த்தவில்லை. ஆனால் அத்தீவுக் கூட்டங்களை ஒட்டி பிலிப்பைன்ஸ் மீன் பிடிப் படகுகள் செல்வதை சீனக் கரையோரக் காவற்படையினர் தற்போது “அனுமதி” வழங்கியுள்ளனர்.

பெருவல்லரசு (Super Power)
சீனாவின் உலகப் பெருவல்லரசுக் கனவின் முதற்படி தாய்வானைத் தன்னுடன் இணைப்பதாகும். ஆனால் சீனாவில் இருந்து தாய்வான் விலகிக் கொண்டிருக்கும் வேளையில் தற்போதைய சீன ஆட்சியாளர்களும் இணைப்பைத் தள்ளிப் போட்டுள்ளனர். வட கொரியாவின் அணுக்குண்டு மற்றும் தொலைதூர ஏவுகணைப் பெருக்கத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு தென் கொரியாவில் அமெரிக்கா குவித்து வைத்திருக்கும் படையினரும் படைக்கலன்களும் வியட்னாமும் அமெரிக்காவும் பல துறைகளிலும் ஒத்துழைப்பை வளர்ப்பதும் சீனாவின் பெருவல்லரசுக் கனவுக்குப் பெரும் சவாலாகும். அமெரிக்காவின் இந்தியாவிற்கான தூதுவர் 2016-ம் ஆண்டு ஒக்டோபர் 22-ம் திகதி அருணாசலப் பிரதேசத்திற்கு அதன் முதலமைச்சரின் அழைப்பின் பேரில் சென்றமைக்கு சீனா தனது ஆட்சேபனையைத் தெரிவித்தது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தனது தென் திபெத் எனச் சொல்லி அது தனது நாட்டின் ஒரு பகுதி என அடிக்கடி சொல்லி வருகின்றது. அருணாச்சலப் பிரதேசம், கிழக்குச் சீனக் கடல், தென் சீனக் கடல் ஆகிய நில மற்றும் கடற்பரப்புக்களை சீனா தனது என அடம் பிடிப்பது அதன் அயலவர்களை அமெரிக்காவுடன் படைத்துறை ரீதியில் ஒத்துழைக்க நிர்ப்பந்திக்கின்றது. சீனா தனது அயல் நாடுகளுடன் உருவாக்கும் முறுகல்கள் சீனாவை உலகின் முதற்தர நாடாக மாற்ற உகந்ததல்ல.

உலக நாணயம்
சீனாவின் நாணயத்தை உலக நாணயமாக்குவதற்கு சீனாவின் மூலதனச் சந்தையை மற்ற நாடுகளுக்கு திறந்துவிட வேண்டும். இது சீனப் பொதுவுடமைக் கட்சியின் அரசுடமையைத் தொடர்ந்து பேணும் கொள்கைக்கு பெரும் சவாலாக அமையும். சீனாவில் தற்போது நிலவும் பொருளாதார சூழ் நிலையும் சீன நாணயத்தின் பெறுமதியைத் தேவைக்கு ஏற்ப மாறும் நிலையில் வைத்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ் நிலையில் சீனா தனது நாணயத்தை உலக நாணயமாக்கும் திட்டத்தையும் ஒத்தி வைத்துள்ளது.

சீனா உலகின் முதற் தர நாடாக இருப்பதற்கு பெரும் தடையாக உள்ளது அதன் மக்கள் தொகைக் கட்டமைப்பாகும். சீனாவின் மக்கள் தொகையில் இளையோர் குறைவாவும் முதியோர் தொகை அதிகமாகவும் இருக்கின்றது இதனால் சீனாவில் பொருளாதாரப் பிரச்சனை மட்டுமல்ல படைத்துறைப் பிரச்சனையையும் சீன ஆட்சியாளர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இளையோர் தொகை அதிகமாகவுள்ள இந்தியா தனது படைத்துறை ஆளணியை அதிகரித்தால் அது சீனாவிற்கு பெரும் சவாலாக அமையலாம

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...