2016-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் அமெரிக்கப் படைத்துறையினர் இணையவெளிப் படைப் பிரிவிற்கு என ஒரு கட்டளைப் பணியகத்தை உருவாக்கியதுடன் அமெரிக்கப் படைத்துறைக்கான பொதுக் கட்டளையகத்தின் ஒரு பகுதியாக இணையவெளிப் படைத்துறையையும் கொண்டு வந்துள்ளனர். அமெரிக்கப் படைத்துறையின் இணையவெளியில் செய்யும் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தாக்குதல் நடவடிக்கைகளையும் மற்றப் படைத்துறைகளுடன் ஒத்திசைவு நிகழ்வுகளாக்குவதற்கான ஏற்பாடுகளையும் அமெரிக்கப் படைத்துறை செய்துள்ளது. 6200 பேரை மொத்தமாகக் கொண்ட 133 இணையவெளிப் படையணிகள் உருவாக்கும் திட்டம் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2018-ம் ஆண்டு நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது. தரைப்படை, கப்பற்படை வான்படை போலவே இணைய வெளிப்படைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
எங்கும் இணைய வெளி ஊடுருவல்கள்
தற்போது எல்லா முன்னணி நாடுகளும் இணையவெளிப் படைத்துறையில் கவனம் செலுத்தும் வேளையில் இணையவெளி ஊடுருவல்கள் படைத்துறை, வர்த்தகம், விஞ்ஞான ஆராய்ச்சி, எனப் பரவி இப்போது கட்சி அரசியலுக்குள்ளும் நுழைந்துள்ளது. ஓர் அரசியல் கட்சியின் இரகசியங்களை மற்ற அரசியல் கட்சியினர் ஊடுருவி தகவல்களைப் பெற்று அவற்றை அம்பலமாக்குவது நாடுகளுக்குள் மட்டுமல்ல நாட்டு எல்லைகளையும் தாண்டிச் செல்கின்றது.
ஹிலரியின் மின்னஞ்சல் ட்ரம்பின் பொன்னூஞ்சல்
2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க விருக்கும் அமெரிக்க அதிபருக்கான் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிலரி கிளிண்டன் 2000-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டுவரை அமெரிக்காவின் வெளியுறவுக்குப் பொறுப்பான அரசுத்துறைச் செயலராக இருந்த போது மின்னஞ்சல்களைப் பிழையான விதங்களில் கையாண்டார் என்ற குற்றச் சாட்டு தீவிரமாக முன் வைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் அவர் தனது மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக தனது பணிமனை மின்னஞ்சல் வசதிகளைப் பாவித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் பல மிக இரகசியமாகச் செய்ய வேண்டிய மின்னஞ்சலூடான தகவல் பரிமாற்றங்களை தனது சொந்த மின்னஞ்சலூடாகச் செய்து அரச இரகசியங்களை ஆபத்துக்கு உள்ளாக்கினார் என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப் பட்டது. ஹிலரி தான் மேற்கொண்ட மின்னஞ்சல்களை அமெரிக்க உள்துறையினரிடம் கையளிக்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டார். அவரும் தனது முழு கணனித் தொகுதி தொடர்பான தகவலகளை வழங்கினார். அவற்றில் முப்பதினாயிரம் மின்னஞ்சல்கள் ஏற்கனவே அழிபட்டு காணமல் போய்விட்டதாக ஹிலரி தெரிவித்தார். இதனால் முன்னாள் அமெரிக்க உள்துறைப் பாதுகாப்பு உயர் அதிகாரி ஹிலரி மிகவும் கவலையீனமாகச் செயற்பட்டார் என்ற குற்றச் சாட்டை பகிரங்கமாக முன்வைத்தார். அவரது கருத்து வெளிவந்தவுடன் கருத்துக்கணிப்பில் முன்னணியில் இருந்த ஹிலரி தனது ஆதரவுத் தளத்தை இழந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னணிக்குச் சென்றார்.
இரசியா ஹிலரியின் கட்சியை இணையவெளியில் ஊடுருவியதா?
சென்ற ஆண்டே குடியரசுக் கட்சியின் தேர்தல் பணிமனைக் கணனிகள் இரசியாவில் இருந்து இணையவெளியூடாக ஊடுருவப் பட்டு அதன் வேட்பாளரான நான்கரை பில்லியன் டொலர்கள் பெறுமதியான செல்வந்தர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான தகவல்களை இரசியா பெற்றுக் கொண்டதாகக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. பின்னர் மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாட்டில் ஹிலரி கிளிண்டனை முறைப்படி வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்னர் மக்களாட்சிக் கட்சியின் தேசிய அவையின் மின்னஞ்சல்களை ஜூலியன் அசாஞ்சேயின் விக்கிலீக்ஸ் அம்பலப் படுத்தியது. அந்த மின்னஞ்சல்கள் இரசியாவில் இருந்தே ஊடுருவிப் பெறப்பட்டவை என்பதை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளது. ஊடுருவல் செய்வதற்குப் பல நாட்களுக்கு முன்னரே அமெரிக்கப் பாதுகாப்புத் துறையினர் மக்களாட்சிக் கட்சியின் கணனிகள் இரசியாவில் இருந்து ஊடுருவப் படலாம் என அக் கட்சியை எச்சரித்திருந்தனர்.
பழிவாங்கினாரா அசாஞ்சே?
அமெரிக்காவின் உலக நாடுகல் பலவற்றில் உள்ள பல்வேறு தூதுவரகங்களில் இருந்து அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களைப் பெற்றுக் கொண்ட விக்கிலீக்ஸ் அவற்றை அம்பலப் படுத்தி அமெரிக்க அரசுக்குப் பெரும் தலைக் குனிவை ஏற்படுத்தியிருந்தது. அப்போது விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ்சேயை தண்டிக்க வேண்டும் என்பதில் ஹிலரி கிளிண்டன் தீவிரமாக இருந்தார். அதற்காக அவரது ரிஷி மூலம் சுவிஸ்ற்லாந்தில் தோண்டி எடுக்கப் பட்டு இரு பெண்களுடன் அவர் முறை தவறி உடலுறவு கொண்டார் என்ற குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு அவரைப் பிரித்தானியாவில் இருந்து சுவிஸ்ற்லாந்துக்கு நாடுகடத்தும் உத்தரவை பிரித்தானிய நீதிமன்றம் பிறப்பித்த வேளை அவர் இலண்டனில் உள்ள எக்குவேடர் தூதுவரகத்தில் தஞ்சமடைந்து இன்றுவரை அதனுள்ளே இருக்கின்றார். தனக்குத் தண்டனை கிடைக்க முன்னின்ற ஹிலரியைப் பழிவாங்க ஜூலியான் அசாஞ்சே முயன்றதாகத் தெரிவிக்கப் படுகின்றது. ஹிலரி மக்களாட்சிக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் படுவதைத் தடுக்க அசாஞ்சே முயன்றார் எனவும் தெரிவிக்கப் படுகின்றது. ஆனால் மக்களாட்சிக் கட்சியின் தேசிய சபையின் நிர்வாகி மின்னஞ்சல்கள் ஊடுருவப் பட்டமைக்கு தானே பொறுப்பு ஏற்றுக் கொண்டு ஹிலரியைக் காப்பாற்றினார். தங்களிடம் ஹிலரியின் மக்களாட்சிக் கட்சியினரின் பல உள்ளக மின்னஞ்சல்கள் பல மேலும் இருப்பதாக விக்கிலீக்ஸ் சொல்கின்றது. அவற்றைத் தாம் படிப்படியாக வெளிவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டுகின்றார்கள். இரசியாவிடமிருந்தா இந்த மின்னஞ்சல்களைப் பெற்றீர்கள் என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை.
இரசியாவை ஊடுருவச் சொன்ன டொனால்ட் ட்ரம்ப்
மக்களாட்சிக் கட்சியின் தேசியப் பணிமனையை இரசியாவில் இருந்து இணையவெளியூடாக ஊடுருவப்பட்டது என்ற செய்தி தீவிரமாக அடிபடும் வேளையில் மிகவும் சர்ச்சைகுரிய கருத்துக்களை மிகவும் இலகுவாக முன்வைப்பதற்குப் பெயர் போன டொனால்ட் ட்ரம்ப் ஹிலரியின் கணனித் தொகுதிகளை இரசியா ஊடுருவி காணாமற் போன முப்பதினாயிரம் மின்னஞ்சல்களைக் கண்டு பிடித்து அவற்றை ஊடகங்களுக்குக் கொடுக்காமல் அமெரிக்கப் பாதுகாப்புத் துறையிடம் கையளிக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார். ஏற்கனவே இரசியாவுடன் பல வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டு டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக முன்வைக்கப் படுகின்றது. இரசியாவிற்கு ஏற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவராக அவர் இருப்பார் என்ற கருத்து இப்போது இரசியாவில் பகிரங்கமாகவும் பரவலாகவும் முன்வைக்கப்படுகின்றது. அமெரிக்காவின் தி அட்லாண்டிக் என்ற ஊடகம் டொனால்ட் ட்ரம்ப் குடியரசுக் கட்சியை இரசியாவின் கட்சியாக மாற்றிவிட்டார் என்ற தலைப்பிட்டு ஒரு கட்டுரையையும் வெளிவிட்டிருந்தது.
ஒத்துவராத கிலரியும் புட்டீனும்
விளடிமீர் புட்டீன் இரசியாவின் தலைமை அமைச்சராக இருந்த போதே அவருக்கும் ஹிலரி கிளிண்டனுக்கும் இடையில் ஒத்து வராது. ஹிலரி அமெரிக்க வெளியுறவுத் துறைக்குப் பொறுப்பாக இருந்த போது புட்டீனுடன் கடுமையாகவே நடந்து கொண்டார். விளடிமீர் புட்டீன் தேர்தலில் முறைகேடுகள் செய்தே இரசியாவின் அதிபரானார் என்ற குற்றச்சாட்டையும் ஹிலரி முன்வைத்திருந்தார். அந்த தேர்தல் முறைகேடாக நடந்தது என ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு ஊக்கம் கொடுக்கக் கூடியவகையிலும் ஹிலரி பேசியிருந்தார். 2010-ம் ஆண்டு இருவரும் சந்தித்த பின்னர் ஊடக மாநாட்டில் பேச முன்னர் ஹிலரியை புட்டீன் வேண்டுமென்றே நீண்ட நேரம் காக்க வைத்திருந்தார். ஹிலரியின் உரைகளை எழுதுபவர் ஓர் இரசிய வெறுப்பாளரானவர் ஆவார். உக்ரேன் விவகாரத்தில் புட்டீனை ஹிலரி ஹிட்லருக்கு ஒப்பிட்டிருந்தார். அது தொடர்பாக பிரெஞ்சு ஊடகம் புட்டீனிடம் கேள்வி எழுப்பிய போது பெண்களுடன் வாதிடுதல் வேண்டாம் என்றார் புட்டீன்.
டொனால்ட் ட்ரம்பிற்கு இரசியா உதவுகின்றதா?
தற்போது அமெரிக்கத் தேர்தல் களத்தில் எழுந்துள்ள முக்கிய கேள்வி இரசியா நேரடியாக அல்லது மறை முகமாக அல்லது இரண்டு வழியிலும் டொனால்ட் ட்ரம்பிற்கு உதவி செய்கின்றதா என்பதுதான். இரசியப் படைகள் உக்ரேனுக்குள் போகாது என டொனால்ட் ட்ரம்ப் முதலில் தவறுதலாகச் சொல்லியிருந்தார். பின்னர் உக்ரேனின் கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தமையை தான் ஆட்சேபிக்கப் போவதில்லை என்றார். இரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தான் நீக்குவேன் என்றார். எஸ்தோனியா போன்ற சிறு நாடுகளை இரசியா ஆக்கிரமித்தால் அதை தான் குடியரசுத் தலைவராக வந்தால் தடுக்கப் போவதில்லை என்றார். இவையாவும் இரசியாவிற்கு மிகவும் வேண்டப்பட்டவராக டொனால்ட் ட்ரம்பை மாற்றியுள்ளன. நேட்டோவின் உடன்படிக்கையின் படி ஒரு நாடு அந்நிய நாடு ஒன்றினால் தாக்கப் பட்டால் மற்ற நேட்டோவின் உறுப்பு நாடுகள் தமது நாட்டுக்கு எதிராகத் தாக்குதல் செய்யப்பட்டது போல் அதை எடுத்து தாக்கப்படும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரானால் நேட்டோ உடன்படிக்கைக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. நேட்டோவின் விழ்ச்சி இரசியாவிற்குப் பெரும் வாய்ப்பாக அமைந்து மீண்டும் சோவியத் ஒன்றியம் போல ஒரு பெரும் நாடுகளின் கூட்டமைப்பைக் கட்டி எழுப்ப வேண்டும் என்ற இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் கனவு நனவாகலாம். கட்சிகள் ஒன்றின் இணையவெளியில் ஊடுருவுதல் ஒரு நாட்டுக்குள் நடப்பது என்பதைத் தாண்டி இன்னும் ஒரு நாட்டில் இருந்து ஊடுருவி தகவல்களைத் திருடுதல் 2016 நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் முறையாக நடந்துள்ளது எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இதற்கும் இரசியாவிற்கும் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் உள்ள தொடர்புகளுக்கும் தொடர்புண்டா? உலகப் பூகோள அரசியலை ட்ரம்ப் சரியாக அறிந்து வைத்திருக்காத படியால்தான் அவர் உக்ரேன் தொடர்பாக தவறுதலாகவும் தப்பாகவும் கருத்துக்களை வெளியிடுகின்றார். 1976-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜெரால்ட் போர்ட் கிழக்கு ஐரோப்பாவில் சோவியத் ஒன்றியத்தின் ஆதிக்கம் இல்லை எனச் சொன்னது அவர் புவிசார் அரசியலைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்ற கண்டனத்துக்கு உள்ளாகியதுடன் அவரது தோல்விக்கும் வழிவகுத்தது. டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் இரசியா கிறிமியாவைத் தன்னுடன் இணைத்தமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவர்களாகும்.
ட்ரம்பின் வர்த்தகமும் இரசியாவும்
ஹிலரியின் மக்களாட்சிக் கட்சியின் கணனிகள் ஊடுருவப்பட்டமை இரசியாவில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன என இரண்டு தனியார் நிறுவனங்கள் செய்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 1996-ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் "TRUMP TOWER." "TRUMP," "TRUMP INTERNATIONAL HOTEL AND TOWER," "TRUMP HOME", "THE TRUMP CREST DESIGN." ஆகிய வர்த்தகப் பெயர்களை இரசியாவில் காப்புரிமை செய்ய விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் எண்ணியிருந்த எந்த ஒரு கட்டிடமும் இரசியாவில் கட்டப்படவில்லை. ஆனால் 2013-ம் ஆண்டு இரசியாவில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டி நடத்தும் உரிமம் ட்ரம்பின் நிறுவனம் ஒன்றிற்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதை ஒட்டி ட்ரம்ப் தனது டுவிட்டரில் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 19-ம் திகதி புட்டீன் தனது நண்பராகப் போகின்றார் எனத் தெரிவித்திருந்தார். 2008-ம் ஆண்டு ட்ரம்ப் புளோரிடா மாநிலத்தில் உள்ள தனது மாளிகையை இரசியச் செல்வந்தர் ஒருவருக்கு 94மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்து 54மில்லியன் டொலர்கள் இலாபம் ஈட்டியிருந்தார். 2013-ம் ஆண்டு ட்ரம்ப் நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழில் இரசிய அதிபர் புட்டீனைப் பாராட்டி ஒரு கட்டுரையும் எழுதியிருந்தார். ட்ரம்பின் தேர்தல் பரப்புரை முகாமையாளர் இரசியாவின் கைப்பொம்மையாக உக்ரேனில் அதிபராக இருந்த விக்டர் யனுக்கோவிச்சின் ஆலோசகராகவும் இருந்தவர். விக்டர் யனுக்கோவிச் தற்போது இரசியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். 2016 ஓகஸ்ட் மூன்றாம் திகதி டொனால்ட் ட்ரம்பிற்கு பொது மக்களிடம் இருந்து அதிக நிதி கிடைத்ததாகச் செய்திகள் வெளிவந்தன. அது ஹிலரியின் நிதிக்கு இணையானதாகவும் இருக்கின்றது. ட்ரம்பிற்கு வெளிநாட்டில் இருந்து காசு வருகின்றதா?
2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் இணையவெளி ஊடுருவல்கள் ஹிலரிக்கு மிகப் பெரும் நெருக்கடியைக் கொடுக்கவிருக்கின்றது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
No comments:
Post a Comment