அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2016 மார்ச் 20-ம் திகதி செய்த கியூபப் பயணம் ஐக்கிய அமெரிக்காவிற்கும் தென் அமெரிக்க நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒபாமா தனது குடும்பத்தினருடனும் 40 அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்களுடனும் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தார். அமெரிக்கா தனது ஆசியச் சுழற்ச்சி மையத்தை ஆசியா நாடுகளை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கையில் சீனா லத்தின் அமெரிக்க நாடுகளுடன் தனது வர்த்தகத்தையும் கேந்திரோபாய ஒத்துழைப்பையும் மேம்படுத்திக் கொண்டிருக்கையில் ஒபாமாவின் கியூபாவிற்கும் ஆர்ஜெண்டீனாவிற்குமான பயணங்கள் முக்கியத்துவம் பெறுகின்றது.
கியூபாவில் 5 விழுக்காட்டிற்கும் குறைவான மக்களே இணைய இணைப்பைப் பெற்றுள்ளனர். ஒன்பது விழுக்காட்டிலும் குறைவான தொகை மக்களே சொந்தமாக வீடு வைத்திருக்கின்றார்கள். கியூபாவின் பொருளாதாரத்திற்கு சோவியத் ஒன்றியம் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தது. சோவியத்தின் வீழ்ச்சிக்கும் பின்னர் வெனிசுவேலா ஆதரவு கொடுத்துக் கொண்டு வந்தது. வெனிசுவேலாவில் இருந்து நாள் ஒன்றிற்கு ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை கியூபா குறைந்த விலையில் பெற்றுக் கொண்டிருந்தது. எரிபொருள் விலை வீழ்ச்சிக்குப் பின்னர் அந்த உதவியும் நிறுத்தப் பட்டது. கியூபப் பொருளாதாரத்தை நெருக்கடியில் இருந்து தவிப்பதற்கு அமெரிக்காவுடனான உறவை சீராக்குதல் உதவும் என கியூப ஆட்சியாளர்கள் கருதினர். அமெரிக்கா கியூபாமீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்கினால் அது கியூபாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும். ஐக்கிய அமெரிக்காவும் கியூபாவில் ஆட்சி மாற்றத்தை வலியுறுத்துவதை கைவிடுவதாகச் சொல்லிக் கீழ் இறங்கி வந்தது. கியூப அமெரிக்க உறவை சீராக்குவதில் வத்திக்கான் திருச்சபை அதிக பங்கு வகித்ததாகச் சொல்லப்படுகின்றது. அதனால் 2014-ம் ஆண்டின் இறுதியில் நீன்ட காலமாக எதிரிகளாக இருந்த ஐக்கிய அமெரிக்காவும் கியூபாவும் மீண்டும் இரசதந்திர உறவுகளை ஏற்படுத்தி கைதிகள் பரிமாற்றத்தையும் செய்துள்ளன. அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை கியூபாவின் புவிசார் நிலை முக்கியமான ஒன்றாகும். 1492-ம் ஆண்டு இந்தியாவை மேற்கு நோக்கித் தேடிச் சென்ற நிக்கொலஸ் கொலம்பஸ் அமெரிக்கக் கண்டத்தின் கியூபாத் தீவிலேயே போய் இறங்கினார். கடந்த நூற்றாண்டு ஐக்கிய அமெரிக்காவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான மிக மோசமான போர் மூளக் கூடிய பேராபத்து கியூபாத் தீவை ஒட்டியே உருவாகி இருந்தது.
அமெரிக்கா வாழ் கியூபர்கள்
அமெரிக்காவில் வாழும் கியூபர்களில் 68 விழுக்காட்டினர் கியூப அமெரிக்க உறவு சீரடைவதை விரும்புகின்றனர். அமெரிக்கக் குடியரசுத் தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய மாநிலமாக புளோரிடா இருக்கின்றது. புளோரிடாவில் கியூபர்கள் 12 இலட்சம் பேர் வரை வாழ்கின்றார்கள். அமெரிக்காவில் வாழும் கியூபர்கள் நீண்ட காலமாக குடியரசுக் கட்சியை ஆதரித்து வருகின்றனர். அண்மைக் காலங்களாக புளோரிடாவில் வாழும் கியூபர்கள் பராக் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியை ஆதரிப்பது அதிகரித்து வருகின்றது. இந்த நகர்வை மேலும் தூண்டச் செய்ய பராக் ஒபாமா கியூபாவுடனான உறவை ஏற்படுத்திக் கொண்டார் எனச் சொல்லப்படுகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முனைப்புக்காட்டும் ரெட் குரூஸ் ஒரு கியூபத் தந்தைக்குப் பிறந்தவராவார். ஊழல் மிக்கதும் பல அரசியல் கைதிகளைச் சிறையில் வைத்திருப்பதும் சர்வாதிகாரத்துவம் உடையதுமான கீயூப ஆட்சியாளார்களுக்கு ஒபாமாவின் அமெரிக்கப் பயணம் அங்கீகாரம் வழங்குவது போல் ஆகின்றது என்றார். கியூபாவில் ஒபாமா உரையாற்றும் போது கியூபாவில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் வல்லமையோ அல்லது விருப்பமோ அமெரிக்காவிடம் இல்லை என்றார்.
கேந்திரோபாய கியூபா
கியூபாத் தீவில் இருக்கும் பகைமை மிக்க கடற்படையோ அல்லது விமானப் படையோ அமெரிக்காவிற்கு கேந்திரோபாயம் மிக்க மெக்சிக்கோ குடாவை ஆபத்தான நிலைக்கு உள்ளாக்கலாம். மெக்சிக்கோ குடாவில் இருந்து அல்டாந்திக் மாகடலுக்கான தொடர்புக்கு பெரும் சவாலாக அமையக்கூடியவகையில் கியூபாவின் பூகோள நிலை இருக்கின்றது. கியூபாவுடன் நல்ல உறவு ஐக்கிய அமெரிக்காவிற்கு இல்லாமையால் அமெரிக்க வணிக மற்றும் கடற்படடக் கப்பல்களும் விமானங்களும் மெக்சிக்கோ குடாவில் இருந்து நேரடியாக அட்லாண்டிக் மாக்கடலுக்குச் செல்லாமல் சுற்றி ஒரு நீண்ட பாதையால் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கியூபாத் தீவின் வட கரை அறு நூறு மைல்கள் நீளமானது இது பஹாமாஸ் கரைக்கு சமாந்திரமாகச் செல்கின்றது. லத்தின் அமெரிக்க நாடுகளுடன் ஐக்கிய அமெரிக்கா தனது உறவை மீள் சீரமைப்பதற்கு கியூபா ஒரு நல்ல தொடக்கத்தை வழங்கும் என அமெரிக்கக் கொள்கை வகுப்பாளர்கள் கருதுகின்றார்கள். ஆனால் கியூப முன்னாள் அதிபர் பிடல் காஸ்ரோ தனது மக்களுக்கு அதிபர் ஒபாவைத் தாக்கி எழுதிய நீண்ட கடிதம் அவர்களின் நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுகின்றதா? அல்லது பிடல் காஸ்ரோ தனது மீசையில் மண் படவில்லை என எடுத்துக் காட்டுகின்றாரா என்பதை அறிய இன்னும் சில ஆண்டுகள் எடுக்கும்.
ஐக்கிய அமெரிக்காவும் லத்தின் அமெரிக்காவும்
அமெரிக்கா என்றால் வெறும் ஐக்கிய அமெரிக்கா மட்டுமல்ல அது வட துருவத்தில் இருந்து தென் துருவம் வரை செல்லும் ஒரு பெரிய கண்டமாகும். ஐக்கிய அமெரிக்கா, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, லத்தின் அமெரிக்கா எல்லாம் இதில் அடக்கம். வட அமெரிக்காவில் 23 நாடுகளும் தென் அமெரிக்காவில் 12 நாடுகளும் இருக்கின்றன. அமெரிக்கக் கண்டத்தில் இப்படிப் பல நாடுகள் இருந்த போதும் அமெரிக்கா என ஐக்கிய அமெரிக்காவைத்தான் பலரும் குறிப்பிடுகின்றார்கள். தென் அமெரிக்காவில் ஸ்பானிய, பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கேய மொழி பேசும் மக்களைப் பெரும்பான்மையாகாக் கொண்ட நாடுகளை லத்தின் அமெரிக்கா என அழைப்பர். ஆர்ஜெண்டீனா, பொலிவியா, பிரேசில், சிலி, கொலம்பியா, கொஸ்ர ரிக்கா, கியூபா, டொமினிக்கன் குடியரசு, எக்குவேடர், எல் சல்வடோர், பிரெஞ் கயானா, குவாடலோப், குவாட்டமாலா, ஹெய்ட்டி, ஹொண்டரூஸ், மார்டினெக்ஸ், மெக்சிக்கோ, நிக்காரகுவா, பனாமா, பரகுவே, பெரு, பியூட்டொ ரிக்கோ, உருகுவே, வெனிசுவேலா போன்ற நாடுகள் லத்தின் அமெரிக்க நாடுகள் என அழைக்கப்படும்.
என்ன வேறுபாடு?
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டறிந்த பின்னர் ஐரோப்பியர்கள் பெருமளவில் குடியேறினர். வட அமெரிக்காவில் குடியேறியவர்கள், அதிலும் பெரும்பாலும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து சென்றவர்கள், தங்கள் குடும்பத்துடன் சென்று குடியேறி அங்குள்ள மக்களை இனைக்கொலை செய்தனர். தென் அமெரிக்காவிலும் மத்திய அமெரிக்காவிலும் குடியேறச் சென்றவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்கள் மட்டுமே. அவர்கள் உள்ளூரில் உள்ள ஆண்களைக் கொன்று பெண்களைத் தமதாக்கிக் கொண்டனர். இவர்களது அடுத்த தலைமுறையினர் ஓர் கலப்பு இனத்தவர்களாகவே அமைந்தனர். இதனால் ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வாழும் மக்களும் எனைய அமெரிக்க மக்களும் உருவத்தால் வேறுபட்டவர்களாக இருக்கின்றனர்.
லத்தின் அமெரிக்காவில் சீனா
2001-ம் ஆண்டு அமெரிக்க நகர் நியூயோர்க்கில் நடந்த 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் ஐக்கிய அமெரிக்கா உலகெங்கும் உள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளில் தனது அதிக கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க சீனா லத்தின் அமெரிக்க நாடுகளுடன் தனது உறவை விரிவு படுத்தியது. இதனால் பல லத்தின் அமெரிக்க நாடுகள் இடதுசாரிகளின் பக்கம் திரும்பியது. வலதுசாரிகளைக் கொண்ட நாடுகளுடன் இரசியா உறவை வளர்க்க சீனா பல லத்தின் அமெரிக்க நாடுகளுடன் தனது வர்த்தகத்தை விரிவாக்கியது. அவற்றிற்கு தனது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்தல், படைக்கலன்களை விற்பனை செய்தல் மற்றும் அவற்றிடமிருந்து மலிவு விலைக்கு மூலப் பொருட்களை வாங்குதல் அவற்றில் முதலீடு செய்தல் ஆகியவற்றை சீனா பெருக்கியது. வெனிசுவேலா, பிரேசில், ஆர்ஜெண்டீனா, எக்குவேடர் ஆகிய நாடுகளுடன் நெருக்கமான உறவுகளையும் சீனா ஏற்படுத்திக் கொண்டது. 2014-ம் ஆண்டு லத்தின் அமெரிக்க நாடுகளுக்கு சீனா வழங்கிய கடன் 22பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 1994-ம் ஆண்டு ஆர்ஜெண்டீனாவின் இறக்குமதியில் 3.4விழுக்காடு சீனாவில் இருந்து வந்தது. இது 2014இல் 16.5விழுக்காடாக உயர்ந்தது.
பொதுவுடமை கியூபாவும் ஐக்கிய அமெரிக்காவும்
1959-ம் ஆண்டு பிடல் காஸ்ரோ தலைமையில் நடந்த புரட்சியால் கியூபா பொதுவுடமை ஆட்சியின் கீழ் வந்தது. அமெரிக்கர்களுக்குச் சொந்தமான பல கியூபச் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டன. இதனால் அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையில் பகைமை உருவானது. 1938-ம் ஆண்டு கியூபாவின் குவாண்டானாமோ குடாவை அமெரிக்கா குத்தகைக்குப் பெற்று அங்கு ஒரு படைத்தளத்தை நிறுவியது. இன்றுவரை ஒரு சிறு தொகையை அமெரிக்கா குத்தகைப் பணமாகச் செலுத்திக் கொண்டிருக்கின்றது. அமெரிக்க உளவுத்துறை கியூபா மீது வெளிநாடுவாழ் கியூபர்களைக் கொண்டு ஒரு ஆக்கிரமிப்பையும் செய்தது. அது தோல்வியில் முடிவடைய பிடல் காஸ்ரோவைக் கொல்லப் பல சதிகளையும் செய்தது. கியூபாவில் காஸ்ரோவின் வேண்டுதலுக்கு இணங்க சோவியத் ஒன்றியம் அங்கு அணுக்குண்டுகளைத் தாங்கிய ஏவுகணைகளை நிறுத்தியது. இதனால் இரு வல்லரசுகளுக்கும் இடையில் ஒரு போர் மூளூம் அபாயமும் ஏற்பட்டது. பின்னர் ஏவுகணைகள் அகற்றப்பட்டு கியூபாவை அமெரிக்கா ஆக்கிரமிக்காது என்ற உறுதி மொழி வழங்கப்பட்டது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கியூபாவிற்கு வெனிசுவேலா நிதி உதவி செய்து வந்தது. ஆனால் வெனிசுவேலாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அந்த உதவியும் கியூபாவிற்குக் கிடைக்காமல் போக கியூபா ஐக்கிய அமெரிக்காவுடன் உறவை விருத்தி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. கியூபாமீது அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒத்துக் கொண்டது. இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசிய பின்னர் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள இடைவெளி நிரப்ப நீண்ட காலம் எடுக்கும் என்பது தெளிவாகியது. கியூபாவின் மனித உரிமைகளைப் பற்றி ஒபாமா குற்றசாட்டை முன்வைக்க அமெரிக்காவில் கியூபாவில் உள்ளது போல்ல எல்லாருக்கும் மருத்துவ வசதி இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார் கியூப அதிபர் ரௌல் காஸ்ரோ.
ஆர்ஜெண்டீனாவும் அமெரிக்காவும்.
பிரேசிலுக்கு அடுத்த படியாக தென் அமெரிக்காவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக ஆர்ஜெண்டீனா இருக்கின்றது. 1983-ம் ஆண்டில் இருந்து அங்கு மக்களாட்சி நிலவுகின்றது. மனித உரிமைகளை மதிக்கும் ஒரு நாடாகவும் அது கருதப்படுகின்றது. ஆர்ஜெண்டீனாவிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதி 17.1பில்லியன் டொலர்களாகவும் அங்கிருந்து செய்யப்படும் இறக்குமதி 6.3பில்லியன் டொலர்களாகும். 1823-ம் ஆண்டு ஆர்ஜெண்டீனா உருவான போது அதை முதலில் அங்கீகரித்த நாடுகளின் ஐக்கிய அமெரிக்காவும் ஒன்றாகும். தெற்கில் தமக்கு ஒரு பங்காளி கிடைக்கும் என அப்போது ஐக்கிய அமெரிக்கா எதிர்பார்த்தது. ஆனால் அமெரிக்காவிற்கும் ஆர்ஜெண்டீனாவிற்கும் இடையிலான அரசுறவியல்(இராசதந்திர) உறவு கடந்த 200 ஆண்டுகளில் பெரும்பாலும் மோசமானதாகவே இருந்தது. முதலாம் உலகப் போரின் போது ஆர்ஜெண்டீனாவில் இருந்த கணிசமான ஜேர்மன் மக்களைக் கருத்தில் கொண்டு ஆர்ஜெண்டினா நடுநிலை வகித்தது. இரண்டாம் உலகப் போரின் போது ஆர்ஜெண்டீனா இரகசியமாக ஜேர்மனி தலைமையிலான அச்சு நாடுகளுக்கு ஆதரவுகாட்டியது. போரின் பின்னர் பல நாஜிப் படையினர் ஆர்ஜெண்டீனாவில் தலைமறைவாகினர். அவர்களில் ஹிட்லரும் அடங்குவார் என்று கூட ஒரு சதிக்கோட்பாடு தெரிவிக்கின்றது. பனிப்போர்க் காலத்தில் ஆர்ஜெண்டீனா சோவியத் ஒன்றியத்துடன் வர்த்தகத்தையும் உறவையும் விருத்தி செய்தது. 1979-ம் ஆண்டு சோவியத் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்த போது சோவியத்திற்கு உணவு ஏற்றுமதி செய்வதை ஜிம்மி கார்ட்டர் நிர்வாகத்தில் இருந்த அமெரிக்கா தடைசெய்தது. அப்போது சோவியத்துக்குத் தேவையான உணவை ஆர்ஜெண்டீனா ஏற்றுமதி செய்தது. பின்னர் ரொனால்ட் ரீகனின் நிர்வாகத்தில் லத்தின் அமெரிக்காவில் சோவியத்தின் அனுசரணையுடன் பொதுவுடமை வாதம் பரவாமல் இருக்க அமெரிக்க உளவுத் துறையினர் பல அசிங்கமான திரைமறைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இது லத்தின் அமெரிக்கர்களிடையே ஐக்கிய அமெரிக்காவிற்கு எதிரான கருத்து வலுப்பெற்றது.
திசை மாறும் ஐக்கிய அமெரிக்க லத்தின் அமெரிக்க உறவு.
தற்போது ஐக்கிய அமெரிக்காவிற்கு சட்டரீதியாகவும் கள்ளத்தனமாகவும் அதிக மக்கள் குடியேறுவது லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்துதான். அண்மைக்காலங்களாக ஐக்கிய அமெரிக்காவை நம்பாவிடினும் அதனுடன் உறவை வர்த்தகத்தையும் பேணுவது தமக்கு வாய்ப்பாக அமையும் என பல லத்தின் அமெரிக்க மக்களும் ஆட்சியாளர்களும் கருதுகின்றனர். பல நாடுகள் மக்களாட்சி முறைமைக்கும் திறந்த பொருளாதாரக் கொள்கைகளுக்கும் மாறியுள்ளன. கியூபாவில் செய்யப் படும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை சமூகவுடமைத் தத்துவங்களை நிகழ்நிலைப் படுத்துவதாக (updating socialism) கியூப ஆட்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உற்றது சொன்னால் அற்றது பொருந்துமா?
கியூபாவைத் தொடர்ந்து ஆர்ஜெண்டீனாவிற்கு இரு நாட் பயணத்தை ஒபாமா மேற்கொண்டார். ஆர்ஜெண்டீனாவில் அதிபர் மௌரிசியோ மக்ரியுடன் (Mauricio Macri) ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் பராக் ஒபாமா உரையாற்றினார். 1970களில் லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்த தனியாண்மை ஆட்சியாளர்களுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க உளவுத்துறையினர் செய்த சதி நடவடிக்கைகள் இருதரப்பு உறவுகளைப் பெரிதும் பாதித்திருந்தது என அங்கு ஒப்புக் கொண்ட பராக் ஒபாமா தனது நாட்டு உளவுத் துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பான இரகசிய ஆவணங்கள் வெளிவிடப்படும் என்றார். மௌரிசியோ மக்ரிக்கு முன்னர் ஆர்ஜெண்டீனாவின் அதிபராகா இருந்த Cristina Fernandez ஒரு இடதுசாரியாவார். 2015 டிசம்பரில் நடந்த ஆட்சி மாற்றத்தை அமெரிக்காவிற்கு சாதகமாக மாற்றுவதே ஒபாமாவின் ஆர்ஜெண்டீனாவிற்கான பயணத்தின் முக்கிய நோக்கம். ஒபாமா தனது மனைவியுடன் நகர மண்டபம் ஒன்றில் ஆர்ஜெண்டீனாவின் இளையோரச் சந்தித்தார். இச் சந்திப்பு அமெரிக்க-ஆர்ஜெண்டீன உறவைச் சீராக்குவதற்கு எனத் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப் பட்டது போல் அங்கு நடந்தவை சுட்டிக் காட்டுகின்றன.
தூய்மையான தோழமை மிக்க பங்காண்மையே தேவை
ஐக்கிய அமெரிக்கா தனது தென் புற அயலவர்களுடன் நல்ல உறவை வளர்பதற்கு அதனுடைய கடந்த கால நடவடிக்கைகள் சாதகமாக இல்லை. 1970களில் இருந்ததைப் போல் இல்லாமல் தற்போது பல துறைகளிலும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் லத்தின் அமெரிக்க நாடுகளுடன் நல்ல உறவைப் பேண பொருளாதாரச் சுரண்டல் நோக்க மில்லாத சிறந்த உறவை லத்தின் அமெரிக்க நாடுகளுடன் ஐக்கிய அமெரிக்கா உருவாக்குவதன் மூலமே கடந்த கால வடுக்களை லத்தின் அமெரிக்கர்கள் புறம் தள்ளுவார்கள். அமெரிக்காவின் தொழில் நுட்ப வளர்ச்சியும் பெரிய சந்தையும் லத்தின் அமெரிக்க நாடுகளை மேம் படுத்த உதவும். அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் கலாச்சாரப் பங்காண்மை இருதரப்பினருக்கும் வாய்ப்பாக அமைவதுடன் சீன ஆதிக்கத்தை இல்லாமாற் செய்யும். ஆனால் அமெரிக்காவிற்கும் தூய்மையான தோழமைக்கும் சம்பந்தம் உண்டா?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment