கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பு உருவாக்குவதற்கான மாநாடு 1955-ம் ஆண்டு பாண்டூங் நகரில் நடந்த போது இஸ்லாமிய நாடுகளைச் சமாதானப்படுத்த ஜவகர்லால் நேரு இஸ்ரேலை அழைக்கவில்லை. பலஸ்த்தீனம் தொடர்பான இஸ்ரேலில் பல நடவடிக்கைகளை கண்டித்து வந்த இந்தியா தற்போது இஸ்ரேல் தொடர்பாகத் தனது கொள்கையை மாற்றியுள்ளது. இரசியாவிற்கு அடுத்த படியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய படைத்துறைப் பங்காளியாக இஸ்ரேல் மாறியிருக்கும் அளவிற்கும் இஸ்ரேலிடம் இருந்து உலகிலேயே அதிக அளவு படைக்கலன்களை வாங்கும் நாடாக இந்தியா விளங்கும் அளவிற்கும் இந்தியாவிற்கு இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு மாற்றம் அடைந்துள்ளது.
முறுகலடையும் அமெரிக்க இஸ்ரேலிய உறவு
முன்னாள் சோவியத் தலைமை அமைச்சர் அலெக்ஸி கொஸியின் முன்னாள் அமெரிக்க அதிபர் லிண்டன் ஜோன்ஸனிடம் உலகில் எண்பது மில்லியன் அரபுக்களும் மூன்று மில்லியன் இஸ்ரேலியர்களும் இருக்கையில் நீங்கள் ஏன் அரபுக்களை விட்டு இஸ்ரேலியர்களை ஆதரிக்கின்றீர்கள் எனக் கேட்ட போது இஸ்ரேலியர்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என லிண்டன் ஜோன்ஸன் பதிலளித்தார். தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் பராக் ஒபாமாவிற்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் நல்ல உறவு இல்லை. கடந்த அமெரிக்கக் குடியரசுத் தேர்தலில் ஒபாமாவிற்கு எதிராக இஸ்ரேல் செயற்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்திற்கும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களுக்கும் இடையில் இருக்கும் முறுகல் அறுபது ஆண்டுகளாகத் தொடரும் அமெரிக்க இஸ்ரேலிய உறவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக இஸ்ரேல் கடும் அதிருப்தியடைந்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மோசமடைந்துள்ளது. ஐரோப்பாவின் பல நகரங்களில் யூதர்களிற்கு எதிரான கருத்துக்கள் வலுவடைந்து வருகின்றது. இதனால் இஸ்ரேல் புதிய நட்புக்களைத் தேடுகின்றது. அந்தத் தேடலில் இஸ்ரேலின் கண்ணில் முதல் தென்படுவது இந்துத்துவா ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியா.
இந்திரா காந்தியும் இஸ்ரேலும் அரபுநாடுகளும்
இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு தொடர்பாக நேருவின் கொள்கைகளையே இந்திரா காந்தி கடைப்பிடிப்பது போல வெளியில் காட்டிக் கொண்டார். இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவரப்பட்ட இஸ்ரேலுக்கு எதிரான பல தீர்மானங்களை முன் மொழியும் நாடாக இந்தியா இருந்தது. காங்கிரசுக் கட்சியின் ஆட்சியின் போது அரபு நாடுகளுடனும் இஸ்ரேலுடனும் இந்தியாவின் உறவு அந்தரங்கத்தில் வேறு அம்பலத்தில் வேறாகவே இருந்தது. எகிப்த்தின் அப்துல் கமால் நாசர் சூயஸ் கால்வாயை எகிப்திய அரச உடமையாக்கியபோது அதைப் பகிரங்கமாக ஆதரித்த் ஜவகர்லால் நேரு அந்தரங்கத்தில் நாசரை மிதமாக நடந்து கொள்ளும்படி வலியுறுத்தினார். இஸ்ரேலுக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் உள்ள உறவை எதிர்த்த நேரு பொதுநலவாய நாடுகளில் இருந்து இந்தியா வெளியேறும் என்று கூட பிரித்தானியாவை மிரட்டியிருந்தார். 1962-ம் ஆண்டு நடந்த இந்திய பாக்கிஸ்த்தானியப் போரின் போது எகிப்து நடு நிலை வகித்தது. மற்ற பல அரபு நாடுகள் பாக்கிஸ்த்தானிற்கு ஆதரவாகச் செயற்பட்டன. 1967-ம் ஆண்டு நடந்த அரபு இஸ்ரேல் போரின் போது பலஸ்த்தீன நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததை இந்திரா காந்தி கடுமையாகக் கண்டித்தார். 1967-ம் ஆண்டுப் போரின் பின்னர் ஒக்டோபர் மாதம் எகிப்த்திற்கும் பயணம் மேற்கொண்ட இந்திரா காந்தி அப்போது எகிப்த்தும் சிரியாவும் இணைந்து அமைத்திருந்த ஐக்கிய அரபுக் குடியரசுடன் இணைந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார். அதில் பலஸ்த்தீனம் அங்கீகரிக்கக்ப்பட்டது. அரபு நாடு அல்லாத ஒரு நாடு பலஸ்த்தீனத்தை முதலில் அங்கீகரித்தது என்றால் அது இந்தியாவே. ஆனால் ஜெருசலத்தில் ஒஸ்ரேலிய கிருத்தவர்களால்அல் அக்சாபள்ளிவாசல் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் 1969-ம் ஆண்டு கூட்டிய ரபத் மாநாட்டிற்கு பாக்கிஸ்த்தான் ஆட்சேபித்ததால் இந்தியா அழைக்கப்படவில்லை. இருந்தும் பலஸ்த்தீன விடுதலை அமைப்பின் உறுப்பினர்களை அதே ஆண்டு இந்தியா டில்லியில் வரவேற்று அவர்கள் டில்லியில் ஒரு தகவல் நிலையத்தை அமைக்க அனுமதியும் உதவியும் வழங்கியது. 1971-ம் ஆண்டு நடந்த பங்களாதேசப் பிரிவினைப் போரின் போது எகிப்த்தும் சிரியாவும் நடுநிலை வகிக்க சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் போன்ற நாடுகள் இந்தியாவிற்கு எதிராகச் செயற்பட்டன. ஆனால் இஸ்ரேல் இந்தியாவிற்கு ஆதரவாகச் செயற்பட்டது. இப்போரின் போது இஸ்ரேல் இரகசியமாக இந்தியாவிற்கு படைக்கலங்களையும் வழங்கியது. ஆனாலும் இந்தியா பலஸ்த்தீனம் தொடர்பான தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை. 1970 களின் பின்னர் இந்தியாவின் எரிபொருள் தேவையில் பெரும் பகுதியை ஈரானில் இருந்து செய்த ஏற்றுமதியால் நிறைவு செய்யப்பட்டது. அத்துடன் பெருமளவு இந்தியர்கள் அரபு நாடுகளில் தொழில் வாய்ப்புக்களும் பெற்றனர். 1974-ம் ஆண்டு ஜசீர் அரபாத் தலைமையிலான பலஸ்த்தீன விடுதலை அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளர் நிலையைப் பெறுவதற்கு இந்தியா முன்னின்று உழைத்தது. பலஸ்த்தீனத்துடன் முதல் இராசதந்திர உறவுகளையும் இந்தியா ஏற்படுத்திக் கொண்டது. 1982-ம் ஆண்டு லெபனானில் பலஸ்த்தீன விடுதலை இயக்கத்திற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்ட படை நடவடிக்கையையும் இந்திரா காந்தி இந்தியப் பாராளமன்றத்தில் கண்டித்து உரையாற்றி இருந்தார். 1980இலும் 1982இலும் பலஸ்த்தீன விடுதலை இயக்கத் தலைவர் ஜசீர் அரபாத் இந்தியாவிற்குப் பயணம் செய்தார். இந்தியாவை பாலஸ்த்தீனியர்களின் நிரந்தர நண்பன் என்றார் அரபாத். இந்திரா காந்தியின் மறைவிற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி இஸ்ரேலியத் தலைமை அமைச்சரை 1985 ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. துனிசியாவில் இருந்த பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைப் பணியகத்தை இஸ்ரேல் தாக்கி அழித்தமையை இந்தியா கண்டித்ததுடன் அது தொடர்பாக ஆராய புது டில்லியில் கூட்டுச்சேரா நாடுகளின் கூட்டத்தையும் கூட்டியது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து இஸ்ரேல் வெளியேற்றப்படுவதை இந்தியா விரும்பவில்லை.
இஸ்ரேலின் மொசாட்டும் இந்தியாவின் றோவும்
1968-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆட்சியின் போது இந்திய உளவுத் துறையான றோ ஆரம்பிக்கப்பட்ட போது அது இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட்டுடன் இரகசியமாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது. பாக்கிஸ்த்தான் தொடர்பான பல தகவல்களை மொசாட் இந்தியாவுடன் இன்றுவரை பகிர்ந்து கொண்டிருக்கின்றது. பாக்கிஸ்த்தானின் அணுக் குண்டு ஆய்வு தொடர்பான தகவல்களை மொசாட்டெ இந்தியாவிற்கு வழங்க்யது. இஸ்ரேலிய உதவியுடன் பாக்கிஸ்த்தானிய அணுக்குண்டு நிலைகள் மீது தாக்குதல் நடாத்த திட்டமிட்ட ராஜீவ் காந்தி அரபுநாடுகளின் எதிர்ப்பு மோசமாக இருக்கும் எனக் கருதி அத்திட்டத்தைக் கைவிட்டார். பல இஸ்ரேலிய உளவாளிகள் கஷ்மீருக்கு உல்லாசப் பயணிகளாகப் போய் பல தகவல்களைத் திரட்டினர். அவர்களில் இருவரை பாக்கிஸ்த்தானிய உளவுத் துறை கொன்றது. இந்திய இஸ்ரேலிய உளவுத் துறையினரில் ஒத்துழைப்பால் கலவரமடைந்த பாக்கிஸ்த்தான் தானும் மொசாட்டுடன் உறவுகளை இரகசியமாக ஏற்படுத்தியது. அரபுநாடுகளின் படைத்துறை இரகசியங்களை இதன் மூலம் இஸ்ரேல் பாக்கிஸ்த்தானிடம் இருந்து பெற்றுக் கொண்டது.
பஜகாவும் இஸ்ரேலும்
இஸ்ரேல் உருவாகுவதை மகாத்மா காந்தியும் நேருவும் எதிர்த்த போது இந்தியாவின் இந்துத்துவ அமைப்புக்கள் அதை ஆதரித்தன. 1977-ம் ஆண்டு இந்தியாவில் ஆட்சிக்கு வந்த ஜனதாக் கட்சியின் அரசு அப்போதைய இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சரும் 1967 அரபு இஸ்ரேல் போரின் கதாநாயகனுமான மோஷே தயானை இரகசியமாக இந்தியாவிற்கு அழைத்தது. இருந்தும் பலஸ்த்தீனர்களுக்கு என ஒரு நாடு உருவானால் அது இஸ்ரேலுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்ற மோஷே தயானின் நிலைப்பாட்டை அப்போதிய இந்தியத் தலைமை அமைச்சர் மொரார்ஜி தேசாய் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் இஸ்ரேல் பலஸ்த்தீனர்களில் நிலங்களிச் செய்த யூதக் குடியேற்றங்களை மொரார்ஜி தேசாயின் அரசில் வெள்நாட்டலுவலகள் அமைச்சராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேய் கடுமையாகக் கண்டித்தார். 1978-ம் ஆண்டு எகிப்திய அதிபர் இஸ்ரேலுடன் செய்த காம்ப் டேவிட் உடன்படிக்கையையும் ஜனதாக் கட்சி அரசு கடுமையாக எதிர்த்தது. ஆனால் பஜகாவை அதிகம் இஸ்ரேலிடம் செல்ல வைத்தது இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பே. உலகின் மிக மோசமான தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இஸ்ரேலிய அரசுத் தலைவர்களும் பிரமுகர்களும் ஆபத்தின்றியும் மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாமலும் தமது உள்நாட்டுப் பயணங்களையும் போக்குவரத்துக்களையும் செய்கின்றனர். இந்தத் திறனை இஸ்ரேலிடம் இருந்து பெற்றுக் கொள்ள இஸ்ரேலுக்கு முதலில் பயணம் மேற்கொண்ட இந்திய அமைச்சர் எல் கே அத்வானியாகும். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி 2000-ம் இஸ்ரேல் சென்றார். அவர் பதவிக்கு வந்தவுடன் செய்த முதல் வெளிநாட்டுப் பயணமும் இதுவாகும்.
இந்தியாவைத் திருத்திய முனை
அரபு நாடுகள் தொடர்பாக இந்தியாவின் கொளகையைத் திருத்திய ஒரு நிகழ்வாக Organaisation of Islamic Conference (OIC)என்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு 1986ல் வெளியிட்ட ஓர் அறிக்கை அமைந்தது. ஐ.நா. சபையின் அறிக்கையின் அடிப்படையில் கஷ்மீரில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களையும் பெண்களுக்கு எதிரான கொடுமைகளையும் கண்டித்து OIC அறிக்கை வெளியிட்டது. இந்தியா இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என OIC குற்றம் சுமத்தி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. இந்தச் செய்தி இந்திய அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்ட இந்தியா, இது பாகிஸ்தானின் தவறான பிரச்சாரத்தின் காரணமாக எழுதப்பட்டது என்று கருத்துக் கூறியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய கிழக்கு தொடர்பான தனது கொள்கையை இந்தியா மீள் பரிசீலனை செய்தது.
கார்கில் போரில் இஸ்ரேல் - திருப்பு முனை
இந்திய இஸ்ரேலிய உறவில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது இந்தியாவிற்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையில் நடந்த கார்கில் போராகும். 1999-ம் ஆண்டு மூன்று மாதங்கள் நடந்த இந்தப் போரின் போது இந்தியாவிற்கு அவசரமாகவும் அவசியமாகவும் சில படைக்கலன்களும் தொழில்நுட்பங்களும் தேவைப்பட்டது. அதை வழங்க இரசியா தாமதம் காட்டிய போது இந்தியாவின் அவசியத் தேவைகளை இஸ்ரேலே அவசரமாக நிறைவேற்றியது. இந்திய எல்லைக்குள் இரகசியமாக நுழைந்த பாக்கிஸ்த்தானியப் படையினர் கார்கில் நகரில் மிகவும் பாதுகாப்பான ஒரு பாறைத் தொடரில் நிலை கொண்டனர். அவர்களின் நிலையையும் நகர்வுகளையும் அவதானிக்க இஸ்ரேல் இந்தியாவிற்கு இரகசியமாகப் பேருதவி புரிந்தது. பாக்கிஸ்த்தானியப் படையினரின் நிலைகள் தொடர்பான செய்மதிப் படங்களை இந்தியாவிற்கு இஸ்ரேல் வழங்கியதுடன் தனது ஆளில்லா வேவு விமானங்களை கார்கிலுக்கு அனுப்பி பல தகவல்களையும் திரட்டியது. இடம் விட்டு இடம் இலகுவாக நகர்த்தக் கூடிய ரடார்களும் இஸ்ரேலால் இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. கார்கில் போரின் போது இஸ்ரேலியப் போர் விமானிகள் நேரடியாகச் சம்பந்தப்பட்டதாகவும் செய்திகள் கசிந்தன. இதன் பின்னர் இஸ்ரேலிடமிருந்து இந்தியா படைக்கலன்களை வாங்கத் தொடங்கியது. 2000-ம் ஆண்டு இந்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இஸ்ரேலுக்கான பயணத்தை மேற்கொண்டார். அத்துடன் பல துறைகளிலும் இரு நாடுகளும் ஒத்துழைக்கத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா இஸ்ரேலுக்கு முரணாகச் செயற்படுவதை தவிர்த்துக் கொள்வதாகவும் கார்கில் போருக்கான இஸ்ரேலிய உதவியின் போது இந்தியா ஒத்துக் கொண்டது.
மோடியும் இஸ்ரேலும்
இஸ்ரேலுனடான உறவை இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பகிரங்கமாக மேம்படுத்தி வருகின்றார். அவரது உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் அவர்களது பிதாமகர் எல் கே அதவானியைப் போலவே இஸ்ரேலுக்குப் பயணம் செய்தார். இஸ்ரேல் இந்தியாவில் படைக்கலன்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற வேண்டு கோளையும் அவர் விடுத்தார். மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருக்கும் போதே இஸ்ரேலுக்குப் பயணம் செய்திருந்தார். மோடியின் இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு இஸ்ரேலியத் தொழில்நுட்பங்கள் அவசியமானவையாகும். 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் மோடி இஸ்ரேலியத் தலைமை அமைச்சர் நெத்தன் யாகூவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் பற்றி உரையாடினார். இஸ்ரேலுடனான உறவு மேம்படுத்தப்படும் என மோடி உறுதியளித்தார். நெத்தன்யாஹூ இந்தியாவுடன் இணைந்து இணையவெளிப் பாதுகாப்பு முறைமைகளை உருவாக்க விரும்புவதாகச் சொன்னார். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் இரு தரப்பு வர்த்தகங்களையும் மேம்படுத்தின
இந்தியா இஸ்ரேல் உறவு பாக்கிஸ்த்தானிய அரபு உறவை மேலும் வலுவடையச் செய்யும். இது ஒரு பெரும் போட்டியாக மாறலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment