மோசமான பொருளாதாரம், சிரியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளில் உள்நாட்டுப் போர், காசா இரத்தக் களரி, அடங்க மறுக்கும் பலஸ்த்தீனம், ஆதிக்க வெறி கொண்ட இஸ்ரேல், உக்ரேனில் வல்லரசுகளின் முறுகல் நிலை, தென் சீனக் கடலிலும் கிழக்குச் சீனக்கடலிலும் மோதல் நிலை, தொடரும் படைக்கலன்கள் பெருக்கும் போட்டி ஆகியவற்றுடன் 2014-ம் ஆண்டு முடிவடைந்தது. இவை மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகள் 2014-ம் ஆண்டில் இருந்து 2015 ஆண்டிற்கு முதிசமாகக் கிடைத்துள்ளன. ஆனாலும் ஓர் ஒளிக் கீற்றாக குறைவடைந்த எரிபொருள் விலை தோன்றியுள்ளது. உலகப் பொருளாதாரத்தில் மட்டுமல்ல உலகெங்கும் புவிசார் அரசியலிலும் 2015-ம் ஆண்டில் பெரும் மாற்றத்தை எரிபொருள் விலையே ஏற்படுத்தப் போகின்றது. 2015-ம் ஆண்டு பல நாடுகள் குடிவரவிற்கு எதிரான கடுமையான நிலைப்பாடுகளைத் தொடர்ந்தும் கடைப்பிடிக்கும்.
2015இல் இலங்கை - கடன் பட்டார் நெஞ்சம் போல்.....
2015-ம் ஆண்டின் ஆரம்பத்தில் உலகச் செய்திகளில் அதிகம் அடிபடும் நாடாக இலங்கையே இருக்கும். 2016-ம் ஆண்டு இறுதியில் நடக்க வேண்டிய குடியரசுத் தலைவர் தேர்தல் அட்டமத்துச் சனிக்கு அஞ்சி 2015 ஜனவரி - 8-ம் திகதி நடக்கின்றது. வீழ்ச்சியடைந்த எரிபொருள் விலை பொருளாதாரத்தில் செயற்பட இன்னும் ஓர் ஆண்டாவது எடுக்கும். அப்போது பொருட்கள் விலைகள் குறைந்து மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய மாற்றங்கள் ஏற்படும். இப்போது வாக்காளர்கள் இருக்கும் நிலையிலும் பார்க்க 2016 இறுதியில் அவர்களில் நிலை நன்றாக இருக்கும் வாய்ப்புக்கள் அதிகம். அட்டமத்துச் சனியால் தெண்டங்கள் மிக உண்டாகும், திரவியம் நாசமாகும், கொண்டதோர் குடும்பம் வேறாகும், பண்டுள தேசம் விட்டுப் பரதேசம் போவான் ஏன் எனச் சொல்வர் சோதிடர். இலங்கையில் பெரும் குழப்பங்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இலங்கையில் படைத்துறை, நிர்வாகத் துறை, நீதித் துறை ஆகியவை பெரும் சவால்களை எதிர் நோக்குகின்றன. இவை எப்படிச் செயற்படப் போகின்றன என்பதில் லங்கா மாதாவின் எதிர்காலம் தங்கியுள்ளது. கடன்பட்டார் நெஞ்சம் போல்!!!!!!
2015இல் இந்தியா - என்ன தவம் செய்தனை மோடி பாபா
இந்திய வாக்காளர்களுக்கும் தலைமை அமைச்சருக்கும் இடையிலான தேன் நிலவு 2014-ம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டது. நரேந்திர மோடிக்கு எரிபொருள் விலை வீழ்ச்சி பெரும் வரப்பிரசாதமாகும். எரிபொருள் விலை ஓர் அமெரிக்க டொலர் குறைந்தால் அது இந்தியாவிற்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு பில்லியன் வெளிநாட்டுச் செலவாணியை மீதமாக்கும். தற்போது ஆசியாவில் உறுதி மிக்க நாணயங்களுள் இந்திய ரூபாவும் ஒன்றாகும். 2015இல் விலைவாசி வீழ்ச்சியும் உயர் நிலையில் உள்ள வட்டி விழுக்காடும் இந்தியாவிற்குத் தேவையான வெளி நாட்டு முதலீட்டைக் கொண்டுவரும். இதனால் இந்தியாவின் வெளிநாட்டுச் செல்வாணி நிலைமை மேம்படும். ஆனால் மோடியின் கால்கள் இந்துத்துவா என்னும் உரலுடன் கட்டப் பட்டுள்ளது. அதை இழுத்துக் கொண்டு இரு மரங்களாக வழி மறித்து நிற்கும் மதவாதம், பேரின வாதம் ஆகியவற்றை முறித்து வீழ்த்திக் கொண்டு கோகுலத்துக் கண்ணன் போல் மோடி தவழ்ந்து செல்ல வேண்டும். மோடியின் தவழ்தலுக்கு மேலும் இரண்டு மரங்கள் தடையாக உள்ளன. ஒன்று மாநிலங்கள் அவை என்ற ராஜ்ஜ சபா. மற்றது காங்கிரசுக் கட்சி பதவியில் அமர்த்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீ. 2015-ம் ஆண்டு ஐந்து விழுக்காடு மட்டும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதை ஏழுக்கு மேல் உயர்த்தாவிடில் மோடியின் அரசுக்குப் பெரும் நெருக்கடிகள் உருவாகும்
2015இல் ஆசியா - கை கோர் அம்மா கை கோர்
ஆசிய நாடுகளுக்குத் தலைமை தாங்க வேண்டிய சீனா ஆசிய நாடுகளுக்கு தலையிடியாக அமைந்துவிட்டது. எல்லா அயல் நாடுகளுடனும் சீனா எல்லைப் பிரச்சனையைக் கொண்டுள்ளது. தென் சீனக் கடலையும் கிழக்குச் சீனக் கடலையும் சீனா குழப்ப அதில் அமெரிக்கா மீன் பிடிக்க முயல்கின்றது. உலகிலேயே தனித்த வல்லரசான சீனாவுடன் ஒரளவிற்கு நட்பு நடாக இருக்கும் வட கொரியா அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்க சீனா மேலும் தனிமைப்படும் என சீன ஆட்சியாளர்கள் அறிவர். சீனாவிற்கு எதிராக ஜப்பானும் ஐக்கிய அமெரிக்காவும் இந்தியா, தென் கொரியா, அவுஸ்த்திரேலியா, நியூசிலாந்து, பில்ப்பைன்ஸ் உட்படப் பல நாடுகளை இணைத்த பெரும் கூட்டணியை அமைக்க முயல்கின்றன. 2015-ம் ஆண்டு ஜப்பான் தனது அரசியல் யாப்பை மாற்றி பாதுகாப்புப் படையாக இருக்கும் தனது படைத்துறையை தாக்குதல் படையாகவும் மாற்றும் சாத்தியம் இருகின்றது. இதனால் ஜப்பான் சீனாவிற்கு இடையில் ஒரு படைவலுப் போட்டி உருவாகலாம். தனது பொருளாதாரத்தை மீள் சம நிலைப்படுத்த வேண்டிய சீனாவிற்கும் முப்பது ஆண்டுகளாக போதிய வளர்ச்சியின்றித் தவிக்கும் ஜப்பானிற்கும் இது உகந்தது அல்ல. இதைத் தவிர்க்க ஆசிய நாடுகள் எல்லாவற்றுடனும் சீனா கைகோர்த்து பொருளாதரவளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டில் பன்னாட்டு நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் சவால் விடுக்கக் கூடிய வகையில் சீனா பல நாடுகளுக்கு கடன் கொடுக்கக் கூடிய நிலை உண்டு. இதை வைத்து சீனா பல நாடுகளை தனது வலயத்தினுள் கொண்டுவரலாம். சீனவிடமிருக்கும் நான்கு ரில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பை தனது உலக ஆதிக்கத்தை விரிவு படுத்த சீனா பாவிக்கலாம். பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா, ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பு உலக அளவிலான நிதி வழங்கலில் ஆதிக்கம் செலுத்த முற்படுவதற்கான வாய்ப்பும் 2015இல் உருவாகலாம். உள்நாட்டில் அரசக் கட்டமைப்பில் பின்னிப் பிணைந்திருக்கும் ஊழலை ஒழித்துக்கட்ட முடியாத நிலை சீனாவிற்கும் இந்தியாவிற்கும் பொதுவான நிலையாக 2015இலும் தொடரும். 2014-ம் ஆண்டு ஹொங் கொங்கில் சீனாவால் அடக்கப்பட்ட மக்களாட்சி வேண்டிச் செய்யப்பட்ட எழுச்சி முறியடிக்கப்பட்டது. ஆனால் அடக்கப்படவில்லை. 2015 ஹொங் கொங்கில் மட்டுமல்ல சீனா முழுவதும் மக்களாட்சிக்கான கோரிக்கை வலுப்பெறும். பொருளாததரத் திறனை வளர்க்க சீனா தனது அரச முதலாளித்துவத்தில் சில விட்டுக் கொடுப்புக்களை பொது முதலாளித்துவத்திற்கு விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால் மேற்குல ஊடகங்களுக்கு எதிரான சீன அரசின் கடுமையான நிலைப்பாடு 2015-ம் ஆண்டு மேலும் மோசமடையலாம். சீனாமீதான பொதுவுடமைக் கட்சியின் பிடி தளர்வடைவதை இப்போது உள்ள கட்சித் தலைமையோ அல்லது ஆட்சித் தலைமையோ விரும்பவில்லை. இரசியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு 2015-ம் ஆண்டு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வளர்ச்சியடையும். இரு நாடுகளுக்கும் இடையில் மத்திய ஆசியாவில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பது தொடர்பான முரண்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். இரண்டு நாடுகளினதும் கேந்திரோபாய நோக்கங்கள் இன்னும் ஒத்திசைக்கவில்லை.
ஐரோப்பிய ஒன்றியம் - சிக்கனம் சின்னாபின்னமாக்கும்
ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார ரீதியில் மேலும் பிரச்சனைகளை 2015-ம் ஆண்டும் எதிர் கொள்ள வேண்டும். விலைவாசி வீழ்ச்சி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஒரு பிரச்சனையாக அமைந்துள்ளது. எரிபொருள் விலை வீழ்ச்சி மேலும் விலைவாசி வீழ்ச்சியைத் தூண்டும். பிரித்தானியா, போலாந்து, டென்மார்க், பின்லாந்து, போர்த்துக்கல், எஸ்தோனியா ஆகிய நாடுகளில் 2015-ம் ஆண்டு தேர்தல்கள் நடக்க விருக்கின்றன. சுவீடனில் பொதுவுடமைவாதம் எழுச்சியுறுமா என்ற கேள்வியும் உண்டு. கிரேக்கத்தில் தொடரும் பொருளாதாரப் பிரச்சனையும் இங்கிலாந்தில் எழுச்சியுறும் ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியும் ஐரோப்பிய ஒன்றியம் பிளவு படுமா என்ற ஐயத்தை எழுப்புகின்றன. தற்போது ஆட்சியில் இருக்கும் பழமைவாதக் கட்சி தான் 2015-ல் நடக்கவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடருவதா இல்லையா என்பதைப் பற்றித் தீர்மானிக்க ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்படும் என அறிவித்துள்ளார். தொழிற்கட்சி தாம் வெற்றி பெற்றால் அப்படி ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடக்க மாட்டாது எனச் சொல்கின்றது. 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் 18 நாடுகள் தமக்கென ஒரு பொது நாணயமாக யூரோவை உருவாக்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த யூரோ வலய நாடுகளே அதிகப் பொருளாதார நெருக்கடிக்குள் இருந்தன. இந்த யூரோ நாணயக் கூட்டமைப்பில் இருந்து விலகக் கூடிய ஒரு நாடாக இத்தாலி இருக்கின்றது. ஏதாவது ஒரு நாடு யூரோக் கட்டமைப்பில் இருந்து வெளியேறினால் மற்ற நாடுகள் பல பிரச்சனையை எதிர் நோக்கும். யூரோ வலய நாடுகளின் அரசுகள் தமது செலவீனங்களைக் கட்டுப்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என பெரிய அண்ணன் ஜேர்மனி மிரட்டுகிறார். இந்தச் சிக்கன நடவடிக்கைகள் நிர்ப்பந்தம் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளில் மேலும் சிக்கல்களை 2015இல் உருவாக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தற்போது இரசியாவின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.
இரசியா - புட்டீனின் பற்களுக்கு ஆபத்து
1991இல் பொருளாதார நெருக்கடியால் சோவியத் ஒன்றியம் சிதைவடைந்த பின்னர் தனித்து விடப்பட்ட இரசியா 1998மீண்டும் ஒரு நிதி நெருக்கடியைச் சந்தித்தது. பின்னர் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பாலும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த விளடிமீர் புட்டீனின் கண்டிப்பான நிர்வாகத்தாலும் இரசியா தனது பொருளாதாரத்தைச் சீர் செய்து கொண்டது. விளடிமீர் புட்டீன் மீண்டும் சோவியத் ஒன்றியம் போல் ஒரு பேரரசைக் கட்டி எழுப்ப முயன்றார். ஐரோப்பிய ஒன்றியத்தை மேற்கு ஐரோப்பிய நாடுகள் கட்டி எழுப்புவது போல் தானும் யூரோ ஏசியன் ஒன்றியம் என்னும் பெயரில் ஒரு நாடுகளின் கூட்டமைப்பைக் கட்ட முயல்கின்றார். இந்த இரு ஒன்றியங்களின் விரிவாக்கம் உக்ரேனை யார் இணைப்பது என்பதில் போட்டியை உருவாக்கியது. 2015-ம் ஆண்டு புட்டீனின் பற்களைப் புடுங்க மேற்கு நாடுகள் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கலாம். oligarchs எனப்படும் இரசியாவின் சிலராண்மைப் பெரும் செல்வந்தர்கள் புட்டீனுக்கு எதிரான நடவடிக்கைகளில் 2015-ம் ஆண்டு இறங்குவார்கள்.
போராளி அமைப்புக்கள் புனிதமடையுமா?
இந்த நூற்றாண்டில் உலக அரங்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை உலகெங்கும் உள்ள போராளி அமைப்புக்களே. பல நாடுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் இவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. 2015-ம் ஆண்டில் அதிகமாகச் செய்திகளில் அடிபடும் அமைப்பாக தலிபான் திகழும் என எதிர்பார்க்கலாம். வெளி நாட்டுப் படைகள் மீண்டும் ஆப்கானிஸ்த்தானிற்கு வரும் ஆனால் எப்போ வரும் என்ற கேள்விக்கு இப்போது விடை கூற முடியாது. ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் இசுலாமிய அரசு என்னும் அமைப்பு பலத்த ஆளணி இழப்புக்களை 2015-ம் ஆண்டு சந்திக்கும். எகித்துடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால் ஹமாஸ் அமைப்பு 2015-இல் மேலும் வலுவடையும். ஹிஸ்புல்லா அமைப்பும் பல இழப்புக்களைச் சந்திக்கும். 2015-இல் தனது மக்களுக்கு நன்மை செய்யும் அமைப்பாக குர்திஷ் மக்களின் பெஷ்மேர்கா அமைப்பு திகழும். ஆனால் மேற்கு நாடுகள் குர்திஷ் மக்களின் முதுகில் மீண்டும் குத்தாமல் இருக்க அவர்கள் மிகவும் தந்திரமாகச் செயற்பட வேண்டும். நைஜீரியாவில் செயற்படும் பொக்கோகரம், சோமாலியாவில் செயற்படும் அல் ஷபாப் ஆகிய அல் கெய்தாவின் துணை அமைப்புக்களும் பல ஆளணி இழப்புக்களைச் சந்திக்கும். பொக்கோகரம் செயலிழக்கச் செய்யப்படலாம். பாக்கிஸ்த்தானில் பல தீவிரவாதிகள் கொல்லப்படுவர். லக்சத் இ தொய்பர் போன்ற இந்திய எதிர்ப்பு அமைப்புக்கள் வலுவிழக்கும். பாக்கிஸ்த்தானில் இருந்து பல போராளிகள் ஆப்கானிஸ்த்தானிற்குத் தப்பிச் செல்வர். ஆளில்லாப் போர்விமானத் தாக்குதல்கள் தொடர்ந்தும் தீவிரமடையும்.
மத்திய கிழக்கு - Sykes-Picot கிழித்த கோடு அழிக்கப்படுமா?
முதலாம் உலகப் போரின் பின்னர் இனி ஒரு இசுலாமியப் பேரரசு உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் பிரான்ஸும் ஐக்கிய இராச்சியமும் ஒன்றிணைந்து மத்திய கிழக்கில் சிரியா, ஈராக், லிபியா, லெபனான் போன்ற நாடுகளின் எல்லைகளை வகுத்துக் கொண்டன. Sykes-Picot எல்லைகள் எனப்படும் கோடுகளை ஏற்கனவே 2014-ம் ஆண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் எனப்படும் இசுலாமிய அரசு என்னும் அமைப்பும் குர்திஷ் மக்களின் பெஷ்மேர்கா அமைப்பும் அழித்து விட்டன. துருக்கி வேறு ஒரு புறம் ஈராக்கின் சில பிரதேசங்கள் தன்னுடன் இணைக்கப்பட வேண்டும் என அடம்பிடிக்கின்றது. சிரிய உள்நாட்டுப் போர் முடியும் அறிகுறிகள் 2015இலும் இல்லை. பஷார் அசாத்தையும் அசைக்க முடியாது. ஈரானின் அணுக் குண்டுத் தயாரிப்பு முயற்ச்சி தொடர்ப்பாக P5+1எனப்படும் ஐக்கிய அமெரிக்கா, இரசியா, சீனா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் ஈரானுடன் நடாத்தி வரும் பேச்சு வார்த்தை இதுவரை ஏமாற்றம் தரும் வகையில் ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. 2015இல் இந்த இழுபறி நிலைக்கு ஒரு முடிவு வந்தே ஆகவேண்டும். பேச்சு வார்த்தை சுமூகமாக முடிவடைய வேண்டும் அல்லது முறிவடைய வேண்டும். ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தி தொடர்பாகச் செய்யப்படும் உடன்பாடு மத்திய கிழக்கின் சமநிலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இரசியாவை அடக்கி கியூபாவை அடக்கியதாக அமெரிக்கா உறுதியாக நம்பினால் அதே நடவடிக்கையை ஈரானுடனும் மேற்கொள்ள அமெரிக்கா உந்தப்படலாம். சீனாவைப் பொறுத்தவரை ஈரானுக்காக அது ஐக்கிய அமெரிக்காவைப் பகைக்காது. பாலஸ்த்தீனத்தை ஒரு முழுமையான நாடாக ஐக்கிய அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இதனால் மத்திய கிழக்கில் அமைதிக்கான வாய்ப்புக்கள் இல்லை. 2015-ம் ஆண்டு துனிசியா தனக்கே உரிய பாணியில் ஒரு மக்களாட்சி நாடாகும் முயற்ச்சியில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும். சவுதி அரேபியா பெண்கள் உரிமை விவகாரத்தில் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்ய வேண்டி வரும். பாஹ்ரேனில் ஏற்கனவே அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாம் பிரிவு தளம் அமைத்து வளைகுடா, மத்திய தரைக்கடல் போன்றவற்ற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அங்கு ஐக்கிய இராச்சியமும் தளம் அமைத்துள்ளது அரபு வசந்தம் அடக்கப்பட்ட பஹ்ரேனில் சிறுபான்மையினரான சிய முசுலிம்கள் மக்களாட்சி தேவை என வலியுறுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களது போராட்டம் அங்கு தீவிரமடையலாம். ஐக்கிய இராச்சியப் படைகளும் பஹ்ரேலின் தளம் அமைத்தமை ஈரான் மீதான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்கா - தேறுதலும் தேர்தலும்
2015-ம் ஆண்டு பொருளாதார ரீதியில் பெரும் வளர்ச்சியை ஐக்கிய அமெரிக்கா எட்டும். அதுவே மற்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும். அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய நகர்வு 2014இல் மத்திய கிழக்கிலும் உக்ரேனிலும் தடைபட்டது. உக்ரேனை முழுமையாக அமெரிக்காவால் பாதுகாக்க முடியாது. 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தெரிவு செய்வதில் 2015-ம் ஆண்டு அமெரிக்கா அல்லோல்கல்லோலப்படும். பராக் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியினர் ஹிலரி கிளிண்டனைத் தெரிவு செய்யும் வாய்ப்புக்களே மிக அதிகம்.
படைத்துறை - போட்டிகளும் இழப்புக்களும்
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அடங்கிப் போயிருந்த படைவலு பெருக்கும் போட்டி 2015-ம் ஆண்டு மீண்டும் தீவிரமடையும். மேற்கில் இரசியாவும் கிழக்கில் ஜப்பானும் இதில் அதிக அக்கறைகாட்டும். இணையவெளியில் பல தாக்குதல்கள் நடை பெறும். ஆங்காங்கு நடக்கும் சிறு மோதல்களால் பல படையினர் 2015இல் இறப்பார்கள். மேலும் நவீனமயப்படுத்தப்பட்ட படைக்கலன்கள் உருவாக்கப்படும். அவற்றைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு போர் முனைகள் உருவாக்கப்படும். ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறும் படையினர் மத்திய கிழக்கு நோக்கி நகரலாம். நேட்டோப் படையினர் தொடர்ந்து களமுனை அனுபவம் பெற்றுக் கொண்டிருக்க எங்காவது போர் புரிந்து கொண்டே இருக்க வேண்டும்.
2015-இல் சிறு பொருளாதார மேம்பாடு தவிர வேறு எந்த நல்ல மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment