ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பால் தீர்மானம் நிராகரிப்பு
ஜோர்தானின் முன்மொழிவை இரசியா, சீனா, பிரான்ஸ், ஆர்ஜெண்டீனா, சாட், சிலி, லக்சம்பேர்க், ஆகிய எட்டு நாடுகள் ஆதரித்தன. ஐக்கிய இராச்சியம், லித்துவேனியா, நைஜீரியா, கொரியக் குடியரசு, ருவண்டா ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஐக்கிய அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் எதிர்த்து வாக்களித்தன. ஐந்து வல்லரசு நாடுகளை நிரந்தர உறுப்பினர்களாகவும் பத்து நாடுகளை தற்காலிக உறுப்பினர்களாகவும் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவின் எதிர்ப்பால் ஜோர்தானின் முன் மொழிவு நிராகரிக்கப்பட்டது.
மஹ்மூட் அப்பாஸின் அதிரடியும் பதில் மிரட்டல்களும்
அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்த்தீன ஒரு தனி நாடாக ஏற்றுக் கொள்ளப்படுவதை எதிர்த்ததால் ஆத்திரமடைந்த பலஸ்த்தீனியர்களைச் சமாளிக்க பலஸ்த்தீனிய அதிகார சபையின் அதிபர் மஹ்மூட் அப்பாஸ் (வயது 79) பலஸ்த்தீனத்தை பன்னாட்டு நீதிமன்றில் ஓர் உறுப்பு நாடாக இணைத்தார். 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதியில் இருந்து பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதிமன்றில் உறுப்புரிமை பெறும் என்பதை ஐக்கிய நாடுகள் சபையும் உறுதி செய்துவிட்டது. ஐக்கிய அமெரிக்கா, கனடா, மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் பலஸ்த்தீனம் பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெறக்கூடாது என வற்புறுத்தி வந்தன. பன்னாட்டு நீதி மன்றத்தில் உறுப்புரிமை பெற்றால் பலஸ்த்தீன அதிகார சபைக்கு வழங்கும் நிதி உதவியை தாம் நிறுத்தி விடுவதாக இந்த நாடுகள் மிரட்டின. இஸ்ரேலும் தன் பங்கிற்கு மிரட்டியது. 2014-ம் ஆண்டு ஜூலை மாத இறுதியில் பலஸ்த்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூட் அப்பாஸ் பனாட்டு நீதிமன்றில் இணைவது தொடர்பாக பலஸ்த்தீனியர்களின் பல்வேறுபட்ட அமைப்புக்களின் கருத்தை அறியும் கூட்டம் ஒன்றைக் கூட்டியிருந்தார். காசா நிலப்பரப்பில் செயற்படும் ஹமாஸ் அமைப்பும் மேற்குக் கரையில் செயற்படும் இசுலாமியப் புனிதப் போராளி அமைப்பும் இதற்குத் தயக்கம் காட்டியதாகச் சொல்லப்படுகின்றது. இந்த இரு அமைப்புக்கள் மீதும் போர்க்குற்றம் சாட்டும் சாத்தியம் உண்டு. தற்போது இஸ்ரேல் தான் பலஸ்த்தீனத்தில் வசூலிக்கும் வரியில் ஒரு பகுதியை பலஸ்த்தீன அதிகார சபைக்கு வழங்கி வருகின்றது. அந்த 127 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி வழங்கலை தான் நிறுத்தப் போவதாக அது மிரட்டுகின்றது. ஐக்கிய அமெரிக்கா தான் தற்போது பலஸ்த்தீன அதிகார சபைக்கு ஆண்டு தோறும் வழங்கும் 400 மில்லியன் டொலர்கள் நிதி உதவியை நிறுத்தப் போவதாக மிரட்டுகின்றது.
பன்னாட்டு நீதிமன்றம்
பன்னாட்டு நீதி மன்றம் 2002-ம் ஆண்டு செய்யப்பட்ட ரோம் உடன்படிக்கையின் படி உருவாக்கப்பட்டது. உலகின் மோசமான மனித உரிமை மீறல்களை விசாரிப்பது இதன் தலையாய பணியாகும். இந்த நீதி மன்றத்தின் நியாய ஆதிக்கம்(விசாரிக்கும் உரிமை) இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டு உறுப்புரிமை பெற்ற நாடுகளின் குடிமக்கள் மீது மட்டுமே உண்டு. இஸ்ரேல் இந்த உடன் படிக்கையில் கையொப்பம் இடாத படியால் அதன் மீது இந்த நீதிமன்றில் குற்றம் சாட்ட ஐநா பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பும் தேவைப்படும்.
முழு உறுப்புரிமை பெற முன்னர் எடுத்த முயற்ச்சி
ஏற்கனவே 135 நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு நாடாக தனிப்பட்ட ரீதியில் அங்கீகரித்துள்ளன. பலஸ்த்தீனம் ஐநாவின் ஒரு முழு உறுப்புரிமை பெற அதற்கு எல்லாத் தகுதிகளும் அதற்கு உண்டு. அது ஒரு சுய நிர்ணய உரிமை உள்ள ஒரு தேசியம். ஆனால் 2011இல் ஐநா பாதுகாப்புச் சபையில் முழு உறுப்புரிமை பெறக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பாதுகாப்புச் சபையில் தோற்கடிக்கப்பட்டது. ஐநா சாசனத்தின் 4(2)இன்படி ஒரு நாடு முழு உறுப்புரிமை பெற பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று பாதுகாப்புச் சபையும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
2012இல் ஐநாவில் பார்வையாளர் நிலை பெற்ற பலஸ்த்தீனம்
2011இல் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து முழு உறுப்புரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு உறுப்புரிமையற்ற ஒரு நாடாக பலஸ்த்தீனத்தை ஏற்றுக் கொள்ளும் முன்மொழிவு பொதுச் சபையின் முன் வைக்கப்பட்டது. 29/12/2012 ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்த்தீனம் உறுப்புரிமையற்ற பார்வையாளர் நிலையப் (non-member observer state) பெற்றது. இதற்கான தீர்மானம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில்138 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. அப்போது மேற்குக் கரையிலும் காசாவிலும் மக்கள் பட்டாசுகள் கொழுத்து ஆர்ப்பரித்தனர். இந்தத் தீர்மானத்தை எதிர்த்து கனடா, செக் குடியரசு, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைகுரொனிசியா, நௌரு, பலௌ, பனாமா, ஐக்கிய அமெரிக்கா (Canada, Czech Republic, Israel, Marshall Islands, Micronesia, Nauru, Palau, Panama, United States) ஆகிய ஒன்பது நாடுகள் வாக்களித்தன. சரியாக 65 ஆண்டுகளுக்கு முன்னர், 29/11/1947இல் பலஸ்த்தீனத்தை ஐநா தீர்மானம் நிறைவேற்றி இரு நாடுகளாகப் பிரித்ததுடன்இஸ்ரேலை ஒரு தனி நாடாகாவும் ஆக்கியது. அப்பிராந்தியம் அதற்கு முன்னர் பிரித்தானிய ஆணைக்குட்பட்டிருந்தது. பிரித்தானியா தனது ஆணையை 18/02/947இலன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது. 28/11/2012 வரை ஐநாவில் ஒரு தனியுரு (entity)வாகக் கருதப்பட்ட பலஸ்த்தீனம் 29/11/12இல் இருந்து ஒரு உறுப்புரிமையற்ற நாடாகக் கருதப்படும் நிலையைப் பெற்றது. அதைத் தொடர்ந்து ஐநா பொதுச் சபை விவாதங்களில் பலஸ்த்தீனம் கலந்து கொள்ளலாம் என்ற நிலையைப் பெற்றது ஆனால் வாக்களிக்க முடியாது. கத்தோலிக்கர்களின் வத்திக்கானும் ஐநா பொதுச் சபையில் ஒரு உறுப்புரிமையற்ற நாடாக உள்ளது.
வஞ்சனை நிறைந்த ஐநா சபை
2009-ம் ஆண்டு இஸ்ரேல் காஸா நிலப்பரப்பில் ஈய வார்ப்பு என்னும் குறியீட்டுப் பெயருடன் செய்த படை நடவடிக்கையில் இழைக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பாக பன்னாட்டு நீதி மன்றத்திடம் பலஸ்த்தீனியர்கள் எடுத்துச் சென்றபோது பலஸ்த்தீனம் ஒரு நாடு அல்ல என்பதால் வழக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபை சார்பாக இஸ்ரேலின் ஈய வார்ப்பு படை நடவடிக்கையை விசாரணை செய்ய தென் ஆபிரிக்க நீதியாளர் ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவருடன் ஒத்துழைக்க இஸ்ரேல் மறுத்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் ஓர் உள்ளக விசாரணையை மேற்கொண்டது. ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரன் இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் புரிந்ததாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இருதரப்பினரும் தமது குற்றங்களிற்கு உள்ளக விசாரணைகளை முதலில் மேற் கொண்டுவிட்டு பின்னர் பன்னாட்டு நீதிமன்றத்திற்குச் செல்லும் படி பரிந்துரை செய்திருந்தார். ஆனால் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் ரிச்சர்ட் கோல்ட்ஸ்ரனின் அறிக்கையில் அதிக அக்கறை காட்டவில்லை. ஐநா சபையின் விசாரணைச் சபையின் தலைவர் இஸ்ரேலியப் படைகள் பலஸ்த்தீனத்தில் இருந்த ஒன்பது ஐநா நிலையங்கள் மீது தாக்குதல் நடாத்தியதைப் போர்க்குற்றம் எனக் கூறி அதை விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்திருதார். அதை பான் கீ மூன் தடுத்துவிட்டார். இந்த விசாரணைகளைத் தடுக்கும் பான் கீ மூனின் அறிக்கை நியூயோர்க்கில் உள்ள இஸ்ரேலியர்களால் தயாரிக்கப்பட்டது.
புதிய போர் முனை வெற்றியளிக்குமா?
இஸ்ரேலுடன் பலஸ்த்தீனிய விடுதலை இயக்கத் தலைவரும் பலஸ்த்தீன அதிகார சபையின் அதிபருமான மஹ்மூட் அப்பாஸ் நடாத்திய பேச்சு வார்த்தைகள் 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முறிவடைந்தது. இதனால் அவரது செல்வாக்குச் சரியத் தொடங்கியது. ஜோர்தானிய ஆற்றுக்கும் மத்திய தரைக் கடலுக்கும் இடையில் இருக்கும் காசா நிலப்பரப்பில் இருந்து செயற்படும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுடன் கடுமையாக நடந்து கொண்டு அடிக்கடி மோதலிலும் ஈடுபடும் வேளையில் மஹ்மூட் அப்பாஸ் இஸ்ரேலுடன் ஒரு மிதமான போக்கையே கடைப்பிடித்து வந்தார். பன்னாட்டு நீதி மன்றில் உறுப்புரிமை பெற்றதன் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக பன்னாட்டு அரங்கில் ஒரு சட்ட நடவடிக்கைப் போரை ஆரம்பித்து தனது செல்வாக்கை சரியாமல் தூக்கி நிறுத்த மஹ்மூட் அப்பாஸ் முயல்கின்றார். 135 நாடுகளால் அங்கீகரிகரிக்கப் பட்ட நிலையிலும் பலஸ்த்தீனம் தனது விடுதலைக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கின்றது.
No comments:
Post a Comment