Wednesday 30 April 2014

இந்தியத் தேர்தல் மோடியுடன் மோடி மோதுவதாக மாறிவிட்டது.

இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த கட்சி என்ற பெருமையைக் காங்கிரசுக் கட்சி இழந்து விட்ட நிலையிலும் மகாத்மா காந்தியைக் கொன்ற கும்பலின் கட்சி பாரதிய ஜனதாக் கட்சி என்பதை இந்தியர்கள் மறந்து விட்ட நிலையிலும் இந்தியப் பொதுத் தேர்தல் நடந்து கொன்டிருக்கின்றது. ஏப்ரல் 7ம் திகதியில் இருந்து தொடர்ந்து 36 நாட்கள் நடைபெறும் இந்தியப் பொதுத் தேர்தலில் ஒரு பிராந்தியத்தில் மக்கள் வாக்களித்து விட்டு வாக்குகள் எண்ணப்படும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கையில் இன்னும் ஒரு பிராந்தியத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டது. வேறு ஒரு பிராந்தியத்தில் கட்சிகள் கூட்டணி தொடர்பாகப் பேச்சு வார்த்தை செய்து கொன்டிருந்தன.
இந்தியப் பொதுத் தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடைபெறுகின்றது. ஒன்பது பிராந்தியங்களாகப் பிரித்து வேறு வேறு நாட்களில் தேர்தல் நடக்கின்றது. தேர்தல் நடக்கும் பிராந்தியங்களுக்கு ஏற்ப கட்சிகளின் பரப்புரையின் நிறங்களும் மாறிக் கொன்டிருக்கின்றது. உதாரணத்திற்கு முஸ்லிம்கள் குறைவாக வாழும் தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கும் போது பஜகா தனது இந்துத்துவாக் கொள்கையை அதிகம் முன்னிலைப்படுத்துகிறது. தமிழ்நாட்டில்தான் அதிக சுவாரசியமான சுலோகங்கள் வாதங்கள் நடப்பதாக வட இந்திய அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். மோடியா லேடியா(ஜெயலலிதா) பஜகாவினரும் அ.தி.மு.கவினரும் மோத மோடியும் இல்லை லேடியும் இல்லை என் டாடி(கருணாநிதி)தான் என்றார் ஸ்டாலின். தேர்தலின் பின்னர் எல்லோருமே கேடிகள்தான்.
ஊழலற்ற ஆட்சி, திறமையான அரச முகாமை, பொருளாதார மேம்பாடு, மத சார்பின்மை, வேலையில்லாப் பிரச்சனை போன்றவை முக்கியமான பிரச்சனையாக இருக்கும் இந்தியாவில் தனிமனித விமர்சனங்களே அதிகம் தேர்தல் பரப்புரையின் போது முன்னிலைப் படுத்தப்படுகின்றன.  வேட்பாளர் தெரிவில் அதிக முக்கியத்துவம் தொகுதியில் உள்ள சாதிக் கட்டமைப்புக்கு கொடுக்கப்படுகின்றது. தமிழ்நாட்டின் திருச்சித் தொகுதியில் எல்லாக் கட்சியினரும் ஒரு சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களையே நிறுத்தியுள்ளன. அடுத்த முக்கியத்துவம் குடும்பத்துக்கு கொடுக்கப்படுகின்றது. உத்தரப் பிரதேசத்தில் அகிலேச் யாதவ் முதலமைச்சராக இருக்கின்றார். அவரது தந்தை முலாயம் சிங்  யதவ், மனைவி டிம்பிள் யாதவ் ஆகியோர் பாராளமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.  முலாயம் சிங்கை எதிர்த்துப் போட்டியிடுபவர் இன்ன்ம் ஒரு அரசியல்வாதியின் மகள். பாஜகவின் சார்பில் மதுரா தொகுதியில் போட்டியிடும் முன்னாள் சினிமா நடிகை ஹேமமாலினியை ஒரு அரசியல்வாதியின் மகன் எதிர்த்துப் போட்டியிடுகின்றார்.

மாநில அரசு வேறு மைய அரசு வேறு.
நரேந்திர மோடி ஒரு நிர்வாகத் திறன் மிக்கவராகவும் குஜாராத் மாநிலத்தில் தொடர்ந்து பத்து ஆன்டுகளுக்கு மேல் முதலமைச்சராக இருந்து மாநிலத்தை அதிகம் முன்னேற்றினார் என பாஜகட்சியினர் பரப்புரை செய்கின்றனர். குஜராத்திலும் பார்க்க கேரளா, தமிழ்நாடு ஆகிய நாடுகள் பொருளாதாரம், கல்வி போன்றவற்றில் முன்னணியில் இருக்கின்றன என காங்கிரசுக் கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர். கேரளா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களில் பெண்களின் கல்வியில் பெற்றோர் காட்டும் அக்கறை வட மாநிலங்களில் காட்டப்படுவதில்லை இதனால் குஜராத் கல்வியில் பின் தங்கி இருக்கின்றது எனவும் குஜராத்தில் மது விலக்கு நடைமுறையில் இருப்பதால் அங்கு மாநில அரசின் வருமானம் குறைந்து இருக்கிறது எனவும் பதில் விவாதம் முன் வைக்கப் படுகின்றது. இந்தத் தேர்தல் அதிக அளவில் இணையவெளிப் பரப்புரை செய்யப்படுகின்றது. இந்தியாவில் மாநிலத்தில் சிறப்பாக் ஆட்சிய் செய்வதற்கான திறமை வேறு மைய அரசில் சிறப்பாக ஆட்சி செய்வதற்கான திறமை வேறு. அண்மைக்காலங்களாக இந்திய மைய அரசிற்கு கூட்டணிகளை கவனிப்பதிலேயே அதிக வலு விரயமாகின்றது. இந்திய மைய அரசு அயல் ஆடுகளுடனான உறவும் வர்த்தகமும், பாதுகாப்பு, நாணயக் கொள்கை, செலவாணிக் கையிருப்பு, பண வழங்கல் கொள்மை எனப் பலப்பல ஒன்றிகு ஒன்று முரண்பட்டதும் ஒன்றை ஒன்று பாதிக்கக் கூடியதுமான வெளிக் காரணிகளையும் உட்காரணிகளையும் சமாளிக்க வேண்டும். இதுவரை இந்தியப் பாராளமன்ற உறுப்பினராகக் கூட இருந்திருக்காதவர் மோடி. தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் அமைச்சரவை அனுபவமில்லாத பலரை அவர் அமைச்சராக்க வேண்டியிருக்கும்.

ஈழப் பிரச்சனை அலை                                          
ஈழத் தமிழர்களுக்கு எதிராக காங்கிரசு ஆட்சி செய்த அட்டூழியங்கள் தமிழ்நாட்டில் ஓரளவிற்கு அம்பலப்படுத்தப் பட்ட நிலையில், காங்கிரசுக் கட்சியுடன் எந்த ஒரு கட்சியும் கூட்டணி அமைக்கத் தயாராக இல்லாத நிலையில் எல்லாத் தொகுதிகளிலும் அது தோல்வியடையும் என எதிரர்பார்க்கப் படுகின்றது. ஆனால் எல்லாத் தொகுதிகளிலும் அது கட்டுப்பணத்தை இழக்க வேன்டும் என தமிழின உணர்வாளர்கள் விரும்புகிறார்கள். காங்கிரசுக் கட்சி தனது கட்டுப்பணத்திற்கு தமிழ்நாட்டில் வாழும் தமிழரல்லாதவர்களின் வாக்குகளில் தங்கி இருக்கின்றது. குறிப்பாக மலையாளிகள் வாழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரசு கட்டும்பணம் இழக்காமல் போகலாம். முஸ்லிம்கள் அதிகமுள்ள தேனித் தொகுதியிலும் காங்கிரசு கட்டுப்பணம் பெறலாம். 39 தொகுதிகளிலும் போட்டியிடும் காங்கிரசுக் கட்சி 4 தொகுதிகளில் கட்டுப்பணம் பெறலாம்.  தமிழீழத்திற்கு ஆதரவான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை பாஜகட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தோழர் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் புதிய தமிழகம் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. ஈரோடு தொகுதியில் போட்டியிடும் வைக்கோ ஐயா இம்முறை பெரு வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவர் விருதுநகரிலும் மேலும் அவரது கட்சியைச் சேர்ந்த கணேசமூர்த்தி ஈரோட்டிலும் ஜோயல் தூத்துக்குடியிலும் வெற்றி பெறுவாரக்ள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாமகவும் மூன்று தொகுதிகளில் வெற்றியீட்டலாம். தோழர் திருமா சிதம்பரத்தில் இம்முறையும் வெற்றி பெறுவார். விஜயகாந்த் விசயமில்லாதகாந்த் என மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

காந்தி  குடும்பத்தின் அன்னபட்சியின் கீதம்-Swan Song                                             காந்தி குடும்பம் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் கான் குடும்பத்தினரைப் பொறுத்தவரை இத் தேர்தல் ஒரு வாழ்வா இறப்பா என்ற நிலையை அடைந்துள்ளது. காங்கிரசுக் கட்சி தோல்வியடைவது நிச்சயம் அவர்கள் இப்போது ஒரு கௌரவமான தோல்விக்காகப் போராடுகிறார்கள் எனச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மக்களைக் கவர முடியாத ராகுல் காந்திக்கு கைகொடுக்க அவரது அக்கா பிரியங்கா காந்தி கடும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரியங்கா காந்தியின் பரப்புரை காங்கிரசுக்கு பெரிதுக் கைகொடுத்தது. அப்போது  இருந்தது போல் பிரியங்கா இளமையாக இல்லை.  இப்போது அந்த அளவு இளமையும் கவர்ச்சியும் இன்றிக் காணப்படுகின்றார். அத்துடன் பிரியங்காவின் கணவர் ஹரியானா மாநிலத்தில் பல ஏக்கர் நிலங்களை மாநில காங்கிரசு ஆட்சியாளர்களைப் பயன்படுத்தி மிகக் குறைந்த விலைக்கு வாங்கிப் பெரும் செல்வந்தர் ஆகிவிட்டார் என்ற குற்றச் சாட்டு பரவலாக நிலவுகின்றது. இதனால் பிரியங்காவின் பரப்புரை சென்ற தேர்தலில் ஏற்படுத்திய தாக்கத்தை இத்தேர்தலில் ஏற்படுத்தாது என எதிர் பார்க்கப்படுகின்றது. தலைமைத்துவப் பண்புகளுக்காக நடாத்தப்பட்ட பல கருத்துக் கணிப்புக்களில் ராகுல் காந்தி நரேந்திர மோடியுடனும் அரவிந்த் கேஜ்ரிவாலுடனும் ஒப்பிடுகையில் மிகவும் பின்தங்கியுள்ளார். தலைமைத்துவம் என்று வரும் போது ராகுலை விட வேறுயாரும் காங்கிரசுக் கட்சியின் தலைமை அமச்சராக முடியாது என்பது காங்கிரசினது விதி. அது இந்தியாவின் தலைவிதி. பாரதிய ஜனதாக் கட்சியைப்பொறுத்தவரை மோடியை விட்டால் தேர்தலில் வெற்றி ஈட்டித் தரக் கூடிய வேறு தலைவர் இல்லை.

இரு புத்தகங்கள்
முன்னாள் அரச அதிகாரிகள் எழுதிய இரு புத்தகங்களில் இந்தியத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் அதிகாரம் அற்றவராகவும் சோனியா காந்தி அதிகாரம் நிறைந்தவராகவும் இருந்தார் என்ற உண்மை போட்டு உடைக்கப்பட்டுள்ளது. காங்கிரசு ஆட்சியில் மன்மோகன் தலைமையிலான அமைச்சரவை, சோனியா காந்தி, காங்கிரசுக் கட்சி என மூன்று அதிகாரமையங்கள் இந்தியாவை ஆட்சி செய்ததாகவும் இவற்றில் மன்மோஹன் சிங் தலைமையிலான அமைச்சரவை அதிகாரமின்றி இருததாகவும் இப்போது குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

பயனற்றுப் போன அம்புகள்
நரேந்திர மோடிக்கு எதிரான அம்பாக அவரை 2002-ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்காக கடுமையாகக் கண்டித்தார் என்ற பரப்புரை பெரிதாக எடுபடவில்லை. அத்துடன் நரேந்திர மோடிக்கு ஒரு மனைவி உள்ளர் அதை மறைத்து அவர் இதுவரை தன்னை ஒரு பிரம்மச்சாரி எனப் பொய் கூறிவந்தார் என்ற காங்கிரசுக் கட்சியின் பரப்புரையும் பிசுபிசுத்துவிட்டது. நரேந்திர மோடியின் மனைவி தான் மோடியுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை எனவும் அவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் தலைமை அமச்சராக வேண்டும் எனத் தான் விரதம் இருப்பதாக அறிவித்தது மோடிக்குச் சாதகமாக அமைந்தது.

மாமியாரை மாட்டிய மருமகன்
மாறாக மோடி சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா நில ஊழல் செய்ததாகக் கருதப்படும் ஹரியானா மாநிலத்தில் சோனியா குடும்பத்தின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தார். தனக்கு ஆதாரமாக ஒரு அமெரிக்கப் பத்திரிகையின் கட்டுரையைக் கையில் எடுத்தார். அதன்படி ஒரு இலட்சம ரூபாவை எப்படி முன்னூறு கோடி ரூபாக்களாக மாற்றுவது என்பதற்கு ஆர் எஸ் வி பி திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர் எஸ் வி பி என்பது ராகுல், சோனியா, வடேரா, பிரியங்கா ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துக்களாகும் . மத்தியப் பிரதேச மாநிலத்தின் பிரபல அரசியல்வாதியான உமா பாரதி பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வடேரா கைது செய்யப்படுவார் என சூளுரைத்துள்ளார். வட மாநிலங்களில் சோனியாவின் மருமகன் ரொபேர்ட் வடேரா அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கியமை காங்கிரசுக் கட்சிக்கு எதிரான பரப்புரை பொருளாக அமைந்துள்ளது. வடேரா அடிக்கடி மைய அரசின் அமைச்சர்களை மிரட்டி தன் காரியங்களைச் சாதித்த்தாக பஜகாவினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். காங்கிரசின் தலைவர்களில் ஒருவரான திக் விஜயசிங் பாஜகாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் பிரபல சட்டவாளருமான அருண் ஜெட்லி ஏன் வடேரா மீது வழக்குத் தாக்குதல் செய்ய முடியவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுலின் பலவீனத்தில் தாக்குதல்
ராகுல் காந்திக்கு எதிராக பாரதிய ஜனதாக் கட்சியினர் ராமாயணம் தொடர் நாடகத்தில் சீதையாக நடித்த இராணி என்னும் நடிகையை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளனர். அவர் ராகுல் காந்தியை தன்னுடம் பகிரங்க விவாதத்திற்கு வரும் படி சவால் விட்டார். கன்னா பின்னா எனப் பேசி எல்லாவற்றையும் கெடுத்து விடுவார் என்றபயத்தில் காங்கிரசுக் கட்சியினர் ராகுல் காந்தியைப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளிக்கக் கூட அனுமதிப்பதில்லை. ராகுல் காந்தி தன் வாழ் நாளில் ஒருதடவை மட்டுமே பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துள்ளார். அதிப் போட்ட மொக்கைகளைத் தொடர்து எந்தப் பத்திரிகைகளுக்கும் அவர் பேட்டியளிப்பதில்லை. இந்தப் பலவினத்தை உணர்ந்த இராணி ராகுல் காந்ந்திக்கு விட்ட சவாலை அவர் புறக்கணித்துள்ளார்.

மோடி நல்லவரா கெட்டவரா?
இந்தியத் தேர்தல் களத்தில் விவாதம் இப்போது மோடி நல்லவரா அல்லது கெட்டவரா என்ற கேள்வியைச் சுற்றித்தான் அதிகம் நடக்கின்றது. மோடி இந்தியாவின் தலைமை அமைச்சராகக் கூடாது என்பதைத் தான் தமது பக்க விவாதமாகக் காங்கிரசுக் கட்சியினர் முன்வைக்கின்றனர். அவர்கள் தம் கேடயமாகப் பயன்படுத்தும் மத சார்பின்மை, நிலையான ஆட்சி போன்றவற்றில் அவர்களுக்கே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. காங்கிரசுக் கட்சி சார்பான ஊடங்கள் மோடியை பற்றிய வாதப் பிரதிவாதங்களில் அதிக அக்கறை காட்டுகின்றன.

ஊழல்
பாஜகவின் எடியூரப்பா கர்நாடகாவில் செய்த ஊழல்கள் அதற்கு அங்கு படு தோல்வியை கொடுக்கும் என எதிர்பார்கப்படுகின்றது. கடந்த பத்து ஆண்டுகளில் காங்கிரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் பல உண்டு.    2ஜி அலைக் கற்றை ஊழல்,  நிலக்கரி ஒதுக்கீடு ஊழல், பொதுநலவாய விளையாட்டு போட்டியில் நடந்த ஊழல், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுட்த ஊழல், ஹெலிக்காப்டர் வாங்கியதில் ஊழல், ஆந்திரக்ஸ் தேவாஸ் ஊழல், பங்கு சந்தை ஊழல் என ஒரு மிக நீண்ட பட்டியல் உண்டு. இவற்றில் மோசடி செய்யப்பட்ட தொகை கோடானு கோடிகளாகும். காங்கிரசுக் கட்சி தேர்தலில் தோல்வியடைந்தால் சோனியா காந்திக்கும் அவரது மருமகனுக்கும் எதிராக வழக்குகள் பல தொடரப்படலாம். இதனால் அவர்கள் குடும்பத்துடன் நாட்டை விட்டு ஓடவேண்டிய நிலமை ஏற்படும். இதனால் காந்தி குடும்பத்தின் கடைசித் தேர்தலாக இது அமையும். காங்கிரசுக் கட்சிக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜீ தலைமை தாங்கலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...