Tuesday 26 November 2013

ஐரோப்பிய ஆதிக்கப் போட்டியும் இரசிய எரிபொருள் பொருளாதாரமும்

இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து எரிபொருள் விலை அதிகரிப்பு மற்ற நாடுகளுக்கு பெரும் தொல்லையாக இருந்த போது இரசியாவிற்கு அது பெரும் வரப்பிரசாதமாக அமைந்தது. இரசியா உலகச் சந்தையில் ஏற்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்பட்ட தனது வருமான அதிகரிப்பைவைத்துக் கொண்டு பல பொருளாதாரப் பிரச்சனைகளை சீர் செய்தது. தற்போது இரசியா உலகின் மிகப்பெரிய எரிபொருள் ஏற்றுமதி நாடாகும். இரசியாவின் மொத்த ஏற்றுமதியில் எரிபொருள் ஏற்றுமதி 70விழுக்காடாகும். இரசிய அரச வருமானத்தின் அரைப்பங்கு எரிபொருள் ஏற்றுமதியின் மூலம் கிடைக்கின்றது.

இரசியாவின் அபரிமிதமான எரிவாயு இருப்பு
இரசியாவிடம் 1,680,000 பில்லியன் கன அடிகள் (1,680 இலட்சம் கோடி கன அடிகள்) எரிவாயு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் படி இரசியா இன்னும் 750 ஆண்டுகளுக்கு எரிவாயுவை உற்பத்தி செய்ய முடியும். தனது இந்த எரிவாயு வளத்தில் தங்கியிருக்கும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை இரசியா தனது பக்கம் இழுக்கவும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையாமல் இருக்கவும் இரசியா முயன்றது.

ஜேர்மானிய விரிவாக்கம்     
                                                                                 
ஐரோப்பாவில் ஜேர்மனியின் ஆதிக்கம் வளர்ந்து வருவதையிட்டு பிரித்தானியா பெரிதாக அலட்டிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு பாதி-இணைப்பு நிலையைப் பேணிக்கொண்டு தனது தனித்துவத்தையும் தனது நாணயமான ஸ்ரேலிங் பவுண்டையும் பாதுகாத்துக் கொண்டு இருக்க பிரித்தானியா விரும்புகிறது. ஜேர்மனி மீண்டும் படைத்துறையில் வலிமை மிக்க நாடாக மாறி பிரித்தானியா போல் தன்னுடன் ஒரு பங்காளியாக இணைவதை ஐக்கிய அமெரிக்கா விரும்புகிறது. ஜேர்மனியின் ஐரோப்பிய ஆதிக்க வளர்ச்சியால் அதிக ஆத்திரமடையும் நாடாக இரசியா இருக்கிறது. 1991இல் நடந்த சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் முன்பு போல் ஒரு உலக ஆதிக்க நாடாக மாற இரசியா பெரும் முயற்ச்சி எடுக்கின்றது. தனது சோவித் ஒன்றிய நாடுகளும் முன்னாள் நட்பு நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து வருவது இரசியாவை பெரும் கவலைக்கு உள்ளாக்கியது. போல்ரிக் நாடுகளான எஸ்தேனியா, லத்வியா, லித்துவேனியா ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தமை இரசியாவை ஆத்திரப்படுத்தியது. 01/07/2013இல் இருந்து குரோசியாவும் 28வது நாடாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது. ஐரோப்பாவிற்கும் இரசியாவிற்கும் இடையிலான எல்லைக் கோடு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கும் பின்னர் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் போல்ரிக் நாடுகள் சுதந்திரப் பிரகடனம் செய்த போது முந்தி விழுந்து அவற்றை ஜேர்மனி அங்கீகரித்தது. அவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்குரிய உகந்த பொருளாதார சூழ் நிலையை அந்த நாடுகளில் உருவாக்க ஜேர்மனி பெரிதும் உதவியது. 1994இல் இரசியப் படைகள் போல்ரிக் நாடுகளில் இருந்து வெளியேறுவதற்கும் ஜேர்மனி உதவியது. போல்ரிக் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தவுடன் இரசியா அந்த நாடுகளுக்கு தான் விற்பனை செய்யும் எரிவாயுக்களின் விலைகளைக் கண்டபடி உயர்த்தியது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் அந்த நாடுகளில் மாற்று எரிவள உபயோகங்களை ஊக்குவிக்கும் வேலைத் திட்டங்களைச் செய்தது.

இரண்டு பெரிய போர்களின் பின்னர் தமது எல்லைகளை தீர்மானித்துக் கொண்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளின் எல்லைகளை ஜேர்மனி தனது பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு ஒன்றுபட்ட இணைப்பாட்சி நாடாக்கி அழிக்க முயலாமல் பார்த்துக் கொள்ளும் அறிவும் அனுபவமும் மேற்கு ஐரோப்பியர்களிடம் இருக்கின்றது. ஜேர்மனிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் பல நாடுகளைப் பொறுத்தவரை தற்காலிகமானதே. இதை நன்கு உணர்ந்து செயற்படும் நாடு பிரான்ஸ் ஆகும். போல்ரிக் நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து ஒன்றாகுவது இரசியாவை ஆத்திரப்படுத்தி இன்னும் ஒரு பெரும் போருக்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இரசியாவிற்கும் ஜேர்மனிக்கும் இருக்கிறது.

தடம் மாற முயன்ற உக்ரேய்னும் தடுக்கும் இரசியாவும்
உக்ரேய்ன் நாடும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடாத்தி வந்தன. இரு தரப்பும் Ukraine-EU Association Agreement என்னும் உக்ரேய்ன் ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் கைச்சாத்திட முயன்றன. இரசியா இதற்குப் பல வழிகளில் முயன்றது. தடவலும் தண்டமும் அடிப்படையில் இரசியாவின் அணுகு முறை இருந்தது. இரசியா உக்ரேய்னை எரி வாயுத் தடை  போன்ற பல தடைகளைச் செய்வதாக மிரட்டிய இரசியா இலகு கடன் உக்ரேய்னிற்கு கொடுப்பதாகவும் சொன்னது. முதலில் இந்த ஒப்பந்தத்தைச் செய்து பின்னர் படிப்படியாக உக்ரேய்னையும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதே ஜேர்மனியின் திட்டம். ஆனால் இரசியாவின் எதிர்ப்பு காரணமாக உக்ரேய்ன் ஐரப்பிய ஒன்றிய ஒப்பந்தம் கைச்சாத்தும் முயற்ச்சி கைவிடப்பட்டது. இதற்கு பல உக்ரேய்ன் மக்கள் பலத்த எதிர்ப்புக் காட்டுகிறார்கள். நாளுக்கு நாள் அவர்களின் எதிர்ப்பு  கூடிக்கொண்டே போகின்றது. உக்ரெய்னை மீண்டும் இரசியாவின் ஆதிக்கத்துக்குள் கொண்டு வருவதை இவர்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இவர்களுக்கு எதிராக அரசு கடுமையான வாடவடிக்கைகளை எடுக்கிறது.

2011-ம் ஆண்டு இரசியப் பொருளாதாரம் 5.1விழுக்காடு வளர்ச்சியடைந்தது. இது வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறந்த வளர்ச்சியாகும். ஆனால் அதன் பின்னர் இரசியப் பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கி விட்டது. 2013-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான வளர்ச்சியைப் பார்க்கும் போது அது ஆண்டுக்கு 1.2 விழுக்காடாகக் குறைந்து விட்டது. அத்துடன் தற்போது இரசியாவில் முதலீடுகள் எந்தவித வளர்ச்சியும் இன்றி இருக்கின்றது. திறன் குறைந்த இரசியப் பொருளாதாரத்திற்கு உற்பத்தித் துறையில் முதலீடு அவசியமாகும். இதுவரை காலமும் இரசியா தனது எரிபொருள் உற்பத்தியில் கிடைத்த வருமானத்தை உற்பத்தித் துறையிலும் கட்டமைப்பு அபிவிருத்தியிலும் முதலீடு செய்து வந்தது. அது வேலை வாய்ப்பையும் மக்களின் கொள்வனவு வலுவையும் அதிகரித்தது.

இரசிய பொருளாதார வளர்ச்சி குன்றல்
எரிபொருள் வருமானம் குறைந்ததால் உற்பத்தித் துறையிலும் கட்டமைப்பு அபிவிருத்தியிலும் முதலீடு குறைந்து விட்டது. இதனால் பொருளாதாரத்திற்குத் தேவையான மக்களின் கொள்வனவு வலு பலவீனமடைகிறது. இது இரசியப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது. ஈரானுடன் நடக்கும் பொருளாதாரத் தடை நீக்கல் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தால் உலக எரிபொருள் விலை மேலும் வீழ்ச்சியடையும் சாத்தியம் உண்டு. இதுவும் இரசியாவின் பொருளாதாரத்தை பாதிக்கலாம்.

ஐக்கிய அமெரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட புதிய எரிபொருள் இருப்புக்களும் எரிக்கக் கூடிய மாக்கற்பாறைகள் அமெரிக்காவிலும் கனடாவிலும் கண்டு பிடிக்கப்பட்டதும் உலக எரிபொருள் விலையை இனி வரும் காலங்களில் குறையச் செய்யும். இதுவரை எரிபொருள் இறக்குமதி நாடாக இருந்த அமெரிக்கா இனி வரும் காலங்களில் எரிபொருள் ஏற்றுமதி நாடாக மாறவிருக்கிறது. அத்துடன் உலகின் மிகப் பெரிய எரிபொருள் உற்பத்தி நாடு என்ற நிலையில் தற்போது இருக்கும் இரசியாவை 2015இல் அமெரிக்கா பின் தள்ளி தான் உலகின் மிகப்பெரிய எரி பொருள் உற்பத்தி நாடாக உருவெடுக்கவிருக்கிறது.

அரச நிதிக் குறைபாடு                                                                                                                இரசிய அரசின் வருமானம் குறைந்து கொண்டு போகவும் அதன் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் மற்றும் சமூக உதவிக் கொடுப்பனவுகள் அதிகரித்துக் கொண்டு போகவும் இரசிய அரச நிதியில் பெரும் பாதகமான நிலை உருவாகப் போகிறது எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றார்கள். இனிவரும் இருபது ஆண்டுகளில் உலகப் பொருளாதாரம் 3.4 விழுக்காடு வளரவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் வேளையில் இரசியப் பொருளாதாரம் ஆண்டொன்றிற்கு சராசரியாக 2.5 விழுக்காடு மட்டுமே வளரவிருக்கிறது. இந்த எதிர்பார்ப்பின் படி இரசிய அரச நிதியில் 28 ரில்லியன் டொலர்கள்( 28இலட்சம் கோடி) பற்றாக் குறை ஏற்படவிருக்கிறது. பல இரசியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் இரசிய மக்கள் தொகையும் குறைந்து கொண்டே போகிறது. நாட்டை விட்டு வெளியேறும் பலர் திறமை மிக்க இளம் தொழிலாளர்களாகும். அத்துடன் இரசிய மக்கள் தொகைக் கட்டமைப்பில் இளையோர் தொகை குறைந்தும் முதியோர் தொகை அதிகரித்தும் போகப் போகிறது. இதுவும் இரசியப் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும்.

வெளியேறும் முதலீடுகள்                                                                                       
இரசியாவில் இருந்து 48பில்லியன் டொலர்கள் பெறுமதியான முதலீடு 2013இன் முதல் ஒன்பது மாதங்களில் வெளியேறி விட்டது. இரசிய நிறுவங்கள் தமது சேமிப்புக்களை வெளிநாடுகளில் இலாபம் அதிகம் தரக்கூடிய துறைகளில் முதலீடு செய்கின்றன.  இரசியப் பொருளாதாரத்தின் செயற்படு திறனை மேம்படுத்த அவசியம் தேவையான முதலீடு நாட்டை விட்டு வெளியேறுவது ஒரு நல்ல செய்தியல்ல.

குளிரவைக்கும் குளிர்கால ஒலிம்பிக்                                              
அமெரிக்கா தனது கவனத்தை ஆசியாவை நோக்கித் திருப்பவும் மத்திய கிழக்கில் தனது கவனத்தைக் குறைக்கவும் திட்டமிட்டிருக்கும் வேளையில் இரசியா தனது ஆதிக்கத்தை மத்திய கிழக்கில் அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கின்றது. இதற்கு இரசியா தனது பாதுகாப்புச் செலவை அதிகரிக்க வேண்டும். அத்துடன் 2014இல் இரசியாவில் நடக்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக்கிற்கும் அதிக செலவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. இஸ்லாமியர்களை அதிகம் கொண்ட கொக்கஸஸ் பிரதேசத்துக்கு அண்மையில் இருக்கும் சொச்சி நகரத்தில் இரசியா குளிர்கால ஒலிம்பிக்கை நடத்த இருப்பதால் அதிக பாதுகாப்புச் செலவு தேவைப்படுகின்றது. அத்துடன் இரசியாவிலேயே குளிர் குறைந்த நகர் சொச்சியாகும். அங்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்துவதும் அதிக செலவீனமான ஒன்றாகும். இதனால் உலக குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் அதிக செலவீனம் ஏற்படும் போட்டியாக சொச்சி ஒலிம்பிக் அமைகிறது. மொத்தச் செலவு ஐம்பது பில்லியன் டொலர்களுக்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியும் இரசியாவின் அரச நிதியில் பாதகமான விளைவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இரசியாவின் பொருளாதாரம் மோசமானால் அதைப் பாவித்து ஜேர்மனி அதைச் சுற்ற உள்ள நாடுகளை தன்வசம் இழுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்துவிடும். இது இரசியாவின் தனிமைபடுத்திப் பலவீனப்படுத்தலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...