Thursday, 3 October 2013

இந்தியப் பேரினவாத அரசியலும் ஊழல்களும்

இந்தியாவின் கட்சிகளிடையான கூட்டணியை கட்சித் தலைவர்களின் ஊழல் தொடர்பான இந்திய உளவுத்துறையிடம் இருக்கும் கோப்புக்கள் தீர்மானிக்கின்றன. கட்சிகளின் தேர்தல் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் குடும்பம் மற்றும் சாதிப் பின்னணிகள் தீர்மானிக்கின்றன. வாக்காளர்கள் எந்த வேட்பாளரைத் தெரிவு செய்வது என்பதை புரியாணிப் பொட்டலங்களும் மதுப் புட்டிகளும் தீர்மானிக்கின்றன.

கேலிக்குரிய மக்களாட்சி

ஒரு நாட்டில் மக்களாட்சி சிறப்பாக நடைபெற வேண்டுமாயின் அரசமைப்பு மக்களாட்சி முறைமைப்படியானதாக இருந்தால் மட்டும் போதாது. நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் முக்கிய பதவிகளுக்கான தேர்வும் மக்களாட்சி முறைமைப் படி இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் பல முன்னணி அரசியல் கட்சிகளில் குடும்ப ஆதிக்கமே நிலவுகிறது. இது இந்திய மக்களாட்சியைக் கேலிக் கூத்தாக்கி விட்டது.

பேரினவாதம்
1960களின் பிற்பகுதி வரை இந்தியாவை காங்கிரசுக் கட்சி ஆண்டு வந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர்கள், கனவான்கள், ஊழலற்றவர்கள் என்ற ஒரு போர்வையில் காங்கிரசுக் கட்சியினர் இந்திய மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். ஜவகர்லால் நேரு ஒரு செல்வந்தர். அவருக்கு ஊழல் செய்ய வேண்டிய அவசியமில்லை என மக்கள் நம்பியிருந்தனர். அவரின் வழித்தோன்றல்களையும் மக்கள் அப்படியே நம்பினர். பின்னர் ஜவகர்லால் நேரு உண்மையிலேயே ஒரு இந்துப் பிரமணரா அல்லது ஒரு இசுலாமியர் இந்து வேடமிட்டாரா என்ற கேள்வி 1960களின் பிற்பகுதியில் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கி விட்டது. ஆரியப் பேரினவாதத்தில் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கினர். நேரு குடும்பத்தினர் மாநிலங்களில் நல்ல தலைவர்கள் உருவானால் அது தமது செல்வாக்கிற்கு அச்சுறுத்தலாகும் என்பதால் மாநிலங்களில் தமது கைப்பொம்மைகளைத் தலைவர்களாக முன்னிறுத்தினர்.

மாநிலக் கட்சிகளின் எழுச்சியும் சரணடைவும்
நேரு குடும்பத்தினரின் ஆதிக்கத்திலும் பேரினவாதத்திலும் மாநில மக்கள் நம்பிக்கை இழக்க மாநிலக் கட்சிகள் எழுச்சி பெறத் தொடங்கின. 1967இல் சி என் அண்ணாத்துரை அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் பெரு வெற்றியீட்டி ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின்னர் எந்தக் காங்கிரசுக் கட்சியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தனரோ அந்தக் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டனர். மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்தினால் அது கட்சி நிதி, குடும்ப நிதி போன்றவற்றை மேம்படுத்த உதவும் என்பதுடன் மாநிலத்திலும் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க உதவும். பின்னர் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் எல்லாம் மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதையையும் மத்திய அரசின் அமைச்சரவையில் பதவிகள் பெறுவதையும் தவறாமல் செய்து வந்தன. இதே நிலைமைதான் மற்ற மாநிலங்களிலும். காங்கிரசில் இருந்து வெளியேறி காங்கிரசுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மம்தா பனர்ஜீ பின்னர் மத்திய அரசில் காங்கிரசுடன் இணைந்து கொண்டார். இப்போது வெளியேறி வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கிறார். உத்தரப் பிரதேசத்தில் மயாவதியின் கதையும் மம்தாவின் கதை போன்றதே. மத்தியில் தொடர்ந்து முக்கிய அமைச்சர்களை வைத்திருக்கும் மாநிலங்கள் பொருளாதாரத்திலும் முன்னேறிய மாநிலங்களாக இருக்கின்றன. காங்கிரசுக் கட்சியின் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலும் பார்க்க மாநிலக் கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருக்கிறது.


மூன்றாம் அணி
இந்தியாவில் காங்கிசையும் பாரதிய ஜனதாக் கட்சியையும் புறம் தள்ளிவிட்டு முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து ஒரு மூன்றாம் அணி உருவாக்கும் முயற்ச்சி பெரும் வெற்றி அளிக்கவில்லை. ஆனால் தேசியக் கட்சிகள் ஊழலிலும் நிர்வாகச் சீர்கேட்டிலும் ஈடுபடுவதாலும் பெரும் பண முதலைகளின் பின்னால் போவதாலும் மூன்றாம் அணி உருவாவது தவிர்க்க முடியாத ஒன்று என்று தூய்மையான முற்போக்காளர்கள் இன்றும் நம்புகின்றனர். ஆனால் மூன்றாம் அணி இயற்கை இறப்பை எய்தி விட்டது என்கின்றனர் சிலர். மேற்கு வங்கத்து மம்தா பனர்ஜீ, உத்தரப் பிரதேசத்து மாயாவதி, பிஹாரின் நிதீஷ் குமார், உத்தரப் பிரதேசத்து அகிலேஷ் யாதவ் தமக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கைப் போட்டு உடைத்து விட்டனர்.  கம்யூனிசக் கட்சிகள் யாருடன் கூட்டுச் சேரவது என்பது பற்றி பல சித்தாந்த முரண்பாடுகளைக் கொண்டுள்ளனர். அவை மம்தா பனர்ஜீ போன்றவர்களுடன் கூட்டுச் சேர மாட்டார்கள்.

ஜெயலலிதாவின் தலைமை அமைச்சர் கனவு
ஜெயலலிதாவிற்கு சில சோதிடர்கள் இந்தியாவின்  தலைமை அமைச்சராக வரும் பாக்கியம் உண்டு என்று சொல்லி விட்டார்கள். கடந்த தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் ஜெயலலிதா பெற்ற பெரும் வெற்றி அவருக்கு அந்தச் சோதிடர்களின் கூற்றில் நம்பிக்கை ஏற்படுத்தி விட்டது. தமிழ்நாட்டில் எல்லாப் பாராளமன்றத்திலும் தான் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறார். தான் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஒரு கூட்டணி அரசில் சுழற்ச்சி முறையிலாவது இந்தியாவின் தலைமை அமைச்சராக ஆகலாமா என்ற நப்பாசையும் அவருக்கு இருக்கிறது. அத்துடன் ஒரு வெளிநாட்டமைச்சர் பதவியாவது பரவாயில்லை என்ற ஆசையும் இருக்கிறது.

பேரினவாதத்திற்கு அச்சுறுத்தல்
மாநிலக் கட்சிகளின் வளர்ச்சி இந்தியாவின் பேரினவாதத்திற்கு அச்சுறுத்தலாக அமையும் என பேரினவாதிகள் அச்சமடையத் தொடங்கிவிட்டனர். இந்தியாவில் 2014இல் நடக்கவிருக்கும் தேர்தலில் எந்த ஒரு தேசியக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையான ஆசனங்களுடன் வெற்றி பெற மாட்டாது என்ற எதிர்பார்ப்பு 2010இல் இருந்தே உருவாகத் தொடங்கி விட்டது. அடுத்த இந்தியப் பாராளமன்றம் ஒரு மாநிலக் கட்சிகளின் கூட்டணியாலே ஆளப்படும் என்ற எதிர்பார்ப்பு பேரினவாதிகளை மட்டுமல்ல பேரினவாதக் கொள்கை கொண்ட மதவாதிகளையும் ஆட்டிப் படைக்கத் தொடங்கி விட்டது. காங்கிரசுக் கட்சியைத் தோற்கடிக்கவும் தேசிய ரீதியில் காத்திரமான வெற்றியையும் ஈட்டக் கூடிய ஒரு தலைவர் அவசியம் என எண்ணி குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு அந்த வேடத்தை வழங்குவதற்கான ஒப்பனையை தொடங்கி விட்டது. நன்கு திட்டமிடப்பட்டு மோடி படிப்படியாக ஒரு தேசியத் தலைவராக உருவாக்கப்பட்டு விட்டார். அவரது மதவாததை மூடி மறைக்கப் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவருக்கு பல மொழிகள் போதிக்கப்படுகின்றன. இப்போது நரேந்திர மோடி தலைமையில் பாரதிய ஜனதாக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

ஊழல்கள் இந்தியாவின் கரிகாலம்
2010-ம் ஆண்டு 2G அலைக்கற்றை ஊழல், பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி ஆகியன உலகின் மிகப்பெரிய ஊழல்களாக அறிவிக்கப்பட்டன. 2011இல் உத்தரப் பிரதேச NRHM ஊழல் பத்தாயிரம் கோடி ரூபாக்களுக்கு செய்யபப்ட்டது. , இஸ்ரோ ஊழல் இரண்டு இலட்சம் கோடி ரூபாக்களுக்கு செய்யபப்ட்டது. , NTRO ஊழல் எண்ணூறு கோடி ரூபாக்களுக்கு செய்யபப்ட்டது. . ஆந்திரப் பிரதேச நில ஊழல் ஒரு இலட்சம்  கோடி ரூபாக்களுக்கு செய்யபப்ட்டது. குஜாராத் பிஎஸ்யூ ஊழல் பதினேழாயிரம் கோடி ரூபாக்களுக்கு செய்யபப்ட்டது. பல முத்திரைத் தாள் ஊழல்களும் செய்யப்பட்டது. 2005-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்க உரிமைகளை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு இந்திய அரசு வழங்கியதில் ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரம் கோடி ரூபாய்(Rs1,860,000,000,000) இழப்பு ஏற்பட்டிருப்பதாக அரச கணக்காய்வாளரும் கட்டுப்பாடாளாரும் சமர்ப்பித்த அறிக்கை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த ஊழலில் பிரதம மந்திரி மன்மோகன் சிங் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதாக இந்திய எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் அவர் அது தொடர்பான கோப்புக்கள் காணாமல் போய் விட்டதாகக் கூறுகிறார்.

தமிழ்நாட்டில் பார்ப்பன ஊடகங்கள் நரேந்திர மோடியை தூக்கிப் பிடித்துப் பரப்புரை செய்யத் தொடங்கிவிட்டன. நாட்டு மக்கள் பெரிதும் வெறுக்கும் பெரும் ஊழல்களில் இருந்து மோடி நாட்டைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு வெற்றீகரமாக ஊட்டபப்ட்டு விட்டது. சில பார்ப்பனக் கும்பலகள் அடுத்த ஆட்சிக்கு யார் வருவார் என்பதை முன் கூட்டியே அறிந்து அதற்கு ஏற்ப தமது காய்களை நகர்த்தும் திறனுடையவை.

இந்தியாவின் ஆட்சி மாற்றம் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருமா என்ற எதிர்பார்ப்பை சுப்பிரமணிய சுவாமி பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தமை தவிடு பொடியாக்கி விட்டது. அவர் வெளிநாட்டமைச்சரானால் தமிழர்களின் கதி அதோ கதிதான்!!!!!

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...