Wednesday, 4 September 2013

அமெரிக்காவின் தயக்கத்தால் விரக்தியில் இஸ்ரேலிய அரசும் அச்சத்தில் இஸ்ரேலிய மக்களும்.

சிரியாவில் நடந்ததாகக் கருதப்படும் வேதியியல் குண்டுத் தாக்குதலால் சிரிய மக்களிலும் பார்க்க அதிக அச்சத்தில் இஸ்ரேலிய மக்களே இருக்கிறார்கள். சிரியாவின் வேதியியல் குண்டுத் தாக்குதலுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாததையிட்டு சிரியக் கிளர்ச்சிக்காரர்களிலும் பார்க்க இஸ்ரேலிய அரசே அதிக விரக்தியடைந்துள்ளது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் பதவியில் இருப்பதை இஸ்ரேல் விரும்பினாலும் சிரியாவிடம் இருக்கும் வேதியியல் குண்டுகளைப் பற்றி மற்ற எல்லாத் தரப்பினரிலும் பார்க்க அதிக கரிசனையைக் கொண்டுள்ளது.

சிரியாவில் வேதியியல் குண்டுகள் விழுந்தவுடன் இஸ்ரேலிய அரசு தனது மக்களுக்கு வேதியியல் குண்டுகளில் இருந்து தப்புவதற்கான முகமூடிகளை அவசர அவசரமாக வழங்கியது.

சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப்பட்டால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும். அமெரிக்கா அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருந்தார். சிரியாவில் வேதியியல் குண்டுகள் பாவிக்கப்பட்டமை உறுதிப் படுத்தப்பட்டவுடன் அமெரிக்கா படை நடவடிக்கையில் ஈடுபடும் என இஸ்ரேலிய அரசு எதிர்பார்த்தது. ஆனால் பிரித்தானியப் பாராளமன்றம் பிரித்தானியா படை நடவடிக்கை எடுப்பதைத் தடுத்ததும் ஒபாவும் அமெரிக்கப் பாராளமன்றத்தின் அனுமதியைக் கோரியமையும் இஸ்ரேலைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேல் அங்குள்ள வேதியியல் குண்டுகளைப் பற்றியும் மற்ற படைக்கலன்களைப் பற்றியும் அதிக கரிசனை கொண்டது. சிரியாவில் இருந்து லெபனானிய ஹிஸ்புல்லா இயக்கம் படைக்கலன்களை லெபனானிற்கு எடுத்துச் செல்ல முயன்றபோது இஸ்ரேல் தனது விமானங்களை அங்கு அனுப்பி குண்டு வீசித் தடுத்தது. சிரியாவில் உள்ள விமான எதிர்ப்புப் படைக்கலன் கிடங்குகள் மீது தாக்குதல் நடாத்தியது. சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்து பலதடவை இஸ்ரேல் விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

ஈரான் அணுக் குண்டுகளை உற்பத்தி செய்யும் போது அமெரிக்கா ஈரானில் குண்டு வீசி அவற்றை அழிக்கும் என இஸ்ரேல் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. சிரியா மீது தாக்குதல் நடத்த வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் காட்டும் தயக்கம் இஸ்ரேலை சற்று உலுப்பியுள்ளது. சிரியாவில் தாக்குதல் செய்யவே இந்த அளவு தயக்கம் என்றால் சிரியாவிலும் பார்க்க அதிக படைப்பலமும் பல இசுலாமிய தீவிரவாத இயக்கங்களைத் தன் கைக்குள் வைத்திருக்கும் ஈரான் மீது அமெரிக்கா எப்படித் தக்குதல் நடத்தும் என்ற கேள்வி இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளத

2013 ஆகஸ்ட் 21-ம் திகதிக்கு முன்னரே பல தடவை சிரிய அரச படைகள் வேதியியல் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொண்டிருந்தன. இவற்றை அமெரிக்கா ஏன் தனது கரிசனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என இஸ்ரேலிய அரசும் மக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

லிபியாவில் மும்மர் கடாஃபியின் ஆட்சிக்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டும் என முதலில் ஆரம்பித்தது பிரான்ஸும் இத்தாலியுமே. ஆரம்பத்தில் அமெரிக்கா தயக்கம் காட்டியது. பின்னர் அமெரிக்காதான் கடாஃபியின் படைநிலைகள் மீது கடும் தாக்குதல் நடத்தியது. சிரியாவில் வேதியியல் குண்டுத் தாக்குதல் நடந்தவுடன் சிரியாவிற்கு எதிராக ஒரு படை நடவடிக்கை எடுக்க வேண்டும் என துருக்கியும் பிரன்ஸும் பிரித்தானியாவும் துள்ளிக் குதித்தன. மாலியில் மற்ற நேட்டோ நாடுகளைப்பற்றிக் கவலைப்படாமல் பிரான்ஸ் களத்தில் இறங்கி அல் கெய்தாவிடமிருந்து மாலியை மீட்டது.

அமெரிக்க மூதவையின் வெளியுறவுக் குழு உறுப்பினர்களின் முன் தோன்றி சிரியாமீது தாக்குதல் நடத்த வேண்டியதன் அவசியத்தை அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் ஜோன் கெரியும் பாதுகாப்புத் துறைச் செயலர் சக் ஹஜெலும் (Chuck Hagel) எடுத்துக் கூறினர். சிரிய அரசப் படைகள் வேதியியல் குண்டுத் தாக்குதலுக்கு உத்தரவிட்டமைக்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ஜோன் கெரி கூறினார்.

அமெரிக்க் அதிபர் பராக் ஒபாமாவும் துணை அதிபர் ஜோ பிடனும் அமெரிக்க மக்களவையின் தலைவர் ஜோன் போனெரையும் குடியரசுக் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் நான்சி பேலோசியையும் சந்தித்து சிரியா தொடர்பாக உரையாடினார்கள்.  சிரியாவில் தான் செய்யப் போவது ஈராக்கைப் போலவோ அல்லது ஆப்கானிஸ்த்தானைப் போலவே நிச்சயம் இருக்க மாட்டாது என ஒபாமா தெரிவித்தார். இவர்கள் இருவரும் சிரியாமீதான தாக்குதலுக்கு தமது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்த ஒபாமாவின் நடவடிக்கைக்கு அவரது எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் தலைவர் ஆதரவு வழங்கியது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

அமெரிக்கப் பாராளமன்றத்தில் பலமிக்கவர்களான யூத அரசியல் தரகர்கள்(Lobbyists) சிரியாவிற்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவு திரட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள்.

செப்டம்பர் 5-ம் திகதி இரசியாவில் நடக்கவிருக்கும் ஜி-20 நாடுகளின் மாநாட்டில் சிரியாவிற்கு எதிரான தனது மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கைக்கு ஒபாமா மற்ற நாடுகளிடமிருந்து ஆதரவு திரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...