Wednesday, 18 September 2013

சிரியக் குழு மோதல்கள் நல்ல திருப்பத்தைக் கொண்டு வருமா?

சிரியத் தேசிய சபை, சுதந்திர சிரியப்படை. ஜபத் அல் நஷ்ரா, இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு, மதசார்பற்ற மக்களாட்சிக்கான அமைப்பு, டமஸ்கஸ் பிரகடன அமைப்பு, சிரிய மக்களாட்சிக் கட்சி, சிரியப் புரட்சிக்கான உச்ச சபை, சிரிய உள்ளூர் ஒருங்கிணைப்புக் குழு,  மக்களாட்சி மாற்றத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழு, தேசிய மக்களாட்சி அணி, சிரியப்புரட்சிக்கான தேசிய ஆணையகம், சிரிய விடுதலைப்படை, சிரிய இசுலாமிய முன்னணி, சிரியத் தேசிய விடுதலை முன்னணி, விடுதலைக்கும் மாற்றத்துக்குமான முன்னணி...........இப்படி இனும் பல படைக்கலன் ஏந்திய குழுக்களும், மத அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு எதிராகச் செயற்படுகின்றன.

மேற்படி குழுக்கள் வேறு வேறு கட்டங்களில் வேறு வேறு குடை அமைப்புக்களாக இணைந்ததுண்டு.  பல குழுக்கள் 2011இன் இறுதிப்பகுதியில் சிரியத் தேசிய சபை என்னும் பெயரில் ஒன்றிணைந்தன. இந்தக் குடை அமைப்பை லிபியா அங்கீகரிந்த்தது. 2012 நவம்பரில் சிரியப் புரட்சிக்கும் எதிர்ப்புப் படைகளுக்குமான கூட்டமைப்பு (National Coalition for Syrian Revolutionary and Opposition Forces) என்னும் இன்னுமொரு குடை அமைப்பு உருவாக்கப்பட்டது.

அமெரிக்க ஆதரவு சுதந்திர சிரியப்படையில் 50,000பேரும், இசுலாமிய மதவாத அமைப்பான சிரிய விடுதலை முன்னணி என்னும் குடை அமைப்பில் 37,000 பேரும், சிரிய இசுலாமிய முன்னணியில் 13,000பேரும்  ஜபத் அல் நஸ்ரா அமைப்பில் 5,000 பேரும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஜபத் அல் நஸ்ரா அனுபவமும் தீரமும் மிக்க போராளிகளைக் கொண்டது. அத்துடன் அது நன்கு கட்டமைக்கப்பட்டு நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு அமைப்பாகும். அரச படைகளில் இருந்து விலகிய பலர் சுதந்திர சிரியப் படையில் இருக்கின்றனர். சிரிய சுதந்திரப்படையில் இருந்து ஆயிரத்திற்கு மேலானவர்கள் ஜபத் அல் நஸ்ரா அமைப்பில் இணைந்துள்ளனர்.சுததிர சிரியப் படை ஒரு நன்கு நிர்வகிக்கப்படும் அமைப்பல்ல. இதனால் இந்தக் குதிரையில் பணம் கட்ட அமெரிக்கா தயக்கம் காட்டி வந்தது.

ஆனால் இப்போது அல் கெய்தாவும் அதன் ஆதரவு அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு (Islamic State of Iraq and Syria (ISIS)) என்னும் பெயரில் ஒரு குழுவை உருவாக்கியுள்ளன. இவை தற்போது சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் படைகளுக்கு எதிராகப் போராடும் அதே அளவு வலுவை தமக்கு ஒத்துவராத மேற்கு நாடுகளின் அமைப்பான சுதந்திர சிரியப்படைக்கும் அதன் ஆதரவு அமைப்புக்களுக்கும் எதிராக போராடச் செலவு செய்கின்றன. சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு செப்டம்பர் 12-ம் திகதியில் இருந்து அலேப்பே மாகாணத்தில் தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது அலேப்பேயில் சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு எதிராக சிரிய சுததிரப்படையினர் ஒரு மக்கள் பேரணியை ஒழுங்கு செய்ததால் உருவானது. மக்கள் சொத்துக்களைக் கொள்ளை அடிக்கிறாரக்ள் என இரு குழுக்களும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டுகின்றன. செப்டம்பர் 15-ம் திகதி ஈராக்-சிரிய எல்லையில் இருதரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன. அதில் சிரிய விடுதலைப்படையினர் ஐவர் கொல்லப்பட்டனர்.  சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு தாம் தம்மை விமர்சிப்பவர்களைக் கொல்வதில்லை என்றும் போரில் அரச படைகளுடன் ஒத்துழைப்பவர்களையும் போரைச் சாட்டாக வைத்துக் கொண்டு இலாபமீட்டுவர்களையும் கொல்வதாகச் சொல்கிறது.

சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசு தம்மிடம் அகப்படும் அரச படைகளை மிகக் கொடூரமாக சித்திரவதத செய்து கொல்வது பல தடவை காணொளிப்பதிவுகளாக வெளி வந்தன.  சிரியாவிற்கும் ஈராக்கிற்குமான இசுலாமிய அரசின் முக்கிய பங்காளியான ஜபரத் அல் நஸ்ரா இயக்கம் தமது கட்டுபாட்டில் உள்ள பிரதேசங்களில் இசுலாமிய சட்டங்களைக் கடுமையாக அமூல் படுத்துகிறது. இது பலரை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு சர்வாதிகாரியிடம் இருந்து விடுபட்டு இன்னொரு சர்வாதிகாரியிடம் அகப்பட நாம் தயாரில்லை எனச் சிலர் கூறியுள்ளனர். ஜபரத் அல் நஸ்ரா இயக்கத்தின் போரிடும் திறனை மக்கள் மதிக்கிறார்கள். சிரிய அரச படைகளுக்கு அவர்களே பெரும் இழப்புக்களை எற்படுத்தினர். அவர்களின் தற்கொடைத் தாக்குதல்கள் போர்முனையில் பல திருப்பங்களை ஏற்படுத்தின.

வேதியியல் குண்டு வீச்சுக்குப் பின்னர் மோதல் தீவிரம்
ஆகஸ்ட் 21-ம் திகதி சிரியாவில் வேதியியல் குண்டு விழுந்ததைத் தொடர்ந்து குழு மோதல் தீவிரமடைந்துள்ளது. ஆகஸ்ட் 21-ம் திகதிக்குப் பின்னர் அமெரிக்க ஆதரவு இயக்கமான சிரிய சுதந்திரப்படைக்கு அதிக அளவிலான படைக்கலன்கள் வெளியில் இருந்து கிடைத்துள்ளன. ஜூன் மாதத்தில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்கும் முடியவை அமெரிக்கா எடுத்திருந்தது ஆனால் அமெரிக்கா அனுப்பியவை காலணிகளும் சீருடைகளும் மட்டுமே. அல் கெய்தா ஆதரவுக் குழுக்களுக்கும் மற்ற தாராண்மைவாத அமைப்புக்களுக்கும் இடையிலான் மோதல் திவிரமடையும் பட்சத்தில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தாராண்மைவாத அமைப்புக்களுக்கு படைக்கலன்களை வழங்கி சிரியப் போரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம் அல்லது ஒரு மிக மோசமான இரத்தக் களரியை ஏற்படுத்தும் ஒரு மும்முனைப் போராக மாறலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...