Thursday, 12 September 2013

எகிப்துடன் மோதித் தவிக்கும் ஹமாஸ் இயக்கம்


இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பில் இருந்து உருவாகிய ஹமாஸ் அமைப்பு 2006-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காசா பிரதேசத்தை ஆண்டு  வருகிறது. அரபு வசந்தம் ஹமாஸ் இயக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  சிரியாவில் கிளர்ச்சி தொடங்கியவுடன் சிரிய அரசுக்கு ஆதரவு வழங்காமையினால் ஹமாஸ் அமைப்பு சிரியாவில் இருந்து வெளியேற்றப்பட்டது.

ஹமாஸ் இயக்கம் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆதரவாக செயற்படுகிறது என்பதால் ஈரான் ஹமாஸ் இயக்கத்திற்கான நிதி உதவியை நிறுத்தி விட்டது. ஆனால் படைக்கல உதவிகளை நிறுத்தவில்லை. ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லா இயக்கம் சிரிய அதிபர் அசாத்தின் படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக் காரர்களுக்கு எதிராகப் போராடுகிறது. எகிப்தியப் படைத்துறையினருக்கும் ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையில் எப்போதும் நல்ல உறவு இருந்ததில்லை.

எகிப்திய ஆட்சி மாற்றங்களும் ஹமாஸ் இயக்கமும்
எகிப்தில் முஹமட் மேர்சி தலைமையில் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பின் நீதிக்கும் சமாதானத்திற்குமான கட்சி ஆட்சியைக் கைப்பற்றியவுடன் ஹமாஸ் இயக்கத்தினர் பெரு மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் மேர்சியின் ஆட்சி கலைக்கபட்டு படைத்துறையினர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காசாப் பிரதேசத்தில் எகிப்தியப் படையினருக்கு எதிராக பல பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. சினாய் பகுதியில் இருக்கும் ஹமாஸ் இயக்க ஆதரவாளர்கள் எகிப்தியப் படையினருக்கு எதிராக தாக்குதல்களும் நடாத்தினர். ஹமாஸ் இயக்கத்தின் மத போதகர்கள் எகிப்தியப் படைத் துறையினருக்கு எதிராக பலத்த பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இது எகிப்தியப் படைத்துறையினரை கடும் ஆத்திரத்திற்கு உள்ளாக்கியது.
 
நூற்றுக் கணக்கான சுரங்கைப் பாதைகள்
காசா நிலப்பரப்பிற்கான வழங்கற் பாதை எகிப்திய எல்லையில் உள்ள நூற்றுக் கணக்கான சுரங்கைப் பாதைகளினூடாக நடக்கிறது. சில கணிப்புக்கள் 1200 வரையிலான சுரங்கப் பாதை இருப்பதாகச் சொல்கிறன. இதனூடாக எரிபொருள் படைக்கலன்கள் உணவு எனப் பலவகையானவை எடுத்துச் செல்லப்படுகின்றன.  ஈரானில் இருந்து ஹமாஸ் இயக்கப் போராளிகளுக்கு ஏவுகணைகள் உட்படப் பல படைக்கலன்கள் இந்த சுரங்கப்பாதைகளூடாக கிடைக்கின்றன.  ஹமாஸ் இயக்கம் இந்தச் சுரங்கப்பாதையால் ஆண்டு ஒன்றிற்கு ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகவும் பெறுகின்றது. ஹமாஸ் இயக்கத்தினர் எகிப்தில் இசுலாமிய சகோதரத்து அமைப்பிற்கு ஆதரவாக செயற்பட்டமையால் ஆத்திரமடைந்த எகிப்தியப் படைத்துறையினர் காசாவிற்கான நிலக்கீழ் சுரங்கப்பாதைகளைச் சிதைத்தும் மூடியும் வருகின்றனர். இதனால் காசாப் பிரதேசத்தில் பொருடகளின் விலைகள் அதிகரித்ததுடன் மின்வெட்டும் கடுமையாக அமூல் செய்யப்படுகிறது. விழித்துக் கொண்ட ஹமாஸ் அமைப்பின் தலைமை தனது உறுப்பினர்களுக்கும் மத போதகர்களுக்கும் எகிப்தின் படைத்துறையினருக்கு எதிரான பரப்புரைகளை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...