ஓகஸ்ட் 29-ம் திகதி பிரித்தானியப் பாராளமன்றம் அவசரமாகக் கூடி சிரியாமீது
தாக்குதல் செய்யக் கூடாது என எடுத்த தீர்மானம் உலக அரசியல் சமன்பாட்டில்
பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்த்தான், ஈராக், லிபியா ஆகிய
நாடுகளின் மீது பிரித்தானியப் படைகள் தாக்குதல்கள் நடாத்த பிரித்தானியப்
பாராளமன்றத்தின் ஒப்புதல் இன்றியே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இவை பல தடவை
பல தரப்பிலும் இருந்து கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியது. இதுவே
பிரித்தானியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் சிரியாமீதான தாக்குதலுக்கு
பாராளமன்றத்தின் அனுமதியைக் கோரினார்.
பிரித்தானியப்
பாராளமன்றத்தின் நிராகரிப்பு ஐக்கிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும்
அமெரிக்கப் பாராளமன்றத்தின் ஒப்புதலைக் கோரவேண்டிய நிர்ப்பந்தத்தை
உருவாக்கியது. அமெரிக்க அதிபரும், பிரித்தானியத் தலைமை அமைச்சரும்,
பிரெஞ்சு அதிபரும் கூடி முடிவெடுத்தால் எந்த நாட்டிலும் தாக்குதல்
நடத்தலாம் என்ற நிலைமையை பிரித்தானியப் பாராளமன்றத்தின் முடிவு
மாற்றிவிட்டது. பிரித்தானியப் பிரதமர் அமைச்சரவையை மட்டும் கூட்டி
சிரியாமிதான தாக்குதல் பற்றி முடிவெடுத்திருக்கலாம். ஆனால் அவர்
பாராளமன்றத்தின் அனுமதியைக் கோரினார். மறுக்கப்பட்டது. இப்போது அவரால்
பாராளமன்றத்தின் முடிவிற்கு எதிராக செயற்பட முடியாது. பிரித்தானியாவிலும்
அமெரிக்காவிலும் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புக்களில் பெரும்பானமயான
மக்கள் சிரியாமீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியப்
பாராளமன்றத்தின் நிராகரிப்பு மத்திய கிழக்கில் எதற்கும் முந்திக் கொண்டு
நிற்கும் பிரெஞ்சு அரசையும் தடுமாறவைத்துள்ளது. சிரியாவைச் சூழவுள்ள
அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜோர்தானும் துருக்கியும் சிரியாவிற்கு எதிரான
தாக்குதல்கள் தமது நாட்டில் இருந்து செய்யப்படுவதற்கு தயங்குகின்றன.
சிரியாவில்
ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டும் பல இலட்சக்கணக்கான
மக்கள் இடப்பெயர்வுக்கும் அவலத்திற்கும் உள்ளாகியுள்ளனர். அங்கு மனித
அவலங்களோ உள்நாட்டுப் போரோ தற்போது முடிவதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.
அங்கு தொடரும் அட்டூழியங்களும் அழிவுகளும் முடிவிற்கு வருவதற்கு ஒரு வெளித்
தலையீடு அவசியம். இரசியாவும் சீனாவும் சிரியாவின் பஷார் அல் அசாத்தின்
ஆட்சிய் தொடருவதை விரும்புவதால் ஐக்கிய நாடுகள் சபை தலையிடுவதற்கு
சாத்தியமே இல்லை. அரபு லீக் நாடுகள் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் சிரியாவில் ஒரு படைத்துறைத் தலையீடு செய்வதை வேண்டி நிற்கின்றன.
R2P எனப்படும் Responsibility to protect காக்கும் பொறுப்பு
2001-ம்
ஆண்டு மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்களடங்கிய தலையீட்டிற்கும் அரச
இறைமைக்குமான பன்னாட்டு ஆணையகம் முதலில் காக்கும் பொறுப்பு என்ற
கோட்பாட்டை முதலில் உருவாக்கியது. ஒரு நாட்டில் மோசமான வன்முறை
உள்நாட்டுப் போர் காரணமாகவோ, கிளர்ச்சியாலோ, அடக்கு முறையாலோ ஒரு மக்களின்
குழுவிற்கோ அல்லது குழுக்களுக்கோ எதிராக நடக்கும் போது அந்த நாட்டு அரசானது
அந்த வன்முறைகளை தடுக்க இயலாமலோ அல்லது முடியாமலோ இருக்கும்போது பன்னாட்டு
சமூகத்திற்கு அந்த நாட்டில் தலையிட்டு நடக்கும் அல்லது நடக்கவிருக்கும்
வன்முறையை தடுக்க வேண்டிய அறரீதியான கடப்பாடு உண்டு. இந்தக் காக்கும்
பொறுப்பு அடிப்படையில்தான் 1999இல் கொசோவாவில் அமெரிக்கா தலைமையில் தலையீடு
மேற்கொள்ளப்பட்டது. அதே அடிப்படையில் சிரியாவில் ஏன் தலையிட முடியாது என்ற
கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஆனால் காக்கும் பொறுப்பு கோட்பாடு
சிரியாவில் அமூல்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கவில்லை.
பவல் கோட்பாடு
காக்கும்
பொறுப்பு கோட்பாட்டைப் பார்க்கும் போது நாம் இன்னும் ஒரு கோட்பாட்டைக்
கருத்தில் கொள்ள வேண்டும். அதுதான் பவல் கோட்பாடு. 2009-ம் ஆண்டு ஒரு
பேட்டியொன்றில் அமெரிக்காவின் முன்னாள் படைத்தளபதி கொலின் பவல் அவர்கள்
அமெரிக்கா ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பதானால் எட்டு நிபந்தனைகள்
திருப்திப்படவேண்டும் எனக் கூறினார். இது அமெரிக்காவின் இரு கட்சிகளிலும்
உள்ள சமாதன்ப் புறாக்களாலும் போர் விரும்பிக் கழுகுகளாலும் பெரிதும்
வரவேற்கப்பட்டது. இன்றும் பல அமெரிக்கப் பாராளமன்ற உறுப்பினர்கள் அதில்
நம்பிக்கை கொண்டுள்ளனர். அவை: 1. அமெரிக்காவின் பாதுகாப்பு
அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்க வேண்டும். 2. போரில் அடையக்கூடிய நோக்கம்
இருக்க வேண்டும். 3. போரின் நன்மைகளும் ஆபத்துக்களும் சரியாக கருத்தில்
கொள்ளப்படவேண்டும். 4. மற்ற வமுறையற்ற வழிகள் பயனளிக்காமல் போயிருக்க்
வேண்டும். 5. போரை முடித்துக் கொண்டு வெளியேறும் உபாயம் சரியாக வகுக்கப்பட
வேண்டும். 6. போர் நடவடிக்கியின் விளைவுகள் யாவும் சரியாக கருத்தில்
எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 7. அமெரிக்க மக்களின் ஆதரவு இருக்க வேண்டும்.
8. பரவலான பன்னாட்டு ஆதரவு இருக்க வேண்டும். சில அமெரிக்கப் பாராளமன்ற
உறுப்பினர்கள் சிரிய நிலைமை இந்தக் கோட்பாடுகளைத் திருப்திப்படுதவில்லை என
வாதாடுகிறார்கள். பல உறுப்பினர்கள் சிரியாவிற்கு எதிரான படை நடவடிக்கை
தொடர்பான சரியான் உபாயங்களும் திட்டங்களும் தமக்குச் சமர்ப்பிக்கப்பட
வேண்டும் என்கின்றனர். வெள்ளை மாளிகையிலும் பெண்டகனிலும் இதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பராக் ஒபாமா அவசரப்படவில்லை
அமெரிக்கப்
பாராளமன்றத்தின் அனுமதி பெற்றே சிரியாவிற்கு எதிராக நடவடிக்கை
எடுக்கப்படும் என்ற ஒபாமா பிரித்தானியத் தலைமை அமைச்சர் போல்
அவசரப்படவில்லை. பிரித்தானியப் பிரதமர் விடுமுறையை அனுபவித்துக்
கொண்டிருந்த தனது பாராளமன்ற உறுப்பினர்களைக் குழப்பி ஒரு அவசரப் பாராளமன்ற
அமர்வை கூட்டினார். தனது கட்சியின் உறுப்பினர்களுக்கே அவர் தனது
நிலைப்பாட்டை தெளிவு படுத்தி முழுமையான ஆதரவைப் பெறவில்லை. அவரது கட்சி
உறுப்பினர்கள் 35பேர் அவரது முன்மொழிவிற்கு எதிராராக வாக்களித்தனர். ஒபாமா
செப்டம்பர் 9-ம் திகதி பாராளமன்றம் மீண்டும் கூடும் வரை காத்திருக்கிறார்.
ஆனால் தான் ஐக்கிய நாடுகளின் வேதியியக் குண்டுகள் தொடர்பான நிபுணர்கள்
குழுவின் அறிக்கைக்கு தான் காத்திருக்கப்போவதில்லை தன்னிடம் சிரியப் படைகள்
வேதியியல் குண்டுகள் பாவித்தமைக்கான ஆதரவுகள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
சிரியாமீது தாக்குதல் நடக்கும் என்கிறார். தாக்குதல் குறுகிய காலத்தில்
நடக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை என்கிறார். பிரித்தானியத்
தலைமை அமைச்சரால் பாராளமன்றத்தின் தீர்மானத்தை மீறிச் செயற்பட முடியாது.
ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்கப் பாராளமன்றம் மறுத்தாலும்
சிரியாமீது தாக்குதல் நடாத்தும் அதிகாரம் அமெரிக்க அரசமைப்பின் படி உண்டு.
இதனால் அமெரிக்க அரசுத் துறைச் செயலர் ஜோன் கெரி ஒபாமா பாராளமன்றத்தின்
அனுமதி கேட்கவில்லை. பாராளமன்றத்துடன் கலந்து ஆலோசிக்கிறார்.
ஒபாமா ஏன் அவசரப்படவில்லை
சிரியா
அமெரிக்காவின் புவிசார் கேந்திர முக்கியத்துவமோ பொருளாதார முக்கியத்துவமோ
வாய்ந்த ஒரு நாடு அல்ல. சிரியாவில் தொடரும் போரால் ஹிஸ்புல்லா
இயக்கத்தினரும் அல் கெய்தா இயக்கத்தினரும் ஆளுக்கு ஆள் அடிபட்டு
கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதை அமெரிக்கா விரும்புகிறது. 2011
ஓகஸ்ட் மாதம் பராக் ஒபாம் சிரிய அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட
வேண்டும் என்றார் அதற்கான எந்த ஒரு காத்திரமான நகர்வுகளையும் அவர்
மேற்கொள்ளவில்லை.
அமெரிக்கப் பாராளமன்றம் அனுமதிக்குமா?
அமெரிக்கப்
பாராளமன்றத்தின் மூதவை மக்களவை என இரு அவைகள் இருக்கின்றன. இதில் பராக்
ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சிக்கு மூதவையில் சிறிய பெரும்பானமையுடன்
இருக்கிறது. ஆனால் மக்களவையில் அப்படி இல்லை. அமெரிக்கப் பாராளமன்றம்
எப்படி வாக்களிக்கும் என்று எதிர்வு கூறமுடியாத நிலை இருக்கிறது.
எந்தத் திசையில் இனி சிரியாவில் காய்கள் நகர்த்தப்படும்
சிரியக்
கிளர்ச்சிக்காரர்களில் இசுலாமியவாதிகளே இப்போது வலிமையாக இருக்கிறார்கள்.
அமெரிக்க ஆதரவு சிரிய விடுதலைப் படையில் இருந்து போராளிகள் விலகி அதிக
படைக்கலன்களும் பணமும் உள்ள இசுலாமியவாதிகளின் படைகளில் இணைகிறார்கள்.
அமெரிக்கா சிரியாவில் ஒரு ஆட்சியாளர் மாற்றம் ஏற்படுத்துவது தனது நோக்கமல்ல
என அண்மைக் காலங்களாக உறுதியாகச் சொல்கிறது. ஜெனிவாவில் ஒரு சமரசப்
பேச்சுவார்த்தையும் நடந்தது, இன்னும் அப்பேச்சு வார்த்தை நடக்கவிருக்கிறது.
சிரியாவில் இருக்கும் வேதியியல் படைக்கலன்கள் அழிக்கப்படுவதை அமெரிக்கா
விரும்புகிறது. சிரியாவிடம் இருக்கும் வலிமை மிக்க விமான எதிர்ப்புப்
படைக்கலன்களை அழிக்கவும் அமெரிக்கா விரும்புகிறது.
சிரியாமீது அமெரிக்கா ஒரு மட்டுப்படுத்தப்பட்ட படைநடவடிக்கை என்ற பெயரில்
சிரியாவில் இருக்கும் வேதியியல் படைக்கலன்களையும், விமானப் படையையும்,
விமான எதிர்ப்பு படைக்கலன்களையும், தாங்கிகளையும் அழித்து சிரியப்
படைத்துறைச் சமநிலையை சிரிய அரச படைகளுக்கு சாதகமாக மாற்றும். பின்னர்
அமெரிக்க ஆதரவு கிளர்ச்சிக்காரர்களுடன் சிரிய அரசு பேச்சு வார்த்தை
நடக்கும். இதில் சிரியக் கிளர்ச்சிகாரர்களிடையே உள்ள இசுலாமியவாதக்
கிளர்ச்சிக் குழுக்கள் ஒதுக்கப்படுவர். இதனால் சிரிய அரச படைகளுக்கும்
இசுலாமியவாதக் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு
அக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அமெரிக்கப்பாராளமன்றம் மறுத்தால்?
சிரியாமீது
தாக்குதல் அமெரிக்கா தாக்குதல் செய்வதை அமெரிக்கப் பாராளமன்றம் மறுத்தால்.
ஒன்றில் ஒபாமா தன்னிச்சையாகச் செயற்படலாம். அல்லது வேறு வழிகளைக்
கையாளலாம். சிரியாவிற்கும் துருக்கிக்கும் இடையில் ஒரு முறுகல் நிலையை
உருவாக்கப்படும். துருக்கி மீது சிரியா தாக்குதல் நடாத்தியது போல் ஒரு
தாக்குதல் நடாத்தப்படும். துருக்கி ஒரு நேட்டோ கூட்டமைப்பின் உறுப்பு நாடு.
நேட்டோ நாடுகளுக்கு இடையிலான வாஷிங்டன் உடன்படிக்கையின் ஐந்தாம் பிரிவின்
பிரகாரம் எல்லா நேட்டோ நாடுகளும் தமது நாட்டில் தாக்குதல் நடத்தப்பட்டது
போல் கருதி சிரியாமீது போர் தொடுக்க வேண்டும். இந்தப் போர் தொடுப்பிற்கு
பாராளமன்ற அங்கீகாரம் தேவையில்லை.
மொத்தத்தில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு நித்திய கண்டம். ஆனால் தீர்க்க ஆயுள் அல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
No comments:
Post a Comment