Sunday 14 July 2013

மத்திய கிழக்கை நோக்கிப் படைகளை நகர்த்தும் அமெரிக்காவும் இரசியாவும்.

பதவியில் இருந்து படைத்துறையினரால் அகற்றப்பட்ட மொஹமட் மேர்சிக்கு எதிராக எகிப்தியப் பொருளாதாரத்தை சிதைத்தார் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கும்  முயற்ச்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேர்சி பதவியில் இருந்து விலக்கப்பட்டதை எதிர்த்து பல இலட்சக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் திரண்டு தொடர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

எகிப்திய மக்களின் தற்போதைய முக்கிய பிரச்சனை நாட்டில் மோசமடைந்துள்ள பொருளாதாரமாகும். எகிப்தில் முதல் முதலாக மக்களாட்சி முறைப்படி நடந்த தேர்தலில் தேர்ந்து எடுக்கப்பட்ட மொஹமட் மேர்சி அவரது பதவி ஏற்று ஓராண்டு நிறைவு நாளான ஜூன் 30-ம் திகதி மக்கள் பல இலட்சக் கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து எகிப்தியப் படைத்துறை அவரைப் ஜூலை 3-ம் திகதி பதவியில் இருந்து விலக்கி நாட்டின் அரசமைப்புச் சட்டத்தையும் இரத்துச் செயத்துடன். புதிய அதிபராக உச்ச நீதிமன்ற நீதிபதி அட்லி மன்சூரையும் புதிய தலைமை அமைச்சராக நோபல் பரிசு வென்ற அல் பராடியையும் படைத்துறையுனர் நியமித்தனர்.

புதிதாக அதிபராக நியமிக்கப்பட்ட சட்டத்தையும் நாட்டின் அரசமைப்பையும் மதித்து நடக்கக் கூடியவர் என்றும் நீதியாக அவர் நடப்பார் என்பதையும் எதிர் பார்க்கலாம். ஆனால் புதிதாக தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்ட தலைமை அமைச்சர் அல் பராடி அமெரிக்க சார்பானவர் என்றும் ஒரு தாராண்மைவாதி என்றும் கூறப்படுகிறது. இவரது நியமனம் பல இசுலாமிய மதவாதிகளை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

எகிப்தில் இப்போது மேர்சிக்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் பெரும் திரள் திரளாகக் கூடி ஆர்ப்பாட்டங்கள் செய்து வரும் அதே வேளை யார் மக்களின் ஆதரவைப் பெறுவது என்ற பெரும் போட்டியும் நிலவி வருகிறது. இதன் ஒரு அம்சமாக மேர்சி நாட்டின் பொருளாதாரத்தை பதவியில் இருந்த போது சிதைத்தார் என்ற குற்றச்சாட்டை படைத்துறையினர் முன் வைத்து அதற்காக அவர் மீது வழக்குத் தொடர யோசித்து வருகின்றனர்.

அமெரிக்கா எகிப்தியப் பிரச்சனையில் நேரடியாகத் தலையிட்டால் அது இசுலாமியத் தீவிரவாதிகளை ஆத்திரப்படுத்தும் என்பதால் அது திரைமறைவில் தனது நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் தனது நண்பர்களான சவுதி அரேபிய ஆட்சியாளர்களைக் கொண்டு எகிப்தில் தனது காய்களை நகர்த்தி வருகிறது. மத்திய கிழக்கில் சவுதி அரேபியா தலைமை தாங்குவதை கட்டார் ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.  அவர்கள் தமது ஆதரவை இசுலாமிய தீவிரவாதிகள் பக்கம் திருப்பியுள்ளனர். இது பற்றிக் காண முன்னைய பதிவிற்குச் செல்லவும்: அல் ஜசீராவும் பாலியல் போராளிகளும்

சூயஸ் கால்வாயால் எகிப்து புவிசார் கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு நாடாகும். அது தமது எதிரிகளின் கைகளுக்குப் போவதை அமெரிக்கா ஒரு போதும் விரும்பாது. அமெரிக்கா எகிப்து கொந்தளிக்கத் தொடங்கியவுடன் தனது படைகளை இத்தாலியில் குவித்தது. பின்னர் அமெரிக்கா தனது கடற்படையின் ஈரூடகப் பிரிவினரில் பலரை மத்திய கிழக்கை நோக்கி நகர்த்தியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. இது மட்டுமல்ல சிரியாவில் லத்திக்கா என்னும் இடத்தில் இருந்த ஏவுகணைத் தளத்தில் இருந்த பெருமளவிலான இரசியத் தயாரிப்பு ஏவுகணைகள் திடீரென வெடித்துச் சிதறின. இது இஸ்ரேலிய விமானப் படைகளின் தாக்குதலால் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த இரசியா தனது 160,000படையினரை மத்திய கிழக்கு நோக்கி நகர்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியா செய்யும் பெரும் படை நகர்வு இதுவாகக் கருதப்படுகிறது.130 நீண்ட தூர விமானங்கள், படைகளை நகர்த்தும் விமானங்களும் கப்பல்களும், சண்டை விமானங்கள், குண்டு வீச்சு விமானங்கள், 70 கடற்படைக் கப்பல்கள் என்பன இரசியப் படைநகர்த்தல்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிரியாவையும் எகிப்தையும் ஒட்டி பெரும் பதட்ட நிலை மத்திய கிழக்கில் உருவாகியுள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...