Wednesday, 26 June 2013

சீனாவில் கடன் நெருக்கடியா கடன் நொறுக்கலா? - Credit Crisis or Credit Crunch?

சீனாவின் பங்குச் சந்தை 25/6/2013 செவ்வாய்க் கிழமை கடந்த நாலரை ஆண்டுகளில் மோசமான தாழ் நிலைக்கு வீழ்ச்சியடைந்தது. 2013 பெப்ரவரி சீனப் பங்குச் சுட்டெண் இருந்த நிலையில் இருந்து 20% விழுக்காடு சீனப் பங்குச் சந்தையில் நிகழ்ந்துள்ளது. சீனாவில் ஒரு கடன் நெருக்கடி வரலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. சீன பங்கு விலைகள் விழ்ச்சியடைவதைத் தடுக்க சீன மத்திய வங்கியான மக்கள் வங்கி தீவிரமாக நிதிச்சந்தையில் இறங்கிச் செயற்பட்டது.

சீன மக்கள் வங்கி கடன் பிரச்சனையில் இருக்கும் நிதி நிறுவனங்களுக்கு போதிய நிதி உதவி தான் வழங்குவதாகவும் கடன் பிரச்சனை வாராமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் உறுதியளித்தமையைத் தொடர்ந்து பங்குச் சந்தை சாந்தியடைந்தது. சீன மத்திய வங்கியான மக்கள் வங்கி  8.2பில்லியன் டாலர்களை சீன வங்கிகளுக்கான நிவாரண நிதியாக ஒதுக்குவதாக அறிவித்தது.

2008இல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சினப் பொருளாதரத்தின் கடன்பளு  $9.0 trillion இல் இருந்து  $23.0 trillion இற்கு அதிகரித்தது.  நாட்டின் பொருளாதார் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் (GDP) இது 40%இல் இருந்து 200% ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் கடன் பிரச்சனையைப் பற்றி அறிவதற்கு முன்னர் சொத்துக் குமிழி, அரசவட்டி-வங்கிகளிடை வட்டி வித்தியாசம் போன்றவற்றைப்பற்றி சற்றுப் பார்க்க வேண்டும்

சொத்துக் குமிழி(Property Bubble)
ஒரு நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தியடையும் போது அங்கு வீடு, பணிமனைக் கட்டிடம் போன்ற சொத்துக்களின் விலைகள் உயரும். விலை உயரும் போது குறுகிய கால இலாபம் ஈட்டும் வியாபாரிகள் சொத்துக்களை வாங்கி விற்கத் தொடங்குவார்கள். இவர்கள் சொத்துக்களை வாங்க வரும்போது அவற்றின் விலைகளில் சடுதியான அதிகரிப்பு ஏற்படும். இதனால் சொத்துக்களை வாங்க முடியாத நிலை ஏற்படும். இதன் போது பொருளாதாரத்தின் வளர்ச்சி குன்றத் தொடங்க. சொத்து விலைகள் சடுதியாகக் குறைந்து முன்பிருந்த விலைகளிலும் பார்க்க குறைவான விலைக்கு குறையும். இப்படி சொத்து விலை அதிகம் அதிகரித்து பின்னர் மோசமாக வீழ்ச்சியடைவதை சொத்துக் குமிழி என்பர்((Property Bubble))

சொத்துக் குமிழியும்(Property Bubble)  கடன் நெருக்கடியும்
சொத்துக்கள் விலை அதிகரித்த நிலையில் அவற்றை வாங்குவதற்கு ஈட்டுக் கடன் கொடுத்த வங்கிகள் பின்னர் அச்சொத்துகளின் விலை பெரும் சரிவை அடையும் போது தமது ஈட்டுக்கடனை மிளப் பெறமுடியாத வங்கிகள் கடன் நெருக்கடிக்கு உள்ளாகும். இந்த நிலை அமெரிக்கா, ஸ்பெயின், கிரேக்கம் போன்ற நாடுகளில் நடந்தன. அமெரிக்காவின் நான்காவது பெரிய முதலீட்டு வங்கியான லீமன் பிரதர்ஸ் திவாலானது இந்தச் சொத்துக் குமிழியால்தான். சொத்துக் குமிழியால் பல வங்கிகள் நிதி நெருக்கு உள்ளாகியும் திவாலாகியும் போகும் போது கடன் நெருக்கடி ஏற்படும்.


அரச கடன் வட்டிக்கும் வங்கிகளிடைக் கடன் வட்டிக்கும் இடையிலான வித்தியாசம்.
அரச கடன் வட்டிக்கும் வங்கிகளிடைக் கடன் வட்டிக்கும் இடையிலான வித்தியாசம் கடன் நெருக்கடிக்கான ஒரு சுட்டியாகக் கருதப்படுகிறது. ஒரு அரசு தனது குறுங்காலக் கடன்களுக்கான வட்டிவீதத்தை தானே நிர்ணயிக்கும். வங்கைகள் தமக்கிடையிலான கடன் பரிமாற்றத்திற்கு என்று ஒரு வட்டி வீதத்தை வைத்திருக்கும். LIBOR எனப்படும் London Inter Bank Offer Rate உலக நிதிச் சந்தையில் ஒரு பிரபல வட்டி வீதமாகும். அமெரிக்க அரசின் குறுங்கால கடன் வட்டி வீதத்திற்கும் வங்கிகளிடையான கடன் வட்டி வீதத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம் TED spread எனப்படும். லீமன் பிரதர்ஸ் முதலீட்டு வங்கி முறிவடையும் போது இந்த TED spread மிக அதிகரித்துக் காணப்பட்டது. அமெரிக்காவின் TED spreadஐப் போல் சீனாவில் China O/N Repo rate இருக்கிறது. இந்த China O/N Repo rate 20-06-2013இலன்று மிக உயர்வாகக் காணப்பட்டது.

2008இல் லீமன் பிரதர்ஸ் வீழ்ச்சியின் போது அமெரிக்காவில் நடந்தது
இன்று சீனாவில் நடக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் என்றுமே இல்லாத அளவு China O/N Repo rate 13.1% ஆக உயர்ந்தது. இதனால் 20/06/2013 வியாழக்கிழமை சீன நிதிச் சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருந்தது. சீனப் பொருளாதாரத்தைப் பற்றிய பலத்த சந்தேகம் நிதிச் சந்தையில் ஏற்பட்டது. சீனாவின் இறுக்கமான இரகசிய நிலைப்பாட்டால் நிதிச் சந்தையில் பல வந்ததிகள் பரவத் தொடங்கின. சீனாவில் பெரும் கடன் நெருக்கடி வராமல் இருக்க சீன அரசு வேண்டு மென்றே ஒரு சிறு கடன் நெருக்கடியை உருவாக்குவதாக செய்திகள் அடிபட்டன. சீன அரச வங்கிகள் தமது கடன் நிலுவைகளை உரிய நேரத்தில் செலுத்த முடியாமல் தவிப்பதாகச் செய்திகள் எழுந்தன. ஆனால் அண்மைக்காலங்களாக சீன வங்கிகளில் அதிக கடன்கள் கொடுத்தன என்பதும் சீன வங்கிகள் அதிக கடன் பெற்றன என்பதும் உண்மை. இந்தக் கடனகள் சீனப் பொருளாதாரத்தை வளர்த்தன. ஆனால் கடன் குமிழி வெடிக்கும் நிலை இப்போது ஏற்பட்டு விட்டதா என்பதுதான் இப்போது பெரும் கேள்வியாக இருந்தது. சீனக் கடன் நெருக்கடியைத் தவிர்க்க சீன அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அதன் பொருளாதார வளர்சியின் வேகத்தைக் குறைக்கும் என நிதிச் சந்தையில் எதிர்பார்க்கப்பட்டது.  இதனால் சீனப் பங்குச் சந்தை 25/06/2013இல் பெரும் வீழ்ச்சியைக் கண்டது.

கடன் நெருக்கடியா கடன் நொறுக்கலா? - Credit Crisis or Credit Crunch?

சீன வங்கிகளிடையான கடன் பரிமாற்றங்கள் அண்மைக்காலங்களாகக் குறைந்துள்ளது. அத்துடன் வங்கிகளிடையான கடன்களுக்கன வட்டி வீதம் அதிகரித்துள்ளது. இது சீனப் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பாக்கப்படுகிறது. சீனா ஆண்டொன்றிற்கு இலட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறது. அப்படிச் செய்யாவிடில் சீனாவில் பெரும் கிளர்ச்சி ஏற்படும் என சீன ஆட்சியாளர்கள் நன்கு அறிவர். இதற்காக சரியாகத் திட்டமிட்டு கடந்த இருபது ஆண்டுகளாக சீனப் பொருளாதாரத்தை வேகமாக வளரச் செய்தனர். வளர்ச்சி குறையும் போது தம்மிடம் இருக்கும் மூன்று ரில்லியன் அமெரிக்க டாலர்கள் வெளிநாட்டு நாணயக் கையிருப்பைப் பயன்படுத்தி பல நாடுகளுக்கு பொருளதாரக் கடன், உதவி, முதலீடு என்ற பெயர்களில் தமது தொழிலாளர்களை அனுப்பி அங்கு பணி புரிய வைக்கின்றனர். 2008-ம்  ஆண்டு நிகழ்ந்த உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தமது பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து வைத்திருக்க சீன ஆட்சியாளர்கள் தமது நாட்டில் வட்டி வீதத்தைக் குறைத்து பணப் புழக்கத்தை அதிகரித்து பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்தனர். தற்போது இந்தத் திட்டத்தில் மண் விழுந்துள்ளது.  சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ளது கடன் நொறுக்கல் மட்டுமே எனக் கூறலாம். ஆனால் இந்தக் கடன் நொறுக்கல் நிச்சயம் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். HSBC வங்கி 2014இல் சீனப் பொருளாதார வளர்ச்சி 8.4%இல் இருந்து 7.4% ஆகக் குறையும் என மதிப்பிட்டுள்ளது. ஜப்பானிய வங்கி ஒன்று இனி வரும் காலங்களில் பல சீன நிதி நிறுவனங்கள் தமது கடன் மீளளைப்பைச் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்கின்றது.  பாதிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியால் பல சீன நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படலாம். இது தொடர்ந்து நடந்து கொண்டு போக இன்னும் சில ஆண்டுகளில் கடன் நெருக்கடி தோன்ற வாய்ப்புண்டு. ஆனால் சீன ஆட்சியாளர்களையோ கம்யூனிஸ் கட்சியையோ குறைத்து எடை போட முடியாது. சீன ஆட்சியாளர்கள் தமது பொருளாதாரத்தை தமது இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கிறார்கள். பாதிப்பிற்கு உள்ளாகப் போவது சீனர்கள் மட்டுமல்ல. உலகப் பொருளாதாரமே வளர முடியாமல் தவிக்கலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...