Sunday 9 June 2013

புதிய இணையவெளிப் போர்த் திட்டத்திற்கு உத்தரவிட்டார் ஒபாமா

Presidential Policy Directive 20 என்னும் தனது கொள்கை கட்டளை இலக்கம் 20 இன் படி அமெரிக்க அதிபர் ஒபாமா இணையவெளிப்போருக்கான புதிய முறைகளை வகுக்கும் படி அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளன. இணையவெளி பாதிப்பு நடவடிக்கைத் தாக்குதல் Offensive Cyber Effects Operations (OCEO) என்னும் பெயரிட்ட திட்டம் ஒன்று வகுக்குபடி கட்டளையிடப்பட்டுள்ளது என்கிறது கார்டியன் பத்திரிகை.

இணையவெளித் திருட்டு தாக்குதல்களுக்கு எதிரான பன்னாட்டுச் சட்டங்களை இயற்றுவதும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் படைத்துறை மற்றும் தொழிற்துறை இரகசியங்களையும் தொழில்நுட்பங்களையும் சீனா இணையவெளியூடாகத் திருடி வருகிறது எனத் தொடர் குற்றச் சாட்டுக்கள் வெளிவரும் நிலையில் ஒபாமா இந்த 18 பக்கங்கள் கொண்ட உத்தரவை வழங்கியுள்ளார்.

அமெரிக்க இணையவெளியில் நடக்கும் ஊடுருவல்களில்(hacking) பெரும்பாலானவை சீனாவில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன என அமெரிக்காவில் இருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை மறுக்கும் சீனா தானது நாட்டிலும் இணையவெளி ஊடுருவல்கள் பல மேற்கொள்ளப்படுகின்றன என்கிறது.



அமெரிக்காவில் சீனப் பிரதமரைச் சந்திக்க முன்னர் பராக் ஒபாமா இணையவெளி ஊடுருவல்களைப்பற்றி அவருடனான பேச்சு வார்த்தையின் போது முன்வைக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அமெரிக்கப் பாதுகாப்புத்துறை தொலைபேசி நிறுவனங்கள், சமூக இணையத் தளங்கள் போன்றவற்றின் மூலம் பாரிய தகவல் திருட்டுக்களைச் செய்வது பற்றிய செய்திகள் வெளிவந்த படியால் அது ஓரங்கட்டப்பட்டுவிட்டது. பொருளாதாரரீதியான இணையவெளித் திருட்டுக்களைப்பற்றி மட்டுமே சீன-அமெரிக்கப் பேச்சு வார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டது.

அண்மைக்காலங்களாக உலகெங்கும் பல நாடுகள் தமது இணையவெளிப் போரணிகளை அமைத்து வருகின்றன. ஈரான், வட கொரியா போன்ற நாடுகள் இணையவெளிப் போர் வலிமையை பெரிதும் அதிகரித்துள்ளன. அமெரிக்க நிதிநிறுவனங்களில் ஈரான் இணையவெளித்தாக்குதல்களை மேற்கொண்டதாக நம்பப்படுகிறது. ஈரான் இவற்றிற்கு ஈடுகொடுத்துச் சமாளிக்கும் திறனை அமெரிக்கா வளர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க தெரிவிக்கிறது.  சவுதி அரேபியாவின் இணையத் தளங்களிலும் ஈரான் தாக்குதல்கள் நடாத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா தனது மத்திய கிழக்கு நட்பு நாடுகளுடன் இணைந்து இணைய வெளிப் போர்முனைய உருவாக்கவிருக்கிறது. சீனாவும் இரசியாவும் உலக வர்த்தகத்திலும் உறவுகளிலும் பெரிதும் தங்கியிருப்பதால் அவை அமெரிக்காவுடன் இணையவெளிப்போர் தொடர்ப்பாக இணக்கப்பாடுகளைக் காணலாம். ஆனால் ஈரான், வட கொரியா போன்ற நாடுகளுடன் உடன்பாடுகள் இணக்கப்பாடுகள் போன்றவற்றை காண்பது அமெரிக்காவிற்கு சிரமமாக இருக்கிறது. ஈரான் போன்ற நாடுகள் இந்தியா, பாக்கிஸ்த்தான், பங்களாதேசம் போன்ற நாடுகளில் இருந்து கணனி நிபுணர்களை பணிக்கமர்த்தி இணைய வெளியில் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும். ஈரானிய அணு உலைகள் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து பல இணையவெளித் தாக்குதல்களை மேற்கொண்டன். இது தொடர்பான பதிவை இந்த இணைப்பில் காணலாம்: ஈரான் மீது இணையவெளித் தாக்குதல்.

உலகத்திலேயே அமெரிக்காதான் இணையவெளிப் போர் முறைமையின் முன்னோடியும் முதன்மையானதும் எனப்பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
அமெரிக்காவின் புதிய முனைப்பு பற்றி இங்கு காணலாம்: அமெரிக்காவின் புதிய இணையவெளிப் போர் வியூகம்

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி போர் முனைகளை வேறு களத்தில் உருவாக்க்யுள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...