Wednesday, 8 May 2013

ராஜபக்சவிற்கு சீனாவில் இருந்து ஓர் அபாயச்சங்கு

மஹிந்த ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆலோசனை சொல்ல என்று ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. இதுவரை அவர்களின் பல வெற்றிகளுக்கு அந்த ஆலோசனை சொல்லும் கூட்டம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. ஆனால் புவிசார் கேந்திரோபாயம் (Geo-strategic) தொடர்பாகவும் அதன் நீண்டகால அடிப்படையிலான மாற்றம் தொடர்பாகவும் ஆலோசனை சொல்வதென்பது கடினமான விடயம் என்பதை ராஜபக்ச சகோதரர்களோ அவரது ஆலோசகர்களோ உணர்ந்திருக்க வில்லை.

போர் முடிந்த பின்னர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுடன் கூட்டறிக்கை ஒன்றை விட்ட மஹிந்த அந்த அறிக்கையில் இலங்கையில் நடந்த போரின் போது நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக ஒரு நம்பகரமான விசாரணையை மேற்கொள்வதாகவும் இலங்கை இனப்பிரச்சனைக்கு இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் தீர்வுகாணப்படும் என்றார். பின்னர் மஹிந்த ராஜபக்ச தன்னைச் சந்திக்க வருபவர்களிடமும் தான் செல்லுமிடங்களிலும் பொறுப்புக் கூறல் தொடர்பான நம்பகரமான விசாரணை, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணல் பற்றி வாக்குறுதி அளிப்பதற்கு மஹிந்த ராஜ்பக்ச தயங்குவதில்லை. சில சமயங்களில் 13இற்கு மேலே செல்வேன ன்றும் கூறியதுண்டு. பின்னர் தனது அரசியல் கூட்டங்களில் அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை, இலங்கையில் போர்க்குற்றம் ஏதுவும் நடக்கவில்லை, நான் எனது எந்த ஒரு படைவீரனையும் தண்டிக்க மாட்டேன் எனச் சூளுரைப்பதுமுண்டு.

பல மனித உரிமை அமைப்புக்களினதும் மேற்கு நாடுகளினதும் வேண்டுகோள்களையும் அழுத்தங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழத்தின் தீர்மானங்களையும் இலங்கை இதுவரை வெற்றிகரமாகப் புறந்தள்ளி வருகிறது. இலங்கை சீனாவின் பக்கம் சார்ந்து போகக் கூடாது என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் மஹிந்த அரசுக்கு எதிராக கவனமாக காய்களை நகர்த்துகின்றன. இந்தச் சீனத் துருப்புச் சீட்டை ராஜபக்சேக்கள் தந்திரமாகக் கையாண்டு இந்தியாவை தமது இராசதந்திரக் கைக்கூலியாகவே மாற்றி விட்டனர். ஐநா மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவரப்பட்ட இரண்டு தீர்மானங்களின் கடுமையை ராஜபக்சேக்கள் இந்தியாவின் மூலமாக குறைத்துவிட்டனர்.

எத்தனை நாள் ராஜபக்சேக்களால் இந்த சீனப் பூச்சாண்டித் துருப்புச் சீட்டை வைத்து விளையாட முடியும் என்ற கேள்விக்கு விடை தேடினால் முதல் நினைவிற்கு வருவது 17-05-2011-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் லிபியாவிற்கு எதிரான தீர்மானம் - 1973தான். இத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விட்டபோது எதிர்த்து வாக்களிப்பவர்கள் வாக்களிக்கலான் என அவைத் தலைவர் சொன்னவுடன் ஐநா பாதுகாப்புச் சபையின் ஒளிப்பதிவுக் கருவிகள் யாவும் சீனப் பிரதிநிதியை நோக்கித் திரும்பின. அவரது கை ஒற்றை விரல் மேல் நின்றபடியும் மற்ற விரல்கள் மடித்தபடியும் மேல் எழும்பும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சீனப் பிரதிநிதியின் கை மேசையிலேயே இருந்தது. விளைவு லிபியாமீது நேட்டோப்படைகளின் விமானங்களில் இருந்தும் கடற்படைக் கப்பல்களில் இருந்து குண்டு மழை பொழியப்பட்டது. இறுதியில் மும்மர் கடாஃபி கிளர்ச்சிக்காரர்களிடம் அகப்பட்டு அடித்தும் சுட்டும் கொல்லப்பட்டார். இவையாவும் நடக்கும் என்று தெரிந்தும் தனது வர்த்தக நலன்கள் புவிசார் கேந்திரோபாயங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று தெரிந்தும் சீனா தனது இரத்து அதிகாரத்தை பாவித்து தீர்மானம்-1973ஐத்  தடுக்கவில்லை. அடுத்து சீனாவின் ஒரே ஒரு நெருங்கிய நட்பு நாடும் அதன் அயல் நாடுமான வட கொரியாவிற்கு நேற்று (07/05/2013) செய்தது இலங்கைக்கான ஓர் அபாயச் சங்காக ஒலிக்கிறது. சீன அரச வங்கியான Bank of China வட கொரியாவின் வங்கியுடனான தனது நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் பராம் ஒபாமா சீனா வட கொரியாவிற்குச் செய்யும் தனது நீண்டகால அடிப்படையிலான உதவிகளை நிறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளிற்கு ஏற்பவே இது செய்யப்பட்டது.  ஏற்கனவே பல நாட்டு வங்கிகள் வட கொரியாவுடனான தமது நடவடிக்கைக்களை நிறுத்தியுள்ள நிலையில் சீனாவைன் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வட கொரியா தொடர்பாக சீனா பன்னாட்டுச் சமூகம் எனப்படும் மேற்கு நாடுகளுடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஒத்துழைக்க தாயாராக உள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.

வட கொரியாவை அதன் போக்கில் விட்டால் அது அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் அணுக்குண்டுகளையும் உருவாக்கிவிடும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை நம்புகிறது. அதனால் வட கொரியாவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கிறது. வட கொரிய ஆட்சி கவிழ்ந்து அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான தென் கொரியாவும் வட கொரியாவும் இணைந்து ஒரு பெரும் அமெரிக்க நாடு உருவாகுவதை சீனா விரும்பவில்லை. ஆனாலும் வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்களுக்கு சீனா தடையாக இருக்க முடியாமல் இருக்கிறது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாமல் சீனாவால் இருக்க முடியாது. சீனாவிடம் கடன் வாங்காமல் அமெரிக்காவால் இருக்க முடியாது. இந்த ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலையில் மாற்றம் தற்போது இல்லை.  மத்திய கிழக்கில் சீனாவுடன் இனைந்து செயற்பட அமெரிக்க தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. அங்கு ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுச் செயற்படாமல் இருவரும் இணைந்து மத்திய கிழக்கை சுரண்டுவது எப்படி என்று முடிவெடுக்கலாம். இதே நிலை இலங்கையிலும் ஏற்படலாம்.

சீனா உலகப் பொருளாதார பெரு வல்லரசாகவும் படைத்துறைப் பெரு வல்லரசாகவும் மாறும் என்ற எதிர்பார்ப்புடன் ராஜபக்சேக்களின் ஆலோசகர்கள் கூறிய ஆலோசனைக்கேற்ப நிறைய முட்டைகளை ஒரு கூடையில் வைத்து விட்டார்கள். ஆனால் சீனா லிபியாவைக் கைவிட்டது போலவும் வட கொரியாவைக் கைவிடுவது போலவும் ராஜபக்சேக்களுக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...