பின்னடைவைச் சந்திக்கும் சிரிய சுதந்திரப்படை
சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தமது பல களமுனைத் தாக்குதல்களுக்கு ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினர்மீது பெரிதும் தங்கியிருக்கின்றனர். ஜபத் அல் நஸ்ரா இயக்கத்தினரின் பல தாக்குதல்கள் களமுனைச் சமநிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இவர்கள் கார் குண்டுத்தாக்குதல்களிலும் வல்லவர்கள். இவர்கள் கொடூரமாகப் போர் புரிகின்றனர். தம்மிடம் அகப்படும் எதிரிகளைக் கொடூரமாகக் கொல்கின்றனர். ஜபத் அல் நஸ்ரா போராளிகளுக்கு அல் கெய்தாவிடம் இருந்து பணமும் படைக்கலன்களும் கிடைக்கின்றன. இதனால் அப்போராளிகள் நன்கு கவனிக்கப்படுகின்றனர். இதனால் அமெரிக்க ஆதரவுப் போராளி இயக்கமான சுதந்திர சிரியப் படையில் இருந்து பல போராளிகள் விலகி ஜபத் அல் நஸ்ராவுடன் இணைகின்றனர்.
சியா-சுனி முசுலிம்களின் மோதல்
சிரியாவில் ஆட்சியில் இருப்பவர்கள் சியா முசுலிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனக்குழுமத்தினர். சிரியாவின் மக்கள் தொகையில் சுனி முசுலிம்களே அதிகமானவர்கள். சியா முசுலிம் ஆட்சியாளர்களுக்கு சியா முசுலிம்களைப் பெரும்பான்மையினராகவும் ஆட்சியாளர்களாகவும் கொண்ட ஈரான் உதவி வருகிறது. லெபனானில் செயற்படும் சியா இசுலாமிய தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல்லாப் போராளிகள் சிரிய அரச படைகளுடன் இணைந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராகத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர்.
எஸ்-300 பாதுகாப்பு முறைமை |
சிரிய ஆட்சியாளர் பஷார் அல் அசாத்திற்கு இரசியா பலத்த ஆதரவை வழங்கி வருகிறது. சிரியாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட இரண்டு தீர்மானங்களை இரசியா இரத்துச் செய்துவிட்டது. இரசியாவின் படைத்தளமுள்ள ஒரே ஒரு நாடு சிரியாவாகும். இரசியாவின் எஸ்-300 எனப்படும் விமான எதிர்ப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை இரசியா சிரியாவிற்கு விற்பனை செய்ய இணங்கி இருந்தது. இதை இஸ்ரேலும் அமெரிக்காவும் கடுமையாக எதிர்த்தன. இஸ்ரேல் பஷார் அல் அசாத் ஆட்சியில் இருப்பதை விரும்பினாலும் தனது விமானத் தாக்குதல் சிரியாமீது செய்ய முடியாமல் போவதை அது விரும்பவில்லை. கடந்த பன்னிரண்டு மாதங்களுக்குள் சிரியாமீது எந்த வித எதிர்த்தாக்குதலையும் எதிர் கொள்ளாமல் மூன்று தடவை இஸ்ரேல் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டது. சிரியாவிடம் இருக்கும் வலிமை மிக்க்க படைக்கலன்களோ அல்லது வேதியியல் படைக்கலன்களோ ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் கைக்களுக்குப் போகாமல் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இரசியா எஸ்-300 பாதுகாப்பு முறைமையை சிரியாவிற்கு விற்பனை செய்யாமல் இருக்க இரசியாவுடன் ஓர் இரகசிய உடன்பாட்டை எட்டியுள்ளதாகக் கருதப்படுகிறது.
ஜெனிவா சமாதானப் பேச்சு வார்த்தை மூன்று நகரப் பேச்சு வார்த்தைகளும்.
சிரிய உள்நாட்டுப் போர் தொடர்பாக தமக்குள்ளே ஓர் ஒற்றுமையை எட்ட முடியாத வல்லரசு நாடுகள் ஜெனிவாவில் ஒரு சமாதானப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்துள்ளன. அதில் பங்கேற்க சிரியா கொள்கையளவில் இணங்கியுள்ளது. ஆனால் சிரியக் கிளர்ச்சி இயக்கங்கள் ஜெனிவா பேச்சு வார்த்தையில் பங்கு பெற சில நிபந்தனைகளை விதிக்கின்றன. அதன்படி சிரிய அதிபர் பஷார் அல் அசாத் பதவி விலக வேண்டும் என்றும் மேற்கு நாடுகள் தமக்கு எதிரான படைக்கல வழங்கற் தடையை நீக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. சில சிரியக் கிளர்ச்சிப் போராளி இயக்கங்கள் பேச்சு வார்த்தையில் பங்கு பெற மறுத்துள்ளன. தாம் அசாத்தின் பிரதிநிதிகளுடன் ஒன்றாக இருக்க்ப்போவதில்லை என அவர்கள் சொகின்றனர். இன்று(27/5/2013) அமெரிக்க அரசத்துறைச் செயலரும் இரசிய வெளிநாட்டமைச்சரும் பரிஸில் சந்தித்து சிரியப் பிரச்சனை தொடர்பாக உரையாடவுள்ளனர். இது சிரியவில் மோதலில் ஈடுபட்டுள்ளவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து வரும் முயற்ச்சி தொடர்பான ஒரு பேச்சு வார்த்தையாகக் கருதப்படுகிறது. மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை சமாதானப் பேச்சு வார்த்தை என்பது அவர்களுக்குச் சாதகமாக நிலைமையை ஏற்படுத்துவதற்கான கால அவகாசத் தேடல் மட்டுமே. பேச்சு வார்த்தையையும் போர் நிறுத்தத்தையும் பயன்படுத்தி நிலைமையை அவர்கள் தமக்கு எதிரானவர்களிடை மோதல்களை உருவாக்கியும் தமக்கு ஆதரவானவர்களைப் பலப்படுத்தியும் விடுவார்கள். பாரிஸ் நகரில் அமெரிக்காவும் பேசிக்கொண்டிருக்க பிரஸ்ஸல் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிரியா தொடர்பாக ஒருமித்த கொள்கை வகுக்கப் பேச்சு வார்த்தை நடத்துகின்றன. அதே வேளை சிரியக் கிளர்சிப் போராளிக் குழுக்களை ஒன்று படுத்தும் கூட்டம் துருக்கி நகர் இஸ்த்தான்புல்லில் நடக்கிறது. இவை மூன்றும் ஜெனிவா-2 எனப்படும் சிரிய உள்நாட்டுப் போரை முடிவிற்குக் கொண்டுவரும் முயற்ச்சியான ஜெனிவா சமாதானப் பேச்சு வார்த்தையை மையப்படுத்தியதாக நடக்கின்றன.
பிராந்தியத்தை உலுக்கும் சிரியப் போர்
கடந்த வாரம் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா நிலைகளின் மீது இரு ஏவுகணைத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. இவை சிரியக் கிளர்ச்சிகாரர்களால் அசாத்துடன் இணைந்து போராடும் ஹிஸ்புல்லாமீதான பழிவாங்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. சிரியா தனக்கு எதிரான போராளிக்குழுக்களின் கைக்குப் போனால் சிரியாமிது இஸ்ரேல் படை எடுக்கும் என எச்சரித்ததுடன் கடந்த வாரமும் சிரியாவிற்கு படைக்கலன்கள் செல்வதைத் தடுக்கும் முகமாக ஒரு ஏவுகணைத்தாக்குதலை மேற்கொண்டது. துருக்கி, காட்டார், சவுதி அரேபியா போன்ற நாடுகள் அல் அசாத்தைப் பதவியில் இருந்து நீக்குவதில் உறுதியாக உள்ளன. ஈரானும் இரசியாவும் அசாத் பதவியில் இருந்து விலகினால் மத்திய கிழக்குப் படைத்துறைச் சமநிலை தமக்கு பாதகமாக மாறும் என உறுதியாக நம்புகின்றன. ஜெனிவா-2 பேச்சு வார்த்தை சரிவராத பட்சத்தில் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிகாவோ அல்லது பிரான்ஸோ படைக்கலனகளை வழங்கலாம். இது பெரும் மோதலை அரபுப் பிரதேசத்தில் உருவாக்கலாம்.
No comments:
Post a Comment