Thursday, 11 April 2013

இந்தியக் குரங்குப் பிடியும் சிங்களத்தின் அழுங்குப் பிடியும்

குரங்கைப் பிடிப்பதற்கு ஒரு தேங்காயின் பின்புறத்தில் குரங்கின் கை போகக்கூடிய அளவு துளையை செய்து அந்தத் தேங்காயை ஒரு மரத்தில் கட்டி விடுவார்கள். குரங்கு வந்து அந்த துளைக்குள் கையை விட்டு உள்ளுக்குள் உள்ளதை சுரண்டி எடுத்து கையைப் பொத்திப் பிடித்துக் கொள்ளும். பின்னர் கையை வெளியில் எடுக்க முயலும். ஆனால் கையைப் பொத்திப் பிடித்திருப்பதால் கை வெளியே வராது. குரங்கு கையை வெளியே எடுக்க எவ்வளவோ முயற்ச்சி செய்யும் ஆனால் தனது கைப்பிடியை மட்டும் விடாது. இந்தியாவும் அதன் 13வது திருத்தமும் இது போலே.

வட இந்திய முதலைகள்
தமிழ்நாட்டு மாணவர் எழுச்சி, திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணியில் இருந்து வெளியேறியமை, தமிழீழம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தக் கோரி தமிழ்நாடு சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆகியவை இலங்கையில் முதலீடு செய்த வட இந்தியர்களை ஒரு உலுப்பு உலுப்பி விட்டது. அவர்கள் இந்திய ஆட்சியாளர்கள் இலங்கைக்குச் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் படி நடந்து கொள்ளாவிட்டால் தாம் இலங்கையில் செய்த முதலீடுகளுக்கு ஆபத்து நேரும் என அவர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் வட இந்திய ஊடகங்களும் அரசியல்வாதிகளும், இந்திய அரசு இலங்கையுடனான நட்பைப் பேண வேண்டும் எனக் கூச்சலிடுகின்றன.டாடா, பஜாஜ், கோத்ரேஜ், பார்த்தி உட்படப் பல இந்திய வர்த்தகர்கள் பல கோடிக்கணக்கில் இலங்கையில் முதலிட்டுள்ளனர்.  இவர்கள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக்கழகத்தில் இந்தியா வாக்களித்தமை ஒரு தவறான செயல் என்ற பரப்புரையை கிளப்பி விட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சீனப் பூச்சாண்டியைக் காட்டுவதுடன் நிற்காமல் காஷ்மீர்  பூச்சாண்டியையும் புதிதாக எழுப்பியுள்ளனர். இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் இந்தியா கையில் எடுத்தால் காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை  மீறல்களைப் பாக்கிஸ்த்தான் கையில் எடுக்கும் என்கின்ற புரளியையும் வட இந்திய ஊடகங்கள்கள் இப்போது கிளப்பி விட்டுள்ளன.

பாவம் காங்கிரசுக் கட்சி
ஆனால் இந்திய ஆட்சியாளர்களோ பல முனைப் பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றனர். எந்த நேரமும் வரவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலை எதிர் கொள்ள இந்திய ஆட்சியாளர்களான காங்கிரசுக் கட்சியினருக்கு. டாடா, பஜாஜ், கோத்ரேஜ், பார்த்தி போன்றவர்களின் உதவி நிறையத் தேவைப்படும். இவர்களைத் திருப்திபடுத்த வேண்ட்டிய தேவை காங்கிரசுக் கட்சிக்கு உண்டு,  ஆனால் வரும் பாராளமன்றத் தேர்தலில் தமக்குப் படுதோல்வி உறுதி என்று காங்கிரசுக் கட்சிக்கு 2011இல் நடந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகளைப்பார்த்தவுடன் தெரிந்து விட்டது. ஆனாலும் தமிழ்நாட்டில் வெற்றி பெறும் மற்றக் கட்சிகளுடன் இணைந்து தமிழ்நாட்டில் ஏற்படும் தோல்வியைச் சமாளிக்கலாம் எனக் காங்கிரசு நினைத்திருந்தது. ஆனால் மணவர்களின் எழுச்சியும் அவர்கள் செய்யும் பரப்புரைகளும் இந்திய ஒருமைப்பாட்டிற்கே சவாலாக வரலாம் என்ற அச்சம் இப்போது எழுந்துள்ளது.

இலங்கையின் அழுங்குப் பிடி
இந்தியா தனது தாளத்திற்கு ஆடவேண்டும் அல்லது அதை ஆட்டிப் படைப்போம் என்பதில் ராஜபக்ச சகோதரர்கள் உறுதியாக இருக்கிறார்கள். தேவை ஏற்பட்டால் இந்தியா இலங்கைத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்குப் பயிற்ச்சி அளித்ததில் இருந்து இலங்கைப் போர்க்குற்ற விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டும் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சூளுரைத்துள்ளார். அதுமட்டுமல்ல ஐநா மனித உரிமைக்கழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஏற்ப இலங்கை அரசு நடந்து கொள்ளாது என இலங்கையின் வெளிநாட்டமைச்சர் அறிவித்துள்ளார். தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம் எனவும் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்து செய்யப்படும் இறக்குமதியை நிறுத்தும் மிரட்டலைச் சில சிங்களத் தீவிரவாதிகள் விடுத்துள்ளனர். அத்துடன் தமிழ்ப்படங்களை இறக்குமதி செய்வதை நிறுத்தி கேரளத்தில் இருந்து மலையாளப்படங்களை இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் மிரட்டுகின்றனர்.

இந்தியாவிற்குச் சங்கடம் ஏற்படுத்தும் அமெரிக்கா
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்படும் ஐக்கிய அமெரிக்கா இந்துமாக்கடலில் இந்தியாவை தனது தந்திரோபாய பங்காளியான இந்தியாவும் தன்னுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கிறது. அமெரிக்காவின் முக்கிய நோக்கம் இலங்கையில் தனக்குச் சாதகமான ஆட்சியாளர்களை உருவாக்குவதே. தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றத்தைக் கையில் எடுத்தால் அது சிங்களவர்களுக்கு அமெரிக்காமீதான ஆத்திரத்தை அதிகரிப்பது மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்சேகளின் செல்வாக்கையும் அதிகரிக்கச் செய்யும். ஐநா மனித உரிமைக்கழகத்தில் அமெரிக்கா இலங்கை தொடர்பாகப் தீர்மானம் நிறைவேற்றியதுடன் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் தான் அமெரிக்காவிற்கு எதிராகத் துணிந்து நிற்கும் ராஜபக்சவை ஆதரிப்பதில் பெருமையடைவதாகக் குறிப்பிட்டார். இதனால் அமெரிக்க இப்போது ஒரு புதிய வழியைக் கண்டு பிடித்துள்ளது. அதன்படி ஜேவிபி எனப்படும் சிங்களவர்களின் தீவிரவாத இயக்கமான மக்கள் விடுதலை முன்னணியின் படைக்கலன் ஏந்திய கிளர்ச்சியின் சிங்களப் போராளி இளைஞர்களை இலங்கைப் படையினர் கொடூரமாகக் கொல்லப்பட்டதை அமெரிக்க இப்போது ஒரு போர்க்குற்றமாக்க திரைமறைவில் முயற்ச்சி செய்கிறது. 1989-ம் ஆண்டு கோத்தபாய ராஜபக்ச இலங்கைப்படையில் லெப்டினண்ட் கேர்ணலாக இருந்த மாத்தளைப் பகுதியில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி இப்போது ராஜ்பக்சேக்களுக்கு குழிபறித்துள்ளது. மாத்தளைப் மனிதப் புதைகுழி கண்டு பிடிக்க்கப்பட்டது ஒரு தற்செயலான செயல் அல்ல. அது நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை. இனிவரும்  ஐநா மனித உரிமைக் கழகத் கூட்டத் தொடர்களில் மாத்தளை மனிதப் படுகுழி இசுலாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள்  பெரும் பங்கு வகிப்பதுடன் இதுவரை இலங்ககைக்கு ஆதரவாக இருந்த நாடுகளை இலங்கைக்கு எதிராகத் திருப்பும்.

இந்தியாவின் தன்னிலை விளக்கம்.
இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு இந்தியாவை இரண்ட்டகப் பிரித்துள்ளது. வட இந்தியாவில் இலங்கையுடன் நட்புப் பேணப்படவேண்டும் என்ற கூச்சலும் தென் இந்தியாவில் இலங்கையைப் பகை நாடாக அறிவிக்க வேண்டும் என்ற எழுச்சியும் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை பிழையானது என்ற கருத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்திய உளவுத் துறை இந்த நிலையை மாற்ற கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றது. இதன் ஒரு அம்சமாக Why India is right on Sri Lanka என்னும் கட்டுரையை Hardeep S. Puri என்னும் ஐநாவிற்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதி நிதி எழுதியுள்ளார். அவர்  இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு சரி என்கிறார். அவர் இந்தியா தமிழர்களுக்குப் பிழைவிட்டதை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் அவரது தீர்வு 13வது திருத்தத்திற்குள் மட்டும் முடங்குகிறது. மஹிந்த இந்தியா சென்றால் 13வது திருத்தம் என்பார். புது டில்லியில் இருந்து யாராவது வந்தால் 13வது திருத்தம் என்பார். பின்னர் தான் அப்படி ஒன்றும் சொல்லவில்லை என்பார். இருபத்து ஆறு ஆண்டுகள் கழிந்தும் இந்தியா இப்போதும் 13வது திருத்தத்தை குரங்குப் பிடியாக பிடித்து வைத்துள்ளது அதை வைத்து இந்தியா இலங்கைத் தமிழர்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது. இந்தியா அவ்வப்போது இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு உள்ளிருந்து வரவேண்டும் என்றும், அது எல்லா இனங்களும் ஏற்றுக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டை அவ்வப்போது விளக்கிக் கொள்ளும். சில சமயம் 13இற்கு மேல் சென்று தீர்வு காணப்பட வேண்டும் என்றும் சொல்லும். ஆனால் சில உண்மைகளை இந்தியா உணாராதது போல் பாசாங்கு செய்கிறது:
  1. 1987-ம் ஆண்டு ராஜீவ்-ஜே ஆர் ஒப்பந்தப்படி செய்யப்பட்ட இலங்கை அரசியல் அமைப்பிற்கான 13வது திருத்தம் இலங்கை இனப்பிரச்சனைக்கு ஒர் தீர்வு அல்ல
  2. 13வது திருத்தத்தை தமிழர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. சிங்களவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இருதரப்பும் தம்மீது இந்தியா இதைத் திணித்தது என்று உறுதியாகக் கூறுகிறார்கள்.
  3. 1987இற்குப் பின்னர் இலங்கையில் இயற்றப்பட்ட பல சட்டங்கள் 13வது திருத்தத்தை செல்லாக் காசாக்கி விட்டான. 
  4. இலங்கை இனப் பிரச்சனைக்கான தீர்வு உள்ளிருந்து ஒரு போதும் வர மாட்டாது.
  5. இலங்கை வாழ் ச்கல இனங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வு ஏற்படுவது சாத்தியமல்ல.
இந்த உண்மைகளை இந்தியா உணராமல் பாசாங்கு செய்வது  இலங்கை இனப்பிரச்சனையை இன்னும் சிறிது காலம் இழுத்தடித்தால் சிங்களக் குடியேற்றங்களை வடக்குக் கிழக்கில்  செய்து தமிழர்களை இலங்கையில் ஒரு மீளா அடிமைகளாக்கிவிடலாம் என்பதற்காகவே. இந்தியாவின் சதியைத் தடுக்க ஒரே வழி உலகெங்கும் வாழ் தமிழர்கல் திரண்டு எந்தியாவிற்கு எதிராகப் போராட வேண்டும்.  தமிழர்களுக்கு ஒரு இடைக்கால தன்னாட்ச சபையை விரைவில் உருவாக்க பன்னாட்டு அரங்குகளில் கடும் முயற்ச்சி எடுக்க வேண்டும்.

1 comment:

thiyaa said...

நல்ல கட்டுரை நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை பட்டவனுக்குத்தான் நோவு தெரியும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...