Saturday 23 March 2013

தமிழருக்கு சிவ் சங்கர் மேனனின் பாசக்குரலும் சீனாவின் நேசக்கரமும்

வி கே கிருஷ்ணமேனனின் 12வது நினைவுச் சொற்பொழிவில் உரையாற்றிய தமிழின விரோதியான இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் இலங்கை இனப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்பதும் தமிழர்களைத் தமது தலைவிதியைத் தாமே நிர்ணயிப்பவர்கள் என்பதில் நம்பிக்கை உள்ளவர்களாகச் செய்ய வேண்டும் என்பதும் தமிழர்கள் ஒன்று பட்ட இலங்கைக்குள் தமது உரிமைகளைச் சுதந்திரமாகத் அனுபவிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பதும் இந்தியாவின் விருப்பமாகும் என்றார்.

சிவ் சங்கர் மேனன், எம் கே நாராயணன், நிருபாம ராவ், விஜய் நம்பியார், சதீஷ் நம்பியார் ஆகியோர் இலங்கை இனக்கொலைக்கு உதவியவர்களில் முக்கியமானவர்கள் எனத் தமிழர்கள் கருதுகிறார்கள். இவர்கள் மீது போர்க்குற்ற விசாரணை செய்யப்படவேண்டும் என்றுகூட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது. 2009-ம் ஆண்டு போர் முடிந்தவுடன் சிவ் சங்கர் மேனன் இலங்கை தனது பிரச்சனையைத் தானே தீர்த்துக் கொள்ளட்டும் இதில் நாம் தலையிட மாட்டோம் என்றார்.  ஈழத் தமிழர்களுக்கு நடக்கும் அட்டூழியங்களைக் கேட்க ஆட்களில்லை என அப்போது பல தமிழின விரோதிகள் கருதியிருந்தனர். அவர்களின் வீராப்பிற்கு இப்போது தமிழ்நாட்டு மாணவர்கள் எழுச்சி பெரும் சவாலாக அமைந்ததுடன் மாணவர்களின் எழுச்சி இந்திய தேசிய "ஒருமைப்பாட்டிற்கும்" சவாலாக உருவெடுக்குமா என்ற அச்சமும் நிலவுகிறது.

இனி இருபது தலைமுறைக்கு தமிழர்கள் எந்த ஒரு எழுச்சியையும் மேற்கொள்ளாத அளவிற்கு அவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தி விட்டதாக மார் தட்டிக் கொண்டிருந்த தமிழின விரோதிகளுக்கு இப்போது மாணவர்களின் எழுச்சி நாளுக்கு நாள் பரவலடைவதை கண்டு சற்று அதிர்வடைந்துள்ளனர் என்பதை சிவ் சங்கர் மேனனின் உரை சுட்டிக் காட்டுகிறது. 2009-ம் ஆண்டிற்குப் பிறகு ஈழத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றி மௌனமாக இருந்த இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் இப்போது வாய் திறந்திருப்பது ஏன்?

"It is clearly in India's interest that Sri Lanka solves its ethnic problems in a manner which makes each community, particularly the Sri Lankan Tamils, confident that they are masters of their own fates, their own destiny and free to enjoy their rights within the framework of a united Sri Lanka,"

இதிலும் மேனன் ஒன்றுபட்ட இலங்கைக்குள் என்றபதத்தைப் பாவித்து தமிழர்களுக்காக ஒரு நாடு அமைவதற்கான தனது எதிர்ப்பையும் கோடிட்டுள்ளார். தமிழர்கள் சிங்களவர்களுடனான தமது நீண்டகாலப் பட்டறிவை வைத்து தமக்கு தனி நாடு ஒன்றே தீர்வைத் தரும் என்று தீர்மானித்துப் பல 40 ஆண்டுகளாகிவிட்டன. அந்தத் தீர்மானத்தில் இருந்து தமிழர்கள் விலகக் கூடியதாக இதுவரை எதுவும் நடக்கவில்லை.

மேனனின் பேச்சில் ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அவரின் பேச்சில் இந்தியாவிற்கு மிகவும் பிடித்த பல்லவியான 13-ம் திருத்தத்தைக் காணவில்லை. 13வது திருத்தம் சிங்களப் பேரினவாதிகள் வெறுக்கும் ஒன்று. அத்துடன் அதைச் சிதைத்து அர்தமற்றதாக்கும் சட்டங்கள் இலங்கையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

மேனன் கூறியவற்றில் இன்னும் ஒன்று முக்கியமனது:
"Equally, it is in our interest that Sri Lanka remains a close friend and does not affect our security adversely"

இணையாக இந்தியாவின் நெருங்கிய நண்பனாக இலங்கை இருக்க வேண்டும் என்பதும் இலங்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதகமாக இருக்கக் கூடாது என்பதும் இந்தியாவின் விருப்பம்.

இங்கு இணையாக என்பது இலங்கைத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் விருப்பங்களுக்கு இணையாக என்பதாகும். ஆனால் தமிழர் உரிமையும் சிங்களவர் நட்பும் ஒரு போதும் ஒன்றாகவோ அல்லது இணையாகவோ இருக்க  முடியாது. இரண்டும் mutually exclusive. அதாவது ஒன்றிருந்தால் மற்றது இருக்காது. இந்தியாவின் இலங்கை தொடர்ப்பான வெளியுறவுக் கொள்கையை சில பார்ப்பன அரசியல் விமர்சகர்கள் மட்டுமே மெச்சிக்கொண்டிருக்கின்றனர். இது அவர்களின் தமிழின விரோதத் தன்மையின் வெளிப்பாடு. ஆனால் நடு நிலை ஆய்வாளர்கள் இந்தியாவின் தமிழின விரோதப் போக்கும் சிங்களவர்களுக்குச் சார்பான நிலைப்பாடும் இந்தியாவிற்கு நன்மையளிக்காது என்று அடிக்கடி சொல்லி வருகின்றனர். ஆனால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்திய நிர்வாக மையம் இதைப் பற்றிக் கவலைப்படவில்லை. விளைவாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருகிறது.  இதை விரும்பாத அமெரிக்கா இலங்கை விவகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டது. 2009-ம் ஆண்டு நடந்த ஐநா மனித உரிமைக்கழகக் கூட்டத் தொடரில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை தொடர்பாகக் கொண்டு வந்த தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் நடுநிலை வகித்த அமெரிக்கா போரின் பின்னர் இலங்கையில் அதிகரிக்கும் சீன ஆதிக்கத்தைக் கருத்தில் கொண்டு இலங்கை தொடர்பாக தீர்மானங்களை முன் மொழியத் தொடங்கியது. 

இந்தியாவிற்குச் சீனாவின் நேசக் கரம்
22-03-2013-ம் திகதி சீனா ஒரு எல்லை ரோந்து ஒப்பந்தம் ஒன்றை இந்தியாவுடன் செய்து கொள்ளும் தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேச்த்தில் பல பிரதேசங்களுக்குள் ஊடுருவி தனதாக்கிக் கொண்ட சீனா இப்போது இந்தியாவுடன் ஒரு மோதல் உருவாகுவதைத் தடுக்க விரும்புகிறது. சீனா செய்ய விரும்பும் ஒப்பந்தப்படி ஒரு நாட்டுப் படை எல்லை ரோந்தில் ஈடுபடும் போது மற்ற நாட்டுப்படை அதைத் தொடரக்கூடாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் படைமீது மற்ற நாடு தாக்குதல் நடாத்தக் கூடாது என்பன முக்கிய அமசங்களாகும்.

சீனாவின் நேசக்கரம் ஒரு மும்முனைப் போட்டியை உருவாக்குமா?
அமெரிக்கா இந்தியாவை ஆசியப் பிரந்தியத்தில் ஒரு தந்திரோபாய பங்காளியாக்க முயல்கிறது.  ஆனால் இந்தியா அமெரிக்கப் பங்காளி தனனைச் சுரண்டக்கூடியவன் என சந்தேகிக்கிறது. சீனா இந்தியாவுடனான ஒரு மோதலை இப்போது விரும்பவில்லை. ஆனால் ஒரு நீண்ட கால அடிப்படையில் இந்தியாவை தனது பெருவிரலின் கீழ் வைத்திருக்கும் நோக்கத்துடன் தனது முத்து மாலைத் திட்டம் உட்படப் பல தந்திரோபாயங்களை வைத்துள்ளது. சீனாவின் கொள்கை மாற்றீடுகளில் (policy alternatives) தமிழ்நாட்டின் பிரிவினைவாதச் சிந்தனைக்கும் இடமுண்டு.

தமிழர்கள் ஒன்று பட்டு ஒரு அணியாகத் திரண்டால் சீன, இந்திய, அமெரிக்க ஆதிக்கப் போட்டியில் தமிழர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதை ஒட்டிய அரசியல் சிந்தனையும் சுயமரியாதையும் தமிழர்கள் மத்தியில் உள்ள அந்நிய சக்திகளை அப்புறப்படுத்தலின் முக்கியத்துவத்தி உணரும் தன்மையும் தமிழர்கள் மத்தியில் வளரவேண்டும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...