இலங்கையில் நடந்த போர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்திற்கு வரும் தீர்மானங்களின் கடுமையை இந்தியா குறைத்து வருகிறது என்பது இப்போது உறுதியாகிவிட்டது. இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கும் மானிடத்திற்கும் எதிரான குற்றத்திற்கும் நம்பகரமான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த நிபுணர்கள் குழு தெரிவித்ததுடன் இது தொடர்பாக ஒரு பன்னாட்டு மட்ட சுதந்திர விசாரணை எனவும் பரிந்துரை செய்தது. பின்னர் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் முதலில் இலங்கை அரசுக்கு ஒரு உள்ளக விசாரணைக்குச் சந்தர்ப்பம் கொடுப்போம் என்றார். பல நிர்பந்தங்களின் பின்னர் இலங்கை ஒரு கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் மீளிணக்கத்திற்குமான ஒரு ஆணைக்குழுவை போரின் போது நடந்தவை தொடர்பாக விசாரிக்க நியமித்தது. அதன் பரிந்துரைகளில் முக்கியமானவற்றை நிறைவேற்றாத இலங்கை அரசு பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுவிட்டன என்கிறது. இலங்கை அரசு ஒரு படைத்துறை விசாரணைக்குழுவை அமைத்து நாட்டில் ஒருவரும் காணாமல் போகவில்லை போரின் போது மருத்துவ மனையில் குண்டுகள் வீசப்படவில்லை என்றது. தற்போது நடந்து கொண்டிருக்கும் மனித உரிமைக் கழகத்தின் 22வது கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அறிக்கை சமர்ப்பித்த அதன் ஆணையாளர் நவநீதம் பிள்ளை இலங்கையில் நடந்ததாகக் கருதப்படும் மனித உரிமை மீறல்களுக்கு ஒரு பன்னாட்டு மட்ட விசாரணை தேவை என்றார். ஆனால் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் அந்த வாசகத்தை இந்தியா நீக்கி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டமை இப்போது சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டது. தீர்மானத்தில் பன்னாட்டு விசாரணை தேவை என்ற வாசகம் நீக்கபப்ட்டமைக்கு இந்தியாவின் அழுத்தமே காரணம் என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்திய பிரதிநிதி அனந்த பத்மநாபன் தெரிவித்துள்ளார். இதை இந்தியா மறுக்கவில்லை
இலங்கையில் பன்னாட்டு விசாரணை செய்யப் பட்டால் இலங்கையில் நடந்த போர்க்குற்றம் மற்றும் இனவழிப்பில் இந்தியாவின் பங்களிப்பு வெளிவரும் என்ற பயமே இந்தியா இலங்கையில் பன்னாட்டு விசாரணையைத் தடுக்கக் காரணம். இதற்காக இந்திய அரசு தனது பங்காளியான திமுகாவின் சொல்லையும் கேட்கவில்லை.இதை ஏற்கனவே 27-02-2012 Times of Indiaஇல் வந்த ஒரு கட்டுரை உறுதி செய்தது. அதில்:
- "ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை மனித உரிமைக்கழகத்திற்கு சமர்பித்த அறிக்கையில் இறுதிப் போரில் பன்னாட்டுச் சட்டங்கள் மீறப்பட்டது தொடர்பாக சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஒன்று வேண்டும் என்றார். இதற்காக சிறப்பு அதிகாரி இலங்கை செல்ல நியமிக்கப்பட்டால் அது இந்தியாவிற்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதுடன் ஒரு கட்டத்தில் புது டில்லியையும் தாக்கும் என இந்தியா அஞ்சுகிறது."
இலங்கையில் தமிழர்களின் சுதந்திரப் போரை அடக்கியதில் இந்தியாவின் எதிர்க்கட்சிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளன. அவையும் ராஜபக்சவை போர்க்குற்றவாளி என அறிவிக்க முடியாது என்கின்றன.
NDTV தொலைக்காட்சியில் திராவிட முன்னேற்றக் கழகம் அரசில் இருந்து வெளியேறியமை தொடர்பாக நடந்த கலந்துரையாடல்களில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் இலங்கை மனித உரிமை மீறல்களை காஷ்மீர் மனித உரிமைகளுடன் அடிக்கடி ஒப்பிட்டார். அத்துடன் இலங்கையில் நடப்பது இனக்கொலை என்றோ அல்லது போர்க்குற்றம் என்றோ இந்தியப் பாராளமன்றத்திலோ அல்லது ஒரு பன்னாட்டு அமைப்பிலோ இந்தியா தீர்மானம் கொண்டு வந்தால் அதைப்போல ஒரு தீர்மானத்தை பாக்கிஸ்த்தானும் கொண்டுவரும் என அனைவரையும் அவர் அடிக்கடி அவர் மிரட்டிக் கொண்டிருந்தார். அவரும் ஒரு தமிழின விரோதியாகவே காணப்பட்டார். ஊடகங்களில் வந்த கருத்துக்களை வைத்துப் பார்த்தால் பெரும்பாலான இந்தியர்கள் தமிழின விரோதிகளாகவே காணப்படுகின்றனர். தமிழ்நாட்டுப் பார்ப்பனக் கும்பலைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை.
No comments:
Post a Comment