Wednesday, 26 December 2012

வேற்றுலகவாசிகளை விரைவில் சந்திப்போமா?

Patrick Moore என்னும் பிரித்தானிய வானவியலாளர் இன்னும் 50 ஆண்டுகளுக்குள் நாம் வேற்றுலக வாசிகளைச் சந்திப்போம் என்று கூறியுள்ளார். வேற்றுலகவாசிகள் பூமிக்கு வருவது பற்றி பல ஹாலிவூட் திரைப்படங்கள் மட்டுமல்ல மதங்களும் சொல்லியுள்ளன. எல்லா மதங்களும் பூமி, நரக லோகம், சொர்க்கம் என்ற மூன்று உலகங்கள் இருப்பதாகக் கூறுகின்றன.

இந்து மதத்தின் படி நாரத மூன்று உலகங்களிற்கும் நினைத்த மாத்திரதிலேயே செல்லக்கூடியவர். தேவலோகம், சத்தியலோகம் எனப் பல உலகங்கள் இருப்பதாக இந்து மதம் கூறுகிறது. சூரன் ஆயிரத்தெட்டு உலகங்களை நூற்றெட்டு யுகங்கள் ஆட்சி செய்தான் என கந்த புராணம் சொல்கிறது. ஆனால் எமக்குத் தெரிந்த கடந்த கால நிகழ்வுகள் எதிலும் நாரதர் பூமிக்கு வந்தமைக்குரிய ஆதாரங்கள் இல்லை. குரானிலும் வேறு உலகத்தில் அல் பராக் என்பவர்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறதாம். கிருத்துவத்தில் தேவதைகள் வேற்று உலகில் வாழ்வதாகக் கூறப்பட்டுள்ளது.

வேற்று உலகங்களில் உயிரிங்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் நிறைய உண்டு என்கின்றனர விஞ்ஞானிகள். எமது பூமியில் நாம் வாழ்வதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள்:

1. பூமிக்குத் தேவையான வலுவை சூரியன் வழங்குகிறது.

2. நாம் ஒரு சூரியனுக்கு போதிய அளவு அண்மையில் இருக்கிறோம். சூரியனுக்கு பூமியிலும் பார்க்க அண்மையில் இருக்கும் புதன், வெள்ளி போன்ற கிரகங்களில் வெப்ப நிலை அதிகம். சூரியனுக்கு பூமியிலும் பார்க்கத் தூரமாக இருக்கும் கிரகங்களான செவ்வாய், வியாழன், சனி போன்ற கிரகங்களில் மிகவும் குளிரான கால நிலை இருக்கிறது.

3. பூமியில் போதிய அளவு நீர் இருக்கிறது. புதனிலும் வெள்ளியிலும் நீர் இருக்க முடியாத அளவிற்கு வெப்ப நிலை அதிகம். செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றில் நீர் இருந்தாலும் அது பனிக்கட்டியாகவே இருக்கும்.

4. பூமியை வியாழன் பாதுகாக்கிறது. சூரியனின் ஈர்ப்பு விசையால் விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி வரும் பாரிய ஆகாயக் கற்கள் போன்றவற்றை எமது கிரகங்களுக்குள் பெரிய கிரகமும் அதிக ஈர்ப்பு விசை கொண்ட கிரகமுமான வியாழன் தன் வசம் இழுத்து விடும். இதனால் பூமியில் பெரிய அழிவுகள் ஏற்படாமல் பாது காக்கப்படுகிறது.

எமது சூரியனைப் போலப் பல பில்லியன் சூரியன்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. அவற்றை பல கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவற்றில் பலவற்றில் பூமியைப் போன்று நல்ல வெப்பநிலையும் நீரும் உள்ள கிரகங்கள் பல இருக்கின்றன. அவற்றில் உயிரிங்கள் வாழும் சாத்தியம் உள்ளன என்கின்றனர் விஞ்ஞானிகள். நாசாவின் கெப்லர் திட்டத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளும் இந்த சாத்தியங்கள் இருப்பதை ஏற்றுக் கொள்கின்றன. நாசாவின் ஆய்வின்படி "கெப்லர்-20இ", "கெப்லர்-20F" ஆகிய இரு கிரகங்கள் முக்கியமானவை. "கெப்லர்-20இ" கிரகம் பூமியின் அளவுடன் பார்கையில் அது 0.87 மடங்கானது. "கெப்லர்-20F" கிரகம் பூமியிலும் பார்க்க 1.03 பெரியது. ஆனால் இவற்றின் வெப்ப நிலைகள் பூமியின் வெப்ப நிலையுடன் பார்க்கையில் அதிகமானது.

பூமியில் இருந்து 600 ஒளிஆண்டுகள் தொலைவிலிருக்கும் "கெப்லர்-22B" கிரகம் தனது சூரியனிலிருந்து உகந்த தொலைவில் இருக்கிறது. ஒளி ஆண்டு என்பது வான்வியலில் மிக நீண்ட தூரத்தை அளக்க பாவிக்கப்படும் அலகு. பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரம் 4ஒளி நிமிடம் எனப்படும். அதாவது ஒளி சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் பயணிக்க 4 நிமிடங்கள் எடுக்கும். ஒரு ஒளி ஆண்டு என்பது ஒரு ஆண்டில் ஒளி செல்லும் தூரம். ஒளியானது ஒரு விநாடியில் 299,792,458 கிலோ மீற்றர்கள் பயனிக்கும்."கெப்லர்-22B" கிரகத்தின் வெப்ப நிலை பூமியின் வெப்ப நிலையை ஒத்தது. இது தனது சூரியனைச் சுற்றிவர 290 நாட்கள் எடுக்கின்றது. இதில் உயிரனங்கள் வாழ்வதற்கு சாத்தியம் இருக்கிறது. "HD40307g" என்னும் கிரகம் எமது பூமியில் இருந்து 42 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இது பூமியிலும் பார்க்க ஏழு மடங்கு பெரியது. இது தனது சூரியனைச் சுற்றிவர 200நாட்கள் எடுக்கின்றன. "HD40307g"கிரகத்தில் உகந்த வெப்ப நிலையும் நீரும் இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பூமியில் வாழும் உயிரினங்களுக்கு ஒளியும் ஆக்சிஜன் எனப்படும் உயிர்வளி முக்கியமானது. ஆனால் அண்டார்டிக்காவில் பனிப்பாறைகளுக்குக் கீழ் ஆக்சிஜன் எனப்படும் உயிர்வளியும் இன்றி உயிரினங்கள் வாழ்வது கண்டறியப்பட்ட பின்னர் வேறு உலகங்களில் இப்படி நடக்கும் சாத்தியம் உண்டென நம்புகின்றனர் விஞ்ஞானிகள்.

வேற்று உலகுகளில் வாழும் உயிரனங்கள் அல்லது மக்கள் அல்லது தேவர்கள் வேறு பட்ட அறிவுநிலை அல்லது திறமை கொண்டவர்களாக இருப்பார்கள். தமயந்தியை திருமணம் செய்ய நளனின் உருவம் எடுத்து வந்த தேவர்களை தமயந்தி அவர்களில் கால்கள் நிலத்தில் படாமல் நடப்பதை வைத்துக் கொண்டும் அவர்களின் கண் இமைக்காமல் இருப்பதை வைத்துக் கொண்டும் உண்மையான நளனைக் கண்டறிந்தாள் என நளன் சரிதம் சொல்கிறது.

நாம் இப்போது இருக்கும் அறிவு நிலையில் எம்மால் எந்த ஒரு வேற்று உலக வாசிகளை சென்று சந்திக்க முடியாது. ஆனால் எம்மால் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறைமையை உருவாக்கலாம். வேற்று உலக வாசிகளில் எம்மிலும் பார்க்க திறைமையில் அதிகம் முன்னேறிவர்கள் எம்மை வந்து சந்திக்கும் சாத்தியம் உண்டு. இதைச் சொன்ன Stephen Hawking என்னும் பிரித்தானிய விஞ்ஞானி வேற்று உலகத்தில் இருந்து எமது பூமிக்கு வருவது கொலம்பஸ் அமெரிக்காவிற்குப் போனது போல் முடியலாம். கொலம்பஸ் அமெரிக்காவிற்குப் போனது அங்கு ஏற்கனவே இருந்த உள்ளூர் வாசிகளுக்கு பெரும் பாதகமாக முடிவடைந்தது என்பதைச் சுட்டிக்காட்டினார் Stephen Hawking.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...