Monday, 24 December 2012

இன மோதலாகும் சிரியக் கிளர்ச்சியும் ஐநாவின் கையாலாகத்தனமும்

அரபு வசந்தம் அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ஒரு பெரும் விடுதலைப் போராக உருவெடுத்தது. 2011இன் ஆரம்பத்தில் துனிசியாவில் ஏற்பட்ட எழுச்சியின் முக்கிய அம்சம் அது ஒரு மத சார்பற்ற எழுச்சி. அங்குள்ள கற்றவர்களாலும் தொழிற் சங்களாலும் இப்புரட்சி முன்னெடுக்கப்பட்டது. ஒரு இசுலாமிய நாட்டில் மதசார்பற்ற எழுச்சி ஏற்பட்டது பலரையும் வியக்க வைத்தது. லிபியப் புரட்சி மேற்குலக ஆதரவுடன் அரங்கேறியது. எகிப்தியப் புரட்சி திசை மாறி மதவாதிகளின் கைகளிற்குப் போய் விட்டது.

துனிசியாவில் படித்துவிட்டு வேலை இல்லாமல் மரக்கறிக் கடை வைத்து தன் குடும்பத்தைப் பாதுகாத்து வந்த இளைஞர் பெண் காவல் துறை அதிகாரியால் தாக்கப்பட்டு முகத்தில் காறி உமிழப்பட்டதால் தனக்குத் தானே தீமூட்டித் தற்கொலை செய்தார். இதனைத் தொடர்ந்து எழுந்த மல்லிகைப் புரட்சி துனிசிய ஆட்சியக் கலைத்துப் பின்னர் அப்புரட்சி எகிப்திற்குப் பரவி ஹஸ்னி முபாராக்கைப் பதவியில் இருந்து விரட்டி கடாஃபியை ஆட்சியைக் கவிழ்த்து அவரைக் கொலையும் செய்தது. 2011 மார்ச் மாதத்தில் இருந்தே சிரியாவில் மக்கள் பஷார் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து வருகிறார்கள்.

சிரியாவில் சிறுபான்மையினரின் ஆட்சி
சிரியாவில் அடக்குமுறை மூலம் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த பஷார் அல் அசாதிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களாக 2011இன் ஆரம்பப்பகுதியில் உருவானது. துனிசியாவிலோ, லிபியாவிலோ அல்லது எகிப்தில் இல்லாத ஒரு நிலை சிரியாவில் இருக்கிறது. எண்ணிக்கையளவில் சிறுபான்மையிரான அலவைற் இனக் குழுமத்தினர் அங்கு ஆட்சியில் இருக்கின்றனர். சியா முசுலிம்களின் ஒரு பிரிவினரான அலவைற் இனத்தைச் சேர்ந்தவர்கள் பல அரச உயர் பதவிகளில் இருக்கின்றனர். சிரியப் படைத்துறையும் அலவைற் இனக் குழுமத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.

பல குழுக்களாகப் பிரிந்து நிற்கும் கிளர்ச்சிக்காரர்கள்
சிரியாவில் அதிபர் பஷார் எதிரான கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் பல தரப்பட்ட இயக்கங்கள் இருக்கின்றன. அதில் சுதந்திர சிரியா படையினர் ஐக்கிய அமெரிக்க ஆதரவு இயக்கமாகக் கருதப் படுகிறது. அமெரிக்காவும் வேறும் பல மேற்கு நாடுகளும் ஜபத் அல் நஸ்ரா உட்பட சில சிரிய இயக்கங்களை பயங்கரவாத அமைப்புக்களாக அறிவிக்கப் போவதாக அறிவித்துள்ளன. சிரிய விடுதலைப் படை, சுதந்திர சிரியப்படை, சிரியத் தேசிய சபை, தேசிய ஒருங்கிணைப்புக் குழு, சிரியத் தேசப் பற்றாளர் குழு எனப் பல குழுக்களாக சிரியக் கிளர்ச்சியாளர்கள் பிரிந்து நிற்கின்றனர்.

பல இனக் குழுமங்கள்
ஆளும் அலவைற், பெரும்பான்மையினரான. சுனி முசுலிம்கள், சியா முசுலிம்கள், கிருத்தவர்கள், குர்திஷ்கள், துருக்கியர்கள், துருசுக்கள் எனப் பலதரப்பட்ட இனக்குழுமங்கள் சிரியாவில் இருக்கின்றன. நாற்பது ஆண்டுகால அடக்கு முறை ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் இருக்கையில் இந்த இனக் குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்கின்ற நிலைமை இப்போது ஏற்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சிரியா தொடர்ப்பாக 2012 டிசம்பர் 20ம் திகதி வெளியிட்ட இடைக்கால 10 பக்க அறிக்கையில் சிரியாவில் பல வேறுபட்ட இனக்குழுமங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி முற்றாக அழியும் நிலையில் அல்லது நாட்டை விட்டு முற்றாக வெளியேறும் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

 கோஃபி அனன்
ஐநா இலங்கையின் தமிழர்கள் அழியும் போது பாராமுகமாக இருந்தது போல் இல்லாமல் குறைந்தது ஒரு அறிக்கையாவது விட்டுள்ளது. சிரியா தொடர்பாக ஐநா ஒரு சிறப்பு சமாதானத் தூதுவராக முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனனை நியமித்ததூதுவராக நியமித்தது. அவர் சிரியாவில் பட்டபாடு பெரும் பாடு. கோஃபி அனன் அரபு நாட்டு மக்களினதும் ஊடகங்களினதும் கருத்துக்குப் பயப்படுகிறார் என்று சில அரசதந்திரிகள் குற்றம் சாட்டினார்கள். கோஃபி அனன் ஆபிரிக்க ஊடகங்களைத் தவிர்க்கிறார் மேற்குலக ஊடகங்களுக்கு மட்டுமே பேட்டிகள் கருத்துக்கள் தெரிவிக்கிறார் என்று ஆபிரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டின. கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அமசத் திட்டம் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்திற்கு மிகவும் தேவையான கால அவகாசத்தை வழங்கி அவரைப் பாதுகாக்க உதவும் என்றனர் அமெரிக்க அரசதந்திரிகள். நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை. கோஃபி அனன் சமர்ப்பித்த ஆறு அம்சத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஒவ்வொரு பொறியாகும் என்கிறது நியூயோர்க் ரைம்ஸ். மேலும் அது தெரிவிக்கையில் கோஃபி அனனின் திட்டம் சுதந்திர சிரியப் படையினருக்கு படைக்கலன்கள் போய்ச் சேர்வதைத் தடுக்கும் என்றது. அதனால் சிரியக் கிளர்ச்சியாளர்கள் பெரும் பின்னடைவைச் சந்திப்பினர் என்றது. இஸ்ரேலிய ஊடகம் ஒன்று பதினேழாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் அதனால் கோஃபி அனன் படுதோல்வியைச் சந்தித்தார் என்றது. ரைம்ஸ் ஒஃப் இந்தியா கோஃபி அனன் தனது சிரிய சமாதான முயற்ச்சி தோல்வியடைந்தது என்கிறார் என்றது. ஆனால் கோஃபி தனது கோரிக்கைகளுக்கு ஐநா பாதுகாப்புச் சபை செவிசாய்க்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

இன்னும் ஒரு சமாதானத் தூதுவர்.
கோஃபி அனனைத் தொடர்ந்து சிரியாவிற்கான சமாதானத் தூதுவராக அல்ஜீரிய அரசதந்திரி அல் அக்தர் பிராமி ஐநா பொதுச் செயலர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டார். அவர் பல நாடுகளுடன் தொடர்பு கொண்டும் பல நாடுகளுக்குப் பிரயாணம் செய்து கொண்டும் இருக்கிறார். ஆனால் அவர் பதவியேற்ற பின்னர் 24,000இற்கும் அதிகமான மக்கள் சிரியாவில் கொல்லப்பட்டனர். எந்த ஒரு சமாதான முன்னெடுப்பையும் செய்ய முடியாத நிலையில் அல் அக்தர் பிராமி இருக்கிறார்.

அழிவைத் தடுக்காத ஐநா
சிரியாவில் அல் அசாத்தின் வீழ்ச்சியை மத்திய கிழக்கில் தமது பிடிக்கு விழும் அடியாக சீனாவும் இரசியாவும் நம்புகின்றன. ஈரானின் ஆட்சியாளர்கள் அசாத்தின் விழ்ச்சிக்குப் பின்னர் அடுத்த இலக்கு தம்மீதானதாக இருக்கும் என நம்புகின்றனர். சிரிய உள்நாட்டுப் போர் ஒரு பன்னாட்டுப் போட்டிக் களமாகக் கருதப்படுகிறது. சிரியாவில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 44,000பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர். ஐநாவின் பாதுகாப்புச் சபையில் மேற்கு நாடுகளால் கொண்டு வரப்பட்ட இரண்டு தீர்மானங்களை இரசியாவும் சீனாவும் கூட்டாக இரத்துச் செய்தன. இப்போது ஐநாவே சிரியாவில் இனக்குழுமங்களிடை பெரும் மோதல் வெடிக்கப்போகிறது என்று சொல்கிறவேளையில் பேரழிவை யார் தடுப்பார்?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...