Thursday 13 December 2012

சிரிய அதிபர் அசாத்தின் இறுதி நகர்வுகள்

10/12/2012இலன்று சிரிய அரசின் வெளியுறவுத் துறைப் பேச்சாளர் ஜிகாத் மக்திஸ்சி பதவி விலகியது சிரிய அதிபர் பஷார் அல் அசாத்தின் ஆட்சியின் சரிவின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. அசாத்தின் படைகளின் இரு போர் விமானங்களை கிளர்ச்சிக்காரர்கள் சுட்டு வீழ்த்தியதும் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை ஐக்கிய அமெரிக்கா அங்கீகாரம் செய்தமையும் அசாத்தின் ஆட்சிக்குப் பேரிடிகளாகும்.

விமானப்படையும் ஏவுகணைகளும்
சிரிய உள்நாட்டுப் போரின் சமநிலை கிளர்ச்சிக்காரர்களிற்குச் சாதகமாக 2012 மே மாதத்தில் இருந்து மாறிவிட்டது எனப் பல படைத்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதுவரை காலமும் அல் அசாத்தின் விமானப்படைகள் போர் முனையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தக் கூடிய நிலையை கிளர்ச்சிக்காரர்கள் அடைந்துவிட்டனர். லிபியாவில் நேட்டோ சிரமப்பட்டு உருவாக்கிய விமானப் பறப்பற்ற பிரதேசம் ஒன்றை சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தாமாகவே உருவாக்கிவிட்டார்கள். கிளர்ச்சிக்காரர்களிடம் எத்தனை சாம்(Surface to Air Missile) எனப்படும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருக்கின்றன என்று சரியாகத் தெரியவில்லை.
 சிலர் 40 ஏவுகணைகள் இருக்கலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் அல் அசாத்திடம் 300 விமானங்கள் இருக்கின்றன. அலெப்பே பிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்து பின்வாங்கிச் சென்ற அசாத்தின் படையினர் மீண்டும் தம் நிலைகளைப் பலப் படுத்திக் கொண்டு மீண்டும் தாக்குதலுக்குத் தயாராகின்றனர் என்று கூறப்படுகிறது.

முக்கியமடையும் ஜோர்தான்
சிரியப் போர் உக்கிரமடையும் நிலையில் ஜோர்தான் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்கள் ஆட்சியில் இருக்கும் ஜோர்தான் தன்னை சிரிய உள்நாட்டுப் போரில் ஒரு நடுநிலையாகக் காட்டிக் கொண்டு இருந்தது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா ஒரு சிறிய படைப் பிரிவை ஜோர்தானுக்கு அனுப்பி அல் அசாத்தின் இரசாயனப் படைக்கலன்கள் பாவிப்பதைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது. ஜோர்தானில் நூறாயிரத்திற்கு மேலான சிரியர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியத் தலைநகர் டமஸ்க்கஸின் மீதான தாக்குதல்களுக்கான வழங்கல்கள் ஜோர்தானில் இருந்து இலகுவாக வழங்க முடியும். ஜோர்தானிய எல்லையில் இருந்து 100கிலோ மீற்றர் தொலைவில் டமஸ்க்கஸ் இருக்கிறது. தக்க தருணம் வரும் போது ஜோர்தான் கிளர்ச்சிக்காரர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் புனிதப் போராளிகள்
சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் மத்தியில் ஜபத் அல் நஸ்ரா எனப்படும் புனிதப்போராளிகளின் இயக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவர்களின் தற்கொலைத் தாக்குதல் பல வெற்றிகளை ஈட்டியுள்ளன. இவர்கள் மேற்குலகிற்கு எதிரானவர்கள். அல் கெய்தா இயக்கத்தினருடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படுபவர்கள். முன்னேற்பாடாக ஐக்கிய அமெரிக்கா ஜபத் அல் நஸ்ரா பயங்கரவாத அமைப்பு என பிரகடனம் செய்டு விட்டது.
Scud missiles

Scud Vs Patriot
12/12/2012இலன்று அல் அசாத்தின் சிரியப்படைகள் தலைநகர் டமஸ்க்கஸில் இருந்து சிரியாவின் வடபிராந்தியத்தை நோக்கி Scud ஏவுகணைகளை வீசியதாக பெயர் குறிப்பிடாத அமெரிக்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இரசியத் தயாரிப்பான Scud ஏவுகணைகள் 1991-ம் ஆண்டு வளைகுடாப் போரின் போது ஈராக் அதிபர் சதாம் ஹுசேய்ன் பாவித்ததில் இருந்து பிரபலமாகின. சிரிய அதிபர் பஷார் அல அசாத் Scud ஏவுகணைகளைப் பாவிக்கலாம் என எதிர்பார்த்து அவற்றை விண்ணில் வைத்தே தாக்கி அழிக்கக் கூடிய Patriot ஏவுகணைகளை ஐக்கிய அமெரிக்கா துருக்கியில் ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது. சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் விமான எதிர்ப்புப்படைகலன்களை வைத்திருப்பதால் அவர்கள் மீது விமனத் தாக்குதல் நடாத்த முடியாத இடங்களில் அல் அசாத்தின் படையினர் Scud ஏவுகணைகளை வீசுவதைத் தவிர வேறு வழியில்லை.
patriot missiles - click on it to enlarge

அமெரிக்காவின் அங்கீகாரம்
12/12/2012 இரவு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா புதிதாக உருவாக்கிய சிரிய எதிர்ப்புச் சபையை அங்கீகரிப்பதாக அறிவித்தார். 

அசாத்தின் இறுதி நகர்வுகள்
சிரிய அதிபர் அசாத்தின் இறுதி நகர்வுகள் என மூன்று நடவடிக்கைகள் உள்ளன:
1. கடுமையான விமானத் தாக்குதல்கள்
2. கண்மூடித்தனமான Scud ஏவுகணைத் தாக்குதல்கள்
3. இரசாயனக் குண்டுத் தாக்குதல்கள்.
sarin gas எனப்படும் இரசாயன வாயுக்களைக் கொண்ட குண்டுகளை சிரிய அதிபர் அசாத் தயார்படுத்தி வருகிறார் என ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது. உடனே அதற்கு எதிரான தனது  கடுமையான எச்சரிக்கையையும் வெளிவிட்டது. தமது எச்சரிக்கையைத் தொடர்ந்து அசாத் தனது இரசாயனக் குண்டுகளைத் தயார் செய்வதை நிறுத்தியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் லியோன் பாணெற்றா தெரிவித்துள்ளார். 1997இல் உலகநாடுகள் பல செய்த இரசாயனக் குண்டுகள் பாவிப்பதற்கு எதிரான உடனபடிக்கையில் சிரியா கையொப்பமிடவில்லை. சிரியா இரசாயனக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளாமல் இருக்க மேற்கு நாடுகள் வழிகாட்டல்(cruise) ஏவுகணைகளை அல்லது விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளலாம். சிரிய அதிபர் அசாத்திற்கு இரசியா வழங்கும் ஆதரவு பெரும் வெற்றிகளைத் தரவில்லை. கிளர்ச்சிக்காரர்களின் முன்னேற்றத்தை தடுக்கும் நிலையில் இரசியா இல்லை. டமஸ்க்கஸைக் கைப்பற்றும் இறுதிப் போர் எந்நேரமும் ஆரம்பிக்கலாம். அது ஒரு கொடூரமான போராக இருக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...