Monday, 5 November 2012

குழப்பம் நிறைந்த அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் முறைமை

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் எப்போது நடக்கும் என்பதற்கு ஒரு இலகுவான பதில் இல்லை. சரியான பதில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நவம்பர் மாதத்தில் வரும் முதலாவது திங்கட் கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை நடக்கும். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முதலாவது திங்கட் கிழமை 5-ம் திகதி வருவதால் 6-ம் திகதி தேர்தல் நடக்கிறது. குடியரசுத் தலைவரும் துணைத் தலைவரும் இணைந்தே போட்டியிட வேண்டும். வாக்களிக்கும் போது ஒரு கட்சியில் தலைவர் பதவிக்குப் போட்டியிருபவர்க்கும் மற்றக் கட்சியில்  துணத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவருக்கும் வாக்களிக்க முடியாது.

வேட்பாளர் போட்டி கடும் போட்டி                                                                          குடியரசுத் தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பதை கட்சிகள் தீர்மானிக்கின்றன. இரு பெரும் முதலாளித்துவக் கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. யாரை நிறுத்துவது என்பது தொடர்பான போட்டி மிகவும் கடுமையானதாக இருக்கும். தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தப் போட்டி ஆரம்பித்துவிடும்.

எல்லாமே வித்தியாசம்    
                                                                                  இலங்கையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நேரடியான வாக்களிப்புத் தேர்வு போல் அல்லாமல் ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தேர்தல் சற்று வித்தியாசமானது. அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில்  Electrol College என்ற ஒரு விநோதமான முறைமை உள்ளது. இதன் படி குறைந்த மொத்த வாக்குப் பெற்றவர் தேர்தலில் வெற்றி பெற முடியும். அத்துடன் அமெரிக்க மாநிலங்கள் ஒவ்வொன்று வித்தியாசமான தேர்தல் சட்டங்களைக் கொண்டுள்ளன. வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் தொடர்பான சட்டங்களும் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.

என்ன இந்த Electrol College                                                                                             தேர்வுக் கல்லூரி (Electrol College) என்றவுடன் இது வகுப்பறைகளையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்ட ஒரு இடம் என்று சிந்திக்க வேண்டாம், An electoral college is a set of electors who are selected to elect a candidate to a particular office அல்லது ஒரு குறித்த பதவிக்கு உரியவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்ந்தெடுக்கப்படும் தேர்வாளர்கள் குழுமம். ஒன்றுமே புரியவில்லை. என்ன குழப்பம்!!!. இதை இப்படியும் சொல்லலாம்: A body of people representing the states of the US> who formally cast votes for the election of the president and vice president. Electoral College என்பது அமெரிக்க குடியரசுத் தலைவரையும் துணைத் தலைவரையும் வாக்களித்துத் தேர்ந்தெடுப்பதற்காக மாநிலங்களை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களின் குழு. தேர்வுக் கல்லூரி முறைமை அறிமுகப் படுத்தியமைக்கு இரு காரணங்கள்சொல்லப்படுகின்றன: 1. சிறிய மாநிலங்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் வழங்குதல் 2. கல்வியறிவில்லாத வாக்காளர்களை சாரிபார்த்துக் கொள்ளல். ஐக்கிய அமெரிக்கா முழுவதும் 538 தேர்வுக் கல்லூரிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ( இதை தேர்தல் தொகுதி என்று சொல்லித் தொலைத்தால் என்ன குறைந்துவிடப்போகிறது?) அமெரிக்கப் பாரளமன்றத்தின்  இரு அவைகளிலும் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை வைத்து இந்த 538 தேர்வுக் கல்லூரியின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில்  100 மூதவை உறுப்பினர்களும் 435 மக்களவை உறுப்பினர்களும் உள்ளனர். அத்துடன் பாராளமன்ற உறுப்பினர் இல்லாத மாநிலமான வாஷிங்டனுக்கு மூன்று உறுப்பினர்கள் என மொத்தம் 538 உறுப்பினர்களுக்குமாக 538 தேர்வுக் கல்லூரிகள் இருக்கின்றன.  கலிபோர்னியாவிற்கு 54, நியூயோர்க்கிற்கு 33, ரெக்ஸசுக்கு 32, புளோரிடாவிற்கு 25 இவை பெரிய மாநிலங்களின் தேர்வுக் கல்லூரிகள். ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு 270 தேர்வுக் கல்லூரி வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். ஒரு தேர்வுக் கல்லூரிக்கு உள்ளூரைச் சேர்ந்த கட்சி உண்மையானவர்கள் அல்லது குடிசார் செயற்பாட்டாளர்கள் நிறுத்தப்படுவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஒவ்வொரு தேர்வுக் கல்லூரியிலும் யார் வெற்றி பெற்றார் என்று தீர்மானிக்கபப்டும். பின்பு இந்த தேர்வுக் கல்லூரிகளிலும் வெற்றி பெற்றவர்கள் தங்கள் வாக்குக்களை தமக்குப் பிடித்த வேட்பாளர்களுக்கு அளித்து யார் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பதைத் தீர்மானிப்பர். 1787-ம் ஆண்டு எழுதப்பட்ட அமெரிக்க அரசமைப்பு யாப்பு இப்படிக் குழப்பி விட்டது. அதை மாற்றி நேரடியாக குடியரசுத் தலைவர் தேர்ந்த் தெடுக்கப் படவேண்டும் என்ற வாதம் நீண்ட காலமாகத் தொடர்கிறது. அமெரிக்க அரசியல் யாப்பு வரையும் போது குடியரசுத் தலைவரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதா அல்லது பாராளமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதா என்ற இருதரப்பு விவாதங்களின் உடன்பாடுதான் தேர்வுக் கல்லூரி முறைமை.

மேலும் குழப்பம்                                                                                                                 தேர்வுக் கல்லூரி முறைமைக்கு மாநிலத்திற்கு மாநிலம் வேறு வேறு சட்டங்கள் உள்ளன. சில மாநிலங்களில் உதாரணத்திற்கு ஒரு மாநிலத்தில் 21 தேர்வுக் கல்லூரிகள் இருந்து அதில் ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக 15 தேர்வுக் கல்லூரிகளும் மற்றவருக்கு 6தேர்வுக் கல்லூரிகளும் கிடைத்தல்  ஒரு வேட்பாளருக்கு 15 வாக்குக்களும் மற்ற வேட்பாளருக்கு 6 வாக்குக்களும் கிடைத்தன என்று அறிவிக்கப்படும். ஆனால் எல்லா மாநிலங்களிலும் இந்த முறைமை இல்லை. சில மாநிலங்களின் சட்டப்படி அதிகப்படியான தேர்வுக் கல்லூரிகளில் வெற்றி பெற்றவருக்கு எல்லாத் தேர்வுக் கல்லூரி வாக்குகளும் கிடைத்ததாகக் சட்டம் உள்ளது. அதன் படி முழு 21 வாக்குகளும் ஒருவருக்கு மட்டுமே கிடைக்கும். இதை ''winner-take-all' system" என்பர். Maine and Nebraskaஆகிய இரு மாநிலங்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும் "winner-take-all' system" நடைமுறையில் உள்ளது. சிலதருணங்களில் இந்த தேர்வுக் கல்லூரியில் வெற்றி பெற்றவர்கள் கட்சி மாறியமையும் உண்டு. இரு வேட்பாளரும் ஒரே அளவான தேர்வுக் கல்லூரிகளின் வாக்குகளைப் பெற்றிருந்தால் யார் வெற்றி பெற்றார் என்பதை அமெரிக்கப் பாராளமன்றத்தின் மக்களவை தீர்மானிக்கும். நாடளாவிய ரீதியில் குறைந்த வாக்குகள் பெற்றவர்  இந்த தேர்வுக் கல்லூரி முறைமையால் தேர்தலில் வெற்றி பெறும் சாத்தியம் உண்டு. நவம்பரில் வரும் தேர்தலை அடுத்து டிசம்பர் மாதத்தில் வரும் முதலாவது புதன் கிழமையை அடுத்து வரும் திங்கட் கிழமை ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் அந்த மாநில தேர்வுக் கல்லூரிகள் கூடி யார் குடியரசுத் தலைவர் என்று வாக்களித்து அதை தேர்தல் அதிகாரியான மூதவைத் தலைவருக்கு அறிவிப்பர். தொடர்ந்து வரும் ஜனவரி 6-ம் திகதி முறைப்படி யார் வென்றார் என்று அறிவிக்கப்படும். அதற்கு முதல் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலம் யார் அடுத்த குடியரசுத் தலைவர் என்பதை பத்திரிகைகள் அறிவித்து விடும்.

முதலாளித்துவத்தை விட வேறு தெரிவு இல்லை
                                                  இந்த தேர்வுக் கல்லூரி முறைமையால் அமெரிக்காவில் ஒரு மூன்றாவது கட்சி தொடங்க முடியாத நிலை உள்ளது. இரு முதலாளித்துவக் கட்சிகளைத் தவிர மாற்றுக் கொள்கை கொண்டவர்களின் பிரதிநிதித்துவம் அங்கு அடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மக்களில் 62 வீதமானோர் தேர்வுக் கல்லூரி முறைமையை எதிர்க்கின்றனர்.

சிறு மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை                              California, New York,  Texas,  Florida,  Pennsylvania,  Ohio,  Illinois,  Michigan,  New Jersey, North Carolina and Virginia  ஆகிய மாநிலங்களில் மட்டும் வெற்றி பெற்று ஒருவர் குடியரசுத் தலைவராக முடியும். இம்முறை பராக் ஒபாமாவிற்கும் மிற் ரும்னிக்கும் இடையில் போட்டி நிலவுவதால் இருவரும் ஒரே அளவான தேர்வுக் கல்லூரி வாக்குகள் பெறுவதற்குச் சாத்தியம் உள்ளது.

குடியரசுக் கட்சியினரின் சதி 
                                                                                                இம் முறை தேர்தலில் கடும் போட்டி நிலவுவதால் குடியரசுக் கட்சியின ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தேர்தல் வாக்களிப்பில் கடுமையான அடையாள உறுதிப்படுத்தல் விதிகளை உருவாக்கப்படுவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதனால் வறிய மக்கள் தேர்தலில் வாக்களிக்காமல் போகலாம். பொதுவாக வறிய மக்கள் பராக் ஒபாமாவின் மக்களாட்சி(ஜனநாயக) கட்சிக்கே வாக்களிப்பதுண்டு.

ஊசலாடும் மாநிலங்களும் பணநாயகமும்
                                                       அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒஹியோ, புளோரிடா ஆகிய இரு மாநிலங்களும் ஊசலாடும் மாநிலங்களாகக் கருதப்படுகிறது. இந்த இரு மாநிலங்களை தமக்கு சாதகமாக்கினால் தங்களது வெற்றி உறுதி என்று வேட்பாளர்கள் கருதி தங்கள் கவனத்தில் பெரும் பகுதியை இவற்றில் செலுத்துகின்றனர். ஒவ்வொரு வேட்பாளருக்கும் கிடைக்கும் நிதி வெற்றிக்குக் காரணமாக அமைகிறது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அமெரிக்கத் தேர்தலில் பண முதலைகள் கட்சிகளுக்குக் கொடுக்கும் சன்மானம் தேர்தலில் கணிசமான பங்கு வகிக்கிறது. தீவிரமான விளம்பரங்களுக்கு இந்த நிதி பெரிதும் உதவும். பல பிரபலங்களை குறிப்பாக நடிகர்கள் பாடகர்களை தம் பக்கம் இழுக்க பணம் பெரிதும் உதவும். அமெரிக்காவை ஆளப் போகிறவர் யார் என்பதை பெரிதும் தீர்மானிப்பதில் தொலைக்காட்சி விவாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும் பணக்காரர்கள் ஊடகங்கள் மூலம் மக்களின் கருத்தை மாற்றி அமைப்பார்கள். இரு வேட்பாளர்களில் யார் சிறப்பாக தொலைக்காட்சி விவாதம் செய்கிறாரோ அவருக்கே வெற்றி வாய்ப்பு அதிகம். பராக் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடும் மிற் றும்னியின் மகனுக்கும் வாக்குச் சீட்டுக்கள் எண்ணும் கணனி நிறுவனத்திற்கும் வர்த்தகத் தொடர்பு உண்டு என்ற குற்றச் சாட்டும் உண்டு. மற்ற நாடுகளுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுப்புவதில் மும்மரமாக நிற்கும் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய ஐரோப்பிய நிறுவனமொன்றின் கண்காணிப்பாளர்களை அனுப்பும் கோரிக்கையை நிராகரித்து விட்டது. ரெக்ஸஸ் மாநில சட்டவாளர் நாயகம் தேர்தல் சாவடிகளின் 100 அடிக்குள் கண்காணிப்பாளர்கள் வருவது தண்டனைக்குரிய குற்றம் என்றார்.

கேலி கூத்தான மக்களாட்சி                                       
உலகின் சிறந்த மக்களாட்சி என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஐக்கிய அமெரிக்காவின் தேர்தல் முறைமையிலேயே பெரிய குறைபாடுகள். மக்களாட்சி ஸ்ரீ முதலாளிகளின் ஆட்சி.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...