உலக கடற் போக்கு வரத்தில் மூன்றி ஒரு பகுதி தென் சீனக் கடலினூடாக நடை பெறுகிறது. தென் சீனக் கடலானது கப்பல் போக்கு வரத்திற்கும் கனிம வள இருப்பிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது. அங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கிறதென்ற செய்தி அப்பிராந்தியத்தை பல நாடுகள் முட்டி மோதக்கூடிய களமாக்கிவிட்டது. தென் சீனக்கடலில் 213 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.எரிவாயு 900 ரில்லியன் கன அடி இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடலுணவு வளமும் அங்கு நிறைய உண்டு.
சரித்திரப் பின்னணி
1951-ம் ஆண்டு 48 நாடுகள் சன் பிரான்சிஸ்கோ நகரில் கூடி இரண்டாம் உலகப்போரை அதிகாரபூர்வமாக முடிவுற்கு கொண்டு வரும் சன் பிரான்சிஸ்கோ உடன் படிக்கையில் கையொப்பமிட்டன. மாநாட்டில் கலந்து கொண்ட சோவியத் ஒன்றியம், போலந்து, செக்கோஸ்லாவாக்கியா ஆகிய நாடுகள் கையொப்பமிட்டன. மாவோ சே துங் பெரும் உள்ளூர்ப் போரில் ஈடுபட்டிருந்தபடியால் சீனா கலந்து கொள்ளவில்லை. மாநாடு ஜப்பானிற்கு பாதகமானது என்று சொல்லி இந்தியா கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஜப்பான் கலந்து கொண்டு கையொப்பமிட்டது. சன் பிரன்சிஸ்க்கோ உடன்படிக்கையின் படி ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்து கொரியா, தாய்வான், பேஸ்கடோர்ஸ், ஹாங்காங், அண்டார்டிக்கா, ஸ்பிரட்லி தீவுகள், கியூரில் தீவுகள் ஆகியவை உத்தியோக பூர்வமாக விடுவிக்கப்பட்டன. தென் சீனக் கடலில் உள்ள தீவுகள் யாருக்கு சொந்தம் என்று சன் பிரான்சிஸ்கோ உடன்படிக்கையில் வரையறை செய்யவில்லை. அப்பகுதியில் பொனின் தீவுகளும் ஒக்கினாவா அமானி, மியக்கோ யேயாமா ஆகியவற்றை உள்ளடக்கிய ரியாக்கு தீவுகளும் (Bonin Islands and the Ryukyu Islands, which included Okinawa and the Amami, Miyako and Yaeyama Islands groups) அமெரிக்காவின் நம்பிக்கைப் பொறுப்பில் விடப்பட்டன.
பன் முக மோதல்கள்
இப்போது தென் சீனக்கடலில் 90% கடற்பரப்பை சீனா தன்னுடையவை என்று அடம் பிடிக்கிறது. தென் சீனக் கடலில் உள்ள தீவுகளிற்கு சீனா, ஜப்பான், பிலிப்பைன்ஸ். புரூணே, மலேசியா, வியட்னாம், கம்போடியா ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அத்தீவுகளில் உள்ள மீன்வளம், கனிம வளம் மட்டும் இந்த உரிமைப்பிரச்சனையைக் கொண்டு வரவில்லை. எண்ணெய் வளம் இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உரிமை கொண்டாடுபவர்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. 1974இலும் 1988இலுன் சீனாவும் வியட்னாமும் ஸ்பிரட்லி தீவுகளுக்காக மோதிக் கொண்டன. பிலிப்பைன்ஸ் வியட்னாமுடனும் மலேசியாவுடனும் மோதக் கூடிய நிலைமைகளும் ஏற்பட்டிருந்தன. ஜப்பானிய சீன கடற்படைக் கலன்கள் நேருக்கு நேர் மோதக் கூடிய சூழ்நிலையும் தென் சீனக் கடலில் உருவாகி உள்ளது. சீனாவும் பிலிப்பைன்ஸும் மோதக் கூடிய சூழலும் உருவாகியிருந்தது. ஜப்பான் அரசு தனது நாட்டுக் குடிமகன் ஒருவரிடம் இருந்து செங்காக்குத் தீவுகளை வாங்கியது சீனாவை ஆத்திரப்படுத்தியது. ஜப்பானிய மக்கள் சீனாவிற்கு எதிராகவும், சீனர்கள் ஜப்பானுக்கு எதிராகவும் கிளர்ச்சிகள் செய்தனர். ஸ்பிரட்லி தீவுகளில் மட்டும் 225 பில்லியன் பிப்பாய் எண்ணெய்க்கு ஈடான எரிவாயு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
படை நகர்த்தும் சீனா
தென்சீனக் கடல் தீவுகளில் ஒன்றான யொங்சிங் எனப்படும் தீவை தனது ஒரு நகரமாக அறிவித்து அங்கு தனது படையையும் அனுப்பியது. தென் சீனக் கடலில் தனது ரோந்துப் படகுளையும் நடமாடவிட்டுள்ளது. அடுத்தடுத்து சீன ஊடகங்கள் வாஷிங்டனுக்கு தென் சீனக் கடலுக்கு உரிமை கொண்டாடும் நாடுகளுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் என எச்சரிக்கைகளும் விடுக்கிறது. தென் சீனக் கடலில் சீனக் கடற்படையினர் பெரும் ஒத்திகைகளையும் நடாத்தினர். சீன அரசு தனது பலத்தை தனது மக்களுக்கு புலப்படுத்தும் முயற்ச்சிக்கு தென் சீனக்கடலைப் பாவிக்கிறது. தென் சீனக் கடலுக்கென்றே 5400 தொன் எடையுள்ள கப்பல் ஒன்றை சீனா உருவாக்கியுள்ளது.
ஒன்பது துண்டுக் கோடும் பதினொரு துண்டுக் கோடும்
ஒவ்வொரு நாடுகளும் வரைந்த எல்லைகள் |
1947-ம் ஆண்டில் இருந்த சீன ஆட்சியாளர்கள் தென் சீனக் கடலில் தங்கள் ஆதிக்கத்தை ஒரு 11துண்டுக் கோடுகள் வரைபடத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் 1949இல் சீனாவில் ஆட்சிக்கு வந்த பொதுவுடமை ஆட்சியாளரான சூ என் லாய் ஒரு 9 துண்டுக் கோடுகள் மூலம் தென் சீனக் கடலில் தமது ஆதிக்கத்தை வரையறை செய்தார். இதன்படி பரசெல்ஸ் தீவுகளும் ஸ்பிராட்லி தீவுகளும் தன்னுடையவை என்றது. பரசெல்ஸ் தீவுகள் தம்முடையவை என வியட்னாமும் தாய்வானும் சொல்கின்றன. பரசெல்ஸ் தீவுகளில் சில தமது நாடுகளுக்கு அண்மையில் இருப்பதால் அவை தம்முடையவை என்கின்றன இந்தோனேசியாவும் பிலிப்பைன்ஸும் புரூனியும், மலேசியாவும்.
தாய்வானும் சீனாவும் ஸ்பிராட்லி தீவுகளையும், பரசெல்ஸ் தீவுகளையும் தம்மிடம் ஜப்பான் கையளிக்க வேண்டும் என்கின்றன. தாய்வான் 1947இல் செய்யப்பட்ட 11 துண்டுக் கோடுகள் வரைபடத்தை ஒட்டி நிற்கிறது. சீனாவினதும் தாய்வானினதுக் கோரிக்கைகளிற்கு எந்த ஒரு பன்னாட்டு உடன்படிக்கையும் அடிப்படையாக அமையாவில்லை என வியட்னாம் வாதாடுகிறது. முழுத் தாய்வானும் தன்னுடையது என்று சீனா சொல்வதால் மேலும் சிக்கல்கள் இருக்கின்றன.
The United Nations Law of the Sea Convention
1982இல் ஐக்கிய நாடுகள் சபையால் உருவாக்கப்பட்ட கடல் மரபொழுங்குச் சட்டத்தின்படி (The United Nations Law of the Sea Convention) தென் சீனக் கடலில் உள்ள 40 தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என வியட்னாமும் மலேசியாவும் இணைந்து ஐநாவிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்தன. உடனே சீனாவும் தனது ஒன்பது துண்டுக் கோட்டு வரைபடத்தை இணைத்து ஒரு மனுவை ஐநாவிடம் சமர்ப்பித்தது. சீனாவின் மனுவை எதிர்த்து வியட்னாம் தனது அறிக்கையை ஐநாவிடம் சமர்ப்பித்தது.
பிலிப்பைன்ஸின் சமாதான முயற்ச்சி
தென் சீனக் கடல் முரண்பாட்டில் அதிக அக்கறை காட்டி வரும் பிலிப்பைன்ஸ் கடல் மரபொழுங்குச் சட்டத்தின்படி ஒரு "சுதந்திர, சமாதான, அமைதி, ஒத்துழைப்பு, நட்புறவுப் பிராந்தியம்" என்னும் முன் மொழிவை முன் வைத்துள்ளது. அதில் எவை யாருக்குச் சொந்தமானவை என்பதையும் எவை முரண்பாட்டிற்கு உட்பட்டவை என்பதையும் வரையறை செய்தது. தென் சீனக் கடற்பிராந்திய்த்தின் 90%இற்கு உரிமை கொண்டாடும் சீனா இதை ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
சீனாவின் ஒன்பது துண்டுக் கோட்டு வரைபு
சீனாவின் ஒன்பது துண்டுக் கோட்டு வரைபு சட்டபூர்வமற்றது என Dr. Hasjim Djala என்னும் பிரபல இந்தோனேசிய சட்ட நிபுணர் கூறுகிறார். ஒரு நாட்டின் கடல் ஆதிக்கம் அதன் தரையில் இருந்து மூன்று கடல் மைல்கள் வரையுமே இருக்கிறது. ஆனால் சீனா தனது கடல் எல்லை சரித்திர பூர்வமானது என்கிறது. தென் சீனக் கடல் மீது தனக்கு இருக்கும் ஆட்சியுரிமை 2000ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிறது சீனா.
மோதல் வெடிக்குமா?
சிங்கப்பூரில் செயற்படும் தென் கிழக்காசிய நாடுகளுக்கான கற்கை நிலையத்தின் இயன் ஸ்ரோறி தென் சீனக் கடலில் ஒரு மோதல் வெடிப்பதற்கான சாத்தியம் அதிகரித்து வருகிறது என்கிறார். மீன் பிடி உரிமை எண்ணெய் வள் ஆயவு உரிமைதொடர்ப்பாக் நாடுகளுக்கிடையில் மோதல் உருவாகலாம் என்கிறார் அவர். மோதல் ஒரு சிறு அளவின் நடக்கலாம் ஆனால் அது பெரும் போராக மாறும் சாத்தியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். வேறு சில நிபுணர்கள் சீனா தனது கடலாதிக்கத்தை விரிவுபடுத்த முனைகிற வேளையில் தன்னை ஒரு பிராந்தியத் தொல்லையாளனாக காட்ட விரும்பவில்லை என்கிறார்கள். அத்துடன் தென் சீனக் கடல் தொடர்பாக முரண்படும் எந்த ஒரு நாட்டின் மீதாவது தாக்குதல் நடாத்துவது சீனாவின் நீண்டகால தந்திரோபாயங்களுக்கு உகந்தது அல்ல என்றும் சொல்கின்றனர். தனது கடல் வழங்கற்பாதை பாதுகாப்பானதாகவும் அச்சுறுத்தல் இல்லாததாகவும் இருக்க சீனா விரும்புகிறது.
குழம்பிய தென் கடலில் மீன் பிடிக்கத் துடிக்கும் அமெரிக்கா
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் அமெரிக்கா தென் சீனக் கடல் மோதலைச் சும்மா விடுமா? ஏற்கனவே அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைக் கொண்ட தென்கொரியாவும் ஜப்பானும் அமெரிக்காவுடன் மேலும் நெருங்கி வருகின்றன. அவை அமெரிக்காவுடன் தொழில்நுட்ப மற்றும் உளவுத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்கின்றன. பிலிப்பைன்ஸும் தென் சீனக் கடல் முறுகலைத் தொடர்ந்து அமெரிக்காவுடனன தனது உறவைப் பலப்படுத்துகிறது. தாய்வான் தனது இருப்பிற்கு அமெரிக்காவைப் பெரிதும் நம்பி இருக்கிறது. தென் சீனக் கடல் பற்றிய முரண்பாடுகள் அமைதியாகவும் பேச்சு வார்த்தைய் மூலமாகவும் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தென் சீனக் கடல் தொடர்பாக அமெரிக்கா நடுநிலை வகிக்கிறது என்றும் 2012 செப்டம்பர் சீனா சென்ற அமெரிக்க அரசத் துறைச் செயலர் ஹிலரி கிளிண்டன் கூறினார். மற்ற நாடுகளுக்கு சென்றபோது அந்த நாடுகள் ஒன்று சேர்ந்து சீனாவுடன் பேச்சு வார்த்தை நடாத்த வேண்டும் என ஹிலரி தெரிவித்தார். ஆனால் சீனா தென் சீனக் கடல் தொடர்பாக சமபந்தப் பட்ட நாடுகளுடன் தனித் தனியாக மூடிய அறைக்குள் மட்டுமே பேச்சு வார்த்தை நடாத்தப்படும் என்றது. பன்னாட்டு தீர்ப்பாயங்கள் மூலமாகப் பேச்சு வார்த்தை நடாத்துவதற்கு சீனா மறுத்துள்ளது. அமெரிக்கா இந்த நூற்றாண்டை ஆசிய பசுபிக் நாடுகளின் நூற்றாண்டாகப் பார்க்கின்றது. உலக மக்கள் தொகையில் அரைவாசி ஆசிய பசுபிக் நாடுகளில் இருக்கின்றனர். அவர்களின் பொருளாதார வளர்ச்சி வேகமானதாக இருக்கிறது. அமெரிக்க வர்த்தகத் துறையினர் இதைப் பார்த்து நாக்கைத் தொங்கப் போடுகின்றனர். தென் சீனக் கடல் முரண்படு அமெரிக்க படைக் கலன் வர்த்தகத்தையும் அதிகரித்துள்ளது. தேய்வடையும் ஐரோப்பாவும் வளர மறுக்கும் ஆபிரிக்காவும் அமெரிக்காவின் கவனத்தை ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பால் திருப்பியுள்ளன. சீனாவின் ஆதிக்க வளர்ச்சியைத் தடுக்க தென் சீனக் கடல் முரண்பாட்டை அமெரிக்கா பயன்படுத்துகிறது. இந்தியா, ஒஸ்ரேலியா, நியுசிலாந்து ஆகியவற்றுடன் தென் சீனக் கடல் பிராந்திய நாடுகளையும் இணைத்தால் சீனாவிற்கு எதிரான ஒரு பெரும் சிலந்தி வலையை அமெரிக்காவால் உருவாக்க முடியும்.
ஆசியான் மாநாடு
17/11/2012 தொடங்கிய ஆசியான் நாடுகளின் மாநாடு சீனாவுடன் தென் சீனக் கடல் தொடர்பாக ஒரு உடன் தொலைபேசித் தொடர்பை (South China Sea hotline) ஏற்படுத்துவதன் நேடடி மோதல்களைத் தவிர்க்கலாம் என்று அறிவித்தது. ஆசியான் மாநாட்டில் சீனப் பிரதமரும் அமெரிக்க அதிபரும் கலந்து கொள்கின்றனர். தென் சீனக் கடற்பிரச்சனை முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஆசியான் நாடுகளிடை பெரும் முறுகலை உருவாக்கியுள்ளது. ஆசியான் உறுப்பு நாடான கம்போடியா சீன சார்பாகச் செயற்படுகிறது. கம்போடியாவில் இருக்கும் மக்களில் 5%மானோர் மட்டுமே சீனர்கள் ஆனால் கம்போடியப் பொருளாதாரத்தில் 80% அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பல அமைச்சர்களும் இருக்கிறார்கள்
1 comment:
nalla eluthi irukenka. porumaiya appuram padikiren.
Post a Comment