Saturday, 17 November 2012

ஹமாஸ் பிரதம மந்திரியின் பணிமனை தரைமட்டம்.

14/11/2012இல் தொடங்கி நான்காவது நாளாகத் தொடரும் காசா மீதான இஸ்ரேலின் பாதுகாப்புத் தூண் படை நடவடிக்கையில் (Operation Pillar of Defense) எட்டுச் சிறுவர்கள் உட்பட 38 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வெள்ளிக் கிழமை(16-ம் திகதி) அமெரிக்க அதிபர் ஒபாமா இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவுடன் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.

ஹமாஸின் படைத்துறைப் பிரிவான Ezzedine al-Qassam Brigadeஇன் தலைவர் அஹமட் அல் ஜபாரியை இஸ்ரேலியப்படையினர் தமது பாதுகாப்புத் தூண் படைநடவடிக்கை (Operation Pillar of Defence) மூலம் நவம்பர் 14-ம் திகதி கொன்றதில் இருந்து இருதரப்பு மோதல்  ஆரம்பமானது.

அஹமட் அல் ஜபாரி கொல்லப்படும் காணொளி:



 85 இலக்குகளில் தாக்குதல்
தெரிவு செய்யப்பட்ட பல இலக்குகள்  மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை நடாத்தியது. ஹமாஸ் பிரதம மந்திரியின் பணிமனையும் ஹமாஸின் தலமையகமாகவும் செயற்பட்ட கட்டிடத்தின் மீது இஸ்ரேலிய விமானப் படையினர் தாக்குதல் நடாத்தித் தரை மட்டமாக்கினர்.  ஹமாஸின் படைக்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்ட இடங்கள், காவற்துறைத் தலமைச் செயலகம், படைக்கலன்கள் எடுத்துச் செல்லப்படும் சுரங்கங்கள், ஆளில்லா விமானத் தயாரிப்புத் தொழிற்சாலை, ஏவுகணை செலுத்திகள் போன்ற 85 இலக்குகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் குண்டுகளை வீசின. ஹமாஸ் அதிகாரிகளில் ஒருவரின் மூன்று மாடி வீடு ஒன்றும் குண்டு வீச்சால தரை மட்டமாகியுள்ளது.
தாக்குதல்கள் நடந்த இடங்கள்

இஸ்ரேல் மீது இணைய வெளித் தாக்குதல்
இஸ்ரேலிய மத்திய வங்கி, இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சு மற்றும் பல அரசியல் கட்சிகள் ஆகியவற்றின் கணனித் தொகுதிகள் மீது இனம் தெரியாதவர்கள் ஊடுருவி பல தகவல்களை அழித்துள்ளனர்.

இஸ்ரேலின் இரும்புக் கூரை
ஹமாஸ் செலுத்திய பல ஏவுகணைகளை இஸ்ரேலின் இரும்புக் கூரை முறைமையால் வானில் வைத்து அழிக்கப்பட்டுள்ளது. இரும்புக் கூரை பற்றி அறிய முந்தைய பதிவைப் பார்க்க இங்கு சொடுக்கவும்.

இரும்புக் கூரை பற்றிய காணொளி:


ஆக்கிரமிப்புக்குத் தயாராகும் இஸ்ரேல்

காசாப் பிராந்தியத்தை ஆக்கிரமிக்க இஸ்ரேல் சகல முன்னேற்பாடுகளையும் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சு 75,000 ஒதுக்கப்பட்ட படையினரைச் சேவைக்கு (Reservists) அழைத்துள்ளது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தனது ஆலோசகர்களுடனும் படைத்துறையுடனும் ஒரு உயர் மட்டக் கூட்டம் ஒன்றை நான்கு மணித்தியாலங்களாக 16-ம் திகதி வெள்ளிக் கிழமை நடாத்தியுள்ளார். இஸ்ரேல் தனது பாதுகாப்புத் தூண் படை நடவடிக்கையின் (Operation Pillar of Defense) நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...