Thursday, 18 October 2012

உலகப் பொருளாதாரப் பிரச்சனையும் மக்கள் செய்ய வேண்டியவையும்

பல ஆண்டுகளாக வளர்ச்சியடையாமல் இருந்த உலகப் பொருளாதாரம் 1750-ம் ஆண்டு முதல் 1830-ம் ஆண்டு வரை நடந்த முதலாவது கைத்தொழிற் புரட்சியுடன் வளர்ச்சியடையத் தொடங்கியது. இது நீராவி எந்திரங்களின் கண்டுபிடிப்புடனும் தெருக்களின் அபிவிருத்தியுடனும் தொடர்புடையது. அதைத் தொடர்ந்து இரண்டாவது கைத்தொழில் புரட்சி மின்சாரம் கண்டுபிடித்த பின்னர் 1870இல் இருந்து 1900வரை நிகழ்ந்தது. மூன்றாவது கைத்தொழிற் புரட்சி கணனி, இணையம், கைப்பேசி போன்றவற்றின் உருவாக்கத்துடன் 1960இல் இருந்து நடந்து கொண்டிருக்கிறது.

உலகப் பொருளாதார மந்தம் 1930களின் நடுப்பகுதியில் இருந்து 1940களின் நடுப்பகுதிவரை ஏற்பட்டது. அந்தப் பொருளாதார மந்த நிலையில் இருந்து மீள பொருளாதார நிபுணர்கள் ஒரு வழி கண்டு பிடித்தனர். அதாவது அரசுகள் தமது செலவீனங்களை அதிகரித்து நாட்டில் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பது என்பது. அரசு செய்யும் முதலீடுகளால் நாட்டின் வேலை வாய்ப்பு அதிகரிக்க அதனால் மக்கள் கையில் பணப் புழக்கம் ஏற்பட; அதை வைத்து மக்கள் பொருட்களை வாங்க; மக்கள் பொருட்களை அதிகம் வாங்குவதால் உற்பத்தி பெருக; உற்பத்தி பெருகுவதால் மேலும் வேலை வாய்ப்பு அதிகரிக்க; மேலும் பணப்புழக்கம் அதிகரிக்க; மேலும் உற்பத்தி பெருக; இந்தச் சுழற்ச்சி தொடர; அரச வரிவருமானம் அதிகரிக்கும். இதை கீன்சியப் பொருளாதாரக் கோட்பாடு என்பர். இதனால் 1930களில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையில் இருந்து உலகம் விடுபட்டது.

மிகை பணவீக்கம்
இரண்டாம் உலகப் போரின் பின்னர் பல நாடுகள் தங்கள் நாடுகளில் பொருளாதாரத்தை அதிகரிக்க தமது செலவீனங்களைக் கூட்டின. இதை சரியாகக் கணிப்பிட்டுச் செய்யாமல் கன்னா பின்னா என்று செலவு செய்ய பல நாடுகளில் பணப்புழக்கம் அளவிற்கு மிஞ்சி அதிகரித்து பெரும் பணவீக்கத்தாலும் விலைவாசி ஏற்றத்தினாலும் பல நாடுகள் அவலப்பட்டன. இங்கு குறிப்பிட்டுச் சொல்வதானால் பிரேசிலில் 1980இல் 4 ஆக இருந்த கொள்வனவாளர் விலைச் சுட்டெண் 1990இல் 100,000,000ஆகியது. இந்த அனுபவத்தின் பின்னர் அரசு தனது செலவீனங்களை அதிகரிக்கக் கூடாது. அரசு பொருளாதார நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடக் கூடாது. அரசு நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேண்டும். அத்துடன் நாட்டில் பணவழங்கலைப் பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைக்கு இணங்க மேற் கொள்ள வேண்டும் என்றும்  பொருளாதர நிபுணர்கள் ஆலோசனை முன் வைத்தனர்.

ஐரோப்பியப் பொருளாதரம்
ஐரோப்பியப் நாடுகளிற்பல இப்போது பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி இருக்கின்றன. 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் 17 நாடுகள் யூரோ என்னும் ஒரே நாணயத்தின் கீழ் ஒன்றிணைந்தன. உலகின் பெரிய பொருளாதாரமும் வளர்ச்சியடைந்த பொருளாதாரமுமானா யூரோ வலய நாடுகள் இப்போது ஒரு ஆழமான பொருளாதார மந்தத்தில்(deep recession) சிக்கியுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரிய பொருளாதாரமான ஜேர்மனி 2013இல் 1% மட்டுமே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2010இல் ஜேர்மனியப் பொருளாதாரம் 4.2% வளர்ந்திருந்தது. யூரோ நாணய வலய நாடுகளான ஸ்பெயின், கிரேக்கம், இத்தாலி போன்றவற்றின் பொருளாதார நெருக்கடியை தாங்கிப் பிடிக்க முடியாமல் ஜேன்மனியும் பிரான்சும் தவிக்கின்றது. உலகின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடான ஜேர்மனி பல நெருக்கடிகளை எதிர் கொள்கிறது. ஜேர்மானியவில் திறமைமிக்க தொழிலாளர்கள் உண்டு. உயர்தர தொழில் நுட்பம் கொண்ட பொருளாதாரம் ஜேர்மனியினது
புலி வால் போல் கிரேக்கம்

யூரோ வலய நாடுகளைப் பொறுத்தவரை கிரேக்க நாட்டை வைத்திருப்பது புலிவாலைப் பிடித்து வைத்திருப்பதைப் போல். விட்டாலும் ஆபத்து வைத்திருப்பதும் பெரும் சுமை. தனது கடன் பளுவைப் பற்றி பொய்யான தகவல்களைக் கொடுத்து யூரோவில் இணைந்த கிரேக்கம் தனது பொருளாதார நெருக்கடியை மறைத்து வைத்திருந்தது. கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலகினால் பல ஐரோப்பிய வங்கிகள் முறிவடையும். அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரேக்க அரசு கடும் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால் பெரும் உள்நாட்டுக் கிளர்ச்சி ஏற்படும். இதனால் என்ன விலை கொடுத்தாவது கிரேக்கத்தை யூரோ நாணயக் கட்டமைப்பில் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த விலையை கொடுப்பது யார்?  பன்னாட்டு நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் பெரும் பாடுபடுகின்றன.

ஸ்பெயின் - S(pain)
உலகப் பொருளாதாரத்திற்கும் ஐரோப்பியப் பொருளாதாரத்திற்கும் பெரும் தலையிடியாக இருக்கும் அடுத்த நாடு ஸ்பெயின். 16/10/2012இலன்று எதிர்பார்த்ததிலும் பார்க்க அதிக குறுங்காலக் கடன் பத்திரங்களை எதிர்பார்த்ததிலும் குறைந்த வட்டிக்கு ஸ்பெயின் விற்றது சற்று ஆறுதலளிப்பதாக இருக்கிறது. ஐரோப்பிய மத்திய வங்கி ஸ்பெயினிற்கு சிறிது மூச்சு விடும் இடைவெளியை வாங்கிக் கொடுத்தது. ஆனால் நீண்டகாலக் கடன் பத்திரங்களை இப்படி விற்க முடியுமா என்ற கேள்வி பெரும் கேள்வியாக இருக்கிறது. ஸ்பெயின் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பலன் தர மிக நீண்ட காலம் எடுக்கும்.

ஐக்கிய இராச்சியம்-ஆடிக் காற்றிலே அம்மியே பறக்கும் போது!
உலகிலேயே கட்டுக் கோப்பான வங்கிக் கட்டமைப்பைக் கொண்ட பிரித்தானிய வங்கிகள் ஆடிக் காற்றிலே அம்மியே பறக்கும் போது என்றபதத்தையே நினைவு படுத்துகின்றன. பல பிரித்தானிய வங்கிகள் தள்ளாடுகின்றன. தனியாரிடம் சகல பொருளாதார நடவடிக்கைகளையும் ஒப்படைக்கும் கொள்கை கொண்ட தற்போதைய ஆளும் கட்சியான பழமைவாதக் கட்சி இப்போது பொருளாதார நடவடிக்கைகளில் அரச தலையீடும் பங்களிப்பும் இல்லாமல் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என்பதை உணர்ந்துள்ளது. 17/10/2012இல் வெளியான வேலையற்றோர் தொடர்பான புள்ளி விபரம் அரசுக்கு சற்று ஆறுதலளித்துள்ளது. வேலையற்றோர் தொகை 8.1% இல் இருந்து 7.9%இற்கு குறைந்துள்ளது. இதை ஐரோப்பிய ஒன்றியத்தின் 10.5%உடனும் ஸ்பெயினின் 25.1%உடனும் ஒப்பிட்டு பிரித்தானிய பெருமைப்படுகிறது. பிரித்தானியாவின் பணவீக்கமும் 2.2% ஆகக் குறைந்துள்ளது. ஆனால் பிரித்தானிய தனது கடன் பளுவை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால் அரச முதலீடுகள் மூலம் பொருளாதாரத்தை பெருமளவில் உக்குவிக்க முடியாத நிலை இருக்கிறது.

கடன் பட்டுக் கடன் அடைத்த அமெரிக்கா
அமெரிக்காவிலும் வேலையற்றோர் தொகை மற்றும் பணவீக்கம் தொடர்பான புள்ளி விபரங்கள் அரசுக்கு திருப்தியளிக்கக் கூடியதாக இருக்கின்றன. 2011இன் நடுப்பகுதியில் அமெரிக்க அரசின் கடன் கட்டுக்கடங்காமல் போனபோது அமெரிக்க அரசே ஸ்தம்பிதம் அடையும் ஆபத்து இருந்தது. பின்னர் அமெரிக்கா தனது கடனை ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. மேலும் கடன்களைப் பெற்று அமெரிக்கா தனது கடன் நிலையைச் "சீர்" செய்தது. ஆனால் வீடமைப்பு சம்பந்தமாக வந்த தகவல்களின் படி புதிய வீடமைப்புக்கள் அமெரிக்காவில் 15% அதிகரித்துள்ளது. புதிய வீடுகள் அமைக்கப்படும் போது அந்த வீட்டிற்காக செய்யும் கொள்வனவுகள் பொருளாதாரத்திற்கு ஒரு உந்துதலைக் கொடுக்கும். இதனால் அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும் என சிலர் கூறுகின்றனர். அமெரிக்கப் பொருளாதாரம் 2012இலும் 2013இலும் 2% வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது ஒபாமாவின் 4.6% எதிர்பார்ப்பிலும் குறைய என்றாலும் ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரம் 0.2% சுருக்கமடையும் என்ற பன்னாட்டு நாணய நிதியத்தின் எதிர்பார்ப்புடன் ஒப்பிடுகையில் சிறந்ததே. அது மட்டுமல்ல பிரித்தானிய ஒஸ்ரேலியா நியூசிலாந்து ஆகியவற்றின் பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி சிறந்ததாகும். ஆனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசேர்வின் தாமதமான நடவடிக்கைகளால் அமெரிக்காவின் வேலையற்றோர் தொகை மற்ற நாடுகளின் ஒப்பிடுகையில் மோசமானதே.

தள்ளாடும் வயோதிப சீனா
2007/2008இல் உலகில் நிகழ்ந்த பொருளாதார மந்த நிலையில் இருந்து மீளுவதற்கு சீனாவும் இந்தியாவும் பெரும் பங்காற்றின. 2008-ம் ஆண்டிலிருந்து மேற்கு நாடுகளின் பொருளாதாரங்கள் பெரும் பிரச்சனைகளைச் சந்தித்தபோது இந்தியாவும் சீனாவும் ஏறக்குறைய 10% பொருளாதார வளர்ச்சியை எட்டின. 2012இன் முதலாம் காலாண்டில் 8.1% ஆகக் குறைவடைந்த சீனப் பொருளாதார வளர்ச்சி இரண்டாம் காலாண்டில் 7.6% ஆகக் குறைவடைந்தமை உலகெங்கும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது. 2011இன் கடைசிக் காலாண்டில் இது 8.9%ஆக இருந்தமையும் கவனிக்கத் தக்கது. 2012இல் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா தனது வட்டி வீதத்தை 2012 ஜூனில் குறைந்தது. பின்னர் அடுத்த வட்டி வீதக் குறைப்பை ஜூலையில் செய்தமை பல பொருளியல் வல்லுனர்களை திடுக்கிட வைத்தது. வட்டிவீதக் குறைப்பு சீன மக்களை அதிக கடன் பெறச் செய்தாலும் வர்த்தகத் துறையினர் கடன் பெறுவது அதிகரிக்கவில்லை இது சீனப் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி வீதக் குறைவைச் சந்திக்கலாம் என அஞ்சவைத்துள்ளது. ஜுன் மாதம் சீனாவின் பணவீக்கம் 2.2% மட்டுமே. இது சீனப் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடிய வகையில் அளவிற்கு அதிகமாகக் குறைந்துவிட்டது என்று சொல்லலாம்.  சீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது பாதுகாப்புச் செலவீனத்தை அதிகரித்து வந்தது. வெளிநாட்டுப் பாதுகாப்பில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்த சீனா அண்மைக் காலங்களாக உள்நாட்டுப் பாதுகாப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருந்தது. பொருளாதரப் பிரச்சனையால் சமூகப் பிரச்சனை உருவாகி அது பெரும் கிளர்ச்சியாக மாறாமல் இருக்க சீனா தனது உள்நாட்டுப் பாதுகாப்பிலும் செலவீனத்தைக் கூட்டியது.  சீனா எதிர் கொள்ளும் பெரிய சவால் மக்கள் தொகைக் கட்டமைப்பே. சீனாவில் இப்போது வயோதிபர்களின் தொகை அதிகமாயும் இளைஞர்களின் தொகை குறைவாகவும் காணப்படுகிறது. இது பெரிய பொருளாதரச் சிக்கல்களுக்கு வழிவகுக்கவிருக்கிறது.

இந்தியா - இளமை இதோ இதோ...ஊழல் அதோ அதோ.
இந்தியாவின் பலம் அங்கு அதிக இளையோர் தொக கொண்ட மக்கள் தொகைக் கட்டமைப்பே. ஆனால் திறமையற்ற ஊழல் நிறைந்த இருமுனை ஆட்சி அங்கு நிலவுகிறது. ஒன்று மன் மோகன் சிங் தலைமையிலான மந்திரி சபை. மற்றது சோனியா காந்தி குடும்பம் மற்றும் அவரது ஆலோசகர்கள் கட்சிக்கு நிதி கொடுக்கும் பண முதலைகள் கொண்ட இன்னொரு கும்பல். இதனால் நாட்டின் பொருளாதரக் கொள்கை மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல் சோனியா காந்தியினது குடும்பத்தினரதும் கட்சிக்கு பண் உதவி செய்வோரின் நலன் சார்ந்ததாகவும் இருக்கிறது. இதனால் இந்தியப் பொருளாதர வளர்ச்சி வீதம் குறைவடைந்துள்ளது.

பின்னிப் பிணைந்த உலகப் பொருளாதாரம்
இப்போது உலகப் பொருளாதாரம் மிகவும் பின்னிப் பிணைந்ததாகவும் ஒரு நாட்டில் ஏற்படும் பிரச்சனை பல நாடுகளைப் பாதிப்பனவாகவும் இருக்கின்றது. அத்துடன் இப்பாதிப்பு முன்னர் எப்போதிலும் இல்லாத வகையில் உடனடிப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியனவாகவும் இருக்கின்றது. வங்கிகள் பல நாட்டுப்பொருளாதாரங்களில் தங்கியிருக்கின்றன. உலக்ப் பொருளாதார வளர்ச்சி இப்போது கடனில் பெரிதும் தங்கியிருக்கிறது. ஆனால் கடனாளிகள் அளவிற்கு மிஞ்சி விட்டனர். சீரானதும் அதிக விலை அதிகரிப்பு இல்லாததுமான எரிபொருள் விநியோகத்தில் உலக பொருளாதாரம் பெரிதும் தங்கியிருக்கிறது. இந்தப் பின்னிப் பிணைப்பும் எரிபொருள் விநியோகமும் பொருளாதார நிபுணர்களால் சரியாக திட்டமுடியாத ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. தகவல் தொழில் நுட்பத்தில் ஏற்பட்ட வேகமான வளர்ச்சி பல பொருளாதார சிந்தனைகளைக் காலாவதியாக்கிவிட்டது. ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் பாரிய சமூக கலவரங்கள் இதுவரை நிகழாமைக்கு அங்குள்ள அரசுகள் பெருமிதமடையலாம்.

தனிப்பட்டோர் செய்ய வேண்டியது
உலகப் பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளாக நெருக்கடியில் இருக்கிறது.

தனிப்பட்ட ஒருவர் செய்ய வேண்டியவை:
  1. ஆடம்பரத்தைத் தவிர்த்தல்
  2. சேமிப்பு அதிகரித்தல்
  3. தேவையான காப்புறுதிகள் செய்தல்
  4. தொழில் பெறு திறனை அதிகரித்தல். புதிய தொழிற்பயிற்சி பெறுதல்.  ஒரு எஞ்சினியர் தேவை ஏற்படின் வாடகை வாகனச் செலுத்துனராக வேலைசெய்யும்  அளவிற்குப் பயிற்ச்சி பெற்றிருத்தல் போன்றவற்றைச் செய்தல் நன்று.
  5. தனி ஒருவரின் வருமானத்தில் தங்கி இருக்கக் கூடாது. ஒரு வீட்டில் பலரும் வேலை செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
  6. அரசுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்
  7. அரச ஊழல்களைத் தட்டிக் கேட்க வேண்டும்.
  8. வரிப்பணத்தை அரசு சரியாகச் செலவு செய்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
  9. வீட்டில் உள்ள பெறுமதியான பொருட்களைப் பாதுகாத்தல்.
  10. பில்களை அவ்வப் போது செலுத்துதல்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...