இஸ்ரேலில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வேவு விமானம் லெபனானிய விடுதலை இயக்கமான ஹிஸ்புல்லாவினால் அனுப்பப்பட்டது என்று அதன் பொதுச் செயலர் செய்யது ஹசன் நஸ்ரெல்லா உறுதி செய்துள்ளார். அது இஸ்ரேலின் படை நிலைகளை படம் பிடித்து நேரடி ஒளிபரப்பாக ஹிஸ்புல்லாவிற்கு அனுப்பியது. ஈரானின் ஆதரவுடன் இயங்கும் ஹிஸ்புல்லா ஈரானிற்காகவே இந்தப் பணியைச் செய்ததாகக் கூறப்படுகிறது. உலகில் முதல் முதலாக ஒரு விடுதலைப் படை ஆளில்லா வேவு விமானத்தை இன்னொரு நாட்டுக்குள் அனுப்பி வேவு பார்த்தது இதுவே முதற் தடவை. ஈரான் தனது அணு ஆய்வு நிலைகளுக்கு எதிராக இஸ்ரேலின் படைகள் என்ன தயாரிப்பு நிலைகளைச் செய்கிறது என்று அறியவே இந்த விமானத்தை அனுப்பியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக பெரும் தாக்குதலுக்கான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதை ஈரான் இந்த ஆளில்லா வேவு விமானம் மூலம் அறிந்துள்ளது.
இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரின் இரட்டை நாடகம்.
ஈரானுக்கு எதிராக வட அமெரிக்க நாடுகளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் கொண்டுவந்துள்ள பொருளாதரத் தடைக்கு ஈரான் பணியாவிடில் ஈரானுக்கு எதிரான அமெரிக்க இஸ்ரேலிய படைகளின் தாக்குதல் நடக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இஸ்ரேலியப் பிரதமர் ஈரானுக்கு எதிரான ஒரு தாக்குதலை விரும்புகிறார். அவரைப் பொறுத்தவரை ஈரானுக்கு எதிரான தாக்குதல் காலம் கடந்து விட்டது. ஆனால் பராக் ஒபாமா நிர்வாகம் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அவசரம் காட்டவில்லை. திரை மறைவில் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சர் அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலியப் பிரதமருக்கு எதிராக இந்த விவகாரத்தில் செயற்பட்டார் என்றே கூறப்படுகிறது. இதனால் இஸ்ரேலின் ஈரான் மீதான தனித்த தாக்குதல் தடைப்பட்டது. ஈரானின் பதப்படுத்தும் யூரேனியம் இன்னும் அணுக்குண்டு தயாரிக்கும் நிலையை அடையவில்லை என அமெரிக்கா அறியும். பன்னாட்டு அணு வலு முகவரகமும் ஈரான் அணுக்குண்டு தாயாரிக்கப் போகிறது என்பதற்கு ஆதாரம் இல்லை என்கிறது.
ஈரானிய நாணயத்தின் வீழ்ச்சி
ஈரானிய நாணயமான ரியால் பெரும் மதிப்பிறக்குத்துக்கு உள்ளாகியது. ரியாலின் வீழ்ச்சியைத் தடுக்க ஈரானிய அரசோ அதன் மத்திய வங்கியான மார்க்காஜியோ ஏதும் செய்ய முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஈரான் மீதான தாக்குதல் நடக்குமா என்ற அச்சமும் பொருளாதரத் தடையும் ஈரானிய ரியாலின் மதிப்பிறக்கத்திற்குக் காரணம் என்று ஈரானிய ஆட்சியாளர்கள் சொல்லி பழியை மேற்குலகில் போடுகின்றனர். ஆனால் ஈரானியப் பாராளமன்ற சபாநாயகர் அலி லரிஜானி அரசின் தவறான கொள்கைகளே ரியாலின் வீழ்ச்சிக்கு பெரும் காரணமாகும் என்றார். ரியாலின் வீழ்ச்சிக்கான காரணத்தில் 80% இற்கு அரசே பொறுப்பு என்கிறார். 2009இல் இருந்தே ரியால் வீழ்ச்சி காணத் தொடங்கி விட்டது. பல ஈரானியப் பொருளியலாளர்கள் ரியாலின் வீழ்ச்சிக்கு அரசே காரணம் என நம்புகின்றனர் என்று அவர்களிடை மேற் கொண்ட கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. ஈரானிய அரசு பொருளாதாரத் தடைக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக வீராப்புப் பேசுவதிலேயே அதிக கவனம் செலுத்தியது. ஈரானிய ஆட்சியாளர்கள் ஈரானிய மத்திய வங்கி மார்க்காஜியின் நடவைக்கைகளில் தலையிட்டமையும் ரியாலின் வீழ்ச்சியை தடுக்க முடியாமைக்கான காரணம் எனப்படுகிறது. 2012 ஜனவரியில் ஒரு அமெரிக்க டாலருக்கு 15000 ஆக இருந்த ரியால் ஒக்டோபரில் 36000 ஆக மாறியது. 2012 ஒக்டோபர் நடுப்பகுதில் ஐரோப்பிய ஒன்றியம் ஈரான் மீதான பொருளாதாரத் தடையையும் ஈரானிடமிருந்து எரிபொருள் வாங்கும் தடையையும் இறுக்கியுள்ளது. ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் இப்போது காப்புறுதி இன்றி கடலில் மிதக்கின்றன. ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் அவற்றிற்கு காப்புறுதி எடுப்பது சிரமமாக இருக்கிறது. பெரும்பாலான கப்பல் காப்புறுதி நிறுவனங்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவை. அவை ஈரானியக் கப்பல்களுக்கு காப்புறுதி செய்ய மறுத்துவிட்டன. ஏற்கனவே பன்னாட்டுக் கொடுப்பனவு முறைமையான SWIFT(Society for Worldwide Interbank Financial Telecommunication)இல் இருந்து ஈரான் வெளியேற்றப்பட்டுள்ளது. ஈரான் சீனாவுடனும் இந்தியாவுடனும் பண்டமாற்று முறையில் வர்த்தகம் செய்கிறது. 2013 இன் முற்பகுதியில் ஈரானியப் பொருளாதாரம் உடைந்துவிடும் என்று பல மேற்குலக ராஜதந்திரிகள் நம்புகின்றனர். ஆனால் சில பொருளாதார நிபுணர்கள் ஈரானின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு முப்பது பில்லியனில் இருந்து நூற்றுப் பத்து பில்லியன் அமெரிக்க டாலர்கள்வரை இருக்கலாம். இது பற்றி சரியான தகவல் தெரியாமல் எதிர்வு கூறமுடியாது என்கின்றனர்.
தாக்குதல் நாடும் இஸ்ரேலும் ஆட்சி மாற்றம் நாடும் அமெரிக்காவும்
அணுக் குண்டு உற்பத்தி செய்யக்க் கூடிய பதப்படுத்தப்பட்ட யூரேனியம் இஸ்ரேலிடமும் ஜப்பானிடமும் உள்ளன. ஆர்ஜென்ரீனாவும் ஜேர்மனியும் பிரேசிலும் நெதர்லாந்தும் யூரேனியம் பதப்படுத்துகின்றன. ஆனால் ஈரானின் பதப்படுத்தல் மட்டும் பெரிதாக்கப்பட்டுள்ளது. யூரேனியத்தை ஈரான் பதப்படுத்துவதை சாட்டாக வைத்து ஈரான் மீது ஒரு தாக்குதலை இஸ்ரேலும் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஐக்கிய அமெரிக்காவும் விரும்புகின்றன. இதில் இரண்டும் இணைந்தும் முரண்பட்டும் கொள்கின்றன. ஈரான் பதப்படுத்துவதை நிறுத்தினாலும் ஈரானிற்கு எதிரான பொருளாதரத் தடை தொடரும் என்பதை ஈரானிய ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர்.
சிரியாவும் ஈரானும்
சிரியாவில் பஷார் அல் அசாத் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் ஈரானில் மஹ்மூத் அகமதிநிஜாத்தின் ஆட்சியும் விரைவில் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. சிரியாவில் ஆட்சி கவிழாமல் இருப்பதில் ஈரானும் இரசியாவும் அதிக கவனம் செலுத்துகிறது. சிரியாவில் ஒரு அமெரிக்க சார்பு அரசு அமைந்தால் அது வட அமெரிக்காவில் மேற்குலக ஆதிக்கத்தை அதிகரித்துவிடும் என்று இரசியாவும் சீனாவும் நம்புகின்றன. அதனால் சிரியாவில் பெரும் இரத்தக் களரி நடக்கிறது. ஈரானுக்கு எதிராக எடுக்கப் படவேண்டிய நடவடிக்கைகளில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றுபடுவதும் முரண்படுவது போல் சிரியாவிற்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பதில் அமெரிக்காவும் துருக்கியும் முரண்படுகின்றன. சிரியாவில் இருந்து துருக்கிக்குள் வீசப்பட்ட எறிகணைகள் இரு நாடுகளுக்கு மிடையிலான முறுகலை அதிகரித்தது. முன்பு ஈராக்கில் உள்ள குர்திஷ் இன மக்கள் மீது எல்லை தாண்டித் தாக்குதல் நடாத்துவதற்காக துருக்கி தனது நாட்டின் மீது தானே ஏவுகணையை வீசிவிட்டு அது குர்திஷ் கிளர்ச்சிக்காரர்களின் வேலை எனக் குற்றம் சாட்டி ஈராக் எல்லை தாண்டிச் சென்று குர்திஷ் மக்களைத் தாக்கியது என்று முன்பு செய்திகள் வெளிவந்தன. சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிராக 18 மாதங்களாக நடக்கும் போராட்டத்தால் பாதிப்படைந்த பல்லாயிரம் சிரியர்கள் துருக்கி நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர். இது துருக்கிக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ளது. இதனால் தனது படைகளை சிரியாவிற்குள் அனுப்பி அங்கு ஒரு பாதுகாப்பு வலயத்தை உருவாக்கி தனது நாட்டுக்குள் சிரிய மக்கள் வராமல் பார்த்துக்கொள்ள துருக்கி திட்டமிட்டுள்ளது. சிரிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து துருக்கிய பராளமன்றம் கூட்டப்பட்டு சிரியாவிற்குள் எல்லை தாண்டிப் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் ஆணையை துருக்கிய அரசு பெற்றுள்ளது. சிரியா மீது தாக்குதல் செய்ய ஐக்கிய நாடுகள் சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வர முடியாது. ஏற்கனவே கொண்டுவரப்பட்ட இரு தீர்மானங்களை இரசியாவும் சீனாவும் தமது இரத்து அதிகாரத்தை(வீட்டோ) பாவித்து இரத்து செய்து விட்டன. சிரியாமீதான படை நடவடிக்கையை அமெரிக்க அரசு அதன் அதிபர் தேர்தலுக்குப் பின்னர் வரை ஒத்தி வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்திருந்தன. நவம்பர் ஆறாம் திகதி அமெரிக்கத் தேர்ந்தல் முடிவடைந்த பின்னர் சிரியாமீது ஒரு படை நடவடிக்கை மேற் கொள்ள அமெரிக்காவிற்கும் மற்ற நேட்டோ நாடுகளுக்கும் ஒரு சாட்டு தேவை. நேட்டோ நாட்டின் ஓர் உறுப்பினரான துருக்கிக்கும் சிரியாவிற்கும் மோதல் என்பதை சாட்டாக வைத்து சிரியாமீது நேட்டோப் படைகள் தாக்குதல்களை மேற் கொள்ளலாம். 2008இற்குப் பின்னர் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைச் சாட்டாக வைத்து தங்களுக்குப் பிடிக்காத ஆட்சியாளர்களை பதவிகளில் இருந்து அகற்றுவதில் மேற்கு நாடுகள் அதிக கரிசனை காட்டி வருகின்றன. துனிசியாவில் பென் அலி லிபியாவில் மும்மர் கடாஃபி ஆகியோர் வெற்றிகரமாக பதவியில் விலக்கப்பட்டனர். ஆனால் மேற்குல சார்பு ஆட்சியாளர்கள் பாஹ்ரெயினிலும் சவுதி அரேபியாவிலும் தமக்கு எதிரான கிளர்ச்சிகளை வெற்றிகரமாக அடக்கிவிட்டனர்.
சிரியாவில் பெரும்பான்மையான இனக்குழுமம் சுனி முஸ்லிம்கள். ஆனால் அங்கு ஆட்சியைக் கையில் வைத்திருப்பவர்களும் அதிகமான அரச படையில் இருப்பவர்களும் அலவைற் முஸ்லிம்கள் என்ற இனக் குழுமம். அலவைற் இனக்குழுமம் மொத்த மக்கள் தொகையில்20% மட்டுமே. கிளர்ச்சிக்காரர்களில் பெரும்பானமையானவர்கள் சுனி முஸ்லிம்கள். இந்நிலையில் இன்னும் எத்தனை காலம் பஷார் அல் அசாத்தின் ஆட்சி தாக்குப் பிடிக்கும்? சிரிய ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் சிறிது சிறிதாக அரச படைகளிடம் இருந்து நிலப்பரப்புக்களைக் கைப்பற்றி வருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலின் பின்னர் சிரியாவின் பலவீனமான விமான எதிர்ப்பு முறைமை சிதைக்கப்பட்டு அதன் விமானப் படை அழிக்கப்படலாம். அமெரிக்கா ஒரு படைத்துறை வல்லுனர்களை ஜோர்தானிற்கு அனுப்பி சிரியாவின் வேதியியல் படைக்கலன்களை பத்திரமாக அப்புறப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஜோர்தான் இஸ்ரேலுடன் நட்புறவை வைத்திருக்கும் நாடு. துருக்கி அப்படி அல்ல. இதனால் அமெரிக்கா ஜோர்தானில் தனது படை நிபுணர்களை இறக்கியுள்ளது. துருக்கி சிரிய மோதல்களைச் சாட்டாக வைத்தும் பெருகி வரும் அகதிகள் பிரச்சனையை அடிப்படையாக வைத்தும் நேட்டோப் படைகள் சிரியாவிற்கு எதிராகக் களம் இறங்கும் போது சீனாவாலும் இரசியாவாலும் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படலாம். பிரித்தானியாவில் பயின்ற மருத்துவரான அல் அசாத் இப்போது போரை நேரடியாக வழி நடத்துகிறார். ஐரோப்பிய ஒன்றியம் சிரியச் சொத்துக்களை முடக்கியுள்ளது. சிரிய அரசு தடை செய்யப்பட்ட படைக் கலன்களைப் பாவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கோபி அனன் சிரியாவிற்கான சமாதானத் தூதுவர் பதவில் இருந்து விலகிய பின்னர் நியமிக்ககப்பட்ட லக்தர் பிராஹிமியின் நடவடிக்கைகளும் வேண்டுகோள்களும் இதுவரை எந்தப் பலனையும் தரவில்லை. சிரியா மேலும் எரியப் போகிறது.
No comments:
Post a Comment