Saturday, 13 October 2012

உலகப் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேறும் தென் கொரியா

ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவும் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாடுகள். உலகத்தின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக சீனா இருந்தாலும் அது ஒரு அபிவிருத்தியடைந்த நாடு அல்ல. தனிநபர் வருமானமும் வாழ்க்கைத்தரமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தொழில்மயப்படுதலும் ஒரு நாட்டை அபிவிருத்தியடந்த நாடாகத் தீர்மானிக்கும்.ஹாங்காங், தைய்வான், சிங்கப்பூர், தென் கொரியா ஆகிய நாடுகள் ஆசியப் புலிகளாக பொருளாதார நிபுணர்கள் கருதி இருந்த போதிலும் தென் கொரியா மட்டுமே ஒரு அபிவிருத்தி அடைந்த நாடு என்ற நிலையைப் பெற்றது.

கடின உழைப்பு
1960இல் இருந்து 1990 வரை பொருளாதார ரீதியாக உலகின் மிக வேகமாக முன்னேறும் நாடாகக் கருதப்பட்ட தென் கொரியா உலகின் பொருளாதாரவளத்தில் 15வது நாடாக இருக்கிறது. இயற்கை வளம் ஏதுமில்லாத சிறிய நிலப்பரப்பின் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு நாடான தென் கொரியா அதன் மக்களின் கடின உழைப்பாலும் சிறந்த ஆட்சியாளர்களாலும் ஒரு அபிவிருத்தியடைந்த நாடாக உருவெடுத்தது.

கல்விக்கு அதிக நேரம்.
திட்டமிட்ட பொருளாதாரத்தில் இருந்து திறந்த பொருளாதாரத்திற்கு வெற்றீகரமாக மாறிய நாடுகளில் தென் கொரியா முன்னணியில் திகழ்கிறது.  1960இல் இருந்து தொடர் 5ஆண்டுத் திட்டங்கள் மூலம் தென் கொரியா தனது பொருளாதரத்தை மேம்படுத்தியது. காலை 7மணி முதல் மாலை 6.30வரை நடக்கும் பாடாசாலைகள் மாணவர்களுக்கு அதிக சிரமம் கொடுக்கும் என பல நிபுணர்கள் கண்டித்த போதும். கடுமையான கல்விப் போதனை தென் கொரியாவின் கல்வி மேம்மாட்டிற்கு வழி வகுத்தது. அதனால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.

1970இல் தென் கொரியாவின் தனி நபர் வருமானத்திலும் பார்க்க பிரேசிலின் தனி நபர் வருமானம் இருமடங்காக இருந்தது. இயற்கைவளம், எரிபொருள் வளம், வளமை மிக்க பெரு நிலப்பரப்பு, பல துறைமுகங்கள், அபிவிருத்தி அடைந்த நாடுகளின் ஆதரவு, ஆகியவை பிரேசிலுக்கு இந்தன. ஆனால் 2008இல் தென் கொரியாவின் தனி நபர் வருமானம் பிரேசிலினதும் பார்க்க இருமடங்காக அதிகரித்தது. 

தென் கொரியாவின் வளர்ச்சிக்கு சம்சங்க், கியா, ஹியுண்டாய் போன்ற தனியார் நிறுவங்களும் பெரும் பங்களிப்புச் செய்தன. ஜப்பானியப் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து அதன் நாணய மதிப்பு அதிகரித்த போது அதை தென் கொரியா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தனது நாட்டில் ஜப்பானிய நிறுவங்களை உற்பத்தி செய்ய ஊக்குவித்தது. கைப்பேசிகள், கப்பல் கட்டுதல், கட்டிட நிர்மாணம், ஊர்திகள் உற்பத்தி, படைக்கலன் உற்பத்தி ஆகியவற்றில் தென் கொரியா சிறந்து விளங்குகிறது.

2008இல் உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளான போது அந்த நெருக்கடியை தனக்கு எப்படிச் சாதகமாக்குவது என்பதில் தென் கொரியா கவனம் செலுத்தியது. "I am confident that this crisis can advance our dream of becoming an advanced first-class nation," President Lee Myung-bak told a group of business leaders in 2009. உலகப் பொருளாதாரம் நெருக்கடியில் இருக்கையில் சிறந்த வழி ஆராய்சியிலும் அபிவிருத்தியிலும் (Research & Development) அதிக அக்கறை காட்டியது தென் கொரியா. ஏற்கனவே ஆராய்ச்சி அபிவிருத்திச் செலவில் உலகின் முன்னணி வகித்த தென் கொரியா தனது ஆராய்ச்சி அபிவிருத்திக்கான அரச செலவை 3%இல் இருந்து 5%மாக அதிகரித்தது.

2008இல் உருவான உலகப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் சீனாவினதும் இந்தியாவினதும் பொருளாதாரங்களின் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டன. ஆனால் தென்கொரியாவின் கடன்பெறுவலு அதிகரித்தது. இது பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு சாதகமான நிலையாகும். இந்தியாவின் கடன்பெறுவலு குறைக்கப்பட்டது. இந்தியாவில் அதன் மக்களின் கண்மூடித் தனத்தால் ஆளும் கட்சித் தலைவியின் மருமகனின் பொருளாதாரம் மட்டும்  பெருவளர்ச்சியடைந்தது.

தற்போது உள்ள உலகப் பொருளாதார நெருக்கடியில் தேறும் நாடுகளில் தென் கொரியா முதலிடம் வகிக்கிறது. தற்போது உள்ள உலகப் பொருளாதர நெருக்கடி சீரடைந்ததும் தற்போது குறைந்த நிலையில் உள்ள தென் கொரிய மக்களின் கொள்வனவுத் திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உற்பத்தித் துறையில் பல உலக நாடுகளுக்கு தென் கொரியா பெரும் சவாலாக உருவாகும்.


1 comment:

Anonymous said...

Great article.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...