Monday 3 September 2012

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்துமா?

ஈரான் அணுக்குண்டை உற்பத்தி செய்தால் அது தனது இருப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று இஸ்ரேல் பல ஆண்டுகளாக அச்சம் கொண்டுள்ளது. இஸ்ரேலிய மக்களில் கால்வாசிப்பேர் ஈரான் அணுக்குண்டு தயாரித்தால் தாம் நாட்டை விட்டு வெளியேறப்போவதாகத் தெரிவித்துள்ளனர். ஈரானிய அணு விஞ்ஞானிகள் இருவர் கொல்லப்பட்டார். ஒருவர் கொலை முயற்ச்சியில் இருந்து தப்பினார். ஈரானிய யூரேனியம் பதனிடும் நிலையங்கள் மீது பல கணனி ஊடுருவித் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன. ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் ஈரான் எதற்கும் அஞ்சாமல் தனது யூரேனியம் பதனிடும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது.

ஈரான் தனது அணு ஆராய்ச்சி நிலையங்களை ஐந்து இடங்களில் வைத்துள்ளது.

மார்தட்டும் ஈரான்
இஸ்ரேலின் அச்சத்தை அதிகரிக்கும் வகையில் 04/07/2012 புதன்கிழமை ஈரான் வெற்றீகரமாக பல தரப்பட்ட ஏவுகணைப் பரிசோதனைகளைச் செய்ததாக ஈரானிய செய்தி நிறுவனமான ஃபாஸ் அறிவித்துள்ளது. இவற்றில் "Persian Gulf" எனப் பெயரிடப்பட்டுள்ள தரையில் இருந்து கடலுக்கு செலுத்தி(shore-to-sea ballistic missile) பெரிய கடற்படைக் கப்பல்களைத் தாக்கியளிக்கும் வல்லமையுள்ள ஏவுகணைகளும் Shahab-3 எனப் பெயரிடப்பட்ட தரையில் இருந்து தரைக்குச் செலுத்தி 2000கிலோ மீற்றர் வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளும் முக்கியமானவை. தன்னால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகளைத் தாக்க முடியும் என ஈரான் மார்தட்டியது.

ஈரான் மீது தொடர் வைரஸ் தாக்குதல்கள்
2010இல் ஈரானின் அணு ஆராய்ச்சி மையத்தை இஸ்ரேலிய உளவுத்துறை இணைய வழி ஊடுருவி Stuxnet என்னும் வைரஸ் மூலம் சேதப் படுத்தியது அதன் பின்னர் ஈரானிய ஆயுதக் கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது.  இது இஸ்ரேலின் Dugu கணனி வைரஸின் வேலை என்று சந்தேகிக்கப்பட்டது. ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களில் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தனித்தனியாகவும் இணைந்தும் பல இணைய வெளித்தாக்குதல்களை நடாத்தின என்று நம்பப்படுகிறது. இவை எவையும் ஈரானின் அணுக்குண்டு உற்பத்தியை நோக்கி நகர்வதைத் தடுக்கவில்லை. ஈரானிய மதத் தலைவர் அயத்துல்ல அஹமத் கதாமி ஈரான் தக்கப்பட்டால் இஸ்ரேலியத் தலைநகர் டெல் அவீவ் சாம்பலாகும் என எச்சரித்துள்ளார்.

பெருமை தேடும் ஈரானும் பொறுமை இழக்கும் இஸ்ரேலும்
தனது அணுக்குண்டு உற்பத்தியை அமெரிக்காவும் இஸ்ரேலும் தடுக்கப்போகிறது என்று உணர்ந்த ஈரான் தனது அணுக்குண்டு உற்பத்தி நோக்கிய நகர்வைத் துரிதப்படுத்துகிறது என்று சொல்லப்படுகிறது. ஈரானின் அணுகுண்டு உற்பத்தி அதற்கு இப்போது ஒரு கௌரவப் பிரச்சனை என்று சொல்லப்படுகிறது. சிரியாவில் பஷார் அல் அசாத்தை அகற்றினால் ஈரான் பணியும் என்று சிலர் ஆலோசனை கூறினர். ஆனால் அது ஈரானிய ஆட்சியாளர்களுக்கு அச்சத்தை அதிகரித்து அவர்களின் அணுக்குண்டுத் திட்டத்தை விரைவு படுத்தும் என்று வேறு சிலர் கருதினர்.

அமெரிக்க அதிபர் தேர்தலும் ஈரானும்
தற்போது அதிபர் தேர்தல் அமெரிக்காவில் சூடு பிடித்திருப்பதால் பராக் ஒபாமா இப்போது இன்னொரு போர்முனையைத் திறப்பதை அவரது வாக்காளர்கள் விரும்பமாட்டார்கள். இந்தப் பலவீனத்தை ஈரான் பயன்படுத்துகிறது என்று இஸ்ரேல் கருதுகிறது. 2012 நவம்பர் ஆறாம் திகதி அமெரிக்க அதிபர்த் தேர்தல் நடைபெற இருக்கிறது. அமெரிக்காவில் பலம் மிக்கவர்களாகத் திகழும் யூதர்களின் வாக்கும் தேர்தலின் முக்கியமான ஒரு அம்சம். இஸ்ரேலிற்கு ஆதரவற்ற நிலை தேர்தல் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம். பராக் ஒபாமாவிற்கும் இஸ்ரேலிற்கும் ஒரு உன்னத நட்புறவு இல்லை என்று கருதப்படுகிறது.

அமெரிக்காவின் பேரம் பற்றி பரவிய வதந்தி
 பராக் ஒபாமாவின் நிர்வாகம் இரு ஐரோப்பிய நாடுகளின் இராசதந்திரிகளூடாக ஈரானுடன் இரகசியமாகத் தொடர்பை ஏற்படுத்தி இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அதற்குப் பதிலடியாக அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் அதற்காக அமெரிக்கா இஸ்ரேலின் தாக்குதலில் பங்காளியாக இருக்காது என்று ஒரு பேரம் செய்ய முயல்வதாக இஸ்ரேலிய ஊடகங்கள் ஒரு வதந்தியை அல்லது உண்மையைப் பரப்பின. இஸ்ரேலியப் பிரதமர் இதை மறுத்துள்ளார்.  அமெரிக்க அரசும் இதை வன்மையாக மறுத்துள்ளது. இதற்கிடை மத்திய கிழக்கு விவகாரங்களில் அதிக அக்கறை காட்டும் ஐரோப்பிய நாடான பிரான்ஸ் இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் பாரிய விளைவுகள் ஏற்படுத்தும் என்று கூறுகிறது. இதுவும் பிரான்ஸ் தன்னை ஈரான் மீதான இஸ்ரேலியத் தாக்குதலில்  இருந்து தன்னைத் தூரப்படுத்தும் தந்திரமாக இருக்கலாம். இதற்கிடையில் லெபனானில் ஈரானின் ஆதரவுடன் செயற்படும் தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல்லா இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் அமெரிக்க நிலைகளை ஈரான் தாக்கும் என எச்சரித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னேற்பாட்டு நடவடிக்கைகள்
இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடி உலக எரிபொருள் விநியோகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்த முயலலாம் என்பதற்காக அமெரிக்கா ஏற்கனவே பாரசீகக் குடாவில் நிற்கும் கண்ணி வெடி வாரும் கடற்படைக் கலன்களை இருமடங்காக அதிகரித்துள்ளது. செட்ம்பர் மாத இறுதியில் தனது ஆதரவு நாடுகள் இருபத்தைதுடன் இணைந்து உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய கண்ணி வெடி வாரும் ஒத்திகையை மேற்கொள்ள விருக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா தனது நட்பு நாடுகளான துருக்கியிலும் இஸ்ரேலிலும் ஏவுகணை எதிர்ப்பு முறைமையை உருவாக்கியுள்ளது. அது இப்போது காட்டார் நாட்டிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஈரான் மார்தட்டும் தனது புது ஏவுகணை உருவாக்கங்களை புஸ் வாணம் ஆக்கி விடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. ஈரான் அணுக்குண்டைத் தாயாரித்தாலும் அது ஈரானின் எல்லையைத் தாண்டி எங்கும் செல்லாதவாறு அமெரிக்கா பல தடைகளை ஈரானைச் சுற்றி உருவாக்கி வருகிறது. இதனால் அமெரிக்கா ஈரானுக்கு அதன் அணுக்குண்டு உற்பத்தி எந்தப் பயனையும் அதற்குத் தராது என்ற செய்தியையும் இஸ்ரேலுக்கு ஈரானின் அணுக்குண்டைப்பற்றி எந்தக் கவலையும் கொள்ளவோ அல்லது ஈரான் மீது தாக்குதல் நடத்தவோ தேவையில்லை என்ற இரு செய்திகளையும் தெரிவிக்க விரும்புகிறது.

இஸ்ரேலில் கருத்தொற்றுமை இல்லை

ஈரான் மீது தாக்குதல் நடாத்துவதை இஸ்ரேலிய உயர் படை அதிகாரிகளிடை பெரும் வரவேற்பு இல்லை என்றே கூறப்படுகிறது. அத்துடன் இஸ்ரேலிய அமைச்சரவை ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக பிளவு பட்டே இருக்கிறது. இஸ்ரேல் ஈரானில் தாக்குதல் நடத்துமா என்ற கேள்வியிலும் பார்க்க முக்கியமானதும் சிக்கலானதுமான கேள்வி இஸ்ரேலால் ஈரானில் தாக்குதல் நடாத்த முடியுமா என்பதுதான். 2007இல் சிரியாவிலும் 1981இல் ஈராக்கிலும் இஸ்ரேல் இலகுவாக அங்குள்ள அணு ஆராய்ச்சி நிலையங்களில் தாக்குதல்களை நடாத்தியது. ஆனால் இப்போது நிலைமைகள் வேறு. ஈரான் தனது அணு ஆராய்ச்சி நிலையங்களை பல வேறு இடங்களில் அமைத்துள்ளது. அத்துடன் அவை 30 அடி ஆழமான கொன்கிறிட் பாதுகாப்புச் தடுப்புக்களுக்குக் கீழ் உள்ளன. இஸ்ரேலிய விமானங்கள் ஈரானைத் தாக்க நீண்ட தூரம் பறக்க வேண்டும். சிரியாவும் ஈராக்கும் இஸ்ரேலுக்கு அண்மையில் இருக்கின்றன. சிரியாவிலும் ஈராக்கிலும் ஒரு இடத்தில் நிலத்தின் மேல் அணு ஆராய்ச்சி நிலையங்கள் இருந்தன.
மூன்று மாற்று வழிகளில் இஸ்ரேலிய விமானங்கள் செல்லலாம்.

 ஈரானைத் தாக்க இஸ்ரேலிய விமானங்களுக்கு மூன்று பாதைகள் இருக்கின்றன. ஒன்று லெபனான் துருக்கியூடாக. இரண்டாவது ஜோர்டான், இராக் ஊடான நேர்வழிப்பாதை. மூன்றாவது சவுதி அரோபியா மற்றும் பரசீக வளைகுடா ஊடான பாதை. இவற்றின் தூரங்கள்அண்ணளவாக 1,500km (930 miles)இலிருந்து  1,800km (1,120 miles)வரை இருக்கும். இந்த அளவு தூரம் பயணம் செய்து பல இலக்குக்களைத் தாக்கி அழிக்கும் பாரிய குண்டுகளைத் தாங்கிச் செல்லும் விமானங்கள் இஸ்ரேலிடம் இருக்கிறதா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட ஒரு நீண்ட தூரத் தாக்குதல்களுக்கு வானில் வைத்தே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட வேண்டி இருக்கும்.
நீண்ட தூரத் தாக்குதல்களுக்கு ஒரு விமானத்தில் இருந்து மற்ற விமானத்திற்கு வாலின் வைத்தே எரிபொருள் நிரப்ப வேண்டும்

30அடி ஆழமாக ஊடுருவிச் சேதம் விளைவிக்கக் கூடிய குண்டுகளை இஸ்ரேல்உருவாக்கியிருக்க வேண்டும் அல்லது அமெரிக்காவிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும். அமெரிக்கா 1981இல் நிலத்திற்குள் துளைத்துச் சென்று தாக்கக்கூடிய GBU-28 குண்டுகளை உருவாக்கி இருந்தது. இது இஸ்ரேலின் கைக்குச் சென்றுள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் இஸ்ரேலின் F-151விமானங்களால் ஒரு குண்டை மட்டுமே காவிச் செல்ல முடியும். இதனால் இஸ்ரேல் பல விமானங்களை தாக்குதலில் ஈடுபடுத்த வேண்டும். ஆனால் 1981இல் உருவாக்கிய GBU-28 குண்டுகள் இப்போது பல வகைகளில் மேம்படுத்தப்பட்டிருக்கலாம் இப்போது அவற்றின் எடை குறைவாக இருக்கலாம். தற்போது உள்ள GBU-28 குண்டுகள் ஆறு மீட்டர் ஆழ கொன்கிரீட்டைத் துளைத்துப் பின்னர் 30 மீட்டர் ஆழ மண்ணைத் துளைத்த பின்னர் வெடிக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.

போருக்குத் தயாராகும் இஸ்ரேல்
அணமைக்காலமாக இஸ்ரேல் ஒரு போருக்கான தயார்படுத்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்பதற்காக சொல்லப்படும் காரணிகள்:

  • இஸ்ரேல் மீதான ஏவுகணைத்தாக்குதல்களிற்கு எப்படி முகம் கொடுப்பது என்பதுபற்றி அண்மைக்காலமாக இஸ்ரேல் பல ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. 
  • இஸ்ரேலிய மக்களுக்கு இரசாயனத் தாக்குதலை எதிர்கொள்ளும் முகமூடிகள் வழங்கப்பட்டுள்ளது.
  • இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ ஈரானுடனான சகல இராசதந்திர நடவடிக்கைகளும் தோல்வியில் முடிவடைந்தன என்று அறிவித்துள்ளார். 
  • ஈரான் மீதான தாக்குதலுக்கான இஸ்ரேலியக் கடிகாரம் அமெரிக்கக் கடிகாரத்திலும் பார்க்க விரைவாகச் செயற்படுவதாக அமெரிக்காவிற்கான இஸ்ரேலியத் தூதுவர் தெரிவித்துள்ளார். 
  • முன்னாள் இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட்டின் தலைவர் தான் ஒரு ஈரானையராக இருந்தால் இப்போது பயத்துடன் இருப்பேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
  • சகல மேற்குலக அழுத்தங்கள் மத்தியிலும் ஈரான் தனது பதப்படுத்தப்பட்ட யூரேனிய இருப்பை இப்போது இரட்டிப்பாக்கி உள்ளது  என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
  • ஒக்டோபர் முதலாம் திகதி ஈரான் ஒரு அணுகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பதப்படுத்தப்பட்ட யூரேனியத்தை உருவாக்கிவிடும் என படைத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
  • ஈரான் தனது மக்களை இரண்டு வாரங்கள் வீடுகளுக்குள் இருக்கும் படி பணித்துள்ளதாம்.
அமெரிக்க உச்சப் படைத்துறை அதிகாரியான மார்ட்டின் டிம்சே இஸ்ரேல் ஈரானின் அணு ஆராய்ச்சி நிலையங்களைத் தாக்குவது ஈரானின் அணுக் குண்டு உற்பத்தியை நிறுத்தாது மாறாக துரிதப்படுத்தும் என்று சொல்லியுள்ளார். இது இஸ்ரேலியத் தாக்குதலிற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்பது போல் காட்டுகின்ற முயற்ச்சியாக இருக்கலாம். 

இஸ்ரேலின் தாக்குதல் திட்டம்
இஸ்ரேல் முதலில் இணையவெளியில் ஊடுருவி ஈரானின் பாதுகாப்புத் துறையின் கணனிகளை செயலிழக்கச் செய்யும். பின்னர் கண்ண்டம் விண்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலம் ஈரானின் படைத்துறை மற்றும் அணு ஆராய்ச்சித்துறை நிலைகளை நிர்மூலம் செய்யும். தொடர்ந்து ஆளில்லா விமானங்கள் ஈரானுக்குள் சென்று வேவு பார்க்கும். இறுதியாக விமானத் தாக்குதல்கள் நடைபெறும்.

பல படைத்துறை வல்லுனர்கள் இஸ்ரேலால் ஈரானிய அணுக்குண்டு உற்பத்தித் திறனை நிறுத்த முடியாது என்று சொல்கின்றனர். ஆனால் படைத்துறை வல்லுனர்களை கடந்த காலங்களில் இஸ்ரேல் பல தடவை அதிச்சிக்குள்ளாக்கி உள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...