இலங்கையின் பூகோள அமைப்பு நீர் மூழ்கிக்கப்பல்களுக்கு இடையிலான அதி தாழ் அலைவரிசை (Ultra law wave) தொடர்பாடல்களுக்கு மிகவும் உகந்தது. இதனால் இலங்கையின் மேற்குக் கடலோரப் பிரதேசமான சிலாபத்தில் அமெரிக்க வானொலியின் அஞ்சல் நிலையம் என்ற போர்வையில் அமெரிக்கா தனது நீர் மூழ்கிக் கப்பல்களிடையான ஒரு தொடர்பாடல் நிலையத்தை ஏற்படுத்தத் தயாரானது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பலத்த அச்சுறுத்தல் என்றுணர்ந்த இந்திரா காந்தி அம்மையார் அப்போது 1977 இனக்கொலையை அடுத்து உருவாகி இருந்த தமிழர்களின் இனப் பிரச்சனையைக் கையிலெடுத்தார். கைக்குண்டுகளுடனும் கைத் துப்பாக்கிகளுடனும் ஐம்பது பேருடன் இயங்கி வந்த இலங்கைத் தமிழ் இளைஞர்களை தன் வசமாக்கி அவர்களுக்கு படைப் பயிற்ச்சியும் படைக்கலன்களும் வழங்கியதுடன் அவர்களிடை பல பிளவுகளை உருவாக்கி அவர்களைக் கூறு போட்டார். இந்தியாவின் வஞ்சகத்தை உணராத பல தமிழர்கள் தமக்கு என்று ஒரு தனிநாட்டை இந்தியா உருவாக்கப் போகிறது என்று உறுதியாக நம்பினர். இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஒரு பெரும் படைக்கல மோதல் உருவானது. இந்தியாவின் வெளியுறவுச் செயலர் பார்த்தசாரதி பல பிரயாணங்களை இலங்கைக்கு மேற்கொண்டார். இந்தியா பற்றி இலங்கை அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கடுமையாக விமர்சித்தன. இலங்கைப் பிரதமராக இருந்த பிரேமதாச இந்தியாவைக் மிகக் கடுமையாக விமர்சித்தார். முடியுமானல் உன் படையை அனுப்பிப் பார் என்று சவால்விட்டார் அவர். இதற்குப் பதிலளித்த இந்திரா அம்மையார் எமது அயலவர்கள் தமது கற்பனையை கன்னா பின்னா என ஓடவிடுகிறார்கள் என்றார்.
..
ஆண்டுகள் ஓடின தமிழர் பிரச்சனை தீரவில்லை. இலங்கையில் அமெரிக்காவின் பிடியும் தளரவில்லை. இந்திரா அம்மையார் கொல்லப்பட்டார். அரசியல் கற்றுக் குட்டி ராஜுவ் காந்தி பதவிக்கு வந்தார். இலங்கையின் எந்தப் பகுதியிலும் விடுதலைப் புலிகள் கரந்தடித் தாக்குதலை நடாத்தி பலத்த சேதம் விளைவிக்கும் நிலைக்கு வளர்ந்தனர். இந்தியாவின் நிகழ்ச்சி நிரலிற்கு உட்பட புலிகள் மறுத்தனர். ராஜுவ் காந்தி இலங்கைக்கும் புலிகளுக்கும் பலத்த நெருக்குதலைக் கொடுத்தார். இந்தியாவின் சகல திட்டங்களும் அமெரிக்க உளவுத் துறையூடாக இலங்கைக்கு தெரியப் படுத்தப் பட்டது. இந்தியாவின் நெருக்குதலுக்கு அடிபணிவது போல் ஜயவர்த்தனே நடித்து இந்தியாவிற்கும் புலிகளுக்கும் இடையில் சண்டை முடிந்து விடுவதில் வெற்றி கண்டார். திருகோணமலைத்திட்டத்தையும் சிலாபத்திட்டத்தையும் இலங்கை கைவிட்டது. தமிழர்களின் முதுகில் ஏறி நின்று இந்தியா இதைச் சாதித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பேராட்டமின்றி இந்தியாவால் இதைச் சாதித்திருக்க முடியாது.
பின்னர் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பனிப் போர் முடிய இலங்கையில் அமெரிக்க இந்திய வல்லாதிக்கப் போட்டி முடிந்து சீன இந்திய வல்லாதிக்கப்போட்டி உருவானது. ஆனால் இந்திய ஆட்சியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதில் மட்டுமே அதிக அக்கறை காட்டினர். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சீனா இலங்கையில் தனது ஆதிக்கத்தை அதிகரித்தால் மட்டுமே சாத்தியம் என்பதால் இலங்கையில் சீன ஆதிக்கம் வளர்வதை அவர்கள் எதிர்க்கவில்லை. விளைவு அம்பாந்தோட்டையில் சீனா பாரிய துறை முகத்தை உருவாக்கியது. அது ஒரு வர்த்தக நோக்கம் கொண்ட துறைமுகமாக இருந்தாலும் அது தேவை ஏற்படுமிடத்து படைத்துறை நடவடிக்களுக்கு பயன்படுத்தக் கூடியது. அதற்கு அருகில் ஒரு பெரிய படைக்கலன்கள் சேமித்து வைக்கும் நிலையத்தை சீனா உருவாக்கியுள்ளது. அத்துடன் அம்பாந்தோட்டை துறை முகத்தின் அளவு அப்பிராந்திய வர்த்தக தேவைகளிலும் மிகப் பெரியது. அம்பாந்தோட்டை துறை முகம் படைத்துறை நோக்கங்கள் கொண்டதே.
தொ(ல்)லை நோக்குடன் தொலைத் தொடர்புக் கோபுரம்
இலங்கையில் சீனா அமைக்க விருக்கும் தொலைத் தொடர்புக் கோபுரம் தொடர்பான திட்டங்கள் யாவும் இதுவரை மறைத்து வைக்கப்பட்டு திடீரென்று இன்று வேலைகள் இன்று ஆரம்பமாகின்றது என்று அறிவித்தது ஏன்? இலங்கைக்கு ஒரு தொலைத் தொடர்புக் கோபுரம் தேவை. ஒரு சிறிய நாட்டுக்கு ஆசியாவிலேயே மிக உயரமான, உலகத்திலேயே 19வது கோபுரம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தத் தொலைத் தொடர்புக் கோபுரத்தின் நோக்கத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்க முதலில் நினைவிற்கு வருவது 1970களின் பிற்பகுதியில் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் நிர்மாணித்த தொலைத் தொடர்புக் கோபுரமே. அக்கோபுரத்தின் உயரத்தைப் பார்த்த சோவியத் யூனியனிற்கு சந்தேகம் தொட்டுவிட்டது. உளவுத் துறையை ஆப்கானிஸ்த்தானில் களமிறக்கியது. அதற்குக் கிடைத்த தகவல். அமெரிக்கா சோவியத் யூனியானை உளவு பார்க்க அந்தக் கோபுரம் அமைகிறது என்பதே. விளைவு 1979இல் சோவியத் ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்தது. ஆப்கானிஸ்தானிற்கு அன்று தொடங்கிய தொல்லை இன்றுவரை தீரவில்லை. ஒரு சிறிய நாடான இலங்கையில் இத்தனை உயரக் கோபுரம் எதற்கு? 50 ஒளிபரப்புச் சேவைகள், 50 ஒலிபரப்புச் சேவைகள், 10 தொலைபேசிச் சேவைகள், தொலைத் தொடர்பு அருங்காட்சியகம், உணவகம், பணிமனைகள், மாநாட்டு மண்டபங்கள், பொருட்காட்சி நிலையங்கள், ஆடம்பரத் தங்ககங்கள் போன்ற பலவற்றை உள்ளடக்கிய 350 மீட்டர் உயரமான கட்டிடத்தை சீனா 104 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இலங்கையில் அமைக்க விருக்கிறது. கோபுரத்தின் பெயர் தமரைக் கோபுரம். இக் கோபுரம் இந்தியாவிற்குச் சீனா இலங்கையில் வைக்கும் இன்னொரு ஆப்பு.
ஷாங்காய் ஒத்துழைப்பு சபையில் இலங்கை உரையாடும் உறுப்பினராகச் சேர்க்கப் பட்டமை இலங்கையில் சீனாவின் பிடி இறுகுகின்றதென்பதற்கு மேலும் ஒரு அறிகுறியாகும். ஷாங்காய் ஒத்துழைப்பு சபை சீனா, கஷகஸ்த்தான், இரசியா, தஜிகிஸ்த்தான் உஷ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். இந்த அமைப்பில் இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் பார்வையாளராக கலந்துகொள்ளும் உரித்துடையன. இலங்கைக்கு இந்த அமைப்பில் உரையாடும் உறுப்புரிமை வழங்கப்பட்டமை இலங்கையை மேலும் சீனாவின் பக்கம் இழுக்கும் நோக்கம் கொண்டது. இலங்கையின் கேந்திர முக்கியத்துவத்தை சீனா நன்கு உணர்ந்துள்ளது. ஆபிரிக்க நாடுகளுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் சீனா பலமான ஒரு வர்த்தக உறவை 1960களில் இருந்தே ஏற்படுத்தி வருகிறது. ஆபிரிக்காவின் மூலவளமும் மத்திய கிழக்கின் எரிபொருள் வளமும் சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றின , பங்காற்றி வருகின்றன. சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி மட்டுமல்ல உலக வர்த்தகத்தின் மூன்றில் இரண்டு பகுதி இந்து சமுத்திரத்தின் வழியாக இலங்கையைக் கடந்தே செல்ல வேண்டும். இதனால் இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க சீனா விரும்புகிறது.
சிங்களவர்கள் போரில் வெல்ல இந்தியா சகல உதவிகளும் செய்தது. ஆனால் சீனா இலங்கையில் பாரிய திட்டங்களை நிறைவேற்ற மஹிந்த ராஜபக்சே அரசு அனுமதி அளித்துள்ளது. ஆறு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான திட்டங்களுக்கான செலவை சீன வங்கி இலங்கைக்குக் கடனாக வழங்கும். அதை வைத்து சீன நிறுவனங்கள் இலங்கையில் அத்திட்டங்களை நிறைவேற்றும். அத்திட்டங்கள்:
- புத்தளத்தில் அனல் மின்நிலைய இரண்டாம் கட்டம்.
- அம்பாந்தோட்டையில் துறைமுகத்தின் இரண்டாம் கட்டம்.
- அம்பாந்தோட்டை விமான நிலையத் திட்டம்.
- மாத்தறை கதிர்காமம் இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு.
- பிந்துவர மாத்தறை இடையிலான் விரைவுப் பாதை அமைப்பு.
- மதவாச்சி தலைமன்னார் இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு.
- யாழ்ப்பாணத்தில் பல பெருந்தெருக்கள் அமைப்பு.
- யாழ்-மன்னார்-புத்தள இணைப்பு தெருக்கள்
- பலாலி காங்கேசன் துறை இடையிலான தொடரூந்துப் பாதை அமைப்பு.
இந்தியாவை ஓரம் கட்டி விட்டு பாக்கிஸ்தானை அழைக்கும் இலங்கை
இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலையில் திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைக்க இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் என்.ரீ.பீ.சி. நிறுவனமும் இணங்கியிருந்தன. இந்த அனல் மின் நிலையத்தில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயன்திறனை நோக்காக அமைக்கப்படவுள்ள இந்நிலையத்தின் வேலைத்திட்டத்திற்காக 500 மில்லியன் டொலர் ஒதுக்கிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான செலவை இரு நாடுகளும் சரி பாதியாக ஏற்க உள்ளன. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்ப்பார்கக்ப்படுகின்றது. இத்திட்டத்திற்கு இந்தியா 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்க உள்ளதோடு மின் உற்பத்தி நிலையத்திற்கான 500 ஏக்கர் காணி, உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி என்பவற்றை இலங்கை வழங்குகிறது. இப்போது பாக்கிஸ்த்தான் சம்பூரில் ஒரு அணு மின் நிலையத்தை உருவாக்குவற்கான பேச்சு வார்த்தைகளை இலங்கையுடன் ஆரம்பித்திருக்கிறது. மேலுள்ள சீனாவின் ஒன்பது திட்டங்களில் ஒன்று கூட திருகோணமலையில் இல்லை. இப்போது சீனா பாக்கிஸ்த்தானின் துணையுடன் திருகோணமலையில் இந்தியாவிற்கு ஆப்பு வைக்கிறது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் மேத்தா கொழும்பில் இருந்து புதுடில்லி சென்று இந்திய பாதுகாப்புத் துறை மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன கலந்துரையாடியுள்ளார் என இந்திய ருடே தெரிவிக்கிறது. அது மட்டுமல்ல பாக்கிஸ்த்தான் இலங்கைக்கு தனது படைக்கலன்கள் விற்பனையையும் அதிகரிக்க விருக்கிறது. இச்செய்திகள் புதுடில்லியை நிச்சயம் உலுக்கி இருக்கும். ஜூன் 29-ம் திகதி இலங்கைக்குச் சென்ற இந்தியப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்ப்பாக மீளாய்வு செய்யும் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றார். அவர் கொழும்பு சென்ற சில தினங்களில் இலங்கையில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என சீன தெரிவித்தது. இனி வரும் காலங்களில் புதுடில்லியை உலுக்கும் பல நடவடிக்கைகளை இலங்கை எடுக்கலாம்.
2 comments:
இந்தியா அன்றும் இன்றும் வி்ட்ட பெரிய தவறு தமிழரை அழிக்க உதவியதே. தமிழர்களை அரவணைத்து அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றியிருந்திருப்பின் இன்று ஏற்பட்டுள்ள பின்னடைவு இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்காது. அகண்ட தமிழகம் என்ற ஒரு பொய்கருத்தை நம்பி இந்தியா விட்ட பெரும் தவறு வரும் காலத்தில் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு உலை வைக்கும் என்பது நிச்சயம்.
நல்ல அலசல்.
Post a Comment