இலங்கைப் படையினரின் தரத்தைப் பொறுத்தவரை அவர்கள் ஒரு தமிழரின் வீட்டுக்குள் சென்று செய்யும் மிக மிக கண்ணியமான செயல் காப்பி கேட்டு மிரட்டுவதாகும்.
இலங்கையில் அடுத்த ஒரு எழுச்சி உருவாகுவதற்கான சூழ்நிலை இப்போது தீவிரமடைந்து வருகிறது. ராஜபக்சேக்களின் ஆட்சியை மனித உரிமை மீறல்களை அடிப்படையாக வைத்து தமது வழிக்குக் கொண்டு வரமுடியாவிடில் அவருக்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சியை மேற்கு நாடுகள் இலங்கை முழுவதும் உருவாக்கலாம். 29-06-2012-ம் திகதி இலங்கைக்குச் சென்ற இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனன் இலங்கையின் அடாவாடித் தனத்தை நன்கு புரிந்திருப்பார். இலங்கைக்கு எதிரான தனது நடவடிக்கைகளில் அமெரிக்கா இந்தியா தன்னுடன் நெருங்கி ஒத்துழைப்பதை அமெரிக்கா விரும்புகிறது. வாஷிங்டனிலிருக்கும் நிருபாமா ராவும் புதுடில்லியில் இருக்கும் சிவ் சங்கர் மேனனும் அமெரிக்காவின் இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக அமையாமல் இருப்பதை உறுதி செய்து கொள்வார்கள்.
இலங்கைத் தமிழர்களிடை ஏற்படவிருக்கும் எழுச்சி மீண்டும் ஒரு படைக்கலன்கள் ஏந்திய பெரும் போராட்டமாக உருவெடுக்காமல் இருப்பதை இந்திய ஆட்சியாளர்கள் முளையிலேயே கிள்ளி எறிய விரும்புவார்கள் என்பதில் எந்த வித ஐயமும் யாருக்கும் இருக்காது. 2009 மே மாதம் போர் முடிவடைந்த கையோடு இலங்கையின் கிழக்கு மாகாணக் காட்டு பகுதிகளில் இருந்த விடுதலைப் புலிகளின் படையணித் தலைவரை அயல் நாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி காணப் போவதாக தகவல் அனுப்பப்பட்டது. அவரும் பேட்டிக்குச் சம்மத்தித்தார். ஆனால் அவரைப் பேட்டி எடுக்கப் போனது பத்திரிகையாளர் அல்ல பக்கத்து நாட்டு உளவுத்துறை. விடுதலைப் புலிகளின் இருப்பிடமறியப்பட்டு அவர்கள் அழிக்கப்பட்டனர். அந்த உளவுத்துறை அத்துடன் நிற்கவில்லை. சனல் - 4 இறுதிப் போரில் நடந்த மனித உரிமைகள் மீறல் தொடர்ப்பாக ஒரு ஆவணப்படம் தயாரிப்பதாகச் சொல்லி தனது உளவாளிகளை போலியாக சனல் - 4 நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களைப் போல் நடகமாடவைத்து தனது நாட்டில் மறைந்திருந்த சில முன்னாள் விடுதலைப் புலிகளைக் கைது செய்தது.
இப்போது இனியொரு டொட் காம் என்னும் இணையத்தளம் இந்திய மாவோயிஸ்டுகள் ஈழத்தமிழர்களுக்கு உதவத் தயார் என்னும் செய்தியை வெளியிட்டுள்ளது. அது வெளியிட்ட செய்தி:
- இந்திய மாவோயிட்டுக்கள் சார்பில் பேசவல்ல ஒருவர் இலங்கையில் இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தியதே இந்தியா தான் என்றும், இந்தியாவுடன் இணைந்து அனைத்து உலக ஏகாதிபத்தியங்களும் மக்களையும் போராட்டத்தையும் அழித்தனர் என்று தெரிவித்தார். தாம் இந்தியாவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டத்தை நடத்திவருவதாகக் குறிப்பிட்ட அவர், பலவீனமடைந்துள்ள ஈழப் போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவும் பங்களிப்பும் உண்டு என்றார். இந்தியாவின் ஹைதராபாத் பகுதியிலிருந்து இனியொருவிற்கு நேர்காணல் வாழங்கினார்.
இது உண்மையில் இந்திய மாவோயிஸ்ட்டுக்களிடம் இருந்துதான் வந்ததா அல்லது இது இப்போது ஈழப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க இருப்பவர்களை கண்டறிய இந்திய உளவுத்துறையான ரோ(RAW - Research & Analysis Wing) செய்கின்ற சதியா என்னும் கேள்விகள்ளா தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். சிவ் சங்கர் மேனன் இலங்கை சென்று திரும்பிய சில தினங்களில் இச்செய்தி வெளி வந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். ராஜபக்சேக்கள் ஒரு வழிக்கு வருகிறார்கள் இல்லை. அவர்களின் அடக்கு முறையும் அடாவடித்தனமும் அடுத்த கிளர்ச்சிக்கு வழிகோலும் என இந்திய பாதுகாப்புத் துறை கருதலாம். அதனால் அடுத்த கிளர்ச்சிகளின் முன்னோடிகள் யார் என்பதை இந்திய உளவுத் துறை ஆரம்பித்தில் இருந்தே அறிந்து அவர்களை ஒழித்துக் கட்ட விரும்புவதால் இப்படி ஒரு செய்தி இந்திய உளவுத்துறையின் சதியால் வெளிவிடப்பட்டதா?
No comments:
Post a Comment