Saturday, 10 December 2011

மனித உரிமைகளும் எருமைகளும்


பறவைகளுக்கும் சரணாலயங்கள் உண்டு
மிருகங்களை அழிவிலிருந்து காப்பதுண்டு
தன்னினச் சேர்க்கையாளர்க்கும் உரிமையுண்டு
தமிழினத்தை அழிப்பவரைத் தண்டிப்பதில்லை

மனித உரிமைகள் தினமாம் இன்று
அறிக்கைகளும் விடுகிறார்கள்
உரைகளும் ஆற்றுகிறார்கள்
உதவாக்கரை நாடுகள் கூட்டம்

குழந்தைகளைக் கொதிதாரில் போட்டதும்
குமரிகளை மார்பறுத்துக் கொன்றதும்
குருக்களை உயிரோடு கொழுத்தியதும்
மனித உரிமைச் சாசனங்கள் முப்பதில்
எதில் அடங்கும் பன்னாட்டுச் சமூகமெனும்
பன்னாடைக் கூட்டங்களே.

பாராளமன்றின் முன் அறப் போர் புரிந்த
தமிழ்த் தலைவர்களை காடையரை ஏவி
அடித்து உதைத்து அரை நிர்வாணமாக்கிய
அரச பயங்கர வாதக் கோர தாண்டவம்

மனித உரிமைச் சாசனங்கள் முப்பதில்
எதில் அடங்கும் பன்னாட்டுச் சமூகமெனும்
பன்னாடைக் கூட்டங்களே.



அமைதிப் படை என்று சொல்லி வந்த
கொலைவெறிக் கும்பல் ஒன்று
ஏழாயிரம் அப்பாவிகளைக் கொன்று
மூவாயிரம் பெண்களைக் கெடுத்தது

மனித உரிமைச் சாசனங்கள் முப்பதில்
எதில் அடங்கும் பன்னாட்டுச் சமூகமெனும்
பன்னாடைக் கூட்டங்களே.

பாதுகாப்பு வலயம் என்று சொல்லி
உணவு மறுத்து நீர்மறுத்து
நோய் தீர்க்கும் மருந்து மறுத்து
சிற்றிடத்தில் திரட்டியெடுத்து
கொத்தணிக் குண்டுகளை வீசி
இலட்சம் பேரைக் கொன்று குவித்தது

மனித உரிமைச் சாசனங்கள் முப்பதில்
எதில் அடங்கும் பன்னாட்டுச் சமூகமெனும்
பன்னாடைக் கூட்டங்களே.



மனித உரிமையெனக் கூவுவதெல்லாம்
உமக்கு ஒத்து வராத கடாஃபி போன்ற
ஆட்சியாளர்களை விரட்டவும்
தேவைப்படின் கொல்லவுமே



பலகொலைகள் செய்த இலங்கையைப் பாராட்டிய
ஐநா மனித உரிமைக்கழகம மன்றில்
உரிமைகளை வென்றெடுக்கவும் வேண்டுமோ
ஈன்றெடுக்க வேண்டும் எம் உரிமையை நாமே

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...