லிபியக் கிளர்ச்சியின் இறுதிக் கட்டமாக முன்னாள் லிபிய அதிபர் மும்மர் கடாபியின் மகன் சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி நிகர் நாட்டுக்கு தப்பி ஓட முயற்சிக்கையில் லிபியாவின் தென் பிராந்திய எண்ணெய் வள நகரான ஒபாரியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். யாரோ வழங்கிய தகவல்களை வைத்தே 39வயதான சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி கைது செய்யப்பட்டார். இலண்டனில் பிரபல பல்கலைக் கழகமான London School of Economics இல் மேற்படிப்பை மேற்கொண்ட சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி ஒரு பெண் பித்தர் என்றும் விமர்சிக்கப்பட்டவர். இவருக்கு பிரான்சில் ஓர் ஆடம்பர மாளிகை சொந்தமாக உள்ளது. சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபியும் அவரது பணமும் புதிய லிபிய அரசுக்கு ஒரு பெரும் சவாலாக இருந்தது.
68 வயதான மும்மர் கடாஃபிக்கு ஏழு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இவர்களில் சயிஃப் கடாஃபியும் சாதி கடாஃபியும் தீவிரவாதத்தில் நம்பிக்கை குறைந்தவர்கள் என்று சொல்லப்பட்டது. மற்றவர்கள் தீவிரப்போக்கு உடையவர்கள் என்றும் நம்பப்படுகிறது. இவர்களுக்கிடையிலான போட்டியை மும்மர் கடாஃபியே உருவாக்கி தனது பதவி பாதுகாப்பாக இருக்கவும் மகன்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தன்னைப்பதவியில் இருந்து விலக்காமல் இருக்கவும் தந்திரமாகச் செயற்பட்டார் என்றும் சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்ததுண்டு. கடாஃபியின் பிள்ளைகளில் ஒரு மகளும் நான்கு மகன்களும் தப்பி ஓடி விட்டனர். இருவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இப்போது சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சயிஃப் கடாஃபியைக் கையளிக்கக் கோரும் பன்னாட்டு நீதி மன்று
சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபிமீது பன்னாட்டு நீதிமன்றால் ஏற்கனவே மானிடத்திற்கு எதிரான குற்றத்திற்காக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் லிபியாவின் தற்போதைய அரசு பன்னாட்டு நீதி மன்றுடன் ஒத்துழைக்க வேண்டிய கடப்பாட்டில் உள்ளது. ஆனால் சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி முதலில் லிபியாவில் நீதி விசாரணை செய்யப்பட வேண்டும் என்பதில் லிபிய அரசு உறுதியாக உள்ளதாகத் தெரிய வருகிறது. சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி லிபியாவில் கைதுகள் செய்தமை, கொலை செய்தமை, அடக்குமுறை, பொதுப் பணத்தைச் சூறையாடியமை போன்ற குற்றங்களுக்காக விசாரிக்கப்படவிருக்கிறார். அவருக்கு மரண தண்டனை கிடைப்பது நிச்சயம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் பன்னாட்டுச் சட்ட நிபுணர்கள் சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபியை லிபியாவில் விசாரிப்பதற்கு லிபிய அரசு பன்னாட்டு நீதிமன்றிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதன் பேரில் பன்னாட்டி நீதியாளர்கள் லிபியாவில் சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபியை விசாரிக்கக் கூடிய நீதிக் கட்டமைப்பு இருக்கிறதா என்று முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர். லிபிய நீதி அமைச்சர் சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபி மரண தண்டனையை எதிர் நோக்குகிறார் என்கிறார்.
காடாஃபி குடும்பத்துக்குள் முடங்கி இருக்கும் இரகசியங்கள்.
பொதுவாக பெற்றோல் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தங்கள் வெளிநாட்டு நிதி வைப்புக்களை ஐரோப்பிய அமெரிக்க வங்கிகளில் வைப்பிலிட்டு வைப்பது வழக்கம். தேவைப்படும் நேரங்களில் அவற்றை அரசுகள் முடக்கி வைப்பதும் உண்டு. இதை முன் கூட்டியே உணர்ந்த மும்மர் கடாஃபி தனது நிதி வளத்தை தங்கங்களாக வாங்கி தனது நாட்டிலேயே குவித்து வைத்துள்ளார். மும்மர் கடாஃபியிடம் 143.8தொன் எடையுள்ள தங்கம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தங்கத்தையும் மற்ற கடாஃபியின் சொத்துக்களையும் கண்டு பிடிப்பதற்கு சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபியின் கைது உதவி செய்யும்.
மேற்கு நாடுகளின் சதி அம்பலமாகுமா?
மும்மர் கடாஃபியுடன் மேற்கு நாடுகள் முன்னர் செய்து கொண்ட உடன்பாடுகள் மேற்கு நாட்டு அரசியல்வாதிகள் காடாஃபி குடும்பத்தினரிடம் இருந்து பெற்றுக் கொண்ட பணங்கள் போன்றவை சம்பந்தமான இரகசியங்கள் இன்னும் வெளிவரவில்லை. மும்மர் கடாஃபி பிடிபட்ட இடத்திலேயே கொல்லப் பட்டமை இந்த இரகசியங்கள் வெளிவராமல் இருப்பதற்காகவே என்றும் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர். சயிஃப் அல்-இஸ்லாம் கடாஃபியின் கைது பல வெடிக்கும் இரகசியங்களை (explosive secrets ) அம்பலமாக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment