மணமகன் ஃபொக்ஸும் மாப்புக்கு ஆப்பு வைத்த தோழனும் |
Lobby என்ற ஆங்கிலச் சொல்லிற்கு முகப்பறை, கூடுமிடம் என்று பொருள்படும். அரசியல் தரகர்கள்(Lobbyists)பாராளமன்றின் Lobby பகுதியில் பாராளமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களின் அபிப்பிராயத்தை மாற்றி பாராளமன்றின் செயற்பாடுகளில், முடிவுகளில், வாக்கெடுப்புக்களில் அவர்களை தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் நிறுவனங்களுக்கு சாதகமாக நடக்க வைக்க எடுக்கும் முயல்வர். இதனால்தான் இவர்களை Lobbyists என அழைப்பர். பல நாடுகள் அரசியல் தரகர்களின்(Lobbyists) நடைமுறை தொடர்பாக பல சட்டங்களையும் உருவாக்கியுள்ளன.
அரசியல் தரகர்கள்(Lobbyists) முன்னாள் பாராளமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மந்திரிகள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரிகளைப் பணிக்கமர்த்தி தமது பிரச்சார வேலைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். யூதர்கள் அரசியல் தரகர்கள் மூலம் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களை இஸ்ரேலுக்குச் சாதகமாக வெற்றிகரமாக மாற்றியமைத்தனர். மத அமைப்புக்கள் பசுமை இயக்கங்கள் போன்றவை கூட அரசியல் தரகர்கள் மூலம் தமக்குச் சாதகமாக அரச முடிவுகளை மாற்றியமைக்க முயல்வதும் உண்டு. அரசியல் தரகர்கள் பத்திரிகைகளையும் தமக்கு ஏற்புடையதாக செய்திகளைப் பிரசுரிக்கச் செய்வதுண்டு.
அரசியல் தரகர்கள் பொறுப்பான பதவியில் உள்ளவர்களின் பலவீனங்களை அறிந்து அதன் மூலம் அவர்களை தம் வழிக்குக் கொண்டுவருவதுண்டு. பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகிய லியோம் ஃபொக்ஸின் நண்பர் அடம் வெர்ரிட்டிக்கு அரசியல் தரகர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு. லியோம் ஃபொக்ஸ் முன்னாள் பிரித்தானிய பிரதமர் மார்கரெட் தட்சர் வழியில் இயங்கும் ஒரு தீவிர வலது சாரி அரசியல் வாதி. ஸ்கொட்லாந்தில் ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஃபொக்ஸ் அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் விசுவாசி. பிரித்தானியா மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் பார்க்க அமெரிக்காவுடன் அதிக நட்புப் பாராட்ட வேண்டும் என்ற கொள்கையுடையவர்களான அத்லாந்திக்வாதிகள் (Atlantists) கூட்டத்தைச் சேர்ந்தவர்.
ஃபொக்ஸும் வெர்ரிட்டியும்
ஃபொக்ஸும் வெர்ரிட்டியும் பதின் மூன்று ஆண்டுகள் நண்பர்களாக இருக்கிறார்கள். அடம் வெர்ரிட்டி எடின்பரோ பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்த போது அங்கு உரையாற்றச் சென்ற லியாம் ஃபொக்ஸுடன் நண்பரானார். பின்னர் இருவரும் ஒன்றாக மாடித் தொடர் வீட்டில் குடியிருந்தனர். ஃபொக்ஸின் திருமணத்தில் வெர்ரிட்டி மாப்பிள்ளைத் தோழனாகவும் இருந்தார். இருவரும் எப்போதும் ஓரே மாதிரியாக ஆடை அணிந்திருப்பர். அவர்களுக்கான ஆடைகள் ஹாங்காங்கில் உள்ள ஒரு சிறப்பு ஆடை தாயாரிப்பாளரால் தைக்கப்படுகின்றன. தையல்ச் செலவுகள் பர்கவ் என்னும் வெர்ரிட்டியின் பெயரில் உள்ள அறக்கட்டளையில் இருந்து செலுத்தப்படும். பர்கவ் அறக்கட்டளைக்கு பல வெளிநாட்டு உள்நாட்டு வர்த்தகப் பிரமுகர்களிடம் இருந்து நன்கொடைகள் கிடைத்துள்ளன. பர்கவ் அறக் கட்டளை எந்த "அற" நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. ஃபொக்ஸின் 18 அரச முறை வெளிநாட்டுப் பயணங்களில் வெர்ரிட்டியும் உடன் சென்றிருக்கிறார். மே 2010இல் ஃபொக்ஸ் பாதுகாப்பு அமைச்சரானபின்னர் வெர்ரிட்டி 22 தடவை பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்றிருக்கிறார். அடம் வெர்ரிட்டியின் தொழில் அட்டையில்( Business Card)பிரித்தானியப் பாராளமன்ற இலச்சனையுடன் லியாம் ஃபொக்ஸின் ஆலோசகர் என அடம் வெர்ரிட்டியை அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. அடம் வெர்ரிட்டி அரசியல் தரகர்களுடன் நெருக்கமானவர் என்று கருதப்படுகிறது. இஸ்ரேலின் அரசியல் தரகர்களாகக் கருதப்படுவர்கள் பலர் வெர்ரிட்டிக்கும் அவரது பெயரில் உள்ள நிறுவனங்களுக்கும் அறக்கட்டளைக்கும் பணம் வழங்கியுள்ளனர். அவரது போக்கு வரத்துச் செலவுகள் இந்த அறக்கட்டளையில் இருந்து செலுத்தப்பட்டுள்ளன. அரசியல் தரகு வேலைக்காக வெர்ரிட்டிக்குப் பணம் வழங்கிய நிறுவனங்கள் அவர் தனது தொழிலைச் செய்யாமல் துபாயில் உள்ள உயர்தர உல்லாச விடுதி உட்படப் பல விடுதிகளில் ஆடம்பரமாகச் செலவு செய்த்தை இட்டு ஆத்திரமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. வெர்ரிட்டிக்கும் இஸ்ரேலிய உளவுத் துறையான மொசாட்டிற்கும் தொடர்பு உள்ளதா இஸ்ரேலிய அரசியல் தரகர்களுக்கும் அவருக்கும் உள்ள தொடர்புகள் என்ன என்ற கேள்விக்களுக்கான விடைகள் இன்னும் வெளிவரவில்லை.
தன்னினச் சேர்க்கையாளரா?
50 வயதான லியாப் ஃபொக்ஸிற்கும் அடம் வெர்ரிட்டிக்கும் இடையிலான உறவு பாலியல் ரீதியானதா என்ற கேள்வியும் அண்மைக்காலங்களாக பிரித்தானியப் பத்திரிகைகளில் இடம்பெற்றிருந்தன. லியோம் ஃபொக்ஸிற்கு நெருக்கமானவார்கள் அவர் தனது மனைவி ஜெஸ்மியுடன் ஒற்றுமையாகக் குடும்பம் நடாத்துவதாகக் கூறுகின்றனர். பிரித்தானியப் படையில் பணிபுருந்த சாதாரணமான ஒருவருக்கு பல அதிகாரிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் லியோம் ஃபொக்ஸ் பாதுகாப்புத் துறை பணிமனையின் உயர் பதவி வழங்கினார். ஒரு வீட்டில் திருட்டுப் போன சமயம் இருவரும் அங்கு இரவு தங்கியிருந்தது பகிரங்கமானது. இருவரும் ஒன்றாக ஸ்பெயினில் விடுமுறையைக் கழித்ததும் பகிரங்கமாகியுள்ளது.
விநோதமான உறவுகளுக்குப் பெயர் போன வெஸ்ற்மின்ஸ்ரர் பிராந்தியம்.
உலக மக்களாட்சியின் தாய் எனக் கருதப் படும் பிரித்தானியப் பாராளமன்றம் அமைந்துள்ள வெஸ்ற்மின்ஸ்ரர் பிராந்தியம் விநோதமான உறவுகளுக்குப் பெயர் போனது. சகல அரசியல் கட்சிகளிலும் உள்ள அரசியல்வாதிகளைப் பற்றி விநோதமான சர்ச்சைக்குரிய கதைகள் அங்கு நடமாடுவது ஒரு சாதாரண விடயம்.
3M உடன் சரியாக ஒட்டவில்லை.
லியோம் ஃபொக்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சரான பின்பு 3M என்னும் அமெரிக்க நிறுவனத்துடன் செய்து கொண்ட பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் பிரச்சனைக்கு உரியதாகின. இது தொடர்பாக நீதி மன்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஃபொக்ஸிற்கும் 3M நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் பரிமாறப்பட்ட மின்னஞ்சலை கார்டியன் பத்திரிகை அம்பலப்படுத்தியது.
அடம் வெர்ரிட்டியினால் உருவாக்கப்பட்ட பகவ் லிமிரெட் என்னும் இலாப நோக்கற்ற நிறுவனத்திற்கு இஸ்ரேலின் அரசியல் தரகர்களிடம் இருந்து $230,000 அமெரிக்க டாலர்கள் கிடைத்த செய்தி லியாம் பொக்ஸின் பதவிக்கான கடைசி ஆணியாக அமைந்தது. இந்த பணத்தில் இருந்துதான் அடம் வெர்ரிட்டியினதும் லியாப் ஃபொக்ஸினதும் பல வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவு செலுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
இனக் கொலையாளிகளின் நண்பர்
கடந்த பத்து வருடங்களாக லியோம் ஃபொக்ஸும் அவரது தோழர் அடம் வெர்ரிட்டியும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பயணம் செய்திருக்கின்றனர் என்று சனல்-4 அம்பலப் படுத்தியது. 2009இல் பிரித்தானிய மக்களவையில் இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பாக நடந்த விவாத்தில் லியோம் ஃபொக்ஸ் இலங்கை அரசுக்கு ஆதரவாகப் பேசினார். அவர் பேசியதற்கு ஒரு வாரத்திர்கு முன்னர் ( 2009 நவம்பர் 14-17) அவர் இலங்கை அபிவிருத்தி அறக்கட்டளையின் செலவில் இலங்கைக்கு ஒரு வாரப் பயணத்தை மேற் கொண்டிருந்தார். பிரித்தானியப் பாராளமன்ற ஒழுக்காற்றுக் கோவையின் படி அவரது உரையில் அவர் இலங்கை சென்றதைக் குறிப்பிட்டிருந்திருக்க வேண்டும். 2009 மார்ச்சிலும் ஓகஸ்டிலும் லியோம் ஃபொக்ஸ் இலங்கை அரசின் செலவில் இலங்கை சென்றிருந்தார். 2010 டிசெம்பரில் இலங்கைக்கு ப் பயணம் செய்ய இருந்த லியோம் ஃபொக்ஸ் பல வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் பிரித்தானிய வெளிநாட்டமைச்சரின் பலத்த வற்புறுத்தலுக்கு மத்தியில் தனது இலங்கைப் பயணத்தக் கைவிட்டார். அடம் வெர்ரிட்டி பயணம் ஒத்தி வைத்ததாக அறிவிப்பு விடப் பண்ணியதுடன் 2011 ஜூலையில் முன்னாள் இலங்கை வெளிநாட்டமைச்சர் சாம் கதிர்காமரின் நினைவு நாளில் ஃபொக்ஸை உரையாற்றாவும் வைத்தார். இலங்கைக்கு பிரித்தானியா ஆயுதங்கள் விற்க வேண்டும் என இலங்கை அரசு அடம் வெர்ரிட்டி மூலம் அரசியல் தரகு செய்தது என்றும் சனல்-4 அம்பலப்படுத்தியது. அடம் வெர்ரிட்டியின் பல இலங்கைப் பயணங்கள் ஆயுத விற்பனை சம்பந்தமானதாகவே இருந்ததாம். ஃபொக்ஸும் வெர்ரிட்டியும் இலங்கை அபிவிருத்தி அறக்கட்டளையை ஆரம்பித்து இலங்கைக்கு நிதி திரட்டும் வேலைகளிலும் ஈடுபட்டனர். உலக அரங்கில் இலங்கையின் போருக்குப் பின்னரான அதன் மதிப்பைச் சீர் செய்யும் வழிவகைகள் பற்றி இலங்கை அரசு இருவருடனும் கலந்தாசோதித்து. மஹிந்த ராஜபக்ச 2010 டிசம்பரில் (தோல்வியில் முடிந்த) ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றுவதற்காக பிரித்தானியா வந்திருந்த வேளை அவரை பிரித்தானிய அரசு சார்பில் எவரும் சந்திக்கவில்லை. ஃபொக்ஸ் தனிப்பட்ட ரீதியில் தனது மஹிந்த மாத்தையாவைச் சந்தித்தார்.
முன்னுக்குப் பின்னர் முரணான தகவல்கள்
பாரளமன்றத்தில் எதிர்க் கட்சியினரால் கேட்கப் பட்ட கேள்விக்கு செப்டம்பர் 15-ம் திகதி பதிலளித்த ஃபொக்ஸ் வெர்ரிட்டி ஒரு அரச ஊழியர் அல்ல என்றும் எந்த ஒரு வெளிநாட்டுப் பயணத்திலும் வெர்ரிட்டி தன்னுடன் வரவில்லை என்றும் தெரிவித்தார். தனது பணிமனைக்கு வெர்ரிட்டி வந்து போனது பணி நிமித்தமற்றது என்றும் கூறினார். பின்னர் அக்டோபர் 9-ம் திததி தனது 3M உயர் அதிகாரி பௌட்லருடனான சந்திப்புத் தவறானது என்பதை ஒத்துக் கொண்டார்.
தன் மீதான குற்றங்களை ஆரம்பத்தில் வன்மையாக மறுத்து வந்த லியோம் ஃபொக்ஸ் தொடர்ந்து அவர் மீதான குற்றச் சாட்டுக்கள் வரவே இறுதியாக 14-ம் திகதி வெள்ளிக் கிழமை பதவி விலகினார். இன்னும் ஒரு வாரத்தில் லியோம் ஃபொக்ஸின் மீதான பாராளமன்ற விசாரணை முடிந்ததும் இன்னும் பல தகவல்கள் வெளிவரும்.
No comments:
Post a Comment