Wednesday, 12 October 2011

இனி இந்திய பாக்கிஸ்தானியப் போட்டிக்கு நடுவில் ஆப்கானிஸ்த்தான் தவிக்குமா?

பிரித்தானிய ஆக்கிரமிப்பில் பலகாலம் ஆப்கானிஸ்த்தான் அகப்பட்டிருந்தது. பின்னர் சோவியத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து அமெரிக்க கைக்கூலிகளுக்கும் சோவியத் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையில் நடந்த போரில் ஆப்கானிஸ்தான் மக்கள் அகப்பட்டுத் தவித்தனர். பின்னர் இசுலாமியத் தீவிரவாதிகளின் பிடியில் தவித்தனர். 2001இல் இருந்து அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடக்கும் போரில் ஆப்கானிஸ்த்தானிய மக்கள் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆப்கான் மக்களின் தவிப்பு கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

பாக்கிஸ்தானும் ஹக்கானியும்
அடுத்ததாக ஆப்கானிஸ்த்தானிய மக்கள் இந்திய-பாக்கிஸ்த்தானியப் போட்டிக்குள் அகப்பட்டுத் தவிக்க இருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக அமெரிக்காவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையில் பெரும் அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது. பாக்கிஸ்தானின் சில பிராந்தியங்களில் ஒரு அமெரிக்கத் தாக்குதலுக்கு எதிரான பல தயாரிப்பு நடவடிக்கைகள் நடந்து கொண்டும் இருந்தன. இந்த அமெரிக்க-பாக் முறுகலுக்கு வழிவகுத்தது ஓய்வு பெற்றுச் செல்லும் அமெரிக்காவின் உயர் படைத்துறை அதிகாரி மைகேல் முலென் தீவிரவாத அமைப்பான ஹக்கானி வலையமைப்பு பாக்கிஸ்த்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ (Inter-Services Intelligence) உடன் நெருங்கிய தொடர்புடையது என்று கூறியமையே.

தலிபான் மற்றும் அல் கெய்தாவிற்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு உதவிய பாக்கிஸ்த்தான் ஹக்கானிக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு மட்டும் முரண்டு பிடிப்பது ஏன்? 2001இல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமிக்கும் முடிவை எடுக்க முன் அதற்கு நண்பனாக இணைத்துக் கொள்ள இரு தெரிவுகள் இருந்தன. அவை இந்தியாவும் பாக்கிஸ்த்தானும். அப்போது இந்தியப் பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அமெரிக்காவிற்கு சகல உதவிகளும் வழங்க தாயாக இருந்தார். பெருந்தொகை இந்தியப் படைகளை அமெரிக்கப் படைகளுடன் இணைத்து ஆப்கானிஸ்த்தானில் செயற்படவும் தயாராக இருப்பதாகவும் அமெரிக்காவிற்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அமெரிக்கா ஆப்கான் படையெடுப்பில் பாக்கிஸ்த்தானை தனது தந்திரோபாய பங்களியாக இணைத்தது. ஆனால் இந்தியாவை முற்றாக ஒதுக்கி வைக்கவில்லை. ஆப்கானில் பல கட்டுமானப் பணிகளில் இந்தியாவையும் பங்கேற்க வைத்தது. பாக் ஆதரவு திவிரவாதிகள் ஆப்கானில் உள்ள இந்தியர்களுக்கு எதிராக கடத்தல், கொள்ளை, கொலை போன்றவற்றில் ஈடுபட்டனர். பாக்கிஸ்த்தான் தனது இந்திய எதிர்ப்புக் கொள்கைக்கு பல தீவிரவாத இயக்கங்களைப் பயன்படுத்தி வருகிறது. பாக்கிஸ்த்தானின் வெளியுறவுக் கொள்கையின் மையக் கருவாக இந்த தீவிரவாத அமைப்புக்களே இருக்கின்றன.

ஹக்கானி வலையமைப்பு
மௌலவி ஜலாலூதீன் ஹக்கானி 1980இல் ஆப்கானில் சோவியத் ஒன்றிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக மும்முரமாகப் போராடியவர். ஆப்க்கானில் தற்கொலைத் தாக்குதலை முதலில் அறிமுகம் செய்தவர். 1980களில் அமெரிக்க உளவுத் துறையான சிஐஏயின் பெரும் சொத்தாகவும் செல்லப் பிள்ளையாகவும் இருந்தவர் மௌலவி ஜலாலூதீன் ஹக்கானி. இவர் வெள்ளை மாளிகையில் ரொனாட் ரீகனையும் சந்தித்தவர். ஆப்கானிஸ்த்தனில் இருந்து சோவித் ஒன்றியம் விரட்டியடிக்கப் பட்ட பின்னர் அமைக்கப்பட்ட ஆப்கான் முஜாகிதீன் அரசில் முதல் நீதி அமைச்சரும் இவரே. 2001இல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானை ஆக்கிரமித்த பின்னர் ஹக்கானி வலையமைப்பு பாக்கிஸ்தானில் செயற்பட்டு வருகிறது. இதில் 12000பயிற்றப்பட்ட போராளிகள் இருக்கின்றனர். 2008இல் ஆப்கான் தலைநகர் காபுலில் இந்தியத் தூதுவரகத்தில் ஹக்கானி வலையமைப்பு தற்கொலைத் தாக்குதலை நடாத்தி 58பேரைக் கொன்று 141பேரைக் காயப்படுத்தியது. இத்தாக்குதலுக்கு பாக்கிஸ்த்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ உதவியது என்று அமெரிக்காவும் இந்தியாவும் குற்றம் சுமத்தின.


ஹக்கானி வலையமைப்பும் பாக்கிஸ்த்தானும்
ஹக்கானி அமைப்பை இந்தியாவிற்கு எதிரான ஒரு ஆயுதமாக பாக்கிஸ்த்தான் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஹக்கானி அமைப்பிற்கு எதிரான பாக் அரசு ஏதாவது நடவடிக்கைகள் எடுத்தால் அது பாக்கிஸ்தானின் பல நகர்களில் தற்கொலைத் தாக்குதல்களாக வெடிக்கும் என் அஞ்சப்படுகிறது. 2014இல் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் அங்கு இந்திய ஆதிக்கம் நிலவலாம் என்று பாக்கிஸ்த்தான் அஞ்சுகிறது. ஆப்கானிஸ்த்தானின் தற்போதைய அரசு அமெரிக்காவிற்குப் பின்னர் இந்தியாவுடன் தனது உறவை பாக்கிஸ்த்தானுடன் வளர்ப்பதிலும் பார்க்க இந்தியாவுடன் வாளர்க்க விரும்புகிறது. பாக்கிஸ்த்தானில் ஒழுங்கான மக்களாட்சி இல்லை. சிறந்த பொருளாதார முன்னேற்றமும் இல்லை. இவை இரண்டும் உள்ள இந்தியாவை ஆப்க்கான் அரசு விரும்புகிறது. ஒக்டோபர் 5-ம் திகதி இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்ட ஆப்கான் அதிபர் ஹமீட் ஹர்ஜாய் இந்தியாவுடனான உறவைக் கட்டியெழுப்ப முயற்சித்தார். அத்துடன் அவர் பாக்கிஸ்த்தானையும் வார்த்தைகளால் சமாதானப் படுத்த முயற்ச்சித்தார். இந்தியாவை நண்பன் என்றும் பாக்கிஸ்த்தானை இரட்டைச் சகோதரன் என்றும் விபரித்தார். ஆப்கான் அதிபர் ஹமீட் ஹர்ஜாயின் இந்திய ஆதரவுப் போக்கை பாக்கிஸ்த்தான் விரும்பவில்லை. அவரை எப்படிப் பதவியில் இருந்து விரட்டுவது என்பதே பாக்கிஸ்த்தானின் பெரும் பிரச்சனை.இதற்க்கான பாக்கிஸ்த்தானிய ஆயுதமாக பாக்கிஸ்த்தானில் உள்ள இசுலாமிய தீவிரவாத அமைப்புக்களை பாக்கிஸ்த்தான் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஆதிக்கம்
2014இல் அமெரிக்கா ஆப்கானில் இருந்து வெளியேறிய பின்னர் அங்கு இந்திய ஆதிக்கம் தலை தூக்கினால் பாக்கிஸ்த்தான் கிழக்கிலும் மேற்கிலும் இந்தியாவின் ஆதிக்கத்தைச் சமாளிக்க வேண்டிய ஆபத்தை எதிர் நோக்கும். பாக்கிஸ்த்தானின் பாலுச்சிஸ்தான் மாநிலத்தில் இந்தியா பிரிவினை வாதத்தை தூண்டலாம் எனவும் பாக் அஞ்சுகிறது. ஹமீட் ஹர்ஜாய் இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தில் ஆப்கானின் காவற்துறைக்கும் படையினருக்கும் இந்தியா பயிற்ச்சி அளிப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்ச்சியாளர்கள் என்ற போர்வையில் இந்தியப் படைகள் ஆப்கானில் நிலை கொள்ளலாம். ஆப்கானிற்கு இந்தியா 1.5பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான உதவிகளையும் வழங்கியுள்ளது. ஆப்கானின் கனிம வழங்களைச் சுரண்டும் உரிமையும் இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 2014இல் அமெரிக்கா ஆப்கானிஸ்த்தானில் இருந்து வெளியேறிய பின்னர் ஆப்கானின் கிழக்குப் பிராந்தியங்களில் இந்திய எதிர்ப்புக் கொள்கை கொண்ட  இசுலாமிய தீவிரவாத அமைப்புக்களான தலிபான் லக்சர் இ-தைபா போன்றவை வளர வாய்ப்பாக அமையும். 2009இல் ஆப்கானில் எடுத்த கருத்துக் கணிப்பில் ஆப்கான் மக்களிடை இந்தியா பிரபலம் பெற்றிருக்கக் காணப்பட்டது.

பாக்கிஸ்த்தானின் அச்சம்
ஆப்கானில் உள்ள சிந்து, கஷ்மீரி, பஞ்சாபி, பொல்டி போன்ற இனக் குழுமங்கள் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை. இது ஆப்கானுக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒரு கலாச்சாரத் தொடர்பையும் ஏற்படுத்துகிறது. ஆப்கானில் இந்திய ஆதிக்க அச்சத்தை முன்னாள் பாக் அதிபர் பர்வஸ் முஸரஃப் அண்மையில் வெளியிட்டிருந்தார். இந்தியா ஒரு "பாக்கிஸ்த்தான்-எதிர்ப்பு-ஆப்கானை" உருவாக்க முயல்கிறது என்று அவர் தெரிவித்திருந்தார்.

இருக்கும் பிரச்சனை போதாது என்று சீனாவும் வரும்.
2014இற்குப் பின்னர் ஆப்கானில் இந்திய ஆதிக்கம் அதிகரிக்குமா என்ற அச்சமும் பாலுச்சிஸ்த்தானை இந்தியா பாக்கிஸ்த்தனில் இருந்து பிரிக்குமா என்ற அச்சமும் பாக்கிஸ்த்தானை சீனாவிடம் சரணடைய வைக்கும். சீனா பாலுச்சிஸ்த்தானுடாக ஈரானில் இருந்து எரிபொருள் விநியோகப் பாதை ஒன்றை அமைக்க முயல்கிறது. ஆப்கானின் இந்திய ஆதிக்கத்தை சமாளிக்க பாக்கிஸ்த்தானுக்கு ஹக்கானி அமைப்பும் சீனாவும் பெரிதும் தேவைப்படும்.

பிரித்தானியா போய், சோவியத் ஒன்றியம் போய், அமெரிக்கவும் நேட்டோவும் போய் பின்னர் இந்திய-பாக் போட்டிக்குள் ஆப் மக்கள் தவிப்பார்களா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...