வியாழக்கிழமை பங்குச் சந்தைத் தரகர்கள் யாவரும் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் தண்ட உதை(Penalty)யைத் தவறவிட்டவர்கள் போல் தலையில் கைவைத்தபடி காணப்பட்டனர்.
he missed penalty kick |
He lost his portfolio |
22-09-2011 வியாழக்கிழமை பிரித்தானியப் பங்குச் சந்தையின் விலை வீழ்ச்சி 4.7% யாக இருந்தது. இது கடந்த 3ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரும் வீழ்ச்சி. கடன் நெருக்கடி இல்லாததும் ஐரோப்பாவின் பலமிக்க பொருளாதாரமுமான ஜெர்மனியின் பங்குச் சந்தையும் தப்பவில்லை. அதன் பங்குச் சுட்டெண் 4.96% விழுந்தது. கடந்த மே மாதத்து பங்கு விலைகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனியின் பங்குச் சுட்டெண் 30% விழுக்காட்டைக் கண்டுள்ளது. பங்குச் சந்தை வீழ்ச்சி ஐந்து கண்டங்களிலும் நிகழ்ந்தது. ஷாங்காய் சுட்டெண் 3.08% வீழ்ந்தது.
பண்டங்களின் விலைகளும் சரிவு
முதலீட்டாளர்கள் எந்தவித நம்பிக்கையும் இல்லாத நிலையில் காணப்பட்டனர். அவர்கள் தங்கத்திலும் முதலிடத் தயாராக இல்லை. தங்கத்தின் விலை 3% வீழ்ந்தது. மசகு எண்ணை விலையும் 3% குறைந்தது. 24 பண்டங்களுக்கான விலைச் சுட்டெண் 4.5% வீழ்ச்சியடைந்தது.
ஆபத்தான கட்டத்தில் உலகப் பொருளாதாரம்.
உலக வங்கியும் பன்னாட்டு நாணய நிதியமும் உலகப் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் உள்ளது என்று சொல்கின்றன. ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி, எரிபொருள் விலை அதிகரிப்பு, அரபு நாடுகளில் நடந்த கிளர்ச்சி ஆகியவை தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடியின் மூன்று முக்கிய காரணிகள். ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து, கிரேக்கம் போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் அரச கடன் நெருக்கடியும், வங்கிகளின் நிதி நெருக்கடியும் எதிர்பார்ததிலும் மோசமாக அமைந்தன. அடுத்த ஆண்டு தேர்தலை எதிர் நோக்கும் அமெரிக்காவின் இரு அரசியல் கட்சிகளிடை பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நடக்கும் இழுபறி எந்த விதத்திலும் நாட்டுக்கு உதவுவதாக இல்லை.
நல்ல அறிகுறிகள் ஏதும் இல்லை.
ஐரோப்பிய நாடுகளில் மொத்தக் கொள்வனவு குறைந்து கொண்டே போகிறது. யூரோ நாணய வலய நாடுகளில் Purchasing Managers’ Index 59.7இல் இருந்து 49.2இற்குக் குறைந்தது. சீனாவில் தொழிற் துறை நடவைக்கைகளின் வேகம் குறைகிறது. ஜேர்மனியிலும் பிரான்சிலும் இதே நிலைமை.ஜேர்மனியில் உற்பத்திப் பொருள்களுக்கான உத்தரவுகள் குறைந்தன. (manufacturing orders in Germany declined). கடன்படு திறன் போன்றவற்றை மதிப்பீடு செய்யும் Standard & Poor நிறுவனம் இத்தாலியின் 7 வங்கிகளின் கடன்படு திறனைக் குறைத்துள்ளது.
இரட்டை வீழ்ச்சிப் பொருளாதார மந்தம் ( Double Dip Recession)
அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இரட்டை வீழ்ச்சி பொருளாதார மந்தம் ( Double Dip Recession) ஏற்படுமா என்பது தான் இப்போது உலக பொருளாதார நிபுணர்களை வாட்டி எடுக்கும் கேள்வி. இரட்டை வீழ்ச்சி பொருளாதார மந்தம் ( Double Dip Recession) என்பது ஒரு முறை வீழ்ச்சி கண்ட பொருளாதாரம் அதிலிருந்து எழுந்தவுடன் மீண்டும் விழுவதாகும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் 2008இல் இருந்து மந்தமடையத் தொடங்கிய பொருளாதாரம் அண்மையில் சில நாடுகளில் சிறு வளர்ச்சியக் கண்டது. மீண்டும் ஒரு பெரும் வீழ்ச்சி ஏற்படுமா என்பதுதான் எல்லா முதலீட்டாளர்களையும் வாட்டும் கேள்வி. முதலீட்டாளர்கள் நம்பிக்கையில்லா நிலையிலும் மக்கள் எதிர்காலத்தைப் பற்றி அச்சம் கொண்ட நிலையிலும் இருக்கின்றனர்.
செல்வந்தர்கள் மீது அதிக வரிச்சுமை
பிரான்ஸும் இத்தாலியிம் அதிக வருமானமுள்ளவர்களின் மீதான வரியை அதிகரித்து விட்டன. பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் செல்வந்தர்களிடமிருந்து அதிக வரி அறவிடும் திட்டம் இழுபறியில் உள்ளது. முதலாளித்துவ நாடுகளின் அரசுகள் தங்கள் இருப்பை உறுதி செய்ய இந்த அதிகரித்த வரி விதிப்பைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால் அரசுகளை உருவாக்கும் முதலாளிகள் இதை வரவேற்கப்போவதில்லை. முதலாளிகள் அரசுகளின் செலவுகளைக் குறைக்கும்படி வற்புறுத்துகிறார்கள். ஆனால் முதலாளித்துவ நாடுகளின் நிதி நெருக்கடியை செலவுக்குறைப்பால் மட்டும் சமாளிக்க முடியாது. செலவுக் குறைப்பு வறிய மக்களைப் பெரிதும் பாதிக்கும். இது ஒரு வர்க்க முரண்பாட்டுக்கு வழிகோலும். மக்களுக்கு முதலாளித்துவ ஆட்சி முறைமை மீது ஆத்திரத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தும். சமூகக் குழப்பத்திற்கும் கலவரங்களுக்கும் வழிவகுக்கும்.
முதலாளித்துவ நாடுகளில் கிளர்ச்சி தோன்றலாம்.
முதலாளித்துவ நாடுகளில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை குறைவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. உலக சோசலிஸ் இனையத் தளம் ஐரோப்பாவில் பல மில்லியன் கணக்கானோர் வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என்கிறது. துனிசியா, எகிப்து போன்ற நாடுகளில் இளைஞர்களிடையே ஏற்பட்ட வேலையில்லாப் பிரச்சனை அவர்களைச் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழவைத்து ஆட்சியாளர்களைப் பதவியில் இருந்து விரட்டியது. முதலாளித்துவப் பொருளாதார நாடுகளில் அதிகரித்து வரும் வேலையில்லாப் பிரச்சனை ஆட்சியாளர்களை மாற்றுமா ஆட்சி முறையை மாற்றுமா?
No comments:
Post a Comment