வேலையாட்கள் வேலை இழப்பதுண்டு. பின்னர் மீண்டும் வேலையில் இணைவதுண்டு. வர்த்தக நிறுவனங்களில் நிதி நெருக்கடி என்றால் வங்கிகள் கடன் கொடுத்து அவற்றின் நிதி நெருக்கடியைச் சீர் செய்து இலாபமீட்டும். வங்கிகளில் நிதி நெருக்கடி என்றால் அரசு மத்திய வங்கியூடாக வங்கிகள் முறிவடைவதைத் தடுத்து பொருளாதார நடவடிக்கைகள் நாட்டில் சீராக நடக்கவும் வளர்ச்சியடையவும் உதவி செய்யும். இப்போது அரசே நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன.
ஒருவர் வேலையை இழக்கும் போது அவரது கொள்வனவு குறையும்; அவர் அரசுக்குச் செலுத்தும் வரி குறையும்; வேலையை இழந்தவருக்கு அரசு வாழ்வாதார நிதி உதவி செய்ய வேண்டும்; அரச செலவீனம் கூடும்; நாட்டில் பலர் வேலை இழக்கும் போது நாட்டின் மொத்தக் கொள்வனவு குறையும்; அரச வரி வருமானம் குறையும்; அரச செலவு அதிகரிக்கும்; கொள்வனவு குறைய உற்பத்தி குறையும்; வியாபார நிறுவனங்கள் முறிவடையும்; அவற்றிக்கு கடன் கொடுத்த வங்கிகள் முறிவடையும்; அரசுக்கு விற்பனை வரி வருமான வரி போன்றவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் குறையும்; அரசுக்கு நிதி நெருக்கடி தோன்றும்.
அன்று ஒளவையார் சொன்னார்:
- வரப்புயர நீருயரும்
- நீருயர நெல் உயரும்
- நெல் உயர குடி உயரும்
- குடி உயரக் கோன் உயர்வான்.
அரசுக்கு நிதி நெருக்கடி என்றால் அரசின் கடன் முறிகளில் முதலீடு செய்வோர் அதிக வட்டி வீதத்தை எதிர்பார்ப்பர். இதனால் நாட்டின் வட்டி வீதம் அதிகரித்து உற்பத்தித் துறையில் முதலிடுவர். இப்படிப்பட்ட பிரச்சனைகளால் அமெரிக்க உட்படப் பல நாடுகள் திக்குத் தெரியாமல் தவிக்கின்றன. மக்கள் கையில் பணப் புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் அவர்கள் அந்தப் பணத்தில் கொள்வனவு செய்ய வேண்டும். அவர்கள் கொள்வனவு செய்ய உற்பத்தி அதிகரிக்கும். உற்பத்தி அதிகரிக்க வேலை வாய்ப்பு அதிகரிக்கும். வேலைவாய்ப்பு அதிகரிக்க நாட்டின் மொத்தக் கொள்வனவு மேலும் அதிகரிக்கும். கொள்வனவு அதிகரிக்க உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.
அமெரிக்க மக்களின் கையில் பணத்தை புழங்க விடுவது எப்படி என்றுதான் இப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் அவரது பொருளியல் ஆலோசகர்களும் தலை முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்தான் பராக் ஒபாமா தனது தொழில் உரையை வியாழன் இரவு ஆற்றினார். அந்த உரை American Jobs Actஐ உருவாக்கும். அமெரிக்காவின் சட்டவாக்க உரிமை பாராளமன்றத்தின் கைகளில் இருக்கிறது. அமெரிக்கப் பாராளமன்றம் மக்களவை (congrss), மூதவை (senate) என்ற இரு சபைகளைக் கொண்டது. இரு சபைகளும் அங்கீகரித்தாலே ஒரு சட்டம் நிறைவேற்றப்பட முடியும். மக்களவை ஒபாமாவின் எதிர்கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒபாமா மக்கள் கையில் பணம் புழங்கவிட பெரும் செல்வந்தர்களின் வரியை அதிகரிக்க விரும்புகிறார். அந்த வரி வருமானத்தின் மூலம் அதிக ஆசிரியகளை வேலைக்கு அமர்த்தியும், சிறு முதலீட்டாளர்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளுக்கு உதவிகள் வழங்கியும் நாட்டின் கொள்வனவையும் உற்பத்தியையும் அதிகரிக்க விரும்புகிறார் ஒபாமா.
மக்களவையின் சவால்களைச் சமாளிக்க ஒபாமா தனது வார்த்தைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுத்தார். ஒபாமா சமர்ப்பித்த அமெரிக்கத் தொழிற் சட்டத்தின் நோக்கம் அதிக மக்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துவது; மக்களின் சட்டைப்பைகளில் அதிக பணத்தை இடுவது; அதிக கட்டுமானத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது; அதிக ஆசிரியர்களை வேலைக்கு அமர்த்துவது; அதிக நிபுணர்களை வேலைக்கு அமர்த்துவது; நீண்டகாலமாகத் தொழிலின்றி இருப்போர்க்கு வேலை வழங்குவது; ஆட்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு வரி விலக்களிப்பது; ஊழியர்களின் வரியைக் குறைப்பது; சிறு முதலீட்டாளர்களின் வரிச்சுமையைக் குறைப்பது.
இப்படி தனது உரையை கவர்ச்சிகரமாகத் தயார் செய்திருந்தார் ஒபாமா. முதலீட்டாளர்களுக்கும் மக்களுக்கும் உலகப் பொருளாதார மேடைக்கும் நம்பிக்கை ஊட்ட ஒபாமா விரும்பினார். தனது 34 நிமிட உரையில் இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுங்கள் என்று எட்டுத்தடவை கூறியிருந்தார் ஒபாமா. ஆனால் குடியரசுக் கட்சியினர் இவை வெறும் வார்த்தையாடல்கள் மட்டுமே. இதில் சரக்கு எதுவுமில்லை என்கின்றனர். குடியரசுக் கட்சியினர் தேர்தலில் மக்கள் மீதான வரியை அதிகரிப்பதில்லை என்ற வாக்குறுதியுடனேயே மக்களவைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். ஒபாமாவின் புதிய திட்டம் பெரும் செல்வந்தர்கள் மீதான வரியை அதிகரிப்பதாக உள்ளது. இதனால் ஒபாமாவின் திட்டம் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே.
ஒபாமாவின் American Jobs Act- அமெரிக்க தொழிற் சட்டத்திற்கு $447பில்லியன்கள் செல்வாகும் என்றும் அது 500,000இல் இருந்து இரண்டு மில்லியன்கள் வரையிலான வேலைகளை உருவாக்கும் என்றும் பொருளியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வர இருப்பதால ஒபாமாவின் உரை முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. அத்துடன் அமெரிக்கா பொருளாதர நெருக்கடியில் இருந்து மீளும் போது அமெரிக்கவிற்கு ஏற்றுமதி செய்யும் நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும். இதனால் ஒபாமா என்ன சொல்லப் போகிறார் என்று உலகமே எதிர்பார்த்திருந்தது. ஒபாமாவின் உரைக்குப் பின்னர் உலகெங்கும் பங்குச் சந்தைகள் பெரும் விலை வீழ்ச்சிக்கு உள்ளானது. இது ஒபாமாவின் உரை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை தரவில்லை என்பதைக் காட்டுகிறது. ஒபாமாவின் உரைக்குப் பின்னர் கருத்துத் தெரிவித்த அமெரிக்க வேலைகொள்வோர்(முதலாளிமார்கள்) தாம் ஒபாமாவின் உரையை வரவேற்கும் அதேநேரத்தில் தாம் இப்போதைக்கு புதிதாக எவரையும் வேலைக்குச் சேர்க்கும் நிலையில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா இப்போது எதிர்கொள்ளும் சீன வளர்ச்சி, உலகெங்கும் வளரும் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, எரிபொருள் தட்டுப்பாடு, கடன் நெருக்கடி போன்றவற்றுடன் பார்க்கையில் ஒபாமாவின் உரை யானைப் பசிக்கு சோளப்பொரி.
No comments:
Post a Comment