அமெரிக்க குடியரசுக் கட்சியினரின் தவறான நடவடிக்கை |
என்னடா இந்த வாஷிங்டனுக்கு வந்த சோதனை
அமெரிக்க நாணயத்தின் மதிப்பு இப்படியாகி விட்டதோ? |
அமெரிக்க அரசின் கடன் உச்ச வரம்பை உயர்த்தாவிடில் உலக நிதிச் சந்தை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உச்ச வரம்பு கடைசி நேரத்தில் உயர்த்தப் பட்டது. ஆனால் உலக நிதிச் சந்தையில் நெருக்கடிகள் தொடருகின்றன. அமெரிக்க அரசின் கடன் உச்ச வரம்பை உயர்த்தாவிடில் அமெரிக்காவின் கடன்படு திறன் தாழ்த்தப்படும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் உயர்த்திய பின்னும் அமெரிக்காவின் கடன்படு திறன் தாழ்த்தப்பட்டது. 1998இல் ஜப்பானின் கடன்படு திறன் குறைக்கப்பட்ட பின்னர் அங்கு பொருள்களின் விலைகள் சரியத் தொடங்கின. பணச்சுருக்கம் ஏற்பட்டது. பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதே நிலை அமெரிக்கவிற்கும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு தடிமன் வந்தால் உலகெங்கும் நிமோனியா வரும். இப்போது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு நிமோனியா. இதனால் உலகப் பொருளாதாரத்திற்கு என்ன நடக்கும் என்ற பயம் ஆட்சியாளர்களை ஆட்டிப் படைக்கிறது. உலக பொருளாதார உற்பத்தியில் காற்பங்கு அமெரிக்காவினுடையது. சென்ற ஆண்டு 2% ஆல் குறைந்தத அமெரிக்க மொத்தத் தேசிய உற்பத்தி இனி 10% வீதத்தால் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சகல துறைகளும் நெருக்கடியில் தவிக்கும் போது முதலாளித்துவ அரசுகள் வங்கிகளுக்கு மட்டும் நிதி உதவி செய்கின்றன என்பதை விளக்கும் கருத்துப் படம். |
கடன் கொடுத்துக் கலங்கும் சீனா.
தனது மக்களைச் சுரண்டி அவர்களுக்கு மிகக் குறைவான கூலியைக் கொடுத்து பல உற்பத்திப் பொருட்களை சீனா மலிவான விலையில் உற்பத்தி செய்கிறது. அமெரிக்காவின் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் சீனத் தொழிலாளர்களில் கூலி இருபதில் ஒரு பங்கு மாத்திரமே. தனது மலிவான பொருட்களை உலகெங்கும் ஏற்றுமதி செய்த சீனாவிற்கு வெளிநாட்டுச் செலவாணி உபரியாக 3.2ரில்லியன் டொலர்கள் கிடைத்தன. அவற்றில் மூன்றில் இரு பங்கை சீனா உலகப் பெரும் பணக்கார நாடான அமெரிக்காவில் முதலீடு செய்தது. அவற்றில் பெரும்பாலானவை அமெரிக்க அரசின் கடன் முறிகளில் முதலிடப்பட்டன. சுருங்கக் கூறின் வரவிற்கு மிஞ்சி செலவு செய்யும் அமெரிக்காவிற்கு சீனா கடன் கொடுத்தது. அமெரிக்கா தனது நாட்டில் இருந்து பொருட்களை போதிய அளவில் இறக்குமதி செய்யவுமில்லை சீனா தனது நாணயத்தின் பெறுமதியைக் கூட்டவுமில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா சீனாவைப் பழி வாங்க சீனாவின் அமெரிக்க முதலீடுகளின் பெறுமதியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கிறதா என்பது பெரும் கேள்வி. பராக் ஒபாமா அரசியலமைப்பின் 14வது திருத்தத்தைப் பாவிக்காமல் எதிர்க்கட்சியினருக்கு விட்டுக் கொடுத்தது அமெரிக்காவின் நடவடிக்கையில் சந்தேகத்தை சீனாவிற்கு ஏற்படுத்துகிறது. தனது முதலீடு கரைவதையிட்டு சீனா கலங்கி நிற்கிறது. சீன அரச ஊடகம் அமெரிக்காவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் வரவுக்கு மிஞ்சி செலவழித்ததாக திட்டித் தீர்த்தது.
அமெரிக்கக் குடியரசுக் கட்சியினர் செலவீனக் குறைப்பால் ஏழைகளுக்கு ஏற்படும் ஆபத்தை விட வரி அதிகரிப்பால் பணக்காரர்களுக்கு ஏற்படவிருப்பதை விளக்கும் கருத்துப் படம். |
பலமுனைச் சிக்கல்.
உலகப் பொருளாதாரத்தில் உறபத்தித் துறை, நாடுகளிடையான வர்த்தகம், வங்கித்துறை, நாணயமாற்று, பங்கு வர்த்தகம் போன்றவை முக்கியமானவை. உற்பத்தித் துறை பாதிக்கப்படுவதுண்டு. நாடுகளிடையான வர்த்தகம் தடைப்படுவதுண்டு. வங்கிகள் திவாலாவதுமுண்டு. பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சிகளும் நிகழ்ந்ததுண்டு. நிதிச் சந்தை ஆட்டம் காண்பதுமுண்டு. இவை தனித்தனி அல்லது இரண்டு ஒன்றாக நடப்பதுண்டு. ஆனால் இப்போது பல முனைகளில் உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணுகிறது. வங்கிகள் நட்டம் காண்கின்றன. அரச கடன் முறிகளின் விலை வீழ்ச்சியைக் காண்கிறது. பங்குச் சந்தைகள் சரிகின்றன. உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் பிழைக்கும் போது அரசுகள் களத்தில் இறங்கிச் செயற்படும். ஆனால் இப்போது பல அரசுகள் நிதிப் பற்றாக் குறையை எதிர் கொள்கின்றன. ஏற்கனவே பல நாடுகள் வட்டிவீதத்தை குறைத்து விட்டன இனிக் குறைக்க இடமில்லை. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், அயர்லாந்து, கிரேக்கம் உடபடப் பல நாடுகளின் அரசுகள் வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் தவித்து நிற்கின்றன. பொருளாதாரம் நலிவடையும் போது அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளான வரிக் குறைப்பு அரச செலவீன அதிகரிப்பு வட்டி வீதக் குறைப்பு போன்றவற்றைச் செய்ய முடியாத நிலை உலகின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ளது. அப்படிச் செய்ய அரசு கடன்பட வேண்டி வரும். அரசுகள் பல கடன் சுமை கூடியதால் தவிக்கின்றன. வருங்காலப் பொருளாதார நிலையில் நம்பிக்கை இல்லாத நிலையில் உற்பத்தியாளர்கள் வேலைக்கு ஆட்சேர்ப்பது குறையும். மக்கள் தங்கள் செலவைக் கட்டுப்படுத்துவார்கள். இது ஒரு எதிர்மறை விளைவை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும். இதனால் நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கையில் இறங்கலாம். உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணும் போது உலகெங்கும் வேலையில்லாப் பிரச்சனை தலை தூக்கும். வேலையில்லாப் பிரச்சனை சமூக குழப்பங்களுக்கு வழி வகுக்கும். சுதந்திரப் பொருளாதார முறைமைமீதும் இப்போததூள்ள ஆட்சி முறைமை மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழந்து மக்கள் கிளர்ந்து எழலாம்.
1 comment:
முதலாளித்துவப் பொருளாதார முறைமை இப்போது ஆட்டம் காண்கிறது என்பது உண்மை. அதன் அசிங்க முகத்தை உலகம் உணரும் போது அதன் இருப்பிற்கு ஆபத்து வரும்.
Post a Comment