புத்திசாலியான சீமோனா படித்துப் பட்டம் பெறவில்லை. அவள் புத்திசாலித்தனமும் திறமையும் அவளுக்கு Morgan Stanleyஎன்னும் நிறுவனத்தில் analyst வேலையையும் தேடிக்கொடுத்தது. சொந்தமாக ஒரு உணவகமும் நடத்தி வந்தாள். அவளது வாழ்வில் ராம்ரத்தன் குறுக்கிடும்வரை எல்லாம் ஒழுங்காகவே இருந்தது. சீமோனாவின் உணவகத்திற்கு 2006இல் ஒரு கனவான் போல் உடையணிந்து உணவருந்த வந்த ராம்ரத்தன் தன்னை ஒரு காவற்துறையின் உளவுப் பிரிவில் வேலை செய்பவனாக சீமோனாவிடம் அறிமுகம் செய்து கொண்டான். சீமோனாவை தன் காதல் வலைக்குள்ளும் வீழ்த்திவிட்டான். காதலனாக இருந்தவன் மெல்ல அவள் வீட்டிற்குள்ளும் குடி புகுந்து விட்டான். சீமோனாவிற்கு அவன் ஒரு பொய்யன் என்று அறிய அதிக காலம் பிடிக்கவில்லை. அவன் வேலை ஏதும் செய்வதில்லை. அவனை வெளியேறுமாறு வேண்டினாள். மறுத்த அவன் 2009 மார்ச் மாதம் சீமோனாவின் வாயை செலோரேப்பால் ஒட்டிவிட்டு கற்பழித்து விட்டான். ஆத்திரம் கொண்ட சீமோனா காவற்துறையிடம் முறையிட்டாள். அவன் கைது செய்யப்பட்டான். தனது நண்பர்கள் மூலம் சீமோனாவை மிரட்டிப்பார்த்தான் ராம்ரத்தன். அவள் மசியவில்லை.
ராம்ரத்தன் |
ராம்ரத்தன் ஒரு காவல்துறை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நாடகப்(Crime Scene Investigation) பித்தன். தனது தொலைக்காட்சி நாடக மூளையைப் பயன்படுத்தத் தொடங்கினான். இருவரைப் பணம் கொடுத்து தங்களை ஒரு இந்தியப் பெண் துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்ததாக காவல்துறையில் முறையிட வைத்தான். அவர்களும் அவன் சொன்னபடியே செய்தனர். அவர்கள் காவல் துறைக்கு கொடுத்த அடையாளம் வண்டி இலக்கம் போன்றவற்றை வைத்து காவல்துறை சீமோனாவைக் கைது செய்தது. ராம்ரத்தன் ஒரு கள்ளக் குடியேற்றவாசியை இதற்கு தன் மூளையைப் பாவித்து ஒழுங்கு செய்தான். இப்படிச் செய்வதன் மூலம் அவர்களுக்கு சிறப்பு விசாவை அரசு வழங்கும் என்றும் போதித்தான். அவர்களும் அவனால் ஏமாற்றப்பட்டனர். போதாத காலம் சீமோனாவின் உணவகம் அப்போது நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. அவளுக்குப் பணத்தட்டுப்பாடும் இருந்தது. சாட்சியங்கள் சரியாக இருந்ததனால் பணத்தட்டுப்பாட்டால் சீமோனா கொள்ளையடித்தாள் என்று சிறையிலடைக்கப்பட்டாள்.
பின்னர் காவற்துறைக்கு ஒரு அனாமதேய தகவல் ராம்ரத்தனைப் பற்றி கிடைத்தது. அதில் ராம்ரத்தனின் தொலைபேசியொன்றின் இலக்கமும் கொடுக்கப்பட்டது. அந்த தொலைபேசியை வைத்து சீமோனாவால் கொள்ளையடிக்கப்பட்டவர்களுடன் ராம்ரத்தன் பலமுறை தொடர்பு கொண்டதைக் காவல் துறையினர் கண்டறிந்தனர். அது மட்டுமல்ல சீமோனாவின் தொலைபேசியின் படி அவள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நேரத்தில் அவள் வேறு இடங்களில் இருந்ததையும் காவற்துறை அறிந்து கொண்டது. உண்மைகளைக் காலம் தாழ்த்தி காவற்துறை அறிந்து கொண்டது. அமெரிக்க காவற்துறை வரலாற்றில் இப்படி ஒரு சோடிக்கப்பட்ட வழக்கைத் தாம் கண்டதில்லை என்கின்றனர். காவற்துறையினரினதும் சட்டத்துறையினரதும் பயிற்ச்சிக் கல்லூரிகளில் சீமோனாவின் வழக்கு இடம் பிடித்துக் கொண்டது.
சீமோனா இப்போது காவற்துறைக்கு எதிராக பெரும் நட்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளாள்.
4 comments:
ம்ம்ம் இப்படியும் நடக்கிறது..
என்ன கொடும சார் இது........
நல்ல பதிவு
அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும்..
நல்ல பதிவு
Post a Comment