Saturday 23 July 2011

அமெரிக்கக் கடற்படைக்கு எதிராக சீனவின் அதிரடி ஆயுதம்.

அமெரிக்காவின் பொருளாதார பலமும் படைத்துறைப் பலமும் பின்னிப் பிணைந்தவை. அமெரிக்க மக்கள் தொகை உலக மக்கள் தொகையின் 5%. அதன் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தின் 23%. படைத்துறைச் செலவு உலக மொத்த படைத்துறைச் செலவீனத்தின் 40%. மொத்த ஆசிய நாடுகளின் படைத்துறைச் செலவீனத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவின் செலவீனம் 20 மடங்கு. அமெரிக்க ஆதிக்கத்தை எதிர் கொள்ள சீனா தனது படைத்துறைக் கட்டமைப்பை நன்கு திட்டமிட்டு வளர்த்து வருகின்ற போதும் அதன் கடற்படைப்பலம் இன்னும் இந்தியாவின் கடற்படையை மிஞ்சவில்லை. சீனாவிற்கென்று ஒரு விமானம்தாங்கிக் கப்பல் இன்னும் உருவாக்கப்படவில்லை. சீனக் கடற்படையினர் எந்தவித சண்டையிலும் இதுவரை ஈடுபட்ட அனுபவம் இல்லாதவர்கள். ஆசியப் பிராந்தியத்தில் அமெரிகாவின் ஆதிக்கத்திற்கு உறுதுணையாக இருப்பது அதன் விமானம் தாங்கிக் கப்பலணிகளே.

சீனாவின் வளர்ச்சிக்கு விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத அமெரிக்கா.
ஒரு நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சி காணும் போது அதன் படை பலமும் வளர்ந்தே ஆக வேண்டும். உலக சரித்திரத்தில் புதிதாக ஆதிக்கம் செலுத்த வந்த ஒரு நாடு ஏற்கனவே ஆதிக்கத்தில் உள்ள ஒரு நாட்டுடன் போரில் ஈடுபடாமல் இருந்ததாக இல்லை. சீன வளர்ச்சிக்கு ஏற்ப அமெரிக்கா இன்னும் ஆசியப் பிராந்தியத்தில் தந்திரோபாய விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ளவில்லை.  தாய்வானில் இன்னும் சீன விருப்பங்கள் நிறைவேறவில்லை.

அமெரிக்கப் படைப்பலத்தை ஆய்வு செய்யும் சீனா
அமெரிக்கப் படை பலத்தினை சீனர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து அதன் பலவீனங்களைக் கண்டு அவற்றின் மீது தாக்குதல் நடத்தும் உத்திகளை உருவாக்கிவருகின்றனர். அமெரிக்காவின் படைபலம் செய்மதிகளிலும் கணனிகளிலும் தங்கியிருப்பதை உணர்ந்த சீனா செய்மதிகளை நிலத்தில் இருந்து வீசித் தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கியது. சீனாவில் இருந்து அமெரிக்கப் படைத்துறையின் கணனிகளை ஊடுருவும் செயற்பாடுகள் அடிக்கடி நடப்பதாக நம்பப்படுகிறது. இது பற்றி மேலும் வாசிக்க இங்கு சொடுக்கவும்: வல்லரசு நாடுகளின் இணையவெளிப் போர்

சீனாவின் ஆயுதமாக மின்காந்த அதிர்வு.
1962-ம் ஆண்டு அமெரிக்கா பசுபிக்கில் மேற்கொண்ட அணு ஆயுத வெடிப்புச் சோதனையின் போது ஹவாய்த் தீவில் இருந்த இலத்திரனியல் கருவிகள் செயலிழந்து போயின. அணுக்குண்டு வெடிப்பின் போது வெளிவந்த காமாக் கதிர்களின் அதிர்வுகள் (gamma-ray pulse)தான் இதற்கான காரணமென்று அறியப்பட்டது. இதை இப்போது சீனா ஆயுதமாக உருவாக்குகிறது. அதுவும் அமெரிக்கக் கடற்படையை எதிர்கொள்ள. இதை அடிப்படையாக வைத்து சீனா ஒரு மின்காந்த அதிர்வு{electromagnetic pulse (EMP)} உருவாக்கும் முறையை உருவாக்கியுள்ளது. இது சீனாவின் மிக இரகசியத் திட்டமாகும். இதை 2005இலேயே சீனா உருவாக்கிவிட்டது என்றும் சொல்லப்படுகிறது. சீனா வெடிக்கவைக்கும் குண்டு மிகக் குறைந்த உயர்த்தில் மிகக்குறைந்த வலுவுடன் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. மின்காந்த அதிர்வு தாய்வானில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்தி சீனாவைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். இந்த மின்காந்த உருவாக்கிகள் Microwave weapons என அழைக்கப்படுகின்றன. இவைஎதிரியின் கணனிகளையும் கதுவி(radar)களையும் மற்றும் சகல இலத்திரன் கருவிகளையும் செயலிழக்கச் செய்யும்.மேலும் எதிரியின் விமானங்களின் தொடர்பாடல்களையும் செயலிழக்கச் செய்யும். சீனாவின் Microwave weapons உருவாக்கலில் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளது என்று அறிந்து கொள்ள முடியாத நிலையில் அமெரிக்காவின் பெண்டகன் இருக்கிறது

1 comment:

Anonymous said...

அமெரிக்காவின் பொருளாதார பலமும் படைத்துறைப் பலமும் பின்னிப் பிணைந்தவை. அமெரிக்க மக்கள் தொகை உலக மக்கள் தொகையின் 5%. அதன் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தின் 23%. படைத்துறைச் செலவு உலக மொத்த படைத்துறைச் செலவீனத்தின் 40%. மொத்த ஆசிய நாடுகளின் படைத்துறைச் செலவீனத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவின் செலவீனம் 20 மடங்கு.

நல்ல தகவல்கள்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...