Saturday 9 July 2011

எகிப்தில் மீண்டும் எழுச்சி

எகிப்திய மக்கள் 18நாட்கள் நடத்திய "புரட்சியின்" மூலம் பெப்ரவரி 11-ம் திகதி ஹஸ்னி முபாரக்கைப் பதவியில் இருந்து விரட்டினர். ஆனால் புரட்சி என்பது ஒரு ஆட்சியாளரை மாற்றுவதுடன் முற்றுப் பெறுவதல்ல என்பதற்கு எகிப்து ஒரு நல்ல உதாரணமாக அமைகிறது. ஆட்சியாளருடன் ஆட்சி முறைமையும் மாற்றப்படவேண்டும். பெப்ரவரி 11-ம் திகதிக்குப் பின்னர் எகிப்தில் பல ஆர்பாட்டங்கள் அவ்வப் போது ஆட்சியாளர்களுக்கு எதிராக நடந்தவண்ணமே இருக்கின்றன. ஆனால் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆர்ப்பாட்டம் இதுவரை நடந்தவற்றிலும் பெரியதாக இருக்கிறது.

"Friday of Accountability," - வகைசொல்லும் வெள்ளி
"Friday of Accountability," என்னும் பெயருடன் எகிப்தியமக்கள் தங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை 9-ம் திகதி வெள்ளிக் கிழமை தொழுகையைத் தொடர்ந்து ஆரம்பித்துள்ளனர். புரட்சிக்குப் பின்னர் தாங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் இடம்பெறவில்லை; எல்லாம் இழுத்தடிப்பாக இருக்கிறது என்கின்றனர் எழுச்சியாளர்கள்.

எகிப்திய அதிகார மையம்
எகிப்தின் இப்போதைய அதிகார மையம் அதன் உச்ச படைத்துறையாகும்.
உச்ச படைத்துறைச் சபை இப்போது 75வயதான பாதுகாப்புத் துறை அமைச்சரும் முபராக்கின் நீண்டநாள் ஆதரவாளருமான முஹமட் தந்தாவியின் தலைமையில் செயற்படுகிறது. இப்போதைய எகிப்தின் அதிபர் அவர்தான். முபராக்கின் படை அப்படியே இருக்கிறது. எகிப்தியப்படையின் உயர் அதிகாரிகளில் பெரும்பாலோனோர் அமெரிக்காவில் உயர் பயிற்ச்சி பெற்றவர்கள். முபராக்கிற்கு எதிரான புரட்சியில் அவரது படையினர் சிறந்த தொழில்சார் பணிவன்பை (professional courtesy)  மக்கள் மீது காட்டியது பலரையும் வியக்க வைத்தது.

அரசியலமைப்புத் திருத்தம்
எகிப்திய அரசமைப்புக்கு ஒன்பது திருத்தங்கள் செய்து அது மார்ச் 19-ம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மக்களின் அங்கீகாரம் பெறப்பட்டது. இந்தத் திருத்தங்கள் அவசரப்பட்டு மக்களுக்கு சரியான விளக்கங்கள் கொடுக்காமல் இடைக்கால படைத்துறை அரசால் கொண்டுவரப்பட்டது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. திருத்தத்தில் முக்கிய அம்சங்கள்: அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள்( ஒருவர் இருதடவை மட்டுமே) , தெரிவு செய்யப்படும் அதிபர் 30நாட்களுக்குள் துணை அதிபரை நியமிக்க வேண்டும், அதிபர் 40 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், எகிப்தியரல்லாதவரை திருமணம் செய்தவர் அதிபர் பதவிக்குப் போட்டியிட முடியாது. திருத்தப்பட்ட அரசியலமைப்பின்படி புதிய அரசு தெரிவு செய்யப்பட்டு அது ஆறு மாதங்களில் புதிய அரசியலமைப்பை வரையும் என்றும் சொல்லப்படுகிறது.

அரசியலமைப்புத் திருத்ததில் முரண்பாடு தொடங்கிவிட்டது. முபாரக் ஆதரவாளர்களும் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பும் அரசமைப்புத் திருத்ததிற்கு ஆதரவு வழங்கினர். இளைஞர்கள் அமைப்புக்கள் பலதரப்பினர்களையும் கொண்ட ஒரு சபையால் அரசமைப்பு முற்றாக புதிதாக எழுதப்பட்டு அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப் படவேண்டும் என்று விரும்புகிறது. 40வயதிற்கு மேற்பட்டவர்தான் அதிபர் பதவிக்கு போட்டியிடலாம் என்பது இளைஞர்களை ஒதுக்கவா? 2005இல் நோபல் பரிசு பெற்ற முஹமத் அல்பராடி இந்த அரமைப்புத்திருத்தம் எகிப்தியர்களுக்கு இப்போது தேவையானதில் ஒருமிகச் சிறிய பகுதியே என்றார். முஹமத் அல்பராடி எகிப்தின் அதிபராக வரலாம் என்ற சாத்தியம் உண்டு. முஹமத் அல்பராடிக்கும் பன்னாட்டு நெருக்கடிக்குழுவிற்கும் தொடர்புண்டு. பன்னாட்டு நெருக்கடிக் குழுவிற்கும் நாணய வர்த்தக முதலையான ஜோர்ஜ் ஸொரஸிற்கும் தொடர்பு உண்டு. இதனால் முகமத் அல் பராடி ஒரு வெளிநாட்டுக் கைக்கூலி என்று குற்றம் சுமத்துபவர்களும் உண்டு. முபாரக் ஆதரவாளர்கள், எகிப்தியப் படைத் துறையினர், இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆகியவை கைகோர்த்து நின்றால் அது ஒரு அமெரிக்க சார்பு அணியா என்ற சந்தேகத்தைப் பலருக்கும் ஏற்படுத்தும்.

எகிப்தில் கொல்லப்பட்ட 1,000இற்கு மேலானவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதே "Friday of Accountability," எழுச்சியின் முக்கிய நோக்கம்.பெப்ரவரியில் நடந்த எழுச்சியின் போது எழுச்சியாளர்களுக்கு எதிராகச் செயல்பட்ட காவல் துறையைச் சேர்ந்த ஏழு காவல்துறையினருக்கு பிணை வழங்கப்பட்டது எகிப்தில் பலரை ஆத்திரமூட்டியுள்ளது. எகிப்து இப்போது பிழையான திசையில் செல்கின்றது என்கின்றனர் எழுச்சியாளர்கள். எகிப்திய ஆட்சியாளர்கள் செப்டம்பரில் தேர்தல் நடக்கும் என்கின்றனர். ஆனால் செப்டம்பர் தேர்தலுக்கு இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு மட்டுமே தயாராக உள்ளது. மற்றயவை தயாராக இல்லை. மற்ற அமைப்புக்கள் தேர்தலைத் தள்ளிப் போடும்படி கோரிக்கை விடுக்கின்றன. எகிப்தின் உச்ச படைத்துறைச் சபை தேர்தலைத் தள்ளிப் போட மறுக்கிறது. ஆனால் இதுவரை தேர்தலுக்கான திடமான ஒரு திகதியை அறிவிக்கவில்லை. இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு விரைவில் தேர்தல் நடாத்த விரும்புகிறது. எழுச்சியாளர்கள் இப்படி முரண்பட்டு நின்றாலும் அரச இயந்திரத்தில் இருந்த இருக்கின்ற எழுச்சிக்கு எதிராக குற்றம் இழைத்தோர் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரும் "Friday of Accountability,"யில் அவர்கள் ஒன்று பட்டு நிற்கிறார்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...