Tuesday, 5 July 2011

தாக்கும் நேட்டோவும் தாக்குப் பிடிக்கும் கடாஃபியும்.

அரபு நாடுகளின் மல்லிகைப் புரட்சி லிபியத் தலைவர் கடாஃபிக்கு எதிராக பெப்ரவரி 16-ம் திகதி கிளர்ந்த போது மேற்குலக நாடுகளின் பிரதிபலிப்பு துனிசியா, எகிப்து, பாஹ்ரெய்ன், சிரியா ஆகிய நாடுகளின் மக்கள் கிளர்ச்சிக்கான பிரதிபலிப்பிலும் பார்க்க வேறுபட்டே இருந்தது. கிளர்ச்சிக் காரர்களுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுளின் பாதுகாப்புச் சபை கூட்டப்பட்டது. லிபியாமீது நடவடிக்கை எடுக்க தீர்மானம்-1973 நிறைவேற்றப்பட்டது.

2011 மார்ச் 24-ம் திகதி ஃபிரெஞ்சு வெளிநாட்டமைச்சர் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் படைபலம் சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் நொருக்கப்பட்டுவிடும் என்றார். ஆனால் கடாஃபி இன்றுவரை தாக்குப் பிடிக்கிறார். பெப்ரவரி 21-ம் திகதி பிரித்தானிய வெளி நாட்டமைச்சர் கடாஃபி வெளி நாட்டுக்குத் தப்பி ஓடிவிட்டார் என்றார். கடாஃபி இன்றும் லிபியாவில்தான் இருக்கிறார்.

68 வயதான மும்மர் கடாஃபிக்கு ஏழு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் சயிஃப் கடாஃபியும் சாதி கடாஃபியும் தீவிரவாதத்தில் நம்பிக்கை குறைந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. மற்றவர்கள் தீவிரப்போக்கு உடையவர்கள் என்றும் நம்பப்படுகிறது. இவர்களுக்கிடையிலான போட்டியை மும்மர் கடாஃபியே உருவாக்கி தனது பதவி பாதுகாப்பாக இருக்கவும் மகன்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தன்னைப்பதவியில் இருந்து விலக்காமல் இருக்கவும் தந்திரமாகச் செயற்பட்டார் என்றும் சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்ததுண்டு.

தனக்காக எதையும் செய்யும் கடாஃபி
இப்போது உள்ள அரச தலைவர்களில் மிக நீண்ட காலம் பதவியில் இருப்பவர் லிபியத் தலைவர் மும்மர் கடாபி. 1969-ம் ஆண்டு ஒர் ஆயுதப் புரட்சி மூலம் அப்போது அரசாராக இருந்த இட்றிஸை பதவியில் இருந்து அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியவர் மும்மர் கடாபி. அப்போது அவருக்கு வயது 27. அப்போது அவர் சிறந்த புரட்சியாள்ராகவும், புதிய சேகுவேராவாகவும் மதிக்கப்பட்டார். ஆனல் லிபியாவின் பொருளாதார் முன்னேற்றம் மற்ற எண்ணெய் வள நாடுகடுடன் ஒப்பிடுகையில் பின் தங்கியே இருந்தது.

கடாஃபியின் தவறு
ஒரு சிறந்த எண்ணெய் வளம் மிக்க நாடு லிபியா. ஆபிரிக்காவில் லிபியாதான் அதிக தனி நபர் வருமானம் கொண்ட நாடு. தனி நபர் வருமானம் என்பது தேசத்தின் மொத்த உற்பத்தியை மக்கள் தொகையால் வகுக்க வருவது. ஆனால் லிபிய மக்களின் வாழ்க்கைத் தரம் மற்ற எண்ணெய் வள நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்ததே. அங்கு தேச வருமானம் சரியான முறையில் பங்கிடப்படவுமில்லை; பாவிக்கப்படவுமில்லை. லிபிய மக்களின் கல்வித்தரம் மிகவும் பிந்தங்கியது. மற்ற அரபு நாடுகள் நகர நிர்மாணம் தெரு நிர்மாணம் என்பவற்றில் அதிக ஈடுபாடு காட்டிய போது லிபியா என்ன செய்தது என்ற கேள்வி உண்டு.

லிபியாவில் மக்கள் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியை பெப்ரவரி 2011இல் ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் கிளர்ச்சிக்காரர்களின் கைகள் ஓங்கி இருந்தன. பின்னர் கடாஃபியின் படைகள் தாம் இழந்த பிரதேசங்களை  மீளக் கைப்பற்றத் தொடங்கிய போதே பிரான்ஸ் ஐநா பாது காப்புச் சபைக்குப் பிரச்சனையை எடுத்துச் சென்றது.

முன்னணியில் பிரான்ஸ்
லிபியா மீதான படை நடவடிக்கைக்கு பிரான்ஸ்தான் முன்னின்று செயற்பட்டது. பிரான்ஸில் லிபியாவிற்கு எதிரான படை நடவடிக்கைகளுக்கு பலத்த ஆதரவு நிலவுகிறது. எதிர்கட்சியான சோஸ்லிசக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. லிபியாவிற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பது பற்றி பல நாடுகள் பரிசில்தான் கூடி ஆலோசித்தன. லிபியாவிற்குள் பிரவேசித்து தாக்குதல் நடாத்தியவை பிரெஞ்சு விமானங்களே. சீனா லிபியாமீதான தாக்குதலைக் கடும் வார்த்தைகள் பாவித்துக் கண்டித்தது. சில நாடுகள் இப்போதும் பனிப்போர் மனப்பாங்கில் இருப்பதாக சீனா தெரிவித்தது. இரசியா ஒரு படி மேல் சென்று லிபிய அதிபர் கடாபியின் இருப்பிடம் மீதான தாக்குதல் ஒரு சிலுவைப்போர் போன்றது என்றார். இந்தியா லிபியா மீதான தாக்குதலை எதிர்த்துள்ளது. பாதுகாப்புச் சபையில் லிபியாவிற்கு எதிராக நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் பொருளாதாரத் தடையும் ஒன்று. இரசியாவிற்கு லிபியாவுடன் இரண்டு பில்லியன் பெறுமதியான ஆயுத வர்த்தகம் இருந்தும் இரசியா அத் தீர்மானத்தை எதிர்க்கவில்லை.

தப்புக் கணக்கு
நேட்டோப்படைகள் லிபியாவின் மீது பொருளாதாரத் தடையை விதித்து கடாஃபியின் படை நிலைகளை தமது நவீன விமானங்கள் மூலம் மூர்க்கத்தனமாக தாக்கி வருகின்றன. தனக்கு எதிராக சதி செய்து தன்னைக் கவிழ்த்து விடுவார்கள் என்ற அச்சத்தில் கடாஃபி தனது படையினருக்கு போதிய பயிற்ச்சிகளோ ஆயுதங்களோ வழங்கவில்லை. அவரது படை பலமற்றபடை. என்றெல்லாம் ஆரம்பத்தில் கூறப்பட்டன. இன்றும் கடாஃபி தனது படை பலமிழந்து நிற்பது போன்ற சமிக்ஞைகளை வேண்டுமென்றே நேட்டோவைக் குழப்புவதற்காக அனுப்பிக்கொண்டே இருக்கிறார்.அத்துடன் லிபிய அதிபர் தளபதி மும்மர் கடாபி தான் பதவி விலகப்போவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றார். பிரித்தானிய் அரசி எலிசபெத்-2 பதவியில் இருக்கும் வரை தானும் பதவிய்யில் இருப்பேன்; தன்னிலும் அதிக காலம் எலிசபெத்-2 பதிவியில் இருக்கிறார் என்கிறார்.

லிபியாவிலும் கொத்தணிக் குண்டுகள்
2007இல் கொத்தணிக் குண்டுகளுக்கு எதிரான பன்னாட்டு உடன்படிக்கையில் கையொப்பம் இட முன்னர் ஸ்பெயின் தன்னிடம் இருந்த கொத்தணிக் குண்டுகளை லிபியாவிற்கு விற்பனை செய்துவிட்டது என்று கூறப்படுகிறது. மற்-120 எனப்படும் இக் கொத்தணிக் குண்டுகள் லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடாஃபியால் பயன்படுத்தப்படுகின்றன.

கடாஃபியைக் கைது செய்ய உத்தரவு.
பன்னாட்டு நீதி மன்றம் ஜுன் 27-ம் திகதி போர்க்குற்றம் புரிந்தமைக்காக கைது செய்யும் உத்தரவைப் பிறப்பித்தது. இலங்கைப் போர்க்குற்றம் பற்றி அறிந்தவர்களை பன்னாட்டு சமூகத்தின் இரட்டை வேடம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பன்னாட்டு நீதிமன்ற உத்தரவை லிபியக் கிளர்ச்சியாளர்கள் ஆராவாரித்து வரவேற்றனர்

காடாஃபியின் கடிதங்கள்
ஜூன் 9-ம் திகதி கடாஃபி அமெரிக்க காங்கிரசுக்கும் மூதவைக்கும் போர் நிறுத்தம் வேண்டிக் கடிதம் அனுப்பினார். பின்னர் ஜூன் 23-ம் திகதி லிபியப் பிரதம மந்திரி அல் முகமாடி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிற்கு பேச்சுவார்த்தை வேண்டியும் அமெரிக்காவில் முடக்கப்பட்டுள்ள நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான லிபியச் சொத்துக்களை விடுவிக்க வேண்டியும் கடிதம் எழுதினார். இவை எதுவும் எடுபடவில்லை. மேற்குலகம் கடாஃபியினுடனான அமைதிப் பேச்சுவார்த்தியிலும் பார்க்க காடாஃபியை கொன்று அமைதியை உருவாக்குவதையே விரும்புகிறது. அமெரிக்க நிர்வாகம் லிபியாவில் இருந்து கடிதங்கள் வந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. லிபியாவில் இருந்து தான் தப்பிச் செல்வதற்கான ஒரு ஏற்பாட்டைச் செய்து தரும்படியும் தன்மீது போர்குற்றம் சுமத்துவதற்கு எதிரான பாதுகாப்பு வழங்கும் படியும் கடாஃபி திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளைச் செய்து பார்த்தார் சரிவரவில்லை. தன்னைக் கொல்வதுதான மேற்குலகின் நோக்கம் என்றுணர்ந்த கடாஃபி இப்பொது சீறத் தொடங்கிவிட்டார். தனது விசுவாசிகள் மேற்குலகின் வீடுகளையும் பணிமனைகளையும் இலக்க்கு வைத்து குழவிகள் போலவும் வெட்டுக்கிளிகள் போலவும் தாக்குதல் நடத்துவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
கடாஃபியின் கௌரவம் சதுரங்க நடுவிலே
கடாஃபிக்கும் இரசியாவிற்கும் இடையிலான தொடர்பாளராக பன்னாட்டு சதுரங்க ஒன்றியத்தின் தலைவர் கிர்சான் இலுயும்சினோவ் செயற்படுகிறார். அவர் கடாஃபிக்கு ஒரு கௌரவ மான முடிவை ஏற்படுத்த முனைகிறார். அவர் இரண்டு தடவை திரிப்போலி சென்று கடாஃபியைச் சந்தித்துப் பேசினார். அவர் கடாஃபியுடன் சதுரங்கம் ஆடிய படியே கடாஃபி பதவியில் இருந்து விலகி வேறு நாடு ஒன்றுக்கு செல்வது பற்றி உரையாடிப்பார்த்தார். ஆனால் கடாஃபி மசியவில்லை. பதவி விலகி வேறு நாட்டிற்கு செல்வதிலும் தான் தனது சொந்த மண்ணில் இறப்பதையே விரும்புகிறேன் என்றார் கடாஃபி சதுரங்க ஆட்டத்தில் கடாஃபியை செக் மேற் ஆக்காமல் ஆட்டத்தை வெற்றி தோல்வி இன்றி முடித்துக் கொண்டார்  கிர்சான் இலுயும்சினோவ். காடாஃபியின் ஆட்சி ஏற்கெனவே செக் மேற்றில் உள்ளது. ஜூலை 4-ம்திகதி இரசியா தனது நேட்டோவுடனான உரையாடலில் காடாஃபிக்கு ஒரு கௌரவ முடிவை ஏற்படுத்தும் தனது விருப்பத்தைத் தெரிவித்தது. ஆபிரிக்க ஒன்றியத் தலைவர் ஜேக்கப் ஜூமோ தனது ஒன்றிய நாடுகளுக்கு கடாஃபியின் மீதான பன்னாட்டு நீதிமன்றப் பிடியாணையை கருத்தில் கொள்ள வேண்டாம் என்று அறிவித்துள்ளார். கடாஃபி ஆபிரிக்க நாடொன்றில் தஞ்சம் புக அது வசதியாக இருக்கும் என்றே இந்த ஏற்பாடு. ஆபிரிக்க ஒன்றியம் லிபியாவில் ஒரு இடைக்கால அரசை அமைக்க விரும்புகிறது.

கைகொடுக்குமா கடாஃபியின் அனுபவம்.
தொடரும் நேட்டோ கூட்டமைப்பின் தாக்குதல்களும் எண்ணெய்த் தாகமெடுத்துத் துடிக்கும் மேற்குலக அரசுகளும் உள்ளூர் கிளர்ச்சிக்காரர்களும் மும்மர் கடாஃபியின் அதிகாரத்திற்கும் உயிருக்கும் பலத்த ஆபத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றுக்கு மத்தியில் மும்மர் கடாஃபி தனது காய்களை தந்திரமாக நகர்த்துகிறார். கடாஃபியின் தாக்குப் பிடித்தலின் இரகசியம் அவர் அழுத்தங்களுக்கு மசியாதவர், அழுத்தங்களை எதிர் கொண்ட அனுபவம் நிறைய உடையவர். தன்னை கொல்வதற்கு எதிரான சதியை எப்படிக் கையாள்வது என்ற அனுபவம் நிறைய உள்ளவர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...