Wednesday, 10 March 2010

பான் கீ மூன் - திருப்பமா? திருகுதாளமா?


சென்ற ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது அங்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தும் படி பலர் ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ மூனைக் கேட்டிருந்தனர். அதை கவனத்தில் எடுக்காத பான் கீ மூன் பல கண்டனங்கள் ஊடகங்களால் தெரிவிக்கப் பட்டதை அடுத்து விஜய் நம்பியார் என்ற தமிழ் மக்களின் வில்லனை இலங்கைக்கு அனுப்பினார். அவர் அங்கு சென்று பின் இந்தியா சென்றார். அதன் பின்னர் ஐநா வந்த அவர் தனது அறிக்கையைப் பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பிக்காமல் காலத்தை இழுத்தடித்தார். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரித்தானியா முற்பட்ட போது அவர் தமது அறிக்கையை ஐநா அதிபரிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கை பற்றி மூடப்பட்ட அறைக்குள் கலந்துரையாடப் பட்டது. இந்த இழுத்தடிப்புக்கள் யாவும் இலங்கைக்கு போரை முடிக்க
வழங்கப்பட்ட அவகாசமாகும். போர் முடிந்த பின் இலங்கைக்கு சென்ற பான் கீ மூன் இலங்கைக் குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் உறுதியளிக்கப் பட்டவையை இலங்கை குடியரசுத் தலைவர் ஏன் நிறைவேற்றவில்லை என்ற கேள்வி ஐக்கிய நாடுகளின் செயலர் பான் கீ முனிடம் அதன் பின் பல தடவை எழுப்பப்பட்டு வருகிறது.
அந்த கூட்டறிக்கையின் படி இலங்கை அரசு:
  • போரினால் பாதிக்கப் பட்டவர்களை மீள் குடியேற்றுதல்.
  • சர்வ தேச நியமங்களுக்கு அமைய இலங்கையில் மனித உரிமைகளை மதித்து நடத்தல்.
  • இலங்கை வாழ் சகல சமூகங்களின் அபிலாசைகள் பிரச்சனைகளை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுத்தல்.
  • இலங்கையின் நீண்டகால சமூக பொருளாதார வளர்ச்சிக்காக இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணுதல்.
  • இலங்கைக் குடியரசின் அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை நிறைவேற்றுதல். இதற்காக தமிழ் மக்களுடன் பரந்த அளவில் பேச்சு வார்த்தை நடாத்துதல்.
இலங்கைக் குடியரசுத் தலைவரும் ஐக்கிய நாடுகளின் செயலரும்வெளிவிட்ட கூட்டறிக்கையில் எதுவும் இது வரை நிறை வேற்றப் படவில்லை. அவை நிறைவேற்றப் படாதவிடத்து பான் கீ மூன் என்ன செய்வார் என்ற கேள்வி எழுவது இயற்கை. அதற்கான பதிலாகவே பான் கீ மூன் அவர்கள் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் போர்குற்றம் தொடர்பாகவும் தமக்கு ஆலோசனை வழங்க ஒரு விற்பன்னர்கள் சபையை அமைத்துள்ளார். இது இலங்கையை ஆத்திரமடைய வைத்துள்ளது.

இந்திய பான் கீ மூன் கூட்டுச் சதியும் நிருபாமாவின் பாய்ச்சலும்
பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாரின் சகோதரர் இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப் பட்ட படைத்துறை ஆலோசகர். பான் கீ மூனின் மருமகனும் சித்தார்த் சட்டர்ஜி என்னும் ஒரு இந்தியர். இவரும் இலங்கை வந்து கொலை கொள்ளை கற்பழிப்புகளில் ஈடுபட்ட அரசியல் அறிவிலி ராஜிவ் காந்தியின் அமைதிப் படையில் இடம் பெற்றவர். இவற்றைக் கூட்டிப் பார்க்கும் போது இந்தியாவின் சதி பற்றிய சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. அதுமட்டுமா பாக்கிஸ்த்தானுடன் ஒரு தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபாமா ராவ் அவர்கள் ஐநா செயலர் விற்பன்னர்கள் சபையை அமைத்தவுடன் இலங்கைக்கு ஒரு திடீர்ப் பாய்ச்சலை மேற் கொண்டது இதற்குத்தானா? இந்த விற்பனனர்களின் விசாரணையில் இந்தியா புரிந்த போர்க் குற்றம் இந்தியச் சதி இந்தியத் தொடர்பு என்பன வெளிப்படும் என்ற பயமா? அதைத் தவிர்க்கவே நிருபாமா இலங்கைக்கு சென்றாரா? மேற்குலகை ஆத்திரப் படுத்திய பொன்சேக்காவிவகாரத்தில் இந்தியத் தலையீட்டால் தான் பொன்சேக்காவை இராணுவ நீதிமன்றில் விசாரிக்காமல் சாதாரண நீதி மன்றில் விசாரிக்கும் முடிவை இலங்கை எடுத்ததா?

பான் கீ மூனின் பதவி நீடிப்பு
பான் கீ மூனைப் பற்றி கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கத்திய சக்திவாய்ந்த ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அவரை ஒரு மிக உயர் ஆபத்தான கொரிய நாட்டவர் (Most dangerous Korean)என்ற தலைப்பிட்டுக் கூட ஒரு Foreign Policy என்னும் அமெரிக்க ஊடகம் கட்டுரை வெளியிட்டது. இவையாவும் பான் கீமூன் இலங்கையின் போர்குற்றம் தொடர்பாக பான் கீமூனின் மௌனம், இலங்கையில்ன் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பான் கீ மூன் செயற்படாமை, இலங்கையில் போர் முனையில் அகப்பட்ட பொது மக்களைப் பாதுகாக்கத் தவறியவை போன்றவற்றை குற்றச் சாட்டாக முன்வைக்கின்றன. இந்நிலையில் பான்கீ மூன் அவர்களது பதவிக்காலம் இரண்டாவது முறையாகத் தொடருமா என்ற கேள்வி எழுகிறது. இரண்டாவது முறையும் தனது பதவிக் காலத்தை நீடிக்கவே பான் கீமூன் விற்பன்னர்கள் சபையை அமைத்தாரா?

பான் கீ மூனைப் பதவியில் அமர்த்திய இலங்கை
பான் கீ மூன் அவர்கள் ஐநா செயலர் பதவிக்குப் போட்டியிட்ட போது இலங்கையும் ஒருவரைப் போட்டிக்கு நிறுத்தியிருந்தது. பின்னர் பான் கீ மூனின் வெற்றியை உறுதி செய்யதனது வேட்பாளரை போட்டியில் இருந்து இலங்கை விலக்கியது. அது மட்டுமல்ல இலங்கையில் போர் நடந்த வேளை பான் கீமூன் அவர்களை இலங்கை "நன்கு கவனித்து" கொண்டதாகவும் பேசப்படுகிறது. பான் கீ மூன் விற்பன்னர்கள் சபையை அமைத்ததும் இலங்கை சீற்றம் கொண்டது இதற்குத்தானா? தம்மை எதுவும் செய்ய முடியாது என்று இலங்கை மார் தட்டுவது ஏன்? பான் கீ மூன் விற்பன்னர்கள் சபையை அமைத்ததால் ஒரு கால இழுத்தடிப்பைச் செய்யலாம். அது இலங்கைக்கும் வசதியாக அமையும். அது மட்டுமல்ல இது பற்றி அடிக்கடி கதைக்கும் நவநீதம் பிள்ளை அவர்களின் வாயையும் அடக்கலாம்.

1 comment:

Yoga said...

லியொன் பொஸ்கோ வின் இலங்கை விஜயத்தின் பின்னரே ஆலோசனைக் குழு அமைக்கப்படுமாம்!இலங்கை அரசு அவரின் விஜயத்துக்கு பச்சைக் கொடி காட்டவில்லையாம்!குளம் எப்போ வத்திறது,மீன் எப்போ புடிக்கிறது???எல்லாம் சேர்ந்து கும்மியடிக்கிறாங்கள்! நாங்கள் வெள்ளி பாக்க வேண்டியது தான்!!!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...