Tuesday, 9 February 2010

சரத் பொன்சேக்காவின் கைதுக்குப் பின்னால்....


காலம்: 08-02-2010 இரவு 10 மணி,
இடம்
: இராஜ்கீய மாவத்த( ரோயல் கல்லூரிக்கு எதிரே), கொழும்பு.
பாத்திரங்கள்
: சரத் பொன்சேக்கா, மனோகணேசன், சோமவன்ச அமரசிங்க, ரவு ஹக்கீம், கப்டன் சேனக்க ஹரிப்பிரிய சில்வா.
இப்படிப்பட்டவர்கள் இப்படிப்பட்ட இடத்தில் ஒரு கலந்துரையாடாலைச் செய்துகொண்டிருக்கும் போது இராணுவக் காவற்துறைப் பிரிகேடியர் விஜயசிரி, மேஜர் ஜெனரல் மானாவடுகே ஆகியோர் தலைமையில் ஒரு இராணுவக் காவல்துறைப் படையினர் அங்கு நுழைந்தனர். அவர்களை எதிர்த்துப் பேசிய கப்டன் சேனக்க ஹரிப்பிரிய சில்வா என்னும் சரத் பொன்சேகாவின் ஊடகத்துறைப் பேச்சாளர் முதலில் கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சரத் பொன்சேக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப் பட்டது:
  • இராணுவத்தில் இருந்தபோது அரசியலில் ஈடுபட்டமை.
  • பதவியில் இருக்கும்போது ஆயுதப் படைத் தலைவருக்கு( மஹிந்த ராஜபக்ச) எதிராக சதிசெய்தமை.
  • படையிலிருந்து தப்பி ஓடிய 1500இற்கு மேற்பட்டோரை தனனுடன் வைத்திருந்தமை.
  • படைத்துறை கொள்வனவுகளில் முறைகேடாக நடந்தமை.
ஆகியவை சரத் புரிந்த குற்றங்களாக தெரிவிக்கப் பட்டது. அதை எதிர்த்து உரையாடி கைது செய்யப்பட மறுத்தமையால் சரத் பொன்சேக்கா பலவந்தமாக இழுத்துச் செல்லப் பட்டார்.

இலங்கை இந்தியப் போர்குற்றங்களின் மிகமுக்கிய சாட்சியம்.
பயங்கரவாத ஒழிப்பு என்ற போர்வையில் இலங்கையில் நடந்த மோசமான போர்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை இந்தியப் படைகளிற்கு எதிரான சாட்சியாக திகழ்பவர் சரத் பொன்சேக்கா. அது தொடர்பாக அண்மைக் காலங்களாக சரத் பல கருத்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தச் சாட்சியை இல்லாதொழிக்க முதலில் இந்தியாவும் இலங்கையும் கலந்துரையாடிய பின்னர் சரத் பொன்சேக்காவைக் கைதுசெய்யும் முடிவு எடுக்கப்பட்டதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சரத்தின் கைதத் தொடர்ந்து வரும் பன்னாட்டு அழுத்தங்களைச் சமாளிக்கவே மஹிந்த ராஜபக்ச இரசியாவிற்கு சென்று பேச்சு வார்த்தை நடாத்தும் படி இந்தியா ஆலோசனை தெரிவித்ததாகவும் செய்திகள் மேலும் கூறுகின்றன.

அதிரடி அறிவிப்பு
இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் ஒரு அதிரடி அறிக்கை விட்டார். பொன்சேகா மேலும் தெரிவிக்கையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பாக எனக்கு தெரிந்தவை, நான் கேள்விப்பட்டவை, எனக்கு தெரியப்படுத்தப் பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளேன்.
போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவேண்டும்"
இந்த அறிக்கையை விட்டதால்தான கைது செய்யப்பட்டார் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் உண்மையில் தான் கைது செய்யப் படப் போகிறேன் எபதை அறிந்தே சரத் பொன்சேக்கா இந்த அறிக்கையை விட்டுள்ளார்.

சிங்க படையணி
சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவானதாகக் கருதப்படும் சிங்கப் படையணியைக் கலைத்த பின்னரே அவரைக் கைதுசெய்வதாக அரசு திட்டமிட்டிருந்ததாம். ஆனால் அவர் அதற்கு முன் போர்குற்றங்கள் சம்பந்தமாக பகிரங்கப் படுத்தலாம் என்று அஞ்சியே அவசரக் கைது நடந்தேறியது. சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவானவர்களை ஓரம் கட்டும் முயற்ச்சி தொடங்கி பல மாதங்களாகிவிட்டன. ஆனால் சிங்கப் படையணியைக் கலைப்பது தேனிக்கூட்டிற்கு கல் எறிவது போன்றது. அது கவனமாகச் செய்யப் படவேண்டியது என்றே அரசு அதில் அவசரம் காட்டவில்லை. ஆனால் தேர்தல் நடக்கும் போதே சிங்கப் படையணி ஒருவிதச் சுற்றி வளைப்புக்கு உடபடுத்தப் பட்டுவிட்டது.

சட்டப் பிரச்சனை
இராணுவ சேவையில் இல்லாத ஒருவரை இராணுவக் காவற்துறையினர் கைது செய்ய முடியாது என்று சரத் பொன்சேக்கா சட்டப் பிரச்சனையை எழுப்பி முரண்பட்டார். அதனால் அவர் தாக்கி நிலத்தில் விழுத்தப் பட்டு காலில்பிடித்து இழுத்துச் செல்லப் பட்டார்.

அழும் அமெரிக்கா! கதறும் ஐநாவின் நைனா!
சரத் கைதுசெய்யப்பட்டதால் சிங்களம் இரண்டாகப் பிளந்து விடுமோ என்று தாம் அஞ்சுவதாக அமெரிக்க அரச திணைக்களம் தெரிவித்துள்ளது:"There is a tremendous need for the government of Sri Lanka to work to overcome the fissures that exist within its society. It has to be very cautious that any actions it takes are designed to heal the split within Sri Lankan society, not to exacerbate it".
ஐக்கிய நாடுகள் சபைச் செயலர் வன்முறையில் யாரும் ஈடுபடக்கூடாதென்றார். இதுவரை கொழும்பில் வன்முறைகள் ஏதும் இடம்பெறவில்லை.

கைதுக்குப் பின்னால்
சரத் பொன்சேக்காவின் கைதின் நோக்கங்களில் பழிவாங்கலும் போர்குற்ற மறைப்பும்தான் முக்கியமானவை. இலங்கை அரசு சரத் ஆதரவாளகளின் எதிர்ப்புக்களுக்கு எதிராக சகல முன்னேற்பாடுகளையும் செய்துவிட்டது என்றே தோன்றுகிறது. அவரின் கைதிற்கு எதிரான செயற்பாடுக்ளுக்கு உள்ளூரில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வரவிருந்த எதிர்ப்புக்களுக்கு எதிராக சகல நடவடிக்கைகளும் அரசு தரப்பு கனகச்சிதமாக மேற்கொண்டுவிட்டது.
பகிரங்க விசாரணையில் பகிரங்கமாகும் உண்மைகள்.
கள்ளர்களுக்குள் சண்டை வந்தால் களவு வெளிப்படும்.
சரத் பொன்சேக்காவிற்கு எதிராக பகிரங்க விசாரணை நடத்தப்பட்டால் பல உணமைகள் வெளிவரும். இதை மறைக்க இராணுவ இரகசியங்கள் வெளிவரும் என்ற காரணம் காட்டி அரசு தரப்பு இரகசிய இராணுவ நீதிமன்றில் சரத்தை விசாரிக்கும் சாத்தியம் உண்டு. அதற்கு சட்டத்தில் இடமில்லாவிடில் சட்டத்தை அரசு மாற்றி அமைக்கலாம். சரத் பொன்சேக்கா ராஜபக்ச சாகோதரர்களுக்கு எதிரான குற்றங்களை முன்வைக்க ஒரு பகிரங்க மேடைக்குக் காத்திருக்கிறார் என்பது அவர் நேற்றுக் கைது செய்யப்படமுன்னர் வெளிவிட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சரத் பொன்சேக்காவிற்கு மரணம் சம்பவிக்குமா?
சரத் பொன்சேக்கா என்று ஒருவர் உயிருடன் இருக்கும்வரை போர் குற்ற உண்மைகளை மூடி மறைக்க முடியாது. அவர் மீதான குற்றத்திற்கு ஆகக் கூடிய தண்டனை ஆயுள் சிறைத் தண்டனை மட்டுமே. அவரைத் தடுத்து வைத்திருக்கும் சிறைக்குள் ஒரு கலவரத்தை ஏற்படுத்தி அவருக்கு மரணம் சம்பவிக்கச் செய்யும் சாத்தியம் உண்டு.

ஐநாவின் பொய்நா கொண்ட நைனாமௌனமாக இருப்பாரா?
அண்மையில் கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் போர் குற்றம் தொடர்பாக எந்தவித விசாரணையும் மேற்கொள்ளப் படமாட்டாது என்று கூறிய போது அமெரிக்கப் பேராசிரியர் பொய்ல் அவர்கள் ஒரு போர் குற்றம் நடந்த நாட்டில் போர்குற்ற விசாரணை நடக்காத போது ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு போர் குற்ற விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினார். நேற்று சரத் பொன்சேக்கா இலங்கையில் நடந்த போர் குற்றங்களை எங்கு வேண்டுமானாலும் தெரிவிப்பேன் என்று பகிரங்கமாக அறிவித்த பின் அவரை விசாரிக்கும் கடப்பாடு ஐநாவிற்கு உண்டு. அதை ஐநாவின் பொய்நா கொண்ட நைனா செய்வாரா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...