
பயங்கரவாத ஒழிப்புக்கான போர். இலங்கையின் தேசிய ஒருமைப் பாட்டை நிலைநாட்டுவதற்கான போர். இப்படி இலங்கையில் நடந்த போருக்கு பல வியாக்கியானங்கள் கொடுக்கப் பட்டன. இலங்கையின் இனப் பிரச்சனைக்கு "சமஷ்டி" எனப்படும் அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு காணவேண்டும் என்ற வாதம் முன்வைக்கப் பட்டபோது அதற்கு எதிராக பல குரல்கள் எழுப்பப்பட்டு இலங்கை அரசியல் அரங்கில் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு கெட்ட வார்த்தையாக்கப் பட்டது. அதிகாரப் பகிர்விற்கு முன்னின்று செயற்பட்டவர்களில் தம்மை முற்போக்குவாதிகள் என்று கூறிக்கொண்டவர்களும் அடக்கம்.
எண்பதுகளில் இலங்கைப் பிரச்சனைக்கு அதிகாரப் பரவலாக்கம் ஒரு தீர்வு என்று முன்வைக்கப் பட்டது. அது வெகு இலகுவாக இலங்கையில் ஒரு கெட்ட வார்த்தையாக்கப் பட்டது. சென்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிகாரப் பரவலாக்கம் பற்றிப் பேசப் பட்டது. இம்முறை அதிகாரப் பரவலாக்கம் பற்றி பேசுவதை குடியரசுத் தலைவர் வேட்பாளர்கள் தவிர்த்துக் கொள்கின்றனர்.
சுவிஸ் சூரிச்சில் கூடிய தமிழ் அரசியல்வாதிகளிடையே முன்வைக்கப் பட்ட கருத்துக்களில் முக்கியமானவை:1. தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்பது சிங்களவர்களை ஆத்திரப் பட வைக்கிறது. 2. தமிழர்களின் தாயகம் தன்னாட்சி எனபது இனி சரிவராத ஒன்று.
போருக்குப் பின் தமிழர்கள் அடிமையாகவே வாழமுடியும் என்ற கருத்தை தமிழர்கள் மத்தியில் பரப்ப சிலர் முயல்கின்றனர் என்பதை சூரிச்சில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு இனத்தில் சிலர் அடிமை வாழ்வை ஏற்றுக் கொள்ளலாம். அடிமை வாழ்வை ஏற்க மறுக்கும் உணர்வுள்ள மனிதர்கள் மீண்டும் வீறு கொண்டு எழுந்து ஆயுத போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
போரில் வென்றவர்கள் சமாதானத்தில் தோற்றார்கள்.
இலங்கையில் போருக்குப் பின் பொருளாதார வளர்ச்சி ஏற்படலாம் என்ற நம்பிக்கை இப்போது தளர ஆரம்பித்து விட்டது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த Transparency International என்னும்சர்வதேச அமைப்பு இலங்கயில் கருத்துச் சுதந்திரமின்மை, திறந்த நிலைப்பாடின்மை, வகைசொல்லல் பற்றாக்குறை ஆகியன இலங்கையில் சுமூக நிலை திரும்புவதை தடுக்கிறது என்று கூறியுள்ளது. மனித உரிமைகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அமைப்புக்கூட இனப்பிரச்சனை தீர்க்கப் படாமை அமைதி இன்மைக்கு வழிவகுக்கும் என்பதைப் பற்றி குறிப்பிடத் தவறி விட்டது. அதை முன்வைத்தால் தனது கருத்து இலங்கையில் எடுபடாது என்று அந்த அமைப்புக் கூடக் கருதி இருக்கலாம். இப்போது பலதரப்பில் இருந்தும் பத்திரிகைச் சுதந்திரத்தை வலியுறுத்தி கருத்துக்கள் முன்வைக்கப் படுவதற்கான காரணம் உலகமயமாக்கலுக்கு பத்திரிகைச் சுதந்திரம் மிக அவசியம் என்பதற்காகவே. போரை அயல் நாட்டு திரை மறைவு உதவியின் மூலம் வெல்லலாம் சமாதானத்தை வெல்ல முடியாது. இலங்கையில் சமாதானம் நிலவுவதை அந்த அயல் நாடு விரும்பாது.
போரின் வெற்றியை அடிப்படையாக வைத்து போட்டியிடும் இரு பிரதான குடியரசுத் தலைவர் வேட்பாளர்களின் ஆதரவாளர்களிடையே பலத்த மோதல்கள் இனி நடக்கவிருக்கிறது. யுத்த வெற்றிக்கு உரிமை கோரிப் போட்டியிடும் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் கடும் சவாலை எதிர்கொள்வதாலும், அரச கட்டமைப்புகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள் ளமையாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், வன்முறை மிகுந்ததாகவும் அமைதியற்றதாகவும் அமையலாமென "சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான ஜனநாயக செயற்பாடு" ("பவ்ரல்") எனும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
"எஜமானர்களுக்காக" மோதும் அடிமைகள்
இலங்கையின் கிழக்குப் பகுதியில் இரு தமிழ் ஆயுதக் குழுக்கள் தமக்குள் குடியரசுத் தலைவர் தேர்தலை ஒட்டி மோதிக் கொண்டன. இருவரும் ஒரே "எஜமானர்களுக்கு" சேவை செய்கிறார்கள். இருந்தும் மோதிக் கொள்கிறார்கள்.
தேர்தல் மோதலில் இலங்கைப் படை.
இதுவரை இலங்கையில் இடம் பெற்ற தேர்தலில் படையினர் சம்பந்தப் பட்டதில்லை. போர் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு நடை பெறும் தேர்தல் ஆகியபடியால் இம்முறை படையினர் தேர்தலில் பங்காளிகளாக உள்ளனர். நேற்று அடிதடிக்குப் பெயர் போன அரச அமைச்சர் ஒருவர் தான் செல்லும் வழியில் சரத் பொன்சேக்காவிற்கு ஆதரவான தேர்தல் பதாதைகளை தனது அடியாட்கள் மூலம் அப்புறப் படுத்தினார். அதைப் கண்ட சதாரண உடையிலிருந்த அரச படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தினர்.
மேலும் பல மோசமான மேதல் செய்திகளுக்காக காத்திருக்கவும்.
No comments:
Post a Comment