இலங்கை அரசியல் தலைவர்கள் மீதும் படையினர் மீதும் போர்க் குற்றங்களைச் சுமத்துவதில் அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டு வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் இலங்கைத் தூதுவரும் தற்போது அமெரிக்க அரச திணக்களகத்தில் தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பாக இருப்பவருமான றோபே(ர்)ட் பிளேக் அவர்களின் பொறுப்பில் இலங்கை மீதான போர்க் குற்றங்கள் சுமத்தும் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.
அண்மையில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்களான தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேராவையும் இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவையும் அமெரிக்கா வாசிங்டனுக்கு அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடியதாக இலங்கை இவர்கள் இருவர் மீதும் குற்றம் சுமத்தியுள்ளது. ஆனால் ஜெஹான் பெரேரா தான் அமெரிக்கா செல்வதற்கு பலநாட்களுக்கு முன்னதாகவே இலங்கையின் மீதான போர்க்குற்றம் தொடர்பான விசாரணையை ஆரம்பிக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை செயற்குழு பரிந்துரை செய்துவிட்டது என்று தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தாம் இருவரும் அமெரிக்க சமாதானச் சபையின் அழைப்பின் பேரிலேயே சென்றதாகவும் தமது பயணத்தில் எந்த சதித்திட்டமும் இல்லை என்று தெரிவித்தார்.
இலங்கை மீதான போர்க் குற்ற சுமத்தல் அமெரிக்காவின் பல தரப்பில் இருந்தும் வெளிவரத் தொடங்கி விட்டது. இரு தினங்களுக்கு முன் அமெரிக்க மூதவையிலும் இது தெரிவிக்கப் பட்டது.
அமெரிக்காவில் இருந்து திரும்பிய பாக்கியசோதி சரவணமுத்து கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப் பட்டார். இது தொடர்பாக அது தெரிவிக்கையில் அமெரிக்கா செள்றிருந்த நான் இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தபோது என்னை விமான நிலையததில் தடுத்து நிறுத்திய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் என்னை விமான நிலையத்திலுள்ள குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்போது என்னை இவ்வாறு தடுத்து வைப்பதற்கான காரணம் என்னவென்று நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு பதிலளித்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலிட உத்தரவுக்கமையவே தடுத்து வைத்துள்ளோம் என்றும் இந்த உத்தரவு கடந்த பெப்ரவரி மாதம் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தனர்.
அத்துடன் இது தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் தேவைப்படும் பட்சத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸுக்குச் சென்று அறிந்துகொள்ளுமாறும் அவர்கள் அறிவித்தனர்.
இது மட்டுமல்ல பா. சரவணமுத்து அவர்களுக்கு அனாமதேயக் கொலை மிரட்டலும் இலங்கையில் விடுக்கப் பட்டது.
No comments:
Post a Comment